ஏப்ரல் 14: “இந்துக்களின் பிரச்சனை அவர்களது மதம்தான்” – அம்பேத்கர்.

 சாதி கட்டமைப்பும் அதன் வேத முன்னோடியான நால்வர்ண முறையும் இந்திய சமூகத்தை ஊடுருவியிருக்கும் விஷ வேர்கள். இந்தியர்கள் மத்தியில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை உருவாவதை அவை தடுக்கின்றன.

அம்பேத்கர் சாதி கட்டமைப்புக்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். சாதியை அழித்தொழித்தல் என்ற இந்த உரை (உரை நிகழ்த்தப்படவேயில்லை) 1935-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இதில் அம்பேத்கர் சாதி முறையை பல்வேறு கோணங்களில் அலசி, சாதி கட்டமைப்பை அழித்தொழிப்பதற்கான பல்வேறு வழிகளை பரிசீலிக்கிறார். இதற்குப் பின் அவர் வாழ்ந்த 20 ஆண்டுகளும் அம்பேத்கர் சாதி கட்டமைப்பு எதிராக அரசியல், கலாச்சார வழிகளில் போராடி வந்தார்.

ஆனால், நமது சமூகத்தில் சாதி இன்னும் விடாப்பிடியாக நீடிக்கிறது. அம்பேத்கரின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சிறு பகுதி, இந்தியர்களின் சிந்தனையின் சாதியின் ஆதிக்கத்துக்கான  முக்கியமான ஒரு காரணத்தை விளக்குகிறது.

==

சாதி ஒரு தீமையாக இருக்கலாம். மனிதனுக்கு மனிதன், மனிதத் தன்மையற்ற முறையில் நடது கொள்வதற்கு அது காரணமாயிருக்கலாம். ஆயினும் இந்துக்கள் சாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் என்பதோ விபரீத புத்தி கொண்டவர்கள் என்பதோ அல்ல. அவர்கள் ஆழ்ந்த மதப்பற்றுக் கொண்டவர்களாயிருப்பதனாலேயே சாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள். சாதிமுறையைப் பின்பற்றுவது மக்களின் தவறு அல்ல. சாதிமுறையை அவர்கள் உள்ளத்தில் ஊற வைத்திருக்கும் மதத்தைத்தான் இதற்குக் குறை கூற வேண்டும். இது சரியான கருத்து என்றால் நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது சாதிமுறையைப் பின்பற்றும் மக்களை அல்ல; சாதியைப் போற்றுகின்ற மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களைத்தான் நீங்கள் எதிர்க்க வேண்டும். சமபந்தி போஜனம் செய்யாதவர்களையும், கலப்பு மணம் செய்யாதவர்களையும் கண்டித்தும் கேலி செய்தும் பேசுவதோ, அவ்வப்போது சமபந்தி போஜனங்களும் கலப்பு மணங்களும் நடத்துவதோ சாதியை ஒழிக்கும் நோக்கம் நிறைவேற உதவாது. சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை ஒழிப்பதே இதற்குச் சரியான வழியாகும்.

மக்களின் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் சாஸ்திரங்களே உருவாக்கும் நிலை தொடர அனுமதித்தால் உங்கள் நோக்கம் எப்படி நிறைவேறும்? சாஸ்திரங்களின் அதிகாரத்தை எதிர்க்காலம், சாஸ்திரங்களைப் பின்பற்றி மக்கள் செய்யும் செயல்களை மட்டும் குறை கூறுவது பொருத்தமற்றது. சாஸ்திரங்கள் மூலம் மக்களின் மனதில் ஊறிப் போயிருக்கும் நம்பிக்கைகள்தான் அவர்களின் செயல்களுக்கெல்லாம் காரணம்; சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கை ஒழியாதவரை அவற்றை அடிப்படையாகக் கொண்ட நடத்தைகளில் மாற்றம் ஏற்படாது.

தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடும் சீர்திருத்தக்காரர்கள், மகாத்மா காந்தி உட்பட, இதை உணராமலிருக்கிறார்கள். எனவே அவர்களின் முயற்சிகள் பலனளிக்காததில் ஆச்சரியம் இல்லை. அவர்கள் பின்பற்றிய தவறான வழியிலேயே நாங்களும் செல்வதாகத் தோன்றுகிறது. சமபந்தி போஜனங்களும், கலப்பு மணங்களும் நடத்த வேண்டும் என்று கிளர்ச்சி செய்வதும், அவற்றை நடத்துவதும் செயற்கையான முறையில் கட்டாயமாக உணவைத் திணிப்பது போன்றது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சாஸ்திரத்தின் அடிமைத் தளையை அறுத்து விடுதலை பெறச் செய்யுங்கள். சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மனத்தில் படிந்து போயிருக்கும் நச்சுக் கருத்துக்களைத் துடைத்தெறியுங்கள். இதைச் செய்தால் நீங்கள் சொல்லாமலே அவர்கள் சமபந்தி போஜனம் செய்வார்கள். கலப்பு மணம் புரிவார்கள்.

வார்த்தை சாலங்கள் செய்வதால் பயனில்லை. சாஸ்திரங்களை இலக்கணப்படி வாசித்து தர்க்கரீதியான முறையில் பொருள் கொண்டால் அவற்றின் அர்த்தன் நாம் நினைப்பது போல இல்லை என்று விளக்கிக் கொண்டிருப்பது பயன்றறது. சாஸ்திரங்களை மக்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். புத்தர் செய்தது போல, குருநானக் செய்தது போல நீங்கள் செயல்பட வேடும். சாஸ்திரங்களை புறக்கணித்தால் மட்டும் போதாது. அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும். புத்தரும் நானக்கும் செய்தது அதுதான். சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லா கேட்டுக்கும் மூல காரணம் என்று இந்துக்களிடம் கூற வேண்டும். இதற்கு உங்களுக்கு தைரியம் உள்ளதா?

சாதியை அழித்தொழித்தல் என்ற நூலில் இருந்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/annihilation-of-caste-ambedkar-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அரசு மருத்துவமனையில் உயர்தர அறுவை சிகிச்சை

கோடிகளை கொட்டி படிக்கும் மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பணியில் சேர்கிறார்கள். அவர்களிடம் அரசு மருத்துவர்களிடம் கிடைப்பது போன்ற தன்னலமற்ற சிறப்பான சிகிச்சையை எவ்வாறு எதிர்பார்க்க...

‘முன்னேறிய’ ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் அலுவலக வேலைச் சுமை

தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி ஒடுக்குவிதலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை...

Close