அறிமுகம்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஒரு அறிமுகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் புரட்சிகர தொழிற்சங்கமாகும்.

ஐ.டி ஊழியர் பிரிவின் துவக்கம்

2014 நவம்பர் மாதம் டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டு அமல்படுத்தி வருவதாக செய்தி வெளியான போது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழமை அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் நடத்தும் வினவு தளத்தில் ஆட்குறைப்புக்கு ஊழியர்களின் திறமைக் குறைவே காரணம் என்று நிர்வாகம் கூறுவதை அம்பலப்படுத்தி, அதன் உண்மையான நோக்கம் ஊழியர்களின் வாழ்க்கையை பலியிட்டு நிறுவன லாபத்தை அதிகரிப்பதே என்று தெளிவுபடுத்தும் பதிவு வெளியிடப்பட்டது. திடீரென்று வேலை இழக்கும் ஊழியர்கள் இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல ஐ.டி துறை ஊழியர்கள் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர். ஊடகங்களுக்கு கொண்டு செய்திகள் அனுப்பப்பட்டன. செய்தி பதிவுகள், அனுபவ தொகுப்புகள் வினவு தளத்தில் வெளியிடப்பட்டன.

2015, ஜனவரி 7-ம் தேதியன்று, பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த சேர்ந்த கும்மிடிப்பூண்டி, பட்டாபிராம் பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட டி.சி.எஸ் ஊழியர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தும், ஐ.டி ஊழியர்கள் யூனியனாக அணி திரளும்படி அறைகூவல் விடுத்தும் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர் சிக்னலில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

இந்தப் பிரச்சாரத்தின் இறுதியில் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

ஐ.டி ஊழியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம், அவர்கள் செல்லும் பேருந்துகளிலும் மின்சார இரயில்களிலும் பிரச்சாரம், ஐ.டி துறையினர் புழங்கும் இணையம், சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸப்பில் பிரச்சாரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசுரங்கள், பல நூறு போஸ்டர்கள் என்று மூன்றே நாட்களில் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் ஐ.டி துறையினரிடையே முக்கிய பேசு பொருளாக்கப்பட்டது.

இந்தப் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக, ஜனவரி 9-ம் தேதி காலையில் சிறுசேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலில் நடைபெற்றது மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் மற்றும் பு.ஜ.தொ.மு தோழர்களின் பிரச்சாரம்.

திட்டமிட்டபடி 10-ம் தேதி மாலை கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு பு.ஜ.தொ.மு.-ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது.

சங்கத்தின் செயல்பாடுகள்

ஐ.டி ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் அலுவலக பகுதிகளிலும் பிரச்சாரம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.

சங்கத்தில் சேருமாறு அழைக்கும் உரை ஒலிப்பதிவாக பரப்பப்பட்டது.

அப்ரைசல் மோசடி தொடர்பான பிரசுரம் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டது. போஸ்டர், துண்டறிக்கை, இணைய பிரச்சாரம், வீடியோக்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

டி.சி.எஸ் வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியருடன் தொடர்பு கொண்டு வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.

சோழிங்க நல்லூர் குடியிருப்புப் பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது கிடைத்த தகவலை தொடர்ந்து சின்டெல் வேலை நீக்கங்களுக்கு எதிராக பரவலாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

டி.சி.எஸ்-ல் பணிபுரியும் நமது சங்க உறுப்பினருக்கு அப்ரைசல் மூலம் ஊதியம் குறைக்கப்படும் உத்தரவு வழங்கப்பட்டதை எதிர்த்து புகார் வழக்கு தொடரப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

2015 டிசம்பரில் சென்னையைப் பேரழிவில் தள்ளிய வெள்ளம் குறித்த சர்வே ஒன்று நடத்தப்பட்டது.

