“சீனாவுடன் எல்லையில் தகராறு, சீனப் பொருட்கள் இந்தியா சந்தையில் குவிகின்றன, தேச பக்தர்கள் சீனப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்” என்று பலவிதமான பிரச்சாரங்களை நாம் கேட்டு வருகிறோம். இது எல்லாவற்றுக்கும் பின்னால் உலகின் உற்பத்தி சாலையாக உருவெடுத்திருக்கும் சீனாவின் தொழில் வல்லமை இருக்கிறது. செல்ஃபோன்கள், கணினிகள், பொம்மைகள், ஆயத்தை ஆடை, பிளாஸ்டிக் பொருட்கள், மின் பொருட்கள் என்று தொடங்கி அனைத்துத் துறை பொருள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது சீனா. உலகில் உள்ள பல பெரிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் அதிகம் செய்து தரும் நாடும் சீனா தான், அங்கு உற்பத்தி ஆகாத பொருட்கள் இல்லை என்று சொல்லலாம்.
“மேக் இன் சீனா” என்பதோடு நில்லாமல், தாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு மாற்று பொருட்களை உருவாக்கும் வல்லமையும் சீனாவிற்கு உண்டு என்று நம் அனைவருக்கு தெரியும். இன்று அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ஒரு வலுவான முதலாளித்துவ நாடாக வளர்ந்திருக்கிறது சீனா.
இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது 1949 அக்டோபர் 1-ல் நடந்த சீனப் புரட்சியும் அடுத்த 30 ஆண்டுகள் நடைபெற்ற சோசலிச கட்டுமானத்தை நோக்கிய பயணமும்தான். தொழிலாளர்களும், விவசாயிகளும், அறிவுத்துறையினரும், தேசிய முதலாளிகளும் இணைந்து, மக்களை ஒடுக்கி சுரண்டி வந்த நிலப்பிரபுக்களையும், நாட்டை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்து நடத்திய இந்த சீனப் புரட்சியின் வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
சீனப் புரட்சி காலத்தை 3 கட்டமாக பிரிக்கலாம்.
1911-ல் மன்னராட்சியை தூக்கி எறிந்த டாக்டர் சன்யாட்சென் தலைமையிலான ஜனநாயகப் புரட்சி யுத்தப் பிரபுக்களால் தோற்கடிக்கப்பட்டு, ஏகாதிபத்தியங்களின் வேட்டை தொடர்ந்தது. முதல் உலகப் போரைத் தொடர்ந்து சீனாவை தமக்குள் பங்கு போட்டுக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு ஏகாதிபத்தியங்களை எதிர்த்து 1919 மே 4-ல் தொடங்கிய மாணவர்களும், தொழிலாளர்களும் நடத்திய போராட்டம் சீனப் புரட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கியது (மே 4 இயக்கம்). இந்த இயக்கத்துக்கு 1917 நவம்பர் 7-ல் ரசியாவில் நடைபெற்ற மகத்தான பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சி உத்வேகமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து 1921-ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. டாக்டர் சன்-யாட்-சென்-ன் குவோமின்தாங் கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைத்து கம்யூனிஸ்ட் கட்சி யுத்த பிரபுக்களை எதிர்த்த போராட்டத்தில் பங்கேற்று யுத்த பிரபுக்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. சன்-யாட்-சென் மறைவுக்குப் பிறகு குவோமின்தாங் கட்சியில் ஆதிக்கம் செலுத்திய சியாங் கை ஷேக் தலைமையிலான தரகு முதலாளித்துவ வர்க்கம் மக்களுக்கு துரோகம் இழைத்து அமெரிக்காவுடனும், உள்நாட்டு நிலப்பிரபுக்களுடனும் கூட்டு ஏற்படுத்திக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்கி வேட்டையாடியது ஈடுபட்டது. அதை எதிர்த்து போராடி, தனது பல்வேறு தவறுகளை சரிசெய்து கொண்டு மக்கள் மத்தியில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தையும், விவசாயப் புரட்சிக்கான அடித்தளத்தையும் உருவாக்கியது கம்யூனிஸ்ட் கட்சி.
