ஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் !

நமது ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கத் தலைவர் சியாம் சுந்தர் எழுதிய இந்தக் கட்டுரை வினவு இணையதளத்தில் வெளியானது.

தார் எண்களை பயன்படுத்தி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை ஏமாற்ற முடியும் என்பதை ஏர்டெல் வங்கி ஊழல் நிரூபித்து காட்டியிருக்கிறது. மோடி அரசின் டிஜிட்டல் முகத்தையும், ஆதார் எண்ணை ரேஷன் கார்ட், கேஸ் மானியம், வங்கிக் கணக்கு, மொபைல் எண், பிறப்பு சான்றிதழ், பள்ளி சேர்க்கை, தேர்வு நுழைவுச் சீட்டு என்று அனைத்து பதிவுகளுடன் இணைப்பதன் பின் இருக்கும் அபாயத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்த ஊழல் குறித்து ஊடகங்களில் பெரிதாக பேசப்படவில்லை. பஞ்சாப் தேசிய வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடியை போன்று நம்மை பாதிக்கக் கூடிய மிக முக்கியமான ஊழல் இது. இந்த ஊழல் ஆதார் மூலம் இனிமேல் நடக்கப் போகும் இன்னும் பல ஆபத்துகளுக்கு முன் அறிவிப்பாக உள்ளது.

2016 நவம்பர் மாதம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து “கருப்புப் பணத்தை ஒழிப்போம், கள்ளப் பணத்தை அழிப்போம், தீவிரவாதத்தை முறியடிப்போம்” என்றெல்லாம் சவடால் விட்ட மோடி – ஜெட்லி கும்பல், பின்னர் மக்களை பணத்தை வங்கிகளுக்குள் கொண்டு வருவதன் மூலம், டிஜிட்டல் இந்தியா-வை உருவாக்குவதே பண மதிப்பு அழிப்புக்கான நோக்கம் என்று கதை சொல்ல ஆரம்பித்தது. மக்கள் வங்கிகள் மூலமும், கடன் அட்டை மூலமும் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தது.

(குறிப்பு : இந்த முட்டாள்தனம் மக்களால் நிராகரிக்கப்பட்டு பணப் புழக்கம் நவம்பர் 2016 அளவை எட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கி புள்ளிவிபரங்கள்படி அக்டோபர் 27, 2016 அன்று ரூ 15.48 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் மார்ச் 2, 2018 அன்று ரூ 17.19 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.).

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கைபேசி வழியாக பண பரிவர்த்தனைகளை செய்யும்படி ஊக்குவிப்பதற்கு வங்கிகள் ஆப் (APP)-களை அறிமுகப்படுத்தின. மக்கள் கார் முதல் காய்கறி வரை வாங்குவதற்கு App மூலமே பணம் செலுத்தலாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், வங்கித் துறையில் தனியார் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்கும் தாராளமய கொள்கையின் ஒரு பகுதியாக புதிய கார்ப்பரேட் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படி அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் மொபைல் சேவை வழங்கி வந்த ஏர்டெல். ஏர்டெல் வங்கி சேவையில் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர் காசோலை மூலமாகவோ, வேறு வங்கிக் கணக்குகளிலிருந்தோ, தனது ஏர்டெல் கணக்கில் பணத்தை போட முடியும்.

ஆனால், தொலைபேசி கட்டணத்துக்கும், இணைய கட்டணத்துக்குமே நம்ப முடியாத ஏர்டெல்-ஐ நம்பி பணத்தை போடுவதற்கு பலர் தயாராக இல்லை. மேலும், பல வணிக வங்கிகளும் App மூலமாக பண பரிமாற்ற வசதியை தர ஆரம்பித்தன. எனவே தனது வங்கி சேவைக்கு வாடிக்கையாளர்களை புதிதாக சேர்ப்பதற்கு ஏர்டெல் ஒரு வழியை கண்டுபிடித்தது.

மொபைல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது ஆதார் மூலம் அனைத்து தகவல்களையும் இணைக்கும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு பகுதி. அந்த கட்டாயத்தின் கீழ் தமது ஆதார் எண்ணை, தமது ஏர்டெல் மொபைல் எண்ணுடன் இணைத்திருந்த வாடிக்கையாளர்களை ஏர்டெல் குறிவைத்தது.

ஏர்டெல் பேமண்ட் வங்கி இறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் – சசி அரோரா.

இதற்கிடையில், டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக அனைவரும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று கெடு விதித்தது, மோடி அரசு. புதிய வங்கிக் கணக்குகளை தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியம் என்று வலியுறுத்த ஆரம்பித்தன வங்கிகள். ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அவர்களது வங்கி சேவைகள் முடக்கப்படும் என்று தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் நச்சரிக்க ஆரம்பித்தன. (இப்போது ஆதார் திட்டத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்வது வரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.)

இப்போது, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க ஆதார் எண் அவசியம் (போதுமானது), மொபைல் எண்ணுடனும் ஆதார் எண் இணைப்பு என்ற இரண்டையும் சேர்த்து பாருங்கள்.

வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு தேவையான ஆதார் எண்ணையும், கணக்குடன் இணைப்பதற்கான மொபைல் எண்ணையும் தன் கட்டுப்பாட்டில் பெற்ற ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் ஏர்டெல் வங்கிக் கணக்கை தொடங்கி விட்டது. இந்த வாடிக்கையாளர்கள் தமது சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக இணைத்திருந்த வங்கிக் கணக்கை மாற்றி ஏர்டெல் வங்கிக் கணக்கை இணைத்து விட்டது. இதற்கும் ஆதார் எண்ணும், தொலைபேசி எண்ணும் தன் கட்டுப்பாட்டில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டது. இந்த வாடிக்கையாளர்களின் சமையல் எரிவாயு மானிய பணம் அவர்களது ஏர்டெல் வங்கிக் கணக்குக்குள் போகத் தொடங்கியது.

