வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: நாம் தயாரா?

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை

நாம் கடந்த சில வருடங்களாக அனைத்துத் துறையிலும் சந்தித்து வரும் வேலை இழப்புகள், ஆட்குறைப்பு நடவடிக்கைகள், கட்டாய ராஜினாமா, குண்டர்களை வைத்து வேலையிலிருந்து வீசி எறிவது என்பன போன்ற செய்திகள் அன்றாட வாழ்க்கையாகிப் போய் விட்டதை பார்க்கிறோம். உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி உலகச் சந்தையைப் பெரிதும் சார்ந்து வாழும் மூன்றாம் உலக நாடுகளையும், அதன் மனித வளத்தையும் எப்படி கபளீகரம் செய்கிறது, அடிப்படை வாழ்வாதாரங்களை விட்டே எப்படி மக்களை விரட்டியடிக்கிறது என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து படித்தும், கேட்டும், எழுதியும் வருகிறோம்.

இச்சூழலில், மோடி அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட வேலையிழப்புகள் ஏராளம். மீண்டு வர இயலாத புதைகுழியில் தள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரம், பெருகி வரும் பணவீக்கம், பெரு முதலாளிகள் கடன் கட்டாமல் ஏமாற்றித் தப்பியோடுவது, அச்சுமையை மக்கள் தலையில் ஏற்றுவது, வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்து வங்கிகள் திவாலாவது, பொதுத்துறைகளும், இயற்கை வளங்களும் தங்கு தடையின்றி கொள்ளையிடப்படுவது போன்ற “தேசப்பற்று” மிக்க நடவடிக்கைகளால் நாம் உலக அரங்கில் மதிப்பும், நம்பிக்கையும் இழந்து நிற்பது நிதர்சனமே.

மற்றொருபுறம், அடிப்படைத் தேவைகளான குடிநீர், கல்வி, சுகாதாரம் அனைத்திலும் ஊழல் மலிந்து மிகவும் பின் தங்கிய நிலையில் பெரும்பான்மை மக்கள் இருப்பது இந்த பொருளாதார, சமூக அமைப்பின் தோல்வியைப் பறைசாற்றுகின்றன. கூடுதல் சுமையாக, பன்னாட்டு ஒப்பந்தங்கள், மேலும் வலி மிகுந்த, நிச்சயமற்ற வாழ்வை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

கலாச்சாரத் தளத்தில், இந்துத்துவ பாசிச கும்பல் நடத்தும் வெறியாட்டம், பாலியல் குற்றங்கள் அன்றாட நிகழ்வுகளானது போன்றவை, இந்தியாவை வாழ்வதற்குத் தகுதியற்ற நாடாக, பாதுகாப்பற்ற நாடாக உலக அரங்கில் நிறுத்தியுள்ளது. இவற்றை மறைத்து, போராட்டங்களால் தான் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிகார வர்க்கமும், அவர்களது எடுபிடிகளான ஊடகங்களும் கூவுகின்றன.

கடந்த நான்காண்டு மத்திய அரசின் ஆட்சியில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்து வருவதே, அரசியல்/பொருளாதார/கலாச்சார சீர்கேடுகளுக்கும், ஓட்டாண்டித்தனத்திற்கும் சான்று.

உலகத் தொழில்நுட்ப வளர்ச்சியும், முன்னேற்றமும் நாலு கால் பாய்ச்சலில், நான்காம் தொழிற்புரட்சியை நோக்கி நம்மை நெட்டித் தள்ளுகிறது. ஆசிய அளவில் இந்த மாற்றத்துக்கு தயாராவதன் தேவையைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. ஆனால் இந்தியத் தொழிலாளர் சந்தை தட்டுத்தடுமாறி வருகிறது. கல்வி முறையில் செயல்படுத்தப்படும் மாற்றங்களும், திட்டங்களும், ஒரு பெரும் கூலிப்பட்டாளத்தை உருவாக்கவே முனைகின்றன. மேலும், பெரும் சதவீத மக்களுக்கு எட்டாக்கனியாகும் வாழ்வாதார அடிப்படைகளின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், இந்த வளர்ச்சிக்கு இந்தியா தயாராக இன்னும் பல பத்தாண்டுகள் ஆகலாம். நாடு முழுக்க இன்னும் கழிப்பறைகளும், மின்சாரமும் சென்று சேராத நிலையில், உலக அரங்கில் போட்டியிடத் தயாராவது குதிரைக் கொம்புதான்.

பல இலட்சங்கள் செலவழித்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர/உயர் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக்கான நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு தயாராக வேண்டியுள்ளது.

***

வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: ஆசியா தயாராக உள்ளதா?

தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கிய மாற்றங்களால், சமூகம் மாறியே ஆக வேண்டியது கட்டாயமாகிறது. அப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு உலகை உள்ளங்கையில் படைத்துக் கொடுத்தது உண்மைதான். ஆனால், அதன் ஊடாக, காணாமல் போன தொழிலும், வேலைவாய்ப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

தந்தியை நமக்கு கொண்டு தந்த சிப்பந்தி, தொலைபேசி அழைப்புகளை இணைத்துக்கொடுத்த ஆபரேட்டர் இப்படி வழக்கொழிந்து போன பணிகள் பல. “ஆபரேட்டர், கனெக்ட் மீ” என்று 1960களில் நாம் பேசியது தானியங்கி தொலைத் தொடர்பு சாதனங்கள் வந்ததும் மறைந்தது

1830களில் கண்டுபிடிக்கப்பட்ட மின் தந்தி தகவல் பரிமாற்றம் மோர்ஸ் கோடை பயன்படுத்தி அதிவேகமாகத் தகவலைக் கொண்டு சென்றது. 20-ம் நூற்றாண்டு தொலைபேசித் தொழில்நுட்பம் ஆட்கொள்ளும் வரை செழித்து இருந்தது. 19ம் நூற்றாண்டு முதல் 1980 வரை, செய்தித்தாள்களும், பத்திரிக்கைகளும் லினோ-டைப் எந்திரங்களைப் பயன்படுத்தின. கணிணி வந்து அவற்றையும், அது தொடர்பான வேலை வாய்ப்புகளையும் துடைத்தெறிந்தது.

ஒரு குறிப்பிட்ட தொழில், ஒரு தேசம் என்ற எல்லைகளைத் தகர்த்து, இந்த பரிணாம வளர்ச்சி கடந்த 5-10 ஆண்டுகளில் இல்லாத புதிய வேலைவாய்ப்புகளை மிக வேகமாக உருவாக்கி வருகிறது. இன்று பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் 65% பேர், வேலை சந்தைக்கு வருகையில், இன்று இல்லாத, இன்னும் உருவாக்கப்படாத புதிய வேலைகளைச் செய்வார்கள் என்று 2016-ம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது.

அனைத்து நிறுவனங்கள், தொழில்கள், தனிநபர்கள், அரசாங்கம் என எல்லாவற்றையும் இந்த வளர்ச்சி தகவமைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கிறது. ஈடுகொடுக்க இயலாதவர்களைப் புறந்தள்ளி விடுகிறது இந்த வளர்ச்சி.

நாம் நான்காவது தொழிற்புரட்சிக்குத் தயாராக வேண்டிய தருவாயில் இருக்கிறோம் என்று உலகப் பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது.

மரபணுவியல், செயற்கை நுண்ணறிவு, தானியங்கித் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், 3டி அச்சுத் தொழில், இன்னும் பல துறைகளும், தொழில்களும், ஒன்றை ஒன்று கட்டியமைத்து வளர்கின்றன. இவை, இந்த உலகம் கண்டிராத ஒரு ஒருங்கிணைந்த தொழிற்புரட்சியை சாத்தியமாக்கும்.

இப்படியான, ஸ்மார்ட் சிஸ்டம் எனப்படும் தொழில்நுட்பங்கள், ஆலைகள், பண்ணைகள், வீடுகள், நகரங்கள் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் சமாளித்துத் தீர்க்கவல்லவையாக இருக்கும். இந்தப் பொருளாதாரப் பகிர்வு, தங்களது வீடு, உடைமைகள், கார் என்ற எல்லாவற்றின் மூலமும் வருவாய் ஈட்ட வழிவகுக்கும்.

நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிற இந்த மாற்றங்கள், புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும் அதே நேரம், அதற்கு நம்மைத் தயார் படுத்திக்கொள்ளவும் கோருகின்றன. தொழில் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள், பல பணிகளிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும். ஒரே படித்தான சில வேலைகள் அவசியமற்றதாகி காணாமல் போகும். மாற்றங்களைக் கோரிய போதும், திறன் அடிப்படையிலான வேலைகள் பலவும் செழிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த வளர்ச்சியும், மாற்றங்களும், பணிச்சூழலில் புதிய நிலைமைகளை உருவாக்கும். வீட்டிலிருந்தே பணியை முடித்துக் கொடுப்பதும், டெலிகான்ஃபரன்ஸ் மூலம் வேலைகள் முடிவது அதிகரிக்கும்.

நான், scidev.net என்ற இணையதளத்துக்கும், செய்தித்தாள்களுக்கும், புத்தகங்களுக்கும் வீட்டிலிருந்தபடியே கட்டுரை எழுதுகிறேன். வீட்டின் மற்றொரு அறையிலிருந்து என் மகன் ஒரு ஆன்லைன் ஸ்டோர் நடத்துகிறான். என் மனைவியின் உறவினர் கட்டிடக் கலைஞராக ஃப்ளாரிடா மாகாணத்தில் பணியில் இருக்கிறார். அவரைப் பணியமர்த்திய நிறுவனம் நியூயார்க் நகரில் உள்ளது.

