சிடிஎஸ் (Cognizant Technology Solutions) நிறுவனம் தனது ஊழியர்களை கட்டாய ராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதாக அந்நிறுவன ஊழியர்கள் கடந்த ஒரு வார காலமாக நமது புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகின்றனர், இதில் பெஞ்சில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் ஒரு புரோஜக்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் ரேட்டிங்கை காரணம் காட்டி ராஜினாமா செய்ய வற்புறுத்தியும் மிரட்டியும் வருவதாக பாதிப்புக்குள்ளான ஊழியர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் உலகில் பெரும்பான்மை துறைகளின் உற்பத்தி மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான நிலையில், தங்களது வாடிக்கையாளர்களின் மனம் நொந்து விடாமல் இருக்கவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கடுகளவேனும் குறை ஏற்பட்டு விடாமல் இருக்கவும் Business Continuity Plan என்ற பெயரில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மாறிவிட்டன. இதன் மூலம் அலுவலகத்தில் இருந்து வாங்கப்படும் வேவையை விட அதிகமான நேரம் ஐ. டி. ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி வழக்கத்தை விட அதிகமான உற்பத்தித் திறனைப் பெற்று வருகின்றன.
குழுவாக வேலை செய்ய வேண்டும் (Team Work) என்று பேசி ஊழியர்களிடமிருந்து வேலையை வாங்கும் நிறுவனங்கள், அப்ரைசல், ரேட்டிங், சம்பள உயர்வு ஆகிய இடங்களில் ஒவ்வொருவரும் தனி என கூறுவதோடு, சம்பள உயர்வு குறித்த விவரங்கள் பற்றி சக ஊழியர்களுடன் பேசக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
ரேட்டிங் என்றொரு அயோக்கியத்தனத்தை திரியாக பயன்படுத்தி தங்களது ஊழியர்களை எரிக்க(Fire செய்ய) முனைகின்றன ஐ. டி. நிறுவனங்கள், அது மட்டுமல்லாமல் சிறப்பாக பத்து வருடங்களுக்கு மேலாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர், ஒரு புராஜெக்ட் முடிந்து மற்றொரு புராஜெக்ட் மாறுவதற்கு கொடுக்கப்படும் ‘அந்த 35 நாட்கள்’ தாண்டி சென்று விட்டால் அவ்வளவு தான், ‘கெடு முடிந்தது ஊரை விட்டு ஒதுக்கிவை’ என்பது போல் இப்போது ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தம்’ (Mutual Separation Agreement ) என்று சொல்லி கட்டாய ராஜினாமவிற்கு (‘Forced Resignation Agreemnt’) தனது ஊழியர்களை சி.டி.எஸ் நிறுவனம் நிர்பந்தித்துத் தள்ளுகிறது.
இப்பிரச்சினையை தனியாக நிச்சயமாக எதிர்கொள்வது சாத்தியமற்றது, மாறாக தொழிற்சங்கத்தில் ஐ. டி. ஊழியர்கள் தங்களை அமைப்பாக்கி கொண்டு பல கைகளின் ஒற்றுமையின் பலத்தோடு எதிர்த்தால் மட்டுமே நமக்கான நியாயத்தை பெற முடியும்.
இவ்வளவு காலம் புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் சங்கம், பல்வேறு வகைகளில் ஐ.டி. ஊழியர்களை அனுகி சங்கத்தில் இணைவதன் அவசியத்தை கூறியபோதொல்லாம் அவற்றை நிராகரித்த பலர், இப்போது தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து சங்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்னைமரத்தில் காய்ந்த மட்டையின் முடிவை கண்டு இளங்குறுத்துக்கள் எவ்வித பரிவுமின்றி ஏளனம் செய்ததை பார்த்து காய்ந்த மட்டை சிரித்து கொண்டே கூறியதாம், ‘எனது நிலை போல உனக்கு வரும் நாள் மிக தொலைவில் இல்லை’ என்று.
ஆகவே ஐ. டி. ஊழியர்களே, நமது சக ஊழியருக்கு நெருக்கடி வரும்போது அவருக்கு உறுதுணையாக இல்லாமல், கண்டும் காணாமலும் இருந்தோமானால் நாளை நமக்கும் இந்த நெருக்கடி ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.
எனவே புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் சங்கத்தில் தங்களை உறுப்பினர் ஆக்கி கொள்ளுங்கள், தங்களது பணியிட உரிமைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.
ராஜதுரை. R.
புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு.
தொடர்பு கொள்ள:
அலைபேசி: +91-9003009641
மின்னஞ்சல்:
ndlfitunion@gmail.com.
combatlayoff@gmail.com.
.