ஜாரின் எதேச்சதிகார ரஷ்யாவில், தொழிலாளிகள் தங்களது போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் நடத்தினர்.
மே தினத்தைக் கொண்டாடக் கூடாதென்று தொழிலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் கூட்டமாகச் சேருவதற்கோ, பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
எனவே அவர்கள் பல தந்திரங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள், இலக்கியவாதிகள் பதிவு செய்துள்ளனர்.
உதாரணமாக, மா ஸ்கோவிலுள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடுகாட்டில் கூடி மே தினத்தைக் கொண்டாடுவதென்று முடிவு செய்தார்கள்.
அவர்கள் ஒரு சவப் பெட்டியைத் தயாரித்துக் கொண்டார்கள். ஈமச் சடங்கு செய்ய ஒரு மதகுருவையும் அமர்த்திக் கொண்டார்கள். ஆறு பேர்கள் சவப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்தார்கள். மதகுரு தூ பக்கோலை ஆட்டிக் கொண்டு அவர்களுக்கு முன்னால் பகட்டாக நடந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரும் தொழிலாளர்களை விரட்ட மாட்டார்கள். அந்த ஊர்வலம் வந்த பொழுது போலீஸ்காரர்கள் கூட மரியாதையாக ஒதுங்கிக் கொண்டு வழிவிட்டார்கள்.
இடுகாட்டிலுள்ள மாதா கோவிலில் செத்துப் போனவருக்காகப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மதகுரு தூபக்கோலை ஆட்டிக் கொண்டு பிரசங்கித்தார்.
”ஆண்டவனுடைய ஊழியனின் ஆன்மாவின் அமைதிக்’காக! அவன் பெயர் என்ன?” என்று மதகுரு தொழிலாளர்களிடம் கேட்டார்.
”நிக்கலாய்.”
“கடவு ளின் ஊழியனான நிக்கலாயின் ஆன் மாவின் அமைதிக்காக!” என்று மத குரு திரும்பச் சொன்னார்.
பிரார்த்தனை முடிந்ததும், முன்னரே ஒத்துக் கொண்ட ஐந்து ரூபிள் பணத்தை வாங்கிக் கொண்டு மதகுரு போய்விட்டார். தொழிலாளர்கள் அந்த இடுகாட்டின் கடைசி மூலையில் கூடினார்கள். கூட்டம் நடந்தது.
அவர்கள் தணிந்த குரலில் புரட்சிகரமான பாடல்களைப் பாடல்களைப் பாடினார்கள். மே தினத்துக்கென்று விசேஷமாக எழுதப்பட்ட அறிக்கைகளைப் படித்தார்கள்.
அந்த இடுகாட்டின் இரவுக் காவலாளியான டியாட்கின் என்ற பெயருடையவன் அன்றிரவில் சுற்றி வரும்பொழுது தரையின் மேல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியின் மீது தடுக்கி விழுந்தான். அவன் ஆச்சரியத்தோடு சவப்பெட்டியின் மூடியைத் தூக்கிப் பார்த்தான். அப்பொழுது அவன் கண்ட பயங்கரக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
அவன் ஸ்தல போலீஸ் அதிகாரியைச் சந்திக்க ஓடினான்.
”என்ன விஷயம்? சொல்.”
”ஐயா, ஒரு சவப் பெட்டி.”
” அதில் என்ன புதுமை?”
”அந்த சவப் பெட்டியில் …” டியாட்கின் பேச முடியாமல் தடுமாறினான்.
“அந்த சவப் பெட்டியில் என்ன இருந்தது? சொல்லித்தொலை.”
” மாட்சிமை தங்கிய ஜார் இரண்டாம் நிக்கலாய்” என்றான் டியாட்கின்.
‘ ‘ உனக்குப் பைத்தியமா?”
“நிச்சயமாக இல்லை” என்று சொல்லிவிட்டு அவன் சிலுவைக் குறியிட்டுக் கொண்டான். ”அது ஜார் தான்.இப்படிச் சொல்லுவதற்கு என்னை மன்னியுங்கள்.”
