- சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1
- ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!
- குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து
சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 2
உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!
நண்பர்களுடன் கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும், இப்போது பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய வாட்சப்பிலும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு தனியாக குழு ஆரம்பித்து அடிக்கடி பேசிக்கொண்டே இருப்போம்.
நண்பர்கள், “எப்போது இதை மக்களுக்கு சொல்ல போகிறோம்” என்று அடிக்கடி கேட்பார்கள். இந்தமுறை நான் ஊருக்கு சென்றதும் முதல் வேலையாக நண்பர்கள் கூடிப் பேசி மக்களிடம் உரையாட தயாரானோம். சுமார் காலை 11 மணியளவில் “மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்தில்” வேலைக்கு செல்லும் கிராமத்துப் பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருப்பதால் அங்கே சென்று பேசுவதாய் திட்டமிட்டு சென்றிருந்தோம்.
மக்களிடம் என்ன பேசுவது என்று முன்னாடியே நாங்கள் கூடி பேசினாலும் ஒரு கோர்வையாக விளக்கும்படி தயாரித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் குறிப்பாக தண்ணீர் பிரச்சனை , ஏரியில் மரங்கள் அழித்துவிட்டதை பற்றி, தெருவிளக்கு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை பேசலாம் என்று முடிவெடுத்து மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு சென்றோம் .
அங்கு சென்றதும், எங்களை பார்த்தவர்கள் எல்லாம் “எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “நாங்கள் உங்களிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும்” என்று சொன்னோம்.
மக்கள் ஆங்காங்கே குழுவாக வேலை செய்துகொண்டு இருந்தார்கள். ஆதலால் அவர்களை ஒன்றுகூட்ட தயக்கமாக இருந்தோம். கூட வந்த நண்பர் இதில் என்ன தயக்கம் என்று உடனடியாக ஆங்காங்கே சிதறிக்கிடந்த மக்களை ஒன்று கூட்டினார். குறைந்தது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்திருப்பார்கள். அனைவரும் ஒன்று கூடியதும் நண்பர் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசினார்.
“தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியமாக மழை வரவில்லை என்பது மட்டுமே காரணமில்லை. வாட்டர் பாக்கெட் கம்பெனி பல லட்சம் லிட்டர் தண்ணீரை நிலத்தடியில் இருந்து உறிஞ்சி தனிப்பட்ட லாபத்துக்காக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன்காரணமாக தான் நம்முடைய ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் அதிகமாக வற்றிவிட்டது. தண்ணீர் இருந்தும் நமது தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலைதான்” என்று தண்ணீர் தனியார்மயத்தை சுட்டிக்காட்டினார்.
அதைத் தொடர்ந்து நானும் பேசினேன்.
“கடுகு , மிளகு என்று ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் நாம் வரிகட்டுகிறோம். அதுமட்டுமில்லாமல் பலவழிகளில் அரசுக்கு வருமானம் போகும்படி கட்டணங்கள் உள்ளது. இதையெல்லாம் சேமித்து வைத்து நம்முடைய அரசு மக்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு செலவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு இப்போது நமக்கு தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆதலால் தனி ஒருவரின் லாபத்துக்காக தண்ணீரை விற்றுகொண்டிருக்கும் கம்பெனியை உடனடியாக மூடிவிட்டு அரசே தண்ணீர் லாரியில் குடிநீர் எடுத்துவந்து நமக்கு அன்றாடம் விநியோகம் செய்ய வேண்டும்; தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் உடனடியாக தெருவிளக்கு பொருத்த வேண்டும்; அருகில் உள்ள மலைகளில், ஏரிகளில் மரங்கள் நட்டுவளர்க்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுதான் சரி . நமது வரிப்பணத்தில் இருந்துதான் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஊதியமாய் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களுக்கான அரசு என்ன செய்ய வேண்டும்? குடும்பத்தில் தாய் தந்தை தங்களுடைய பிள்ளைகளை எப்படி எந்தவித குறைகளும் இல்லாமல் அல்லது குறைகள் வரும்போது உடனடியாக அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பர்களோ அதுபோல அரசும் மக்களின் குறைகளை உடனடியாக போக்கி அவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
ஆனால், தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டு பொறுக்க வரும் அரசியல் வாதிகளும், மக்களின் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் கிராமத்துக்கு வந்து மக்களிடம் என்ன குறைகள் உள்ளது என்று கேட்பதில்லை. அவர்களுடைய வேலையை செய்யாமலே நம்முடைய வரிப்பணத்தை சம்பளமாக வாங்குகிறார்கள்.
கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை மனுவாக எழுதி பலமுறை அரசாங்க அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக நாம் போராட்டம் செய்தால்தான் தீர்வு “
என்று பேசினேன்.
மக்கள் அதை ஏற்றுகொண்டார்கள் , அங்குள்ள பெண்களில் வயதானவர்கள் “நான் செய்த வேலைக்கு இன்னும் பல மாதங்களுக்கு பணம்வரவில்லை“ என்று சத்தமாக பேசினார்கள் .
“நமக்கு ஏதும் செய்யாமல் நம்முடைய வரிபணத்தை சம்பளமாக கொள்ளையடிக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வெளிப்புறத்தில் நம்மிடம் பேசும்போது மட்டும் நேர்மையானவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பிக்கொண்டு நாமும் ஏமாந்து கொண்டிருக்கிறோம். ஒற்றுமையாக இருந்து கொள்ளையர்களை தண்டிக்க வேண்டிய நாம் ஒற்றுமையில்லாமல் அவர்களின் பேச்சுக்கு பலியாகி விடுகிறோம் “ என்று விளக்கினோம்.
பேசி முடித்ததும் மக்கள் கைதட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பேசும்போது அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள் .
அடுத்த நாள் மீண்டும் மக்களிடம் பேசுவதற்கு சென்றிருந்தோம். அப்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்களின் வருகைபதிவை குறிக்கும் நபர் (அவரும் இதே கிராமத்தை சேர்ந்தவர்) எங்களைப் பார்த்து, “இந்த இடத்தில் வந்து பேசக் கூடாது. இங்கு மக்கள் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு வந்திருக்கிறார்கள், என்னுடைய மேல் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. இங்கே இதுபோல செய்யக் கூடாது. வேலை முடித்த பிறகு வீட்டிற்கு சென்றதும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார்.
உடனடியாக நாங்கள் குறுக்கிட்டு “மக்கள் ஓய்வெடுக்கும்போது மட்டுமே வந்து பேசுகிறோம். ஏனென்றால் இங்குதான் மக்கள் ஒன்று கூடியுள்ளார்கள். எனவே நாங்கள் பேசுவதற்கு இதுதான் தகுந்த இடம். அதுமட்டுமில்லை இப்போது பேசிகொண்டிருக்கும் நாங்கள் எங்களுடைய சொந்த தேவைக்காக இல்லை ஒட்டுமொத்த கிராமத்துக்கும், உங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றோம்.
“எனக்கு புரிது. ஆனால் என்னுடைய வேலைக்கு எதாவது பிரச்சனை வரும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே, “குறைகளை தகுந்த அதிகாரிடம் சொல்லுவோம். பிறகு அதற்கடுத்து செல்வோம்“ என்றார் .
மக்களிடம் இதைப்பற்றி கேட்டோம்ழ “நாங்கள் பேசுவது உங்களில் யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள்” என்றதும் “எங்களுடைய பிரச்சனை பற்றிதான் பேச வந்துருக்கிங்க கவலைப் படவேண்டாம்” என்றார்கள்.
ஒருசிலர், “முதலில் நமது குறைகளை மனுவாக எழுதி மக்களிடம் கையொப்பம் வாங்கி தகுந்த அதிகாரியிடம் கொடுப்போம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்ததாக போராட்டம் செய்வோம்“ என்றார்கள்.
ஆதலால் அங்கேயே உடனடியாக மனு ஒன்று எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்கி பஞ்சாயத்து அதிகாரியிடம் கொடுத்தோம் .
அதிகாரியிடம் பேசும்போது அவரே வருத்தப்பட்டு பேசினார். “நானே மக்களுக்கு நல்லது செய்யதான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனா நம்மால எதுவும் செய்ய முடியாது. மேல் பதவியில் இருந்து கீழே உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் பணம் லஞ்சம் பாய்கிறது. நாம் ஒருவேளை மக்கள் நலன்சார்ந்து செயல்பட்டாலோ அல்லது நேர்மையாக இருந்தாலோ தள்ளிவைத்து விடுகிறார்கள். நம்முடைய வேலைக்கு ஆபத்து விளையும்படி செய்துவிடுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு, மனு மீது நடவடிக்கை எடுப்பதாய் உறுதியளித்தார்.
மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக போராட்டம் செய்ய மக்கள் தயாராக உள்ளார்கள் என்று எச்சரித்துவிட்டு வந்தோம்.
(போராட்டம் அரசுடனும் அதிகாரிகளுடனும் மட்டுமில்லை, வீட்டிலும் காத்திருந்தது. அதைப் பற்றி அடுத்த பகுதியில்.)