தொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்

ஜியோ சேவை, ஜியோ ஃபோன், ஜியோ இணைய இணைப்பு என்று இந்திய உழைக்கும் மக்களின் உள்ளங்களையும், சட்டைப் பைகளையும், பணப்பைகளையும் ஊடுருவி வருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ். ‘இலவச டேட்டா, மலிவான வாய்ஸ் அழைப்புகள் என்று தொலைபேசித் துறையை ஜியோ புரட்சிகரமாக மாற்றி அமைத்து விட்டதாக’ ஊடகங்கள் கொண்டாடுகின்றன. ‘ஜியோவுடன் போட்டி போட்டு பிற நிறுவனங்களும் கட்டணங்களை குறைத்து விட நுகர்வோருக்கு ஜாலிதான்’ என்கின்றனர் கார்ப்பரேட் துதிபாடிகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏர்டெல்-ம், வோடஃபோனும், ஏன் பி.எஸ்.என்.எல்-ம் கூட ஒரு மாதத்துக்கு 2 ஜி.பி டேட்டாவுக்கு 200 ரூபாய் வசூலித்தார்கள். இன்றைக்கு ஒரு நாளைக்கு 1 ஜி.பி டேட்டா (அதாவது ஒரு மாதத்துக்கு 30 ஜி.பி) 150 ரூபாயில் கிடைக்கிறது. இப்போது நுகர்வோருக்கு ஜாலி என்றால் அப்போது என்ன நடந்தது? அடித்துப் பிடுங்கினார்களா? இப்போதும் கூட தினமும் 30 ஜி.பி டேட்டாவுக்கு 150 ரூபாய் கட்டணம் சரியானதுதானா அல்லது 15 ரூபாய் கட்டணத்தில் கொடுக்க முடியுமா? இதை யார் தீர்மானிப்பது? எப்படி தீர்மானிப்பது?

ஜியோ தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறது என்று ஊடகங்கள் கொண்டாடும்போது, “இது புரட்சி இல்லை தொலைதொடர்புத் துறையில் ரிலையன்சின் ஏகபோகத்துக்கு அச்சாரம்” என்பதை முகேஷின் தம்பி அனில் அம்பானியே சொல்லியிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் 14-வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் அனில் அம்பானி இந்தியத் தகவல்தொடர்புத் துறை ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். கூடவே தொலைதொடர்புத்துறையில் தனது அண்ணன் ஏற்படுத்தியிருக்கும் “ஆக்கபூர்வ அழிவை”, சுட்டிக்காட்டுகிறார் அனில்.

ஆக்க பூர்வ அழிவு என்றால் என்ன? பல நிறுவனங்களை அழித்து, தின்று செரித்து சந்தை போட்டியை ஒழித்துக் கட்டி ஒரு சில நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுதான் அது.

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 20-ம் நூற்றாண்டின் இறுதி வரை பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தின. 90-களில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அலைபேசித் துறையில் தனியார்மய தாராளமய கொள்கைகளின் ஒரு பகுதியாக தனியார் கார்ப்பரேட்டுகள் அனுமதிக்கப்பட்டன. ‘போட்டியின் காரணமாக மக்களுக்கு தொலைபேசி சேவைகள் குறைந்த விலையில் கிடைக்கும்’ என்ற வாதம் அப்போது முன்வைக்கப்பட்டது. ஆனால், இதன் உண்மையான நோக்கம் சந்தையில் ஏகபோகத்தை உருவாக்கி விரல் விட்டு எண்ணக் கூடிய கார்ப்பரேட்டுகள் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து லாபத்தை கறப்பதே ஆகும்.

இந்தியாவின் பெரிய சந்தையைக் கைப்பற்ற பல கார்ப்பரேட்டுகள் போட்டியிட்ட போது, பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்-ம், எம்.டி.என்.எல்-ம் அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன. அவற்றின் அடிக்கட்டமைப்பு வசதிகளான டவர்கள், கேபிள்கள் போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் குறைந்த பட்ச கட்டணம் செலுத்திவிட்டு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டன.

