எது பொருத்தமான வாழ்க்கை தொழில்?

“எதிர்கால தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி” காரல் மார்க்ஸ் தனது பள்ளி இறுதி வகுப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மதத்துடனும் கடவுளுடனும் இன்னும் முழுமையாக கணக்கு தீர்த்து விட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதியாக வளர்வதற்கு முன்பு, கடவுளின் பெயரையும் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தக் கட்டுரை 17 வயதிலேயே மார்க்சிடம் இருந்த சமூக வாழ்வு பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

தொழிலை தேர்ந்தெடுக்கப் போகும் அல்லது தேர்ந்தெடுத்த தொழிலை செய்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் படித்து ஆழமாக அசை போட வேண்டிய கட்டுரை.

வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்

Animal Life

… animal should move, peacefully moves within that sphere, without attempting to go beyond it.

ரு விலங்கு இயங்க வேண்டிய செயல்பாட்டு வட்டத்தை இயற்கையே தீர்மானித்திருக்கிறது. அந்த வட்டத்தைத் தாண்டிச் செல்ல முயற்சி செய்யாமல், வேறு எந்த செயல்பாடுகள் குறித்த உணர்வும் கூட இல்லாமல் அது அந்த வட்டத்துக்குள்ளேயே அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதருக்கும் ஒரு பொதுவான குறிக்கோளை, மனிதகுலத்தையும், தன்னையும் மேம்படுத்திக் கொள்வது என்ற பொதுவான குறிக்கோளை, இறைவன் கொடுத்திருக்கிறான். ஆனால், இந்த குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை தேடும் பொறுப்பை மனிதரிடமே அவன் விட்டிருக்கிறான். தன்னையும், சமூகத்தையும் உயர்த்திக் கொள்ளும் வகையில் பணியாற்றுவதற்கு சமூகத்தில் தனக்கு மிகப் பொருத்தமான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரவரிடமே விட்டிருக்கிறான்.

இந்தத் தேர்வு செய்யும் உரிமை மற்ற உயிரினங்களிலிருந்து தனிச்சிறப்பாக மனிதருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சலுகையாகும். ஆனால், அதே நேரத்தில் அது ஒரு மனிதரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாசப்படுத்தி விடக் கூடிய, அனைத்து எதிர்கால திட்டங்களையும் முடக்கி விடக் கூடிய, அவரை மகிழ்ச்சியற்றவராக ஆக்கி விடக் கூடிய ஒரு முக்கியமான தேர்வு ஆகும். எனவே, இந்தத் தேர்வு பற்றிய கவனமான பரிசீலனை, தனது பணி வாழ்வை தொடங்கவிருக்கும், தனது வாழ்வின் முக்கியமான விவகாரங்களை நிகழ்ச்சிப் போக்கில் விட்டு விட விரும்பாத ஒரு இளைஞரின் முதல் கடமையாகும்.

ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் ஒரு இலக்கை கண்டு கொள்ள முடிகிறது. அவருக்கு மட்டுமாவது அது மகத்தான ஒன்றாக தோன்றுகிறது. அவரது ஆழமான நம்பிக்கைகள், அவரது மனதின் மிக ஆழமான குரல் அதை உறுதி செய்தால் உண்மையில் அது மகத்தானதே. ஏனென்றால், அழிந்து போகும் மனிதருக்கு எந்த ஒரு வழிகாட்டலும் இல்லாமல் இறைவன் கைவிட்டு விடவில்லை; அவனது குரல் மென்மையாக ஆனால் உறுதியாக நம்மிடம் பேசுகிறது.

ஆனால் இந்தக் குரல் பிற எண்ணங்களுக்கு மத்தியில் எளிதில் மூழ்கடிக்கப்பட்டு விடலாம்; உள்மனத் தூண்டுதல் என்று நாம் எடுத்துக் கொண்டது உண்மையில் கண நேர விளைவாக இருந்து இன்னொரு கண நேரத்தில் அழிக்கப்பட்டு விடலாம். நமது கற்பனை தீப்பிடித்து, நமது உணர்ச்சிகள் எழுச்சி பெற்று, தேவதைகள் நமது கண்கள் முன் மிதந்து போகையில், நமது உடனடி உள்ளுணர்வு சொல்வதற்குள் நாம் தலை முதலாக குதித்து விடலாம். அதை இறைவனே நமக்கு சுட்டிக் காட்டியதாக நாம் கற்பனை செய்து கொண்டிருப்போம். ஆனால், நாம் ஆரத் தழுவிக் கொண்டது விரைவில் நம்மை ஒதுக்கித் தள்ளிவிடுகிறது; நமது ஒட்டுமொத்த வாழ்வும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறது.

