சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1

மனு போட்டு, அதிகாரிகளை நம்பி  சோர்ந்து போன கதை

நான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். அடிக்கடி செய்திகள் பார்ப்பேன்.

கிராமம்

படம் : இணையத்திலிருந்து – மாதிரிக்காக மட்டும்

மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அப்போது நான் அடிக்கடி பார்ப்பது தண்ணீர் பிரச்சனைதான். அதற்காக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றும். ஆனால் என்னுடைய சிந்தனைக்கு அப்போது வேறு தீர்வு கிடைக்காததால் ‘நமது குறைகளை மனுவாக எழுதி தகுந்த துறை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும், அல்லது இப்போது இணையத்திலே தங்களுடைய குறைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி மனுவாக எழுதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பலாம்’ என்று செய்தித்தாளில் படித்தபடி நானும் எங்கள் கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைக்கும் மனுவாக எழுதி இணையத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பினேன் .

கீழ்க்கண்ட பல்வேறு குறைகளுக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு எழுதினேன்

  • “எங்கள் கிராமத்தில் பெரும்பாலான மக்களுக்கு குடிதண்ணீர் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை” என்று 5 முறை மனு எழுதியிருக்கிறேன்.
  • “மரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் ஏரிகளில் தெருக்களில் சாலைகளில் மரசெடி நட்டு வளர்க்க வேண்டும்” என்று 3 முறை மனு எழுதியிருக்கிறேன்.
  • “எங்கள் கிராமத்துக்கு செல்ல வேண்டுமென்றால் ஏரிக்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த ஏரிக்கரையில் முழுவதுமாக தெருவிளக்கு வசதி இல்லை. இரவு நேரங்களில் மக்கள் அதில் பயணிக்கும்போது ஏரிக்கரையில் இருந்து கீழே விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர். எனவே உடனடியாக அந்த பகுதியில் தெருவிளக்கு போட வேண்டும்” என்று 4 முறை மனு எழுதி அனுப்பிருக்கிறேன்.
  • “ஏரி, குட்டைகளின் கால்வாய்கள் அழித்து விட்டார்கள்” என்று 3 முறை மனு எழுதிருக்கிறேன்.
  • “கோரிக்கை மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று பலமுறை எழுதியிருக்கிறேன்.

நான் அனுப்பிய மனுவெல்லாம் கடைசியாக, யார் இதை செய்யாமல் ஏமாற்றி இருக்கிறார்களோ அவர்களிடமே அந்த மனுவின் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனுப்பப்பட்டது. திருடனிடமே திருட்டை விசாரிக்க சொன்னால் எப்படி இருக்கும் என்பது போலத்தான் இது உள்ளது.

********

ண்ணீர் பிரச்சனைக்காக நான்குமுறை மனு போட்டபிறகும் நடவடிக்கை எடுக்காததால் மக்களுடன் சாலை மறியல் செய்தோம். அப்போது பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், பி.டி.ஓ வந்து ‘கண்டிப்பாக ஆழ்துளை கிணற்றில் இருந்து தொட்டியில் சேகரித்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்கிறோம்’ என்று உறுதியளித்த பிறகே போராட்டத்தை வாபஸ் வாங்கினோம்.

இதன்பிறகு தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்தார்கள். ஆனால், இது ஒருசில மாதங்களுக்கு கூட தொடரவில்லை. சில நாட்களில் மோட்டார் பழுதடைந்து விட்டது என்று முழுவதுமாக வினியோகத்தை நிறுத்தி குடிநீர் தொட்டியையும், ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீர் குழாய்களையும் அகற்றிவிட்டார்கள். அதன்பிறகு அங்கிருந்து குடிதண்ணீர் மக்களுக்கு விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

மற்ற மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் மட்டும் போடுவார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் யாரெல்லாம் மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுகிறார்களோ அவர்களிடமே அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அனுப்பப்படும்.

இவ்வாறு நமது கிராமத்தில் மட்டும் இந்த நிலைமை இல்லை என்பது செய்திகளை படிக்கும் போது தெரிகிறது. நம்நாட்டில் மக்கள் படும் அவஸ்தைகள் அதற்கான காரணம் யார் என்று எனக்குள் கேள்வி கேட்டு பலநாட்கள் ஓடின. எனது கிராமத்துக்காக மனு போட்டதில் பிரச்சனைகளுக்குக் காரணம் யாரென்று தெரிந்துவிட்டது. ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது? அது மட்டுமில்லாமல் அதிலிருந்து மக்களை விடுவிப்பது? என்பது போன்ற சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

****

நிறைய படிக்கிறோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு செய்தியை படிக்கும் போதும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். பிறகு அதை மறந்து விட்டு சொந்த வேலை, கொண்டாட்டம் அப்படின்னு போய்டுவேன். ஆனா அடிக்கடி உள்ளுக்குள்ள உறுத்திட்டே இருக்கும்.

“இவளோ படிக்கிறோம், சமூகத்தைப் பற்றி பேசுறோம். கடைசி வரைக்கும் இதே மாதிரி போய்கிட்டு இருந்தா எப்போதுதான் மக்களிடம் நான் படித்தவற்றை சொல்வது? அடுத்ததாக அதற்கான தீர்வை நோக்கி அவர்களை கொண்டுசெல்வது??”

என்னுடைய ஊரில் வசிக்கும் நண்பர்களிடம் சமூகத்தை பற்றி அடிக்கடி பேசுவேன். செய்தியில் வரும் மக்கள் பிரச்சனை பற்றியும் அதற்காக அவர்களின் போராட்டம் பற்றியும் பேசிக் கொண்டிருப்பேன். ஒரு சிலர் புரிந்து கொள்வார்கள் பலர் “எவன்தான் நியாயமா இருக்கானுங்க“ என்று சொல்லிவிட்டு கடந்து போவார்கள், சிலர் “இதுபோல கடைசி வரைக்கும் பேசதான் முடியும். வேற ஒன்னும் பண்ணமுடியாது” என்பார்கள் .

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்தேன். இப்போது நமது வழிமுறையை மாற்றி முயற்சிப்போம் என்று நண்பர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவெடுத்தோம். அது இன்னும் பல புதிய அனுபவங்களையும், படிப்பினைகளையும் கொடுத்தது.

– பிரகாஷ்

(அடுத்த பகுதியில் தொடரும்)

Series Navigationஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போராடும் உரிமையை மறுக்கும் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை – நீதிபதி கட்ஜூ

தமிழ்நாடு போலீசும், அதிகாரிகளும் தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமையை அப்பட்டமான முறையில் மீறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும், இல்லாவிடில் இந்த சட்டவிரோத செயலில்...

ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்

ஐ.டி ஊழியர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி...

Close