Appraisal, Appraisal, Useless and Voiceless Appraisal!
இந்த அப்ரைசல் வச்சு தாங்க எல்லா ஐடி கம்பெனிகள் ஆடும் போங்கும் பித்தலாட்டமும்; இதை எதிர்த்து பேச முடியாமல் நம்ம போல பல ஐ.டி ஊழியர்கள் வெளியே போறாங்க.
ஒவ்வொரு ஆண்டும் மற்றும் ஒவ்வொரு காலாண்டும் அப்ரைசல் என்ற பெயரில் ஊழியர்களை வெச்சு ஆடுபுலி ஆட்டம் போல ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஐ.டி கம்பெனிகள். இதை எதிர்த்து கேட்டா “ரொம்ப பெரிய மனசோட” இன்னும் நாலு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து PIP (Performance Improvement Program) போட்டு விடுவார்கள். அடுத்த 3 மாதத்திற்குள் நாம் நம்மை வளர்த்துக் கொண்டோம் என்று நிரூபிக்க வேண்டுமாம். “எனக்கு PIP போட்டு இருக்கு” என்று சொன்னால் மற்ற ஊழியர்கள் நம்மை குறைவாக நினைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் தானும் எதிர்த்துப் போராடாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் நிறைய ஐ.டி ஊழியர்கள். ஆனால் இதைப்பற்றி பேச யாரும் முன்வருவதும் இல்லை இந்த தலைவலி முடிவுக்கு வருவதும் இல்லை. அதனால் வேறு கம்பெனிக்கு மாறுகிறார்கள். அங்கேயும் இதே போல தான் சிறிது காலம் கழித்து நடக்கும். மறுபடியும் வேறு கம்பெனியை தேடுகிறார்கள். இதனால் தான் இன்று அட்ரிஷன் ரேட் (ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் விகிதம்) அதிகமான நிலை உள்ளது.
ப்ராஜக்ட் எடுக்கும்போது ஒரு இலக்கை ‘கோல்’ என்று நிர்ணயிப்பார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் புதிய இலக்குகளை சேர்த்து கடைசியில் அவர்களுடைய ‘கோல்’ என்ன என்று தெரியாத நிலையிலேயே பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். டெலிவரி மேனேஜரை காக்கா பிடித்து, வாய்ப்பந்தல் போட்டு புதிதாக மேனேஜர் பொறுப்பை ஏற்கும் நபர்கள் அடிக்கும் லூட்டி மற்றும் டார்ச்சரை எங்களை போல கீழே உள்ளவர்கள் வெளியே சொல்லவும் முடியாது. சொன்னால் அடுத்த ‘ப்ரமோஷன்’-ல் கை வைப்பார்கள் என்ற நிலையில் பதவி உயர்வும் கிடைக்காமல் கீழே செல்லவும் முடியாமல் வாழ்நாள் முழுவதும் மன போராட்டத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம்.
அதிலும் சில டெலிவரி மேனேஜர்ஸ் அவர்களுக்கு தெரியாத வேலைகளை எங்களுக்கு ‘கோல்’ என்று செட் பண்ணி வேலையை வாங்கிக் கொண்டு, வேலை முடிந்தவுடன், நான் தான் இவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன் என்று மனசாட்சி இல்லாமல் எங்களுடைய உழைப்பை அவர்களின் அப்ரைசலில் எழுதிக் கொள்கிறார்கள். அதே போல அவர்களின் அப்ரைசலில் கிடைத்த பின்னூட்டங்கள் மற்றும் விமர்சனத்தை எங்களுக்கு அப்படியே தள்ளி விடுவார்கள். உதாரணத்துக்கு அவரின் அப்ரைசலில் அவரை காலை 9 முதல் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் அதை எங்கள் மேல் அப்படியே திணிப்பார்கள். இதற்கு பெயர் தான் ‘People Management’-ஆ? மேனேஜர்ஸ் அவருடைய பதவி மற்றும் வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக அப்ரைசல் என்ற பெயரில் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு ஊழியர்களுக்கு இடையே பூசலை உண்டாக்கி அதில் குளிர் காய்ந்து தன்னுடைய வேலையை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் எதிர்த்துப் பேச முடியாமல் தான் இன்று பல ஊழியர்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்பெனி மாறுகிறார்கள். வாதப் பிரதிவாதங்கள் நீதிமன்றங்களில் நடப்பதில்லை இப்போது, மாறாக கான்ஃபரன்ஸ் கால்-களிலும், மீட்டிங் ரூம்-களிலும் நடக்கின்றன.
-வாசுகி