போலீஸ் அதிகாரி இடுகாட்டுக்குப் போனார். அவர் சவப்பெட்டிக்குள் பார்த்தார். அதில்… ஜார் இல்லையென்றாலும் அவருடைய முழு அளவு உருவப்படம். இராணுவ உடையில், பதக்கங்களோடு இருந்தது.
இந்த விவகாரத்தைப் பற்றி விசாரணை நடை பெற்றது.
டியாட்கினால் புதிய தகவல் எதுவும் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மதகுருவைத் தேடினார்கள் .
”கடைசிச் சடங்குகள் செய்தது நீர் தானா?” என்று அதிகாரி விசாரித்தார்.
”நான் தான் நடத்தி வைத்தேன்.”
”யாருக்கு?”
”கடவுளின் உழியனான நிக்கலாய்க்கு.”
” முட்டாள்!” என்று அந்த அதிகாரி ஆத்திரத்தோடு கத்தினார்.
இவ்வளவு கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க வேண் டிய காரணத்தைப் பற்றியோ அல்லது மதகுருவான தன்னை மாவட்டப் போலீஸ் நிலையத்துக்கு இழுத்து வரவேண்டிய அவசியத்தைப் பற்றியோ மதகுருவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அப்படி நான் என்ன குற்றம் செய்தேன் என்று அவர் நினைத்தார்.
ஆனால் உண்மை தெரிந்தவுடன் அவர் இலையுதிர் பருவத்தில் அடிக்கும் காற்றில் மரத்திலிருந்து இலை ஆடுவது போல ஆட ஆரம்பித்தார். அவர் உடல் நடுங்கியது.சிலுவை குறி இட்டார். பயத்தில் பிதுங்கி வெளியே வந்த கண்களை மூடித் திறந்தார்.
”அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் யார் என்பதைச் சொல்” என்று அதிகாரி விடாமல் கேட்டார்.
மதகுரு நினை வைத் துழாவினார. ஆனால் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
“பல பேர்கள்…. சுமார் நாற்பது பேர்கள் இருப்பார்கள், சிலர் உயரமானவர்கள். சிலர் ஒல்லியானவர்கள். சிலர் வயதானவர்கள். சிலர் இளைஞர்கள். அவர்களில் ஒருவன் ‘அல்லெலுயாவை’ நன்றாகப் பாடினான்.”
”’அல்லெலுயா’ பாடினானா? என்று அதிகாரி கேலியாகக் கேட்டார். ‘சரி, உம்மைக் கூப்பிட்டது யார்?’ உமக்குக் கூலி கொடுத்தது யார்?”
”பெரிய தோள்களை உடைய ஒரு நபர். அவன் மீசை வைத்திருந்தான். அவன் கைகள் காய்த்துப் போயிருந்தன” என்று மதகுரு உற்சாகமாக பதிலளித்தார்.
அந்த நபரைத் தேடினார்கள். எனினும் அகன்ற தோள்களும், மீசையும் கொண்ட தொழிலாளர்கள் பலர் இருந்தார்கள்.அதிலும் காய்த்துப் போகாத கைகளைக் கொண்டவர்கள் குறைவாகத் தான் இருந்தார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியடையவில்லை.
போலீஸ் அதிகாரி மதகுருவையும் டியாட்கினையும் மறுபடியும் திட்டினார். அதோடு விஷயம் முடிந்தது.
தொழிலாளர்களுக்கு முழுத் திருப்தி. அவர்கள் ஒரே சமயத்தில் மே தினத்தையும் கொண்டாடினார்கள், ஜாருக்கு ஈமச்சடங்குகளையும் செய்தார்கள் என்றால் அது வேடிக்கையல்ல.
- நன்றி ஸெ.அலெக்ஸேயெவ்
நாம் நம்முன் உள்ள ”ஜார்களுக்கு” ஈமச்சடங்கு செய்வது எப்போது???
1 ping