1300 பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கடிதம் கொடுத்து விட்டு அவர்களுக்குப் பணி வழங்காமல் ஏமாற்றிய எல் & டி நிறுவனத்தைக் கண்டித்தும், போராடுவோரை ஆதரித்தும் சுவரொட்டி, துண்டு பிரசுரம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கும் பொருந்தும் என்பதை அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தமிழக அரசின் தொழிலாளர் துறைக்கு அது தொடர்பாக முடிவு எடுக்கும்படி உத்தரவு பெறப்பட்டது. தமிழக அரசு தரப்பில் கணிசமான கால தாமதங்களுக்குப் பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதாக எச்சரிக்கை இவற்றைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு சங்கம் வைக்கும் உரிமையை உறுதி செய்தது.

இந்தச் செய்தி ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

டி.சி.எஸ் நிறுவனம் சி.எம்.சி எனும் தனது துணை நிறுவனம் மூலமாக செய்து வரும் பணி மோசடியை எதிர்த்து ஜே.சி.எல்.லை சந்திக்க பாதிக்கப்பட்ட ஊழியருடன் சேர்ந்து இறுதியாக ஃபெயிலியர் ரிப்போர்ட் பெறப்பட்டுள்ளது.

சி.டி.எஸ் நிறுவனம் சட்டவிரோதமாக 9 மணி நேரம் வேலை செய்யச் சொல்லி மெயில் அனுப்பியுள்ளதை எதிர்த்து நாம் தொழிலாளர் ஆய்வருக்கு கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு நிறுவனம் 8 மணி நேரம்தான் வேலை என்று பின்வாங்கியது.

சட்டப் போராட்டங்கள் மூலம் தொழிலாளர் சட்டங்கள் இந்தத் துறைக்கும் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசை அறிவிக்க வைத்தது, 8 மணி நேரம்தான் வேலை என்று சி.டி.எஸ் நிறுவனத்தை பணிய வைத்தது, இந்த வெற்றிகள் குறித்தும் டி.சி.எஸ் டிரெயினிங் மோசடி, அப்ரைசல் பிரச்சனை போன்றவை பற்றியும் பிரச்சாரங்கள் ஆகியவை ஐ.டி ஊழியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை பெற்றன.

சங்க உறுப்பினர்களுக்கான அறைக் கூட்டங்கள்

ஜூலை 2016 பிக் டேட்டா பற்றிய தொழில்நுட்ப உரையும், யூனியன் அமைப்பது பற்றிய தோழர் விஜயகுமாரின் விரிவான உரையும் பல புதிய விஷயங்களை தெரிவிப்பதாக அமைந்தன.

ஆகஸ்ட் 2016 டேட்டா சைன்ஸ் பற்றிய தொழில்நுட்ப உரை, சமஸ்கிருதத் திணிப்பு, 8 மணி நேர வேலை என்ற உரிமை ஆகிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.

செப்டம்பர் 2016 மாதக் கூட்டத்தில் சிக்கோ என்ற மருத்துவத்தில் தனியார்மயம் பற்றிய அமெரிக்க ஆவணப்படம் திரையிடப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

அக்டோபர் 2016 மாதத்தில் முதலாளித்துவ ஊடகங்களின் நடைமுறையை தோலுரிக்கும் மேட் சிட்டி என்ற ஆங்கில படம் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது.

நவம்பர் 2016 மாதக் கூட்டத்தில் மோடியின் கருப்புப்பண ஒழிப்பு மோசடி பற்றிய விவாதம் நடத்தப்பட்டது.

டிசம்பர் 2016 மாதக் கூட்டத்தில் மோடியின் கருப்புப்பண ஒழிப்பு மோசடி பற்றிய விவாதம்,. கேப்பிடலிசம் – எ லவ் ஸ்டோரி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஜனவரி 2017-ல் விவசாய நெருக்கடி, ஐ.டி சங்க நடவடிக்கைகள் பற்றிய விவாதங்களும், Nero’s Guests என்ற சாய்நாத்தின் ஆவணப்பட திரையிடலும் நடைபெற்றது.

மார்ச் 2017-ல் டிரம்ப் நிர்வாகமும் ஐ.டி துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என்ற தலைப்பிலும், நெடுவாசல் போராட்டம் பற்றியும், அரசியல் உரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/about-ndlf-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: