நெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்

ணக்கம் ! நான் சுகுமார். சென்னையில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறேன்.

ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியவுடன் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதி நெடுவாசலுக்குப் புறப்பட்டேன். போராட்டத்தின் 12-ம் நாள் முதல் 19-ம் நாள் வரை நெடுவாசல் போராட்டக் களத்தில் இருந்தேன். பின்னர், வார நாட்களில் அலுவலக வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் நெடுவாசலுக்குப் போவதை 4 வாரமாகச் சென்று வருகிறேன்.

நெடுவாசல் போராட்டம் 22-வது நாள் வரை நல்லபடியாக நடந்தது. ஆண்களைவிட பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் மிகவும் உணர்வுப பூர்வமாகப் பங்கேற்றனர்.

23-ம் நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டக் களத்தில் இருந்த மக்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. பணம் பெற்றுக் கொண்டு போராட்டம் கைவிடப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர். இது உண்மையா? பொய்யா ? என்பது தெரியவில்லை.

போராட்டக் களத்தின் அருகில் இருக்கும் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடப்பதால் இடையூறு செய்யக் கூடாதென வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், 16-ம் தேதி நல்ல முடிவு எட்டப்படுமென மத்திய அமைச்சர்கள் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்பட்டதாகப் போராட்டக் குழுவைச் சேர்ந்த 20 பேர் தெரிவித்தனர். இதன் உண்மைத் தன்மை பற்றித் தெரியவில்லை.

நெடுவாசலில் இருந்து குழாய் பதித்துள்ள இடத்தின் பெயர் நல்லாண்டார் கொல்லை. அங்கும் நெடுவாசலில் தொடங்கிய அன்றே போராட்டம் தொடங்கியது. 28-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 50 முதல் 60 பேர் வரை போராட்டக் களத்தில் 24 மணி நேரமும் உள்ளனர். சுழற்சி முறையில் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நெடுவாசல் அளவுக்கு நல்லாண்டார் கொல்லையில் கூட்டம் இல்லை. 100-200 பேரே உள்ளனர்.

வடகாடு என்னும் ஊரிலும் போராட்டம் தொடங்கியுள்ளது. 12-வது நாள் அங்கு சென்று 4 நாட்கள் தங்கினேன். இங்கு போராட்டம் நல்ல முறையில் நடக்கிறது. ஊர் மக்கள் நல்ல ஒற்றுமையுடனும் , விழிப்புணர்வுடனும் இருக்கிறார்கள். தலைமை இல்லாது 3 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அட்டவணை போட்டுத் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான போராட்ட முறைகளைக் கையாள்கின்றனர். கிராமப் பபுறங்களில் யாரேனும் இறந்துவிட்டால் 8ம் நாள் காரியம் செய்வார்கள். அதே போன்று போராட்டத்தின் 8-வது நாள் ஆண்கள் மொட்டையடித்தும் , பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராடினர். இன்று உள்ளூர் மாரியம்மனுக்குப் பால் குடம் எடுத்தனர்.

சென்னையிலிருந்து என்னுடன் வந்த 5-6 பேர் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து போராட்டக் களத்தின் எதிரில் இருக்கும் கருவேல மரங்களை நீக்கி விட்டுக் குளத்தைத் தூர் வாரினோம்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக உள்ளூர் மக்கள் மட்டுமே போராடுகின்றனர். சென்னையிலும் மக்கள் போராடத் தயாராக உள்ளனர். இங்கு போராட அனுமதி கிடைப்பதில்லை. அனுமதி வழங்கினாலும் ஒரு மணி நேரத்தில் கைது செய்து விடுகிறார்கள். ஜல்லிக்கட்டு போல் இதுக்கு மக்கள் திரளவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லை. 28 நாளாகப் போராடியும் இன்னும் ஒரு முடிவு எட்டப் படவில்லை.

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. நெடுவாசல் , தங்கச்சி மடத்தில் மீனவர் போராட்டம், பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம், தலித் மாணவர் மரணம் தொடர்பான போராட்டம் என்று ஆங்காங்கே நடக்கின்றன. இதே வேளையில் கட்சிகள் அனைத்தும் இடைத் தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன.

வடகாடு போராட்டம் பற்றி ஊடகங்கள் அதிகம் பேசவில்லை. இத்திட்டம் நிறைவேறினால் சுற்றியுள்ள 100 கிராமங்களும் அழியும்.

சென்னையில் இருக்கும் நாமெல்லாம் நம் சொந்த வேலையில் மூழ்கியுள்ளோம். விவசாயம் அழிந்து சோற்றுக்குப் பிச்சை எடுக்கும் நிலை வந்தால் என்ன செய்வோம்.

ஓ.எம்.ஆர் ல் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் சர்வதேச அளவில் நட்டம் ஏற்படும். நாடே அதிரும். இது மாநிலம் தழுவிய போராட்டமானால் அரசால் ஏதுமே செய்ய முடியாது. இன்றைய சூழலில் அனைத்து உரிமைகளையுமே நாம் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.

நெடுவாசலிலும் , வடகாட்டிலும் மக்கள் போராடுவது அவர்களது சுயநலத்திற்கா? 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தஞ்சை விளைந்து தரணி உண்ண முடியவில்லை என்றுதானே?

பாரம்பரிய விளையாட்டு மற்றும் நாட்டு மாடுகளைக் காப்பாற்றவும் போராடிய நாம் நம் வயிற்றுப் பிரச்சினை , விவசாயப் பிரச்சனைக்காக வீச்சாகப் போராடினால் வெற்றி கிட்டும். கோடி கைகள் ஒன்று கூடிப் போராடுவோம் !

நன்றி!

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employee-particpates-in-neduvasal-protest/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்

மேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது...

Lycatech மற்றும் Plintron global technology சட்டவிரோத வேலைப் பறிப்பு

லைக்கா டெக் / பிளின்ட்ரான் குளோபல் டெக்னாலஜி ஊழியர்களே! கட்டாய ராஜினாமா/வேலைப் பறிப்பை எதிர்கொள்ள நமக்கு சட்டத்தின் துணை உள்ளது. இது தொடர்பாக தொழில் தகராறு சட்டம்...

Close