விலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும்

கிராமத்து ஐ.டி ஊழியர் ஒருவரின் அனுபவ கதை

டந்த வாரம் ஊருக்கு சென்றிருந்தபோது, எனது தந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தால், அன்றைய தினம் நடைபெற்ற அவர் நண்பர் வீட்டு திருமணத்தில் நான் சென்று கலந்து கொள்ள வேண்டி இருந்தது. திருமணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் நடைபெற்றது, திருமணத்திற்கு தலைமை, சுகாதார துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்

கட்சி சார்பற்ற மக்களிடம் (குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள்) இருந்து எந்த ஒரு உணர்ச்சியையும் காண முடியவில்லை

தாலி எடுத்துக்கொடுத்து, திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு மணமகளின் தந்தை (அ.தி.மு.க)-யையும், மணமக்களையும் வாழ்த்தி பேசிவிட்டு, தங்கள் ஆட்சியின் ‘சாதனைகளை’ விளக்கி பேசினார். அதாவது “எங்கள் (‘அம்மா’வின் மற்றும் அவர் இறந்த பின்னர் நடக்கும் ‘எடுபிடி’/’பினாமி’) ஆட்சியில் தமிழகம் முழுவதும் அரசானது பல்வேறு ‘சாதனைகளை’ நிகழ்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதியில் புதிதாக அரசு கலை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, காவிரி கூட்டு குடிநீர் மற்றும் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது’ என்றவாறு அமைச்சரின் பேச்சானது கட்சிக்காரர்களிடம் கரவொலி பாராட்டு பெற்றது.

ஏனோ கட்சி சார்பற்ற மக்களிடம் (குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள்) இருந்து எந்த ஒரு உணர்ச்சியையும் காண முடியவில்லை. அவர்கள் அமைச்சரின் பேச்சை ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதை அவர்களின் முகத்தில் காண முடியவில்லை.

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் “என்னங்க, அமைச்சர் இந்தப் பகுதிக்கு இவ்வளவு நல்லது பண்ணி இருக்காரு அப்புறம் என்ன கவலை உங்களுக்கு” என நான் கேட்டேன். மணல் மாபியா சேகர் ரெட்டி கும்பலுடன் கூட்டணி வைத்து கொள்ளை அடித்தது தொடங்கி குட்கா ஊழல் மேட்டர் வரை வருங்காலத்தில் வரலாற்று பாடங்களாக அமையப்போகும் அந்த சரித்திர சாதனைகளை எனக்கு தெரிந்ததை விட நிறையவே அமைச்சரின் ‘வரவு செலவு’ விவரங்களை அவர் விவரித்தார்.

அமைச்சர் எந்தெந்த வகையிலெல்லாம் ‘உழைத்து’ தன் பெயரிலும் தனது பினாமி பெயரிலும் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் என்பதை அம்மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்து உள்ளனர், “அமைச்சர் பெரிய மலை முழுங்கி, ஊழல் பேர்வழின்னு தெரிஞ்சும் உங்களுக்கு அவர் மீது கோவம் வரலையா” என்றால், ஒன்று, தங்களின் விதியை நொந்து கொள்கிறார்கள் அல்லது அமைச்சர் ஊழல் செய்வதையும், இதுவரையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் அவரின் தனி திறமையாக பார்க்கிறார்கள் என்ற பரிதாபமான நிலையை அவரின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது

தாங்கள் படித்த படிப்பிற்கு தகுதியான வேலை கிடைக்காத காரணத்தினால், திருப்பூர் சாயப்பட்டறை, சென்னையில் Credit Card Marketing, உள்ளூரில் இருந்தால் திருமணங்களுக்கு கூலிக்கு சமையல் வேலை செய்ய செல்வது, மளிகை கடை வேலை, கடைசி கட்டமாக சிங்கப்பூர் அல்லது Gulf நாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.

மேலும், அப்பெரியவரின் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தமது ஊர் மக்கள், குறிப்பாக கல்லூரி படிப்பு முடித்த இளைஞர்களின் நிலையை கூறினார். “வயல் காடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து B.E, B.Sc, M.Sc, MBA, MCA, மற்றும் Diploma என்று படிக்க வைத்த தம் பிள்ளைகள், தாங்கள் படித்த படிப்பிற்கு தகுதியான வேலை கிடைக்காத காரணத்தினால், திருப்பூர் சாயப்பட்டறை, சென்னையில் Credit Card Marketing, உள்ளூரில் இருந்தால் திருமணங்களுக்கு கூலிக்கு சமையல் வேலை செய்ய செல்வது, மளிகை கடை வேலை, கடைசி கட்டமாக சிங்கப்பூர் அல்லது Gulf நாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், இதுதான் அப்பகுதி சிறுகுறு விவசாயிகளின் வாரிசுகளான முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலைமை.