எனவே, நமது தொழிலை தேர்ந்தெடுப்பதில் நாம் உண்மையிலேயே உள்ளுணர்வால் தூண்டப்பட்டிருக்கிறோமா, உள்மனக் குரல் ஒன்று அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா அல்லது இந்தத் தூண்டுதல் ஒரு மாயையா, இறைவனின் அழைப்பு என்று நாம் எடுத்துக் கொண்டு உண்மையில் ஒரு சுயஏமாற்றுதானா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்த உள்ளுணர்வின் தோற்றுவாயை கண்டறிவதைத் தவிர வேறு எந்த வழியில் அதைச் செய்ய முடியும்?

Virat Kohli

What is great glitters, its glitter arouses ambition, and ambition can easily have produced the inspiration…

மகத்தானது மின்னுகிறது, அதன் பிரகாசம் நமது லட்சியத்தை தூண்டுகிறது, அந்த லட்சியமே இந்த உள்ளுணர்வை, அல்லது நாம் உள்ளுணர்வு என்று கருதியதை உருவாக்கியிருக்கலாம். ஆனால், லட்சியம் என்ற பேயால் தூண்டப்பட்ட ஒரு மனிதரை தர்க்க நியாயம் தடுத்து நிறுத்தி விட முடியாது. உடனடி உள்ளுணர்வு சொல்வதில் அவர் தலை கீழாக குதித்து விடுகிறார். அதன் பிறகு வாழ்வில் அவரது நிலையை அவர் தேர்ந்தெடுப்பதாக இருப்பதில்லை சந்தர்ப்ப சூழலாலும், தோற்றமயக்கத்தாலும் அது தீர்மானிக்கப்படுகிறது.

தலைசிறந்த வாய்ப்புகளை அள்ளித் தரும் பதவியை எடுத்துக் கொள்ளும்படி நாம் தூண்டப்படக் கூடாது. ஏனென்றால், வரப்போகும் நீண்ட நெடிய ஆண்டுகளில் அதை நாம் பின்பற்றவிருக்கும் ஆண்டுகளில் சலிப்பூட்டாமல், நமது ஆர்வத்தை குறைத்து விடாமல், உற்சாகத்தை குளிர்ந்து போகச் செய்து விடாமல் பராமரிக்கும் ஒன்றாக அது இருக்காது. மாறாக, அத்தகைய ஒன்றை தேர்ந்தெடுத்தால், விரைவில் நமது விருப்பங்கள் பொய்த்துப் போய், நாம் இறைவனிடம் கசப்பாக முறையிடுவதும் மனித குலத்தையே கரித்துக் கொட்டுவதும் என ஆகி விடுவோம்.

லட்சியம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொழில் மீதான திடீர் ஆர்வத்தை தூண்டி விடுவதில்லை. ஒருவேளை நாமே அதை கற்பனையில் கவர்ச்சிகரமாக அலங்கரித்திருக்கலாம். வாழ்க்கை நமக்கு தரப் போவதில் அதுதான் தலைசிறந்தது என்று தோன்றும் அளவுக்கு அதை அலங்கரித்திருக்கலாம். நாம் அதைப் பற்றி கவனமாக ஆய்வு செய்திருக்கவில்லை, அது நம் மீது சுமத்தவிருக்கும் ஒட்டுமொத்த சுமையையும், மிகப்பெரிய பொறுப்பையும் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை; அதை ஒரு தொலைவில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறோம், தொலை பார்வை நம்மை ஏமாற்றி விடக் கூடியது.

Advice, counselling

Our own reason cannot be counsellor here

நமது சொந்த தர்க்கம் இங்கு ஆலோசகராக இருக்க முடியாது. அது நீண்ட வாழ்க்கை அனுபவத்தாலோ, ஆழமான அவதானங்களாலோ உறுதி செய்யப்பட்டதில்லை, அது உணர்ச்சியால் ஏமாற்றப்பட்டு விடக் கூடியது, பகல் கனவால் குருடாக்கப்பட்டு விடக் கூடியது. இந்நிலையில் நாம் யாரிடம் ஆலோசனை கேட்க போக வேண்டும்? தர்க்கம் நம்மை கைவிடும் போது யார் நமக்கு வழிகாட்ட வேண்டும்?

