நமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவின் செயற்குழு உறுப்பினரும், முன்னணி செயற்பாட்டாளருமான சரவண குரு நேற்று (29/06/2019) இரவு மாரடைப்பால் காலமானார்.
தனது வேலை பறிபோனாலே கூடப் போராட முன்வராத ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் தனக்கு கீழ் பணியாற்றிய ஒரு ஊழியர் அநியாயமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்காக போராடுவதற்காக நமது சங்கத்தை அனுகியவர் தோழர் சரவணகுரு.
தனது அலுவலகத்தில் மட்டுமல்ல சமூகத்தின் பிரச்சனைகள் அனைத்திற்காகவும் அவர் போராடியிருக்கிறார்.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அங்கே சென்று தங்கியிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடினார். வெளிநாட்டில் முதலாளிகளால் கைவிடப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
அதிகார மட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து அவர் என்றைக்கும் அஞ்சியது இல்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, தூத்துக்குடியின் கிராமங்களில் போலீசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது, தனது கிராமத்தில் போலிசால் கடத்தப்பட்ட இளைஞர்களை மீட்பதற்கு அதிகாரிகளையும் போலீசையும் எதிர்த்து நின்றார்.
ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, விவசாயிகளின் வாழ்வுரிமை பாதுகாப்பு என ஒவ்வொரு போராட்டத்திலும் முன்னணியில் நின்று பங்கேற்றார்.
இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும், சமூகத்தின் அவலங்கள் ஒவ்வொன்றிற்காகவும் போராட வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டவர் தோழர் சரவணகுரு. தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழத் தெரியாதவர்.
அந்தத் துடிப்புதான் அவரை எல்லாப் போராட்டங்களிலும் முன்நிற்க உந்தித் தள்ளியது. அந்தத் துடிப்புதான் அவரை நமது சங்கத்திற்குக் கொண்டுவந்தது. நேற்றுடன் தோழர் தனது துடிப்பை நிறுத்திக் கொண்டார்.
தோழருக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவு தனது செவ்வணக்கத்தைச் செலுத்துகிறது.
1 ping