என்னிடம் பேசிய அந்த இளைஞர் கூட இன்ஜினியரிங் முடித்திருக்கிறார். தனது கல்லூரியில் Campus Interview க்கு எந்த நிறுவனமும் வரவில்லை என்பதால் சென்னை சென்று அங்கு தங்கி சில மாதங்கள் வேலை தேடி இருக்கிறார். தனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையென்ற படியால் இப்பொழுது சிவில் சர்விஸ் தேர்வுக்கு Coaching செல்வதாக கூறினார்.

தங்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி நெல், கரும்பு, வேர்க்கடலை, மற்றும் இன்னும் பல உணவு பொருள்களை விளைவித்த விவசாயி உரிய விலை கிடைக்காமல் சுரண்டப்படுகிறார். விவசாயம் என்றால் வாழ்நாள் முழுதும் கடினமே, உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்பதையும், அவர்களின் தலைமுறையில் பட்டதாரிகள் அரசு வேலை பெற்று சலுகைகள் பெற்றதை பொருத்தி பார்த்து, ‘எனக்குத்தான் அந்த “கொடுப்பினை” இல்லை, ஆனால் என் பிள்ளைகள் என்னை போல் கஷடப்பட கூடாது/ சுரண்டப்படக்கூடாது, அவர்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஒரு நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும்’ என்று படிக்க வைத்தனர்.

ஆனால் அவர்களது பிள்ளைகளோ அதற்கு எதிர்மாறாக, படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு அதாவது தின கூலிகளாக சென்று கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமென்று தெரியாமல் புலம்பி திரியும் நிலைமையே மிச்சமாக உள்ளது.

பாதி வயல்கள் தரிசாகவும்(அதில் கருவேல மரங்கள் வளர்ந்து அப்பகுதியின் ‘பசுமையை’ இன்னும் நிலை நாட்டி வருகின்றன), மிச்ச மீதியில் நெல், அல்லது சவுக்கு விவசாயம்

அந்த பகுதியில் நடக்கும் விவசாயம் பற்றி விசாரித்த போது கிடைத்த விவரங்கள், அதாவது 1996 வரை அப்பகுதியில் விவசாயமானது 90% வானம் பார்த்த பூமியாக தான் இருந்திருக்கிறது. கொல்லை (புன்செய்) பகுதிகளில் கிணற்று பாசனமாகவும், அதுவும் மரணப் படுக்கையில் இருந்த தருணம். வயல்(நன்செய்) பகுதிகள் மழை பெய்து நிரம்பியிருந்தால் ஏரி பாசனமாகவும், அதைவிடுத்து ஒரு சில விவசாயிகளிடம் டீசல் பம்ப் மோட்டார் கொண்ட ஆழ்துளை கிணற்று பாசனமாகவும் இருந்திருக்கிறது.

1996 ஆரம்ப கட்டங்களில், மின்சார வாரியம் புதிய திட்டத்தை அப்பகுதியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ரூபாய் 50,000 கட்டினாலே உடனடி மின் இணைப்பு கிடைக்கும் என்பது தான் அந்தத் திட்டம். பல விவசாயிகள் கடன் வாங்கி தங்கள் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். 3 Phase Supply 12 மணி நேரம் மட்டும் இருந்திருக்கிறது, அடுத்த சில வருடங்களில் அது 20 மணி நேரமாக உயர்த்தப்பட்டு விவசாயம் முப்போகமும் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

2008-க்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு காரணமாக, குறிப்பாக கிராமங்களில் கடுமையான மின்வெட்டு, அதிலும் 3 Phase மிகவும் குறைவான நேர Supply தான் இருந்திருக்கிறது. முப்போகமும் விளைந்த பூமி இப்பொழுது ஒரு போகத்திற்கே ‘முக்குகிறது’ என்றும். பாதி வயல்கள் தரிசாகவும்(அதில் கருவேல மரங்கள் வளர்ந்து அப்பகுதியின் ‘பசுமையை’ இன்னும் நிலை நாட்டி வருகின்றன), மிச்ச மீதியில் நெல், அல்லது சவுக்கு விவசாயம் அதுவும் ஏனோ தானோ என்று தான் நடப்பதாக கூறினார்.