இவ்வாறாக வாடிக்கையாளருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அவரது பணத்தையும் அந்த கணக்குக்கு திருப்பி விட்டிருக்கிறது ஏர்டெல். இவ்வாறாக 31 லட்சம் கணக்குகள் மூலம் ரூ 190 கோடியை திசை திருப்பியுள்ளது அம்பலமானது.

இந்த மோசடியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆதார் எண்ணை தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்துடனும் இணைப்பது நம் வாழ்க்கையை மூக்கணாங்கயிறு போட்டு கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவதற்கான வழி என்பதைத்தான்.

ஆதார் திட்டத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிய நந்தன் நீலகேணி

ஒருவர் ஆதார் எண்ணை கைபேசியுடனும் வங்கிக் கணக்குடனும் இணைக்கும் போது அவரது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளையும், கைபேசியின் இடம் அறியும் தொழில்நுட்பம் மூலம் அவரது பயண விபரங்களையும், ஒரு கார்ப்பரேட் நிறுவனமோ அரசோ கண்காணித்து தெரிந்து கொள்ள முடியும். நாட்டின் 120 கோடி மக்களின் இத்தகைய விபரங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் வசம் போய், அவர்கள் மக்களை தம் விருப்பப்படி ஆட்டுவிக்க முடியும். இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக முடியும்.

ஏர்டெல் செய்த மோசடியின் அளவு ரூ 190 கோடியாக இருந்தாலும், இது ஆதார் என்ற வெடிகுண்டின் நாசவேலை சாத்தியங்களை கோடிட்டு காட்டும் பனிப்பாறையின் விளிம்பு மட்டுமே.

உதாரணமாக, இனிமேல் சிறுநீரகம் தானம் செய்பவர்களின் ஆதார் எண்ணை சரி பார்த்து, அவரது தொலைபேசியில் ஒப்புதல் பெற்று விட்டால் சட்டரீதியாக அவரது அனுமதி பெறப்பட்டு விட்டதாக கருதப்படும் என்று ஒரு சட்டத்தை அரசு இயற்றி விடுவதாக வைத்துக் கொள்வோம். அதன்படி, சில லட்சம் குடிமக்களின் ஆதார் எண்+தொலைபேசி எண் விபரங்களை கைப்பற்றும் எந்த சிறுநீரக திருட்டு கும்பலும் சட்ட பூர்வமாக யாருடைய சிறுநீரகத்தையும் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்று விடும்.

இறக்குமதிக்கான LOU என்ற வசதியில் இருந்த ஓட்டையை பயன்படுத்தி ரூ 12,000 கோடிக்கும் மேல் ஆட்டையை போட்ட நீரவ் மோடி போன்ற முதலாளிகளின் நாடு இது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சேவைகளி் சேர்க்கைகளை பயன்படுத்தி ஏர்டெல் போன்று நூற்றுக் கணக்கான ஓட்டைகளை கண்டுபிடித்து மக்கள் தலையை மொட்டை அடிக்க இந்திய ‘தொழில் முனைவர்கள்’ காத்திருக்கிறார்கள். நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆனால், மோடி அரசோ, ஏர்டெல் செய்த இந்த முறைகேட்டை ஏதோ சட்ட ஒழுங்கு பிரச்சனை போல பார்த்து சொற்ப தொகை அபராதம் மட்டும் விதித்துள்ளது. டஜன் கணக்கில் தனியார் கார்ப்பரேட்டுகளை வங்கி தொடங்கி நடத்த அனுமதிப்பதை ரத்து செய்யவோ, ஆதார் எண்ணை அனைத்துடனும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவதையோ நிறுத்தவில்லை.

அரசுதான் ஆதார் எண்ணை மக்கள் மீது திணித்தது. எரிவாயு மானியத்துடனும், வங்கிக் கணக்குடனும், வருமான வரி கணக்குடனும் இணைக்கும்படி கட்டாயப்படுத்தியது. எனவே, இந்த ஊழலுக்கும் இனிமேல் நடக்கவிருக்கும் மோசடிகளுக்கும் ஆதார் திட்டத்தை முரட்டுத்தனமாக திணித்த மோடி அரசும், ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்திய முந்தைய மன்மோகன் சிங் அரசும், அதை அமல்படுத்த உதவிய இன்ஃபோசிஸ் நந்தன் நீலகேணியுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இப்போதாவது நாம் விழித்துக் கொண்டு ஆதார் என்ற மக்கள் விரோத திட்டத்தையும், அதை கட்டாயமாக புகுத்தும் மோடி அரசின் அடக்குமுறையையும் எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

– சியாம் சுந்தர்
தலைவர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

மேலும் படிக்க
Aadhaar Mess: How Airtel Pulled Off Its Rs 190 Crore Magic Trick

நன்றி : வினவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/aadhar-danger-exposed-by-airtel-scam/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
Modi - Harvard or Harwork or ...
5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!

அம்மணமாக பவனி வரும் பேரரசர், அதைச் சுட்டிக்காட்டுபவர்களை பார்த்து "என்ன தப்புத் தப்பாக உளர்றீங்க. என்னோட அரசவை புலவர்கள், நான் முழு உடை உடுத்திருக்கிறேன் என்று நிரூபித்து...

தரமான மருத்துவக் கல்வியை, மருத்துவத்தை கொல்வதற்கே “நீட்” : தெருமுனைக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் - ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017...

Close