பொருளாதார நெருக்கடியும் ‘கரோஷி’ மரணங்களும்.

நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்கிறோம் என்று கூறிக்கொண்டு பல செய்தியாளர் சந்திப்புகளை நடத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய வண்டிக்கு பதில் புதிய வண்டியை வாங்குங்கள் என்றார், மந்த நிலைக்குக் காரணம் இளைய தலைமுறை ஓலா, உபர் பயபடுத்துவதுதான் என்றார். பின்னர் ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.76 லட்சம் கோடியை பிடுங்கினார்கள், இறுதியாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு வரிச்சலுகைகளை அள்ளிக் கொடுத்தார்கள்.

வரிச்சலுகை அளிக்கப்பட்ட அன்றே பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டது. உடனே ஊடகங்களும், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த உயர் நடுத்தர வர்க்கமும் இந்த நடவடிக்கையை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வரிச்சலுகையினால் நாட்டின் பொருளாதாரம் வளரத்தொடங்கிவிட்டதாக புளுக ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் வரிச்சலுகையினால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பை சரிகட்ட வேண்டுமே அதற்கு எங்கிருந்து பணம் வரும். அதற்கான விடை, அறிவிப்பு வெளியான மறுநாளில் தெரிய ஆரம்பித்தது, அடுத்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம் இல்லாத போதும் இந்தியச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு உயரந்தது.

முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச்சலுகையை ஈடுகட்ட மக்கள் மீது கூடுதல் வரி, மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி குறைப்பு என்று இந்த சுமையை சாதாரண அடித்தட்டு மக்களின் தலையில், இந்த அரசு, ஏற்றுகிறது.

 

அதே சமயம் வரிச்சலுகை பெற்ற முதலாளிகள் இன்னும் தொடர்ந்து லே-ஆப், சம்பளமில்லாத விடுமுறை, போக்குவரத்து வசதிகளைக் குறைப்பது, ஷிப்ட் நேரத்தை அதிகரித்து ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது என தொழிலாளர்களை மேலும் மேலும் சுரண்டிவருகிறார்கள்.

ஹூண்டாய், ரெனால்ட், டைம்லர், மாருதி, TVS, யமாஹா என அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஆலை மூடல், வேலை நாட்கள் குறைப்பு, கட்டாய பணிநீக்கம் போன்ற நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கும் இந்த நடவடிக்கைகள் ஒரு விஷ சுழற்சி போல பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி இழுக்கின்றன.

இந்நிலையில் சந்தையில் தலையிட்டு பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை அதிகரித்து, கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை பெருக்கி அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வைக்க வேண்டிய அரசு, இவற்றிலிருந்து விலகி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகைகள் கொடுப்பது என்று முதலாளிகளுக்கு சேவை செய்கின்றது. இதற்கு அரசு சொல்லும் பதில், நிறுவனங்களுக்கு சலுகை அளித்தால் புதிய முதலீடுகள் வரும், வேலை வாய்ப்புகள் பெருகும், பொருளாதார மந்த நிலை சரியாகும் என்பது.

இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றாலும் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தால் இந்தக் கருத்து மக்களிடம் பரப்பப்படுகிறது. அப்படியே ஓரிரு ஆண்டுகளுக்கு நிலை சரியானாலும் அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் முன்பைவிட பெரிய நெருக்கடியில் கொண்டு வந்து நிறுத்துகிறது மூதாளித்துவக் கட்டமைப்பு. கிழக்காசிய நாணய நெருக்கடி, டாட்காம் குமிழி வெடிப்பு முதல் 2008 உலகப் பொருளாதார வீழ்ச்சி வரை காட்டுவது இதைதான்.

ஆனால் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்ற மட்டுமே வேலை செய்கின்றன அந்த நாட்டு அரசுகள். 2008 அமெரிக்க வங்கி நெருக்கடியின்போது வங்கிகளுக்கு, மக்களின் சேமிப்பிலிருந்து பெரும் தொகையை கொடுத்தது ஒபாமா அரசு. தவிர்க்கவே முடியாமல் பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும் இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு, அதை சரிசெய்வதாக சொல்லிக் கொண்டு ஒவ்வொரு முறையும் தொழிலாளர்களின் தலையில் சுமையை ஏற்றுகிறது.

தொழிலாளி வர்க்கமும் இதை ஏற்றுக் கொண்டு மனதளவில் இதற்கு தயாராக ஆரம்பித்து விடுகின்றது. இந்தியாவில் புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியிருக்கும் ஐ.டி துறையில் வேலை செய்பவர்களில் அநேகமாக அனைவரும் பொருளாதார நெருக்கடியால் எதிர்வரும் வேலை இழப்பை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளனர்.