வருங்காலத்தில் பல நிறுவனங்களும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தி, பலரை ஆலோசகர்களாக மட்டுமே வைத்துக்கொள்ளும். மனிலாவிலுள்ள, ஆசிய ஊடக தகவல் தொடர்பு மையத்தின் இயக்குனர்களில் ஒருவரான நான், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் டெலிகான்ஃபரன்ஸ் மூலம் கலந்து கொள்கிறேன். மனிலா செல்ல அவசியமில்லை.

கைபேசி இணையத் தொழில்நுட்பமும், கிளவுட் தொழில்நுட்பமும் நிகழ்காலத்தை மாற்றியமைக்கப் போகும் மிகப் பெரும் காரணிகளாக விளங்கும். கைபேசி இணைய செயலிகள், சேவைகளைத் திறம்பட செய்து முடிக்கவும், ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உதவும். கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய சேவைகளைப் பரவலாக்க முடியும்.

கணிணித் திறன் மேம்பாடு மற்றும் பிக் டேட்டா போன்றவை தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிக்கும். மேம்பட்ட புலன்கள், திறன், நுண்ணறிவு கொண்ட தானியங்கிகள் முக்கியப் பங்காற்றும்.

வர்த்தகம், அரசு, நிறுவனங்கள், தனிநபர்கள் எப்படி இந்த மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது மிகப் பெரும் சவாலாக அமையும். முன்னேற்பாடுகளும், கல்வி முறையில் மாற்றங்களும் கொண்டு வருவதன் மூலம் திறன் பற்றாக்குறை, வேலையிழப்புகள், வளரும் சமனற்ற நிலை ஆகியற்றை சமாளிக்க உதவும்.

ஸ்டெம் கல்வி முறை என்று சொல்லக்கூடிய – STEM (Science, Technology, Engineering, Math) ஆகிய துறைகளே வேலைவாய்ப்பை வழங்கும் என அமெரிக்க தேசிய கணக்கு மற்றும் அறிவியல் முனையம் கூறுகிறது. கணித திறனை அடிப்படையாகக் கொண்ட, கணிணி வடிவமைப்பு மற்றும் சேவைகள் தொடர்பான வேலைவாய்ப்புகள், 2008லிருந்து 2018க்குள், 45% பெருகும் என்கிறது அது. உயிரி மருத்துவப் பொறியாளர்கள், வலைப்பின்னல் கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆய்வாளர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஃபிலிப்பைன்ஸ் கல்வியாளர்கள் மாநாட்டில், வருங்கால ஆசிய மற்றும் உலக சந்தைக்கான கல்விமுறை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் தான் மனித வளம் மிகுதியாக உள்ளது – 26,629,845 மாணவர்கள். இதில், 921,000 உயர்கல்வியும், 226,688 பேர் மட்டுமே ஸ்டெம் கல்விமுறையிலும் பயில்கின்றனர் என்று அந்நாட்டின் கல்வித் துறைச் செயலர் லோர்னா டிக் டினோ குறிப்பிடுகிறார்.
ஸ்டெம் முறையில் பயிற்றுவிக்கக் கூடிய ஆசிரியர்கள் போதிய தயாரிப்புடன் இல்லாதது, மாணவர்களிடையே ஆர்வமின்மையைத் தோற்றுவித்துள்ளது. தென் கிழக்கு ஆசியா முழுவதிலும் இப்பிரச்சனை பீடித்திருப்பதை காணலாம்.

ஆங்கில மூலக் கட்டுரை : As technology changes the future of jobs, is Asia prepared?

மொழிபெயர்ப்பும், முன்னுரையும் :  பிரியா

Permanent link to this article: http://new-democrats.com/ta/as-technology-changes-the-future-of-jobs-is-asia-prepared/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் – ஒரு விளக்கம்

மோசமான பேருந்து என்று ஓட்டுநரையும், நடத்துனரையும் கேள்வி கேட்கும் முன் அதை வழங்கிய அரசை எதிர்க்க பழகுங்கள். ஆணிவேரை மறந்து விழுதை குறை சொல்லி பயனில்லை.

ஐ.டி. ஊழியர்கள் தொழிலாளர்களா? புரோஜெக்ட் மேனேஜர் ஒரு தொழிலாளியா?

ஐ.டி.ஊழியர்கள் பெரும்பாலும் தங்களைத் தொழிலாளர்களாகக் கருதிக்கொள்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் நமக்குப் பொருந்தாது என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கத்திற்கு தனது வேலை பறிபோய்விடும்...

Close