விரிவாகி வந்த ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவின் வடகிழக்கு பிரதேசங்களை பிடித்து மேலும் நாட்டுக்குள் முன்னேறியதைத் தொடர்ந்து 1935 முதல் 1944 வரை ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக குவோமின்தாங்-கட்சியுடன் ஐக்கிய முன்னணி ஏற்படுத்திக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை முறித்து சீனாவிலிருந்து அடித்துத் துரத்தினார்கள் சீன மக்கள்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க உதவியுடன் மக்கள் இயக்கங்களை ஒடுக்கி, அமெரிக்காவுக்கு தரகு வேலை பார்க்கும் ஆட்சியை தொடர முயன்ற குவோமின்தாங்-ஐ எதிர்த்து 1944 முதல் 1949 வரை நடந்த உள்நாட்டுப் போரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் மகத்தான வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.
குவோமின்தாங் சுற்றிவளைப்புக்கு எதிரான போராட்டம், ஜப்பானிய எதிர்ப்புப் போர், இறுதியில் குவோமின்தாங்-ஐ எதிர்த்த போர் என்று ஒவ்வொரு கட்டத்திலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் போர் வல்லமை உலகெங்கும் வியந்து பாராட்டப்பட்டது. தமது அதிகாரத்தையும், சுரண்டும் உரிமையையும் விட்டுக் கொடுக்க விரும்பாத முதலாளிகள்-நிலப்பிரபுக்கள் கூட்டணியால் நடத்தப்பட்ட இந்தப் போர்களில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் மக்கள் போராட்டம் வெற்றியடைந்து 1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரத்தின் கீழ் புதிய ஜனநாயக கட்டுமானம் தொடங்கியது. அதாவது, பெரும்பான்மை மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சுதந்திரமும், ஜனநாயகமும். பிறர் உழைப்பை சுரண்டி சுக வாழ்வு வாழ நினைக்கும் வர்க்கங்கள் மீது சர்வாதிகாரம்; பெயரளவிலான முதலாளித்துவ சுதந்திரத்தின் இடத்தில் உண்மையான மக்கள் ஜனநாயம்.
இந்தப் புரட்சிக்குப் பின் சீன விவசாயிகள் நிலப்பிரபுத்துவ சுரண்டலில் இருந்து விடுதலை பெற்றனர். உழுபவனுக்கே நிலம், கூட்டுறவு முறையிலான பண்ணைகள் என்று விவசாய உற்பத்தியும், கிராமப் புறங்களின் நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்பட்டது.
புரட்சிக்கு முன் இருந்ததை விட புரட்சிக்கு பிறகு சீனாவில் உணவு உற்பத்தி செய்யும் நிலத்தின் அளவு 145.6% அதிகரித்தது புரட்சிக்கு முன் பற்றாக்குறையாக இருந்த சீனாவில் சீனா உணவு உற்பத்தி அனைவருக்கும் உணவு வழங்கும் விதத்தில் அதிகரித்தது.
தொழில் வளர்ச்சி ஆண்டுக்கு 11.2% ஆக மாறியது. புரட்சிக்கு முன் தொழில்உற்பத்தி மொத்த உற்பத்தி (GDP)யில் 36% மட்டுமே, ஆனால் அது 1975-ல் 72% தொழில் உற்பத்தியும், 28% விவசாய உற்பத்தியுமாக மாறியது.
அனைவருக்கும் தரமான, இலவச பள்ளிக் கல்வி, உணவு, இருப்பிடம், உத்தரவாதமான வேலை என்ற நிலை சீனப் புரட்சி நடந்து 30 ஆண்டுகளில் சாதிக்கப்பட்டது. குழந்தைகள் இறப்பு வீதம், மகப்பேறில் இறப்பு வீதம், ஊட்டச் சத்து அளவீடுகள், கல்வி அறிவு, மருத்துவ வசதிகள் என்று எல்லா விதமான சமூக குறியீடுகளிலும் மகத்தான சாதனைகளை சீன மக்கள் சாதித்திருந்தனர்.
மேலும் புராதன, பிற்போக்கு, அறிவியலுக்கு விரோதமான, சுரண்டலுக்கு சேவை செய்யும் கலாச்சாரம் ஒழித்துக் கட்டப்பட்டு புதிய அறிவியல் ரீதியான, முற்போக்கான பெரும்பான்மை மக்களுக்கான சேவை செய்யும் சர்வதேசிய கலாச்சாரம் தளைத்தது.
இத்தகைய வலுவான சமூக அடித்தளத்தின் கீழ்தான் 1978-ல் தொடங்கிய சீனாவின் முதலாளித்துவ பொருளாதார வலிமை சாதிக்கப்பட்டுள்ளது.
– வீரன்