ஏற்கனவே வாழ்க்கையின் பாதையில் பயணித்து, விதியின் கடுமையை அனுபவித்து விட்ட நமது பெற்றோர்தான் சரியான வழிகாட்டி என்று நமது மனம் நமக்கு சொல்கிறது.

அதன் பிறகும் நமது உற்சாகம் நீடித்தால், ஒரு குறிப்பிட்ட தொழிலை நாம் தொடர்ந்து நேசித்தால், மிக அமைதியான மனநிலையில் அதை பரிசீலித்த பிறகும் அதன் சுமைகளை உணர்ந்து கொண்டு, அதன் சிரமங்களை தெரிந்து கொண்டு விட்ட பிறகும் அதுதான் நமது வாழ்க்கை பணி என்று நாம் கருதினால், அப்போது நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நமது உற்சாகம் நம்மை ஏமாற்றியிருக்காது, அல்லது நமது அளவுக்கதிகமான அவசரம் நம்மை இழுத்துச் சென்று விட்டிருக்காது.

நமது வாழ்க்கைப் பணி என்று நாம் நம்பும் பதவியை எல்லா நேரங்களிலும் நம்மால் அடைந்து விட முடிவதில்லை. அத்தகைய தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு நாம் வருவதற்கு முன்பே சமூகத்துடனான நமது உறவுகள் குறிப்பிட்ட அளவுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

choice of profession

…if we have chosen a profession for which we do not possess the talent, we can never exercise it worthily…

நமது உடல்நிலையே பல நேரங்களில் அச்சுறுத்தக்கூடிய தடையாக இருக்கிறது, அது விதிக்கும் வரம்புகளை யாரும் எளிதில் புறக்கணித்து விட முடியாது.

உடல்ரீதியான வரம்புகளை தாண்டி நாம் நம்மை உயர்த்திக் கொள்ளலாம் என்பது உண்மைதான், ஆனால் நமது வீழ்ச்சி அந்த அளவுக்கு வேகமாக இருக்கும்,

ஏனென்றால் நொறுங்கிக் கொண்டிருக்கும் இடிபாடுகளின் மீது கட்டுமானம் செய்ய துணிந்தால் நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மனதுக்கும் உடலுக்கும் இடையேயான வருந்தும் போராட்டமாக மாறி விடுகிறது. தனக்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் காரணிகளை சமன் செய்ய இயலாத ஒருவரால் வாழ்க்கையின் கொந்தளிப்பான மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்ள முடியும், அவற்றுக்கு மத்தியில் அவரால் எப்படி அமைதியாக செயல்பட முடியும்? அமைதியில் இருந்தே மகத்தான, மிகச்சிறந்த செயல்பாடுகள் எழுகின்றன. பழுத்த பழங்கள் வெற்றிகரமாக விளையும் மண் அது மட்டுமே.

நமது தொழிலுக்கு பொருத்தமில்லாத உடல்கட்டுமானத்தை வைத்துக் கொண்டு நாம் நீண்ட காலம் பணியாற்ற முடியாது, அதுவும் மகிழ்ச்சியாக ஒருபோதும் செயல்பட முடியாது. இருப்பினும் நமது உடல்நலனை கடமைக்கு தியாகம் செய்யலாம் என்ற சிந்தனை தொடர்ச்சியாக எழுகிறது. பலவீனமாக இருந்தாலும் தீவிரமாக செயல்படலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், தேவையான திறமை நம்மிடம் இல்லாத தொழிலை தேர்ந்தெடுத்திருந்தால் அதை ஒரு போதும் சிறப்பை ஈட்டும் வகையில் நம்மால் நிறைவேற்ற முடியாது, விரைவில் நமது திறமையின்மையை நாமே உணர்ந்து கொண்டு அவமானமடைவோம். நமது வாழ்க்கை எதற்கும் பயன்றறது என்றும் சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலை செய்ய இயலாதவர்களில் ஒருவர் என்றும் நமக்கு நாமே சொல்ல வேண்டியிருக்கும். அதன் மிக இயல்பான பின்விளைவு சுயமரியாதையின்மை ஆகும். அதை விட அதிக வலியளிப்பதாகவும், புற உலகு நமக்கு அளிக்கும் எதனாலும் ஈடு கட்ட முடியாததாகவும் வேறு எதுவும் உள்ளதா? சுய மரியாதையின்மை ஒருவரின் மனதை தொடர்ந்து அரித்துக் கொண்டிருக்கும், ஒருவரது இதயத்திலிருந்து உயிர் அளிக்கும் இரத்தத்தை உறிஞ்சி வெறுப்பும், நம்பிக்கையின்மையும் என்ற விஷத்தை அதில் கலந்து விடும்.