“இந்த கல்யாணத்திற்கு வந்திருக்கவங்கள்ல முக்கால்வாசி பேரு வீட்ல ரேஷன் அரிசி சாப்பாடு தான், அந்த அரிசியின் லட்சணம் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தனியாக சொல்ல தெரிய வேண்டியதில்லை. ரேஷன் அரிசி ஒருவேளை நிறுத்தப்பட்டால் ஊரில் முக்கால்வாசி மக்கள் பட்டினியாக கிடைக்க வேண்டி வரும் அல்லது ஊரை காலி செய்து விட்டு எதாவது நகரத்திற்கு கூலி வேலைக்கு செல்லும் நிலைமை தான் ஏற்படும்” என்றார்.

விவசாயிகள் இந்த கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். உண்மையில் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை இன்னும் விவசாயிகள் உணரவில்லை. மாறாக விவசாயம் என்றால் நஷ்டமே என்ற நிலைப்பாடு மட்டுமே உறுதியாக உள்ளது. இப்பொழுது அவர்களின் பிள்ளைகள் வேலை வாய்ப்பற்றும் தனியார் சிறு முதலாளிகளால் சுரண்டப்பட்டும் வருகிறார்கள். புழுத்து போன ரேஷன் அரிசி சோறுதான், மிஞ்சி போனால் கலைஞர் வீடு அல்லது ‘அம்மாவின்’ பசுமை வீடு. ஆனால் தாம் இந்த அரசுக்கு தமது உழைப்பின் மூலம் அளித்த வருமானங்கள் ஏராளம் என்பதை உணர்ந்து இருந்தால் அமைச்சரின் பேச்சுக்கு இவர்களின் எதிர்வினை என்னவாய் இருந்திருக்கும்?

இவர்கள் மக்களின் பிரதிநிதியாம்? இவர்கள் தான் மக்களுக்கு ‘சேவை’ செய்பவர்களாம்!

மக்களின் வரி பணத்தில் அமைச்சர்களுக்கு வீடு, மாதம் லகரங்களில் சம்பளம், கோடி கணக்கில் கமிஷன்கள், கமிஷன்களை முறைப்படுத்த IAS படித்த அதிகாரி, அவருக்கும் நமது வரி பணத்தில் சம்பளம், அரசு வாகனம், வீடு இன்னும் பல சலுகைகள். அவர்களின் சொகுசுக்கு குறைவு இல்லாமல் செவ்வனே செய்து வைத்துள்ளது, இந்த ‘ஜனநாயக’ அமைப்பு. இவர்கள் மக்களின் பிரதிநிதியாம்? இவர்கள் தான் மக்களுக்கு ‘சேவை’ செய்பவர்களாம்!

அமைச்சர் அவர்களே நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை?

அமைச்சர் அவர்களே நீங்கள் MBBS படித்துள்ளதாக கேள்வி பட்டேன், அதனால் உங்களிடமே இதை கேட்டு விடலாம், “நீங்கள் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்கிறீர்கள், அன்று மாலையே நீங்கள் செய்த அறுவை சிகிச்சைக்காக உங்களுக்கு விருந்து வைக்கப்படுகிறது. நீங்களும் அவ்விருந்தில் கலந்துகொண்டு உங்களின் அறுவை சிகிச்சை சாதனையை பெருமைபட கூறுகிறீர்கள், மக்களும் அதை ரசிக்கிறார்கள், ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா?” உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டவர் உயிரிழந்து விட்டார் என்பதுதான் அது.

இன்னும் பரிதாபத்துக்குரிய நிலை என்ன தெரியுமா, உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டவர் செத்துவிட்டார் என்று தெரிந்தும், மக்கள் உங்களின் சாதனையை ரசித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்.

– பாமரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/a-village-experience-of-an-it-employee/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அப்ரைசல் Spoof வீடியோ – “நெருப்பு மாதிரி வேல செய்யணும், தியாகம்தான் உன்னை உயர்த்தும்”

"போ குமாரு, இனி 3 வருசம் அங்கதான். யாருக்கு தெரியும், அங்கேயே செட்டில் ஆயிடலாம். புராஜக்ட் மட்டும் முடிச்சிடு. நெருப்பு மாதிரி வேல செய்யணும், தியாகம்தான் உன்னை...

13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி

"இந்த அமைதியை கிழிக்க பல குரல்கள் தேவை. தலித் குரல்கள் மட்டும் போதாது. குற்றங்களை தடுப்பது மட்டுமே எங்களது இலக்கல்ல. சாதியையும் ஒழிக்கவேண்டும்"

Close