பன்வாரிலால் புரோகித், இந்துத்துவா, பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு

பா.ஜ.க-வால் நியமிக்கப்படும் மாநில ஆளுனர்கள் சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதோடு, அரசியல் தரகு வேலை செய்வதிலும் வல்லவர்கள்.

காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் கிரண் பேடி, ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் நஜீப் ஜங், அனில் பாய்ஜல், மோடியின் அடிமை அ.தி.மு.க ஆளும் தமிழ்நாட்டில் வித்யாசாகர் ராவ், பன்வரிலால் புரோகித் என்று பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக நடந்து கொள்கின்றனர்.

கோவாவில் ஆரம்பித்து, மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, ஏன் பீகாரில் கூட புதிய அரசாங்கம் அமைப்பதில் பா.ஜ.க-வின் ஏஜெண்டுகளாக செயல்பட்டனர் ஆளுநர்கள்.

பன்வாரிலால் புரோகித்தை பொறுத்தவரை, தமிழக ஆளுநராக மோடி அரசால் நியமிக்கப்பட்டதிலிருந்தே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஆளுநருக்கு விதித்திருக்கும் வரம்புகளை கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மாநில அமைச்சரவைக்கு தெரிவிக்காமலே, அவர்களது பரிந்துரை இல்லாமலேயே மாவட்டங்களுக்கு பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவது, பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது முதலான அவரது நடத்தை பல்வேறு கட்சிகளின் கண்டனத்தையும், ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையும் தூண்டியிருக்கிறது.


அவரது சமீபத்திய திருவிளையாடல், ஒரு கல்லூரி பேராசிரியை பெண் மாