குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து

சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 3

ன்று மாலைநேரத்தில் எங்கள் பகுதியில் திடீரென்று மேளச் சத்தம் கேட்டது. எதற்காக என்று கேட்கும்போது : “ஊரில் கோவில் கோபுரம் கட்டுவதற்கு மறுநாள் பஞ்சாயத்து கூட்டுகிறார்கள் ஆதலால் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்ற அறிவிப்போடு அந்த மேளச் சத்தம் முடிந்தது .

குடிநீரும் கோபுரமும்

“கிராமத்தில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், தெருவிளக்கு இல்லாமலும், கழிவுநீர் கால்வாய் திறந்தே இருப்பதால் பலவித நோய்களுக்கு ஆளாகியும் அவதிப்படுகிறார்கள். இதைப்பற்றி பேசுவதற்கு பஞ்சாயத்து கூட்டாமல் கோவில் கோபுரம் கட்டுவதற்கும் தேர்தல் வரும்போது தலைவர் பதவி விலைபேசுவதற்கும்தான் பஞ்சாயத்து கூட்டுகிறார்கள்”

உடனடியாக நான் நண்பர்களிடம் மற்றும் வீட்டிலும் இதைப்பற்றி பேசினேன்.  வீட்டில் திடீரென்று “ரூ 5,000 தரவேண்டும், நமது கிராமத்தில் குறிப்பிட்ட சிலர் விருப்பம் உள்ளவர்கள் ரூ 25,000 தருவதாய் பஞ்சாயத்தில் முடிவெடுக்கபட்டது” என்றார்கள். எதற்காக ?  என்று கேட்கும்போது, “கோவில் கோபுரம் கட்டுவதற்கு” என்றார்கள் .

உடனடியாக மிகுந்த கோபத்துடன், “இதற்கெல்லாம் என்னிடம் பணம் கேட்காதீர்கள்” கூறிவிட்டு, “கிராமத்தில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், தெருவிளக்கு இல்லாமலும், கழிவுநீர் கால்வாய் திறந்தே இருப்பதால் பலவித நோய்களுக்கு ஆளாகியும் அவதிப்படுகிறார்கள். இதைப்பற்றி பேசுவதற்கு பஞ்சாயத்து கூட்டாமல் கோவில் கோபுரம் கட்டுவதற்கும் தேர்தல் வரும்போது தலைவர் பதவி விலைபேசுவதற்கும்தான் பஞ்சாயத்து கூட்டுகிறார்கள்” என்றதும்,

“உனக்கென்ன தெரியும். ஒன்னும் தெரியாது, ஊருக்குள்ள நம்ம கவுரவம் என்ன ஆவுறது“ என்றார்கள்.

“உங்களுக்கு கவுரவம்தான் முக்கியம். மக்கள் உங்களை பெருமையாக பேசவேண்டும் என்றால் அந்த பணத்தை மக்களுக்கே நேரடியாக செலவு செய்யலாமே. ஏனென்றால் பலவித பிரச்சனைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு உங்கள் பணத்தை, கோபுரம் கட்டுவதற்கு செலவு செய்வதற்கு பதிலாக இதுபோல மக்கள் பிரச்சனைக்கு  செலவு செய்யுங்கள்” என்றதும் அமைதியாகிவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் அதைப்பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்து எங்கள் கிராமத்து இளைஞர்கள் உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பினேன். அதில் “குடிப்பதற்கும் , கழுவுவதற்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் கோபுரம் கட்ட துடிக்கிறார்கள்“ என்று எழுதி அனுப்பிருந்தேன் .

இது பரவலாக கிராமத்து மக்கள் மத்தியில் சென்றது. தேர்தலில் கொள்ளையடித்த சில தவறானவர்கள் மற்றும் சிலர் என்னைபற்றி வெவ்வேறு விதமாக தவறாக மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.

“சாமி கோபுரம் கட்டுவதை பற்றி அசிங்கமான வார்த்தைகளில் பேசிருக்கிறார் “ என்று என்னுடைய பெயரை மக்களிடம் சொல்லி எனக்கு எதிராக வேலை பார்த்திருக்கிறார்கள். ஆதலால் என்மீது நற்பெயர் வைத்திருந்த சிலரும் என்னை கேள்விகேட்க ஆரம்பித்தார்கள் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தேன் .

