தொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்!

 

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் சூழலை பயன்படுத்திக்கொண்டு ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை சட்டவிரோதமாக வேலையை விட்டு நீக்குவதும், ராஜினாமா செய்யும்படி பல வழிகளில் நிர்ப்பந்தித்து வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் வந்துள்ளோம்.

இந்நிலையில் தற்போது ஐடி ஊழியர்களுக்காக களத்தில் நின்று செயல்படும் தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கில் தொழிற்சங்க முன்னணியாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யும் வேலையில் ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஐடி ஊழியர் பிரிவின் முன்னணியாளர்களுள் ஒருவரும் நமது சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஷியாம் சுந்தர் அவர்கள் அவர் பணிபுரிந்து வந்த விப்ரோ நிறுவனத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விப்ரோ நிறுவனம் சார்பாக அவருக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு எவ்வித காரணமும் கூறப்படவில்லை. மேலும் ஷியாம் அவர்கள் சார்பாக விப்ரோ நிறுவனத்திற்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள 2K வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவர் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று ஐடி ஊழியர்களுக்காக தொடர்ந்து போராடிவரும் FITE தொழிற்சங்கத்தின், பொதுச் செயலாளர் வினோத் அவர்களும் CTS நிறுவனத்திலிருந்து எவ்வித காரணங்களும் கூறப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொழிலாளர்களின் குரலாக, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து களத்தில் நிற்கும் தொழிற்சங்கங்களின் முன்னணியாளர்களை திட்டமிட்டு பழிவாங்கும் ஐடி நிறுவனங்களின் நடவடிக்கையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐடி ஊழியர் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது. இன்று தொழிற்சங்க முன்னணியாளர்கள் பழிவாங்கப்படுவது, நாளை ஊழியர்கள் அனைவரும் எதிர்கொள்ளவிருக்கும் நிலைமைக்கு ஒரு முன்னறிவிப்பே. ஆகையால் ஐடி ஊழியர்கள் அனைவரும் இதனைக் கண்டிப்பதுடன், நமது உரிமைக்கான போராட்டத்தில் சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  • ஒருங்கிணைப்பாளர்

பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா

இந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு...

புதிய தொழிலாளி – பிப்ரவரி – மார்ச் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

அடுப்படிக்கு வாங்க, ஆம்பளைங்களே - துரை சண்முகம் மேட்டுக்குடிகளின் கலை ரசனையின் விலை தொழிலாளியின் வறுமை - சமர்வீரன் கண்ணீரில் தவிக்கும் கடலாடிகளின் வாழ்க்கை - ராஜதுரை...

Close