சந்தை ஏகபோகத்தை யார் கைப்பற்றுவது என்ற கார்ப்பரேட்டுகளின் போட்டிக்காக, அலைக்கற்றை உரிமத்தை பெற லஞ்ச ஊழல், சந்தையை கைப்பற்ற விளம்பரங்கள், பிற நிறுவனங்களை வாங்குதல், அரசு கொள்கையை தனக்கு சாதகமாக மாற்றி அமைத்தல் என்று பல்வேறு உத்திகளை பின்பற்றின. இதன் விளைவாக ஏர்செல், ஏர்டெல், ஹட்ச், பி.எஸ்.என்.எல், வீடியோகான், டோகோமோ என்று 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொலைப்பேசி சேவையை வழங்கி வந்த நிலையில் இன்றைக்கு ஆறு நிறுவனங்கள் மட்டுமே களத்தில் உள்ளன. மற்ற நிறுவனங்களை இந்த ஆறு நிறுவனங்களும் விழுங்கி விட்டன. சின்ன மீனை பெரிய மீனும், பெரிய மீனை திமிங்கிலமும் விழுங்குவது; திமிங்கிலம் ஒட்டு மொத்த சந்தையையும் ஏகபோகமாக்கிக் கொள்வது – இதுதான் முதலாளித்துவம். அப்படியொரு ஏகபோகத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதைத் தான் ஆக்கப்பூர்வமான அழிவு என்கிறார், அனில். இதில் ஆக்கம் பெறுவது ஜியோ.. அழிவது யார்? போட்டி செல்போன் நிறுவனங்களின் உடனடி அழிவு புலப்படும். ஆனால், ஒரு தரகு முதலாளியின் ஏகபோகம் நாட்டுக்கே பேரழிவைக் கொண்டு வரும்.

இவரு இந்தியாவின் பிரதமரா, ஜியோவின் மார்க்கெட்டிங் ஏஜெண்டா?

குறைந்த விலையில் ஜியோ போன் வழங்குவது, கேபிள் டி.வி, இணையம், தொலைபேசி மூன்றையும் இணைத்து ஜியோ கிகாஃபைபர் எனும் சேவையை குறைந்த விலையில் நாடு முழுக்க செயல்படுத்துவதன் மூலம் அந்த சந்தைகளையும் கைப்பற்றி மொத்த தொலைத்தொடர்புத் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது, ரிலையன்ஸ்.

ஜியோ சேவைக்குத் தேவையான நாடு முழுவதற்குமான 4ஜி அலைக்கற்றையை ஏலத்தில் பங்கு பெறாமல் IBSPL என்ற உப்புமா கம்பெனி மூலம் ஏமாற்றி ரிலையன்ஸ் கைப்பற்றியது. நிறுவனத்தைத் தொடங்க பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடனை வாரி வழங்கின. மோடி இலவச விளம்பரம் செய்து கொடுத்தார்; ரிலையன்ஸ் பி.எஸ்.என்.எல் டவர்களை குறைந்த விலையில் பயன்படுத்திக் கொண்டது; மற்ற போட்டி நிறுவனங்களை காலி செய்ய சேவைகளை இலவசமாக வழங்கியது. அதை எதிர்த்து நிறுவனங்கள் வழக்கு தொடுத்தபோது உச்சநீதிமன்றமும், தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமும் ஜியோவுக்கு சாதகமாக நடந்து கொண்டது. இதுமட்டுமல்ல, மக்கள் வரிப் பணத்தில் அரசு உருவாக்கிய ஆதார்-ஐ பயன்படுத்தி ஒரு இணைப்புக்கு ரூ 300 விதம் 20 கோடி இணைப்புகளுக்கு ரூ 6,000 கோடி மிச்சப்படுத்தியிருக்கிறது ஜியோ, அதை அரசுக்கு செலுத்த வேண்டும். அதற்கு மாறாக சட்டம் போட்டு ஆதார்-ஐ தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று லாபி செய்து கொண்டிருக்கிறது, கார்ப்பரேட் முதலாளி வர்க்கம்.

