அனைத்தும் உங்களின் பெயரில்

 

பெரியார் ஒரு சாதி வெறியர், அவர் சாதி ஒழிப்பிற்காக எதுவும் செய்யவில்லை என்று பெரியாரை அவதூறு செய்பவர்கள் பேசும் இன்றைய நிலையில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடவும் சாதி ஒழிப்பில் முற்போக்கு மாநிலமாக திகழ்கிறது, இன்றைய கார்ப்பரேட் இந்தியாவில் பெயரில் இருக்கும் சாதிப் பட்டங்கள் எவ்வாறு வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் முன்நிற்கின்றன என்றும் ‘தி இந்து‘வில் வெளியான இக்கட்டுரை பேசுகிறது.

சாதிப் பட்டங்களை தங்களுடைய பெயர்களுடன் சேர்த்து வைப்பது சந்தேகமேயில்லாமல் தனிச்சலுகையின் அடையாளமே

படம் நன்றி: thecompanion.in

டிசம்பர் 25, 1927 அன்று வெளியான குடியரசு என்ற தமிழ் வாராந்திர பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் பெயர் ஈ.வெ.ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெரியார் என்று பிறகு வந்த நாட்களில் அறியப்பட்ட அவர், “நாயக்கர்” என்ற தன் பெயரின் பின்னால் இருந்த தன்னுடைய சாதிப் பெயரை வாராந்திர பத்திரிக்கையின் தலையங்கத்தில் இருந்து  உணர்வுபூர்வமாக நீக்கினார். தொடர்ந்து வந்த பதிப்புகள் சாதிப் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிடும் இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றன. இப்படித்தான் பிறந்தது, தமிழ்நாட்டின் நீண்ட கால சமூக நீதிப் போரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு குறியீட்டுப் போர்.

செங்கல்பட்டில் பிப்ரவரி 17-18, 1929 அன்று நடந்த முதல் சுயமரியாதை மாநாடு வரை, சாதிப் பெயர்களை கைவிடுவதற்கான தீவிரமான அமைப்பு ரீதியான முயற்சியை நாம் பார்க்கவில்லை. 1929 பிப்ரவரி 24-ம்  தேதி குடியரசுவில் வெளியான செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “ஒருவரின் பெயரை வைத்து, அவர்களின் நடத்தை, திறமை அல்லது அறிவு பற்றி எதுவும் தெரியாமல் பாகுபாடு காட்டும் வழக்கத்தினால் சாதிப் பெயர்களைக் கைவிடுவதற்கான தீர்மானத்தின் அவசியம் வலுப்பெறுகிறது. இத்தகைய பாகுபாடு காட்டும் சாதிப் பெயர்கள் மற்றும் மத அடையாளங்காட்டிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒற்றுமையையும் சமத்துவத்தையும் ஆதரிக்கும் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்”

அந்த தலையங்கத்தின் கூடவே, நாயக்கர், நாயுடு, செட்டியார் மற்றும் முதலியார் போன்ற சாதிப் பெயர்களையும், அதேபோல விபூதி அல்லது நாமம் அல்லது பூணூல் போன்ற மத அடையாளங்களையும் துறந்த நபர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியை குடியரசுவில் பிரசுரிக்க அனுப்பி வைக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியானது. பெரியார் பற்றிக் குறிப்பிடும் எந்த இடத்திலும் அல்லது பெரியார் தொடர்பான எந்தக் கடிதத்திலும் “நாயக்கர்” என்ற சொல் இனிமேல் பயன்படுத்தப்படாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

படம் நன்றி: thecompanion.in

சமகால இந்திய சூழலில் 2007-ல் சுக்தியோ தோரட் மற்றும் பால் அட்வெல் ஆகியோர் செய்த ஆய்வு நகர்ப்புற தொழிலாளர் சந்தையில் பரவலாக இருக்கும் பெயர் அடிப்படையிலான சாதி பாகுபாட்டை வெளிக்கொணர்ந்தது. இந்த ஆய்வில் ஒரே மாதிரியான கல்வித் தகுதியும்  அனுபவமும் ஆனால் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் சாதி மற்றும் மதப் பெயர்களைக் கொண்ட ஆண்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு 10 சாதி இந்து விண்ணப்பதாரர்களுக்கும், ஆறு தலித்துகள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சாதி அடிப்படையிலான பாகுபாடு ஒரு முடிந்து போன (கடந்த கால) விசயம் என்பது பொதுவாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சொல்லப்படும் வாதம். ஆனால், சாதிப் பட்டங்கள் பெயர்களாக  இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி தனிச்சலுகைகளை அடையாளப்படுத்துகின்றன என்றும், எனவே அவை இயல்பாகவே பாகுபாடு காட்டுகின்றன என்றும் கூறுகிறது தோரட் மற்றும் அட்வெல்-லின் ஆய்வு. இத்தகைய சாதிப் பெயர்களை பெயர்களில் இருந்து நீக்குவதன் மூலம், சாதி வேறுபாடுகள் மறைந்து போகாது, ஆனால் அத்தகைய வேறுபாடுகள் வெளிப்படையான பிரச்சாரமாக இருப்பது மங்கலாகத் தொடங்கும். உதாரணமாக, தமிழர்கள் சாதிப் பெயர்களைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக தந்தை பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடுகிறார்கள், அல்லது தந்தையின் பெயரை குடும்பப் பெயராக பயன்படுத்துகின்றனர்.

சாதிப் பெயர்களை விட்டொழிப்பதற்கான அவசியம் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அதிகம். ஆனாலும் தந்தை பெயரின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்துவதோ அல்லது தந்தையின் பெயரை முழுமையாக பயன்படுத்துவது மட்டுமோ போதாது. தாயின் பெயரையும் சேர்த்துப் பயன்படுத்துவதே பாலின சமத்துவம். இவ்வாறுதான் நாம் சாதியற்ற, மதநம்பிக்கையற்ற மற்றும் பாலின-சமத்துவமான பெயர்களை நோக்கி நகர முடியும் என்று நம்புகிறோம்.

மொழிபெயர்ப்பு: மணி

மேலும் படிக்க:

Permanent link to this article: http://new-democrats.com/ta/all-in-your-name-caste-discrimination/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம்!

அமெரிக்காவில், கருப்பின மக்கள் ஒரு இனவாத முதலாளித்துவ அமைப்பில் வாழ்கின்றனர். இனவாத முதலாளித்துவம், போலீசாரின் நவீனகால படுகொலை அணிவகுப்பு மூலமும், இலாப நோக்கிலான பெருவீத சிறைவாசம் மூலமும்...

டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி!

இந்தியாவில் ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டு அதன் பலன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபமாக கடத்தப்படுகிறது. இதன் விளைவாக கணிசமான மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை...

Close