மறுநாள் தந்தை கோவமாக என்னுடைய அம்மாவிடம் பேசிகொண்டிருந்தார். “நான் நண்பர்களிடம் கோபுரத்தை பற்றி எதாவது இணையத்தில் எழுதி அனுப்புனேனா?  பஞ்சாயத்து கூட்டியவர்களைப் பற்றியும் கோவில் கோபுரம் கட்டுவதைப் பற்றியும் அசிங்கமாக உங்க பையன் பேசிருக்கிறார் என்று சொல்கிறார்களே உண்மையா?” என்றார்.

கிராமம் தண்ணீர் பிரச்சனை

“நம்முடைய கிராமத்தில் மக்கள்படும் கஷ்டங்களுக்கு எனக்கு சம்பந்தம் உள்ளது. பிரச்சனைகளை பற்றி பேசுவது என்னுடைய உரிமை. அதை செய்யக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.” (படம் இணையத்திலிருந்து – மாதிரிக்கு மட்டும்)

“ஆமாம் உண்மைதான். நீங்கள் சொல்வது போல அசிங்கமாக பேசவில்லை. குடிக்கவும் கழுவவும் தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதைப்பற்றி பேசாமல், அதற்காக பஞ்சாயத்து கூட்டாமல், கோவில் கோபுரம் கட்ட மக்களை கூட்டுகிறார்கள். அதனால்தான் அப்படி எழுதி அனுப்பினேன். எந்த சாமியும் கோபுரம் கட்டி கும்புடுங்கள் என்று சொல்லவில்லை நீங்களா கவுரவும்னு தேவையே இல்லாமல் கஷ்டபட்ட பணத்தை செலவு செய்கிறீர்கள். கடவுள்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொல்றிங்க. அப்புறம் எதுக்கு கோவில், கோபுரம்? சாதாரணமாக வீட்டிலே சாமி படத்தை வைத்து வணங்கிவிட்டு போகலாமே” என்று பேசி முடித்தேன்.

அதற்கு என்னுடைய தந்தை “ஊருக்குள்ள எவ்வளவு பசங்க இருக்காங்க! நீ மட்டும் எதுக்கு இந்த மாறி கெட்டபேரு எடுத்துட்டு இருக்க. கடவுள் கொடுத்தத வைத்து பிழைக்க தெரியவில்லை“ என்றதும் எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது.

“நம்மடைய கிராமத்தில் மக்கள்படும் கஷ்டங்களுக்கு எனக்கு சம்பந்தம் உள்ளது. பிரச்சனைகளை பற்றி பேசுவது என்னுடைய உரிமை. அதை செய்யக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. மேலும் கடவுள் ஏதும் எனக்கு செய்யவில்லை. மாறாக நான் கஷ்டப்பட்டு படித்தேன். நண்பர்கள் உதவி செய்தார்கள். எனவே நான் என்னுடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கான வேலையில் இப்போது இருக்கிறேன். நான் சம்பாதிக்கிறேன் என்ற திமிர் இல்லை. சமூகத்தில் வாழும் மக்கள் இல்லாமல் நானும் நீயும் இல்லை. எனவே சமூகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் நான் பேசுவேன்.  நீங்களும் கிணத்து வேலைக்கு போய் கஷ்டப்பட்டீர்கள். அம்மாவும் அருகம்புல் விற்று அன்றாடம் அரிசி வாங்க கஷ்டப்பட்டார்கள். அதில் கொஞ்ச பணத்தை சிறுக சிறுக சேர்த்த பணத்தை திடீரென்று கோவில் கோபுரத்துக்கு ரூ 25,000 தருவதாய் சொல்வதிலிருந்து நீங்கள் பட்ட கஷ்டத்தை மறந்துவிட்டீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது” என்று பேசிமுடித்தேன்.

அதன்பிறகு வீட்டில அதைப்பற்றி என்னிடம் பேசாமல் அமைதியாகிவிட்டார்கள்.

அடுத்தநாள் சென்னைக்கு திரும்பிவிட்டேன். இப்போதும் நண்பர்களுடன் சமூகத்தில் உள்ள அன்றாட பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் எங்க பகுதியில் மக்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தி மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை தவிர வேறு ஆசை இல்லை.

– பிரகாஷ்

(இந்த அனுபவப் பதிவு முடிந்தது, போராட்டம் தொடர்கிறது)

முந்தைய பகுதிகள்

  1. சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1 மனு போட்டு, அதிகாரிகளை நம்பி  சோர்ந்து போன கதை
  2. ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!
Series Navigation<< ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் “பத்ம விபூஷண்” பிரேம்ஜி-ன் இதயமற்ற விப்ரோ

சத்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில...

இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்

தகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook (கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67) படங்களைப்...

Close