நாம் தீவிரமாக பரிசீலித்த ஒரு தொழில் தொடர்பான நமது திறமைகள் பற்றிய மயக்கம் நம் மீதே பழி தீர்த்துக் கொள்கிறது. வெளி உலகின் கண்டிப்பை அது எதிர்கொள்ளாவிட்டாலும் அத்தகைய கண்டிப்பு தருவதை விட மிகத் தாங்க முடியாத வலியை நமது மனதில் உருவாக்குகிறது.

A profession which assures this in the greatest degree is not always the highest, but is always the most to be preferred.

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, நமது வாழ்க்கை நிலைமைகள் நாம் விரும்பும் எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்குமானால், நமக்கு மிக அதிக மதிப்பை தரக்கூடிய, உண்மை என்று நாம் முழுமையாக ஏற்றுக் கொண்ட சிந்தனைகளின் அடிப்படையில் மனிதகுலத்துக்கு பணியாற்றுவதற்கு ஆக விரிந்த சாத்தியத்தை தரக்கூடிய, அதை மேற்கொள்கின்ற மனிதரை அப்பழுக்கின்மைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற தகுதி படைத்த தொழிலை நாம் மேற் கொள்ள வேண்டும்.

மதிப்பு என்பது எல்லாவற்றையும் விட ஒரு மனிதரை உயர்த்திச் செல்வது, அவரது நடத்தைகளுக்கும், முயற்சிகளுக்கும் ஒரு உயர் கௌரவத்தை அளிப்பது, அவரை கண்டனத்துக்கு அப்பாற்பட்டவராக்கி, அனைவராலும் போற்றப்படுபவராகவும் அனைவருக்கும் மேம்பட்டவராகவும் மாற்றுவது.

ஆனால், நம்மை அடிபணிந்து கருவிகளாக செயல்பட வைக்கும் தொழில் நமது மதிப்பை உறுதி செய்வதாக இருக்க முடியாது. மாறாக, நமது சொந்த வட்டத்தில் தன்னிச்சையாக செயல்படுவதான தொழில்தான் நமது மதிப்பை உறுதி செய்ய முடியும். வெளித் தோற்றத்தில் மட்டுமே இருந்தாலும் கண்டனத்துக்குரிய செயல்பாடுகளை கோராத தொழிலால்தான் மதிப்பை உறுதி செய்ய முடியும். தலைசிறந்த மனிதர்களும் கௌரவமான பெருமையுடன் பின்பற்றக் கூடிய தொழிலாக அது இருக்க வேண்டும். மதிப்பை மிக அதிக அளவில் உறுதி செய்யும் தொழில் எப்போதுமே மிக உயர்ந்ததாக இருப்பதில்லை, ஆனால் அதுதான் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது.

Those professions which are not so much involved in life itself as concerned with abstract truths are the most dangerous for the young man whose principles are not yet firm and whose convictions are not yet strong and unshakeable.

மதிப்பை உறுதி செய்யாத தொழில் நம்மை தரம் தாழ்த்தி விடுவதைப் போல, நாம் பிற்பாடு தவறானவை என்று தெரிந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான தொழிலின் சுமைகளின் கீழ் நாம் நசுங்கிப் போவோம். அந்நிலையில் நமக்கு சுய-ஏமாற்றத்தைத் தவிர வேறு வழி இல்லை. சுய துரோகத்தின் மூலம் பெறும் அத்தகைய தீர்வு எவ்வளவு பரிதாகரமானது.

வாழ்க்கையோடு பெரிய அளவு தொடர்பு இல்லாத சூக்கும உண்மைகளை கையாளுகின்ற தொழில்கள், கொள்கைகள் இன்னும் உறுதிப் படாத, நம்பிக்கைகள் இன்னும் வலுவடையாத இளைஞருக்கு மிக அபாயகரமானது. அதே நேரம் இந்தத் தொழில்கள் நமது மனதில் ஆழமாக வேர் கொண்டு விட்டால், நமது வாழ்க்கையையும், நமது முயற்சிகள் அனைத்தையும் இந்தத் தொழில்களை ஆளும் கருத்துகளுக்காக தியாகம் செய்யத் தக்கதாக இருந்தால் அவை மிக உயர்ந்தவையாக தோன்றலாம்.