கூடுதல் வேலை நேரம் உழைப்பது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய தயாராக இருப்பது, பணியிட உரிமைகளைப் பறிகொடுப்பது, எதிர்த்துப் பேசாமல் நிறுவனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிவது என்று எப்படியும் இந்த நெருக்கடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். வேலையிழப்பை தவிர்க்க முடியாது என்று சமாதானப் படுத்திக் கொண்டு இந்த நெருக்கடிக்கான காரணத்தைப் பற்றிப் பேச மறுப்பவர்கள் நெருக்கடியை தீர்க்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு சலுகை கொடுப்பதை வரவேற்கின்றனர். அதன் மூலம் தங்களின் வாழ்க்கை உத்திரவாதப்படுத்தப்படும் என்று நம்புகின்றனர். ஆனால் வரலாறு சொல்லும் பாடமோ வேறாக இருக்கிறது.

ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான் மீது, வெற்றி பெற்ற நாடுகள் ஒப்பந்தங்களின் மூலம் கடும் அபராதத்தையும் நிபந்தனைகளையும் விதித்தன. போரின் காரணமாக பெரும் நெருக்கடியிலிருந்த ஜப்பானியப் பொருளாதாரம் அதிலிருந்த மீள வழி தெரியாமல் நின்ற போது ஜப்பானிய ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அதன் சுமைகள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தள்ளப்பட்டது.

60,70-களில் ஜப்பானிய தொழிலாளர்கள் மீதான நிதிமூலதனத்தின் உழைப்புச் சுரண்டல் தீவிரமானது. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, 12 மணிநேரம் வேலை செய்வது, கடுமையான வேலை நிலைமைகளில் கட்டாய வேலை செய்வது, ஓய்வின்றி வேலை செய்வது, வேலையிழப்பு அபாயம் என்று ஜப்பானியத் தொழிலாளர்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஓய்வின்றி தொடர்ந்து வேலை பார்ப்பதால் பணியிடத்தில் நிகழும் மரணங்களுக்கு ஜப்பானில் “கரோசி” என்ற புதிய சொல்லே உருவானது.

வாரம் முழுக்க தொழிற்சாலையில் ஓய்வின்றி உழைத்து இறந்து போனவர்கள் ஏராளம். அதே போல் வருடத்திற்கு 4500 மணி நேரம் வேலை செய்தவர் பணியிடத்திலேயே மரணம் அடைந்த செய்திகளும் உண்டு. கரோசி மரணங்களைப் பற்றிய ஆய்வுகளும் ஆவணப்படங்களும் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் ஜப்பான் நிதிமூலதனம் உலக அரங்கில் மீண்டும் தனது இடத்தை பிடித்தது.

நிதிமூலதனம் தனது நெருக்கடியை சமாளிக்க தொழிலாளி வர்க்கத்தைப் பலி கொடுப்பதை, அரசுகள் கசப்பு மருந்து, தேச நலன், வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற திரைகள் மூலம் மறைக்கின்றன. இந்தியாவிலும் அத்தகைய கசப்பு மருந்துகளை “தேச நலனை” முன்னிட்டும், “தேசத்தின் வளர்ச்சி”க்காகவும் கொடுக்கின்றது அரசு. அதை தட்டி விட வேண்டிய தொழிலாளி வர்க்கமோ “மருந்து நோயைத் தீர்க்கும்” என்ற ஆளும் வர்க்கத்தின் குரலுக்கு செவி சாய்த்துக் கிடக்கின்றது. இதனைத் தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் ஏகாதிபத்தியங்கள் குறித்தும், அவற்றின் வேட்டைக்காடாக நமது நாடு உள்ளது குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பலமான புரட்சிகர தொழிற்சங்கம் மட்டுமே நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு. முதலாளித்துவத்தின் இந்தத் தாக்குதலை எதிர்த்து முறியடிக்காவிட்டால் பணியிட மரணங்களுக்கு இந்திய மொழிகளில் புதிய சொற்களை உண்டாக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

  • செல்வா

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்விகி தொழிலாளர்கள் போராட்டம் – தேவை ஒரு புதிய அணுகுமுறை

"சரிங்க, இதெல்லாம் உங்க ஓனருக்குத் தெரியுமா" "ஆபீஸ்ல சொல்றோம்ல அவ்வளவுதான். இந்த கம்பேனிக்கு யார் ஓனர்னே எங்களுக்குத் தெரியாதுங்க"

தனியார் “தரம்” – அப்பல்லோ மருத்துவமனையின் அட்ராசிட்டி

நோயாளியின் தேவையை விட, அவரது பணம் கட்டும் திறமைதான் சிகிச்சையை தீர்மானிக்கிறது. பணம் கட்ட முடியாதவர்கள் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்தாலும், அந்த சிகிச்சை மருத்துவமனையில் இருந்தாலும்...

Close