இவ்வாறு அனைத்து அரசு நிறுவனங்களும் ஜியோவுக்காக காசில்லாமல் வேலை செய்துள்ளன. அதாவது, எந்த ஒரு முதலாளித்துவ நிறுவனமும் அரசின் ஆதரவில்லாமல் ஒரு துறையில் ஏகபோக ஆதிக்க நிலையை அடைய முடியாது. பிரதமரே இந்தத் தனியார் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக மாறியுள்ளார்.

ஜியோ ஆரம்பித்த ஒரு வருடம் கழித்து அம்பானி ஜியோ மூலம் 25000 கோடி ரூபாய் நட்டம் அடைந்ததாக பத்திரிக்கைகள் கூறின; இந்த நட்டம் அம்பானியின் பையிலிருந்து போகவில்லை. அம்பானிக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் கொடுத்த பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான பொதுத்துறை வங்கிகளின் பணம் அது, அதாவது நமது பணம் அது. ஒவ்வொரு முதலாளித்துவ சூதாட்டமும் தோல்வியடையும்போது அதன் சுமை வாராக்கடன்களாகவும், சிறு முதலீட்டாளர்களின் சேமிப்பு அழிவாகவும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. அனில் அம்பானி கூறியதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம், கடந்த சில ஆண்டுகளாக தொலைத்தொடர்பு துறையில் நிலவும் உச்சபட்ச போட்டியின் காரணமாக நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளில் 20 லட்சம் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உழைக்கும் மக்களாகிய நமது பணத்தில் நிறுவனத்தை தொடங்கி, நம்மிடமே கொள்ளை அடித்து விட்டு ஒரு கட்டத்தில் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியில் தள்ளுகின்றார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். மறுபுறத்தில் ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பையும் தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, கார்ப்பரேட்டுகளது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர்.

நிறுவனத்தின் உற்பத்தியிலும் சரி சேவையிலும் சரி எந்த பங்கும் வகிக்காத கார்ப்பரேட் முதலாளிக்கு இங்கு என்ன வேலை. அம்பானி என்ற தனியார் கார்ப்பரேட் முதலாளி செய்வதை ஏன் பி.எஸ்.என்.எல் போன்ற பெரும் அரசு நிறுவனத்தால் செய்ய முடியாது? அப்படி செய்யும்போது மக்களுக்கும் குறைந்த விலையில் சேவைகளை தரமாக வழங்க முடியும் என்பதே நிதர்சனம். ஆனால் அதற்கு தடையாக நிற்பது, ஏகபோக கொள்ளை அடிப்பதற்கான கார்ப்பரேட் கட்டமைப்பும் அதற்கு சேவை செய்யும் அரசும் தான். இந்தக் கட்டமைப்பை எதிர்த்து முறியடிப்பதன் மூலம்தான் எந்த ஒரு நிறுவனத்தையும் நமக்கானதாக, நம்மால் நடத்தக்கூடியதாக மாற்றி அமைக்க முடியும்.

– செல்வம்

புதிய தொழிலாளி (அக்டோபர்-நவம்பர்’18)

Permanent link to this article: http://new-democrats.com/ta/ambanis-jio-monopoly-in-telecom/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது?

உலகின் தனிநபர் உற்பத்தித் திறன் மிக அதிகமான நாடாக வரிசைப்படுத்தப்பட்ட பெர்முடாவில் நடக்கும் ஒரே உற்பத்தி நடவடிக்கை, கடலோர பார்களில் தயாரிக்கப்படும் காக்டெய்ல்களும், பிற மேட்டுக்குடி சுற்றுலா சேவைகளும்தான்.

கடற்கரையை ஆக்கிரமிக்கும் மூலதன ஆக்டோபஸ்கள்

தொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி...

Close