அதன் மீது வலுவான பிடிப்பு கொண்ட மனிதருக்கு அது மகிழ்ச்சியை கொண்டு வரலாம், ஆனால், ஆழ்ந்து சிந்திக்காமல், குறிப்பிட்ட தருணத்தால் தூண்டப்பட்டு, அவசரமாக அவற்றை மேற்கொள்பவரை அவை அழித்து விடும்.

இன்னொரு பக்கம், நமது தொழிலின் அடிப்படையாக இருக்கும் கருத்துக்கள் மீது நாம் கொண்டிருக்கும் உயர் மதிப்பீடு சமூகத்தில் நமக்கு ஒரு உயர்நிலையை அளிக்கிறது, நமது சொந்த மதிப்பை உயர்த்துகிறது, நமது செயல்பாடுகளை கேள்விக்கு அப்பாற்பட்டதாக்குகிறது.

தான் பெரிதாக மதிக்கும் ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கும் ஒருவர் அதற்கு தகுதி படைத்தவராக இல்லாமல் இருப்பது என்பதை நினைத்தாலே நடுங்குவார். சமூகத்தில் அவரது நிலை கௌரவமானதாக இருந்தால்தான் அவர் கௌரவமாக நடந்து கொள்ள முடியும்.

Comrade Kovan

the chief guide which must direct us in the choice of a profession is the welfare of mankind and our own perfection (in picture : Revolutionary Singer Comrade Kovan with PALA troupe members)

ஆனால், தொழிலை தேர்ந்தெடுப்பதில் நமக்கு முதன்மையாக வழிகாட்ட வேண்டியது மனித குலத்தின் நல வாழ்வும், நமது சொந்த முழுமையும்தான். இந்த இரண்டு நலன்களும் ஒன்றோடு ஒன்று முரண்படலாம், ஒன்று மற்றொன்றை இல்லாமல் செய்து விடலாம் என்று நினைக்க வேண்டியதில்லை. தனது சக மனிதர்களின் முழுமைக்காக பணியாற்றும் போதுதான் தனது முழுமையை உறுதி செய்ய முடியும் என்ற வகையில்தான் மனிதரின் இயல்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் தனக்கு மட்டுமே பணியாற்றினால் அவர் மிகச்சிறந்த அறிவாளியாக மாறலாம், மகத்தான ஞானியாகலாம், தலை சிறந்த கவிஞர் ஆகலாம், ஆனால் அவர் ஒரு போதும் முழுமையான, உண்மையில் மகத்தான மனிதர் ஆக முடியாது.

பொது நலனுக்காக பணியாற்றி தம்மை கௌரவப்படுத்திக் கொண்டவர்களை வரலாறு மகத்தானவர்கள் என்று அழைக்கிறது; மிக அதிகமான நபர்களை மகிழ்வித்த மனிதர்தான் மகிழ்ச்சியானவர் என்று அனுபவத்தில் தெரிகிறது. மதமே மனித குலத்துக்காக தன்னை தியாகம் செய்து கொண்ட மனிதப் பிறவியைத்தான் நமது ஆதர்சமாக கற்பிக்கிறது. இத்தகைய மதிப்பீடுகளை பொய் என்று யார் சொல்ல முடியும்?

மனிதகுலத்துக்காக பணியாற்றுவது அனைத்தையும் விட முக்கியமானதாக இருக்கும் தொழிலை நாம் தேர்ந்தெடுத்திருந்தால் எந்தச் சுமைகளும் நம்மை அழுத்தி விட முடியாது, ஏனென்றால் அவை அனைவரது நலனுக்குமான தியாகங்கள். அப்போது நாம் அற்பமான, வரம்புக்குட்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியை அனுபவிக்க மாட்டோம், மாறாக நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களுக்கு சொந்தமாக இருக்கும். நமது செயல்பாடுகள் அமைதியாக ஆனால், நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும். நமது சாம்பலின் மீது உயர்ந்த மனிதர்களின் சூடான கண்ணீர் உகுக்கப்படும்.

– மார்க்ஸ்

மூலம்: MECW Volume 1 Written: between August 10 and 16, 1835
மொழிபெயர்ப்பு : பகத்

Permanent link to this article: http://new-democrats.com/ta/are-we-in-the-right-profession-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஊழலை பேசினால் சஸ்பெண்டா? – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்

ம மீம் தயாரிப்பு : பிரவீன்

பங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்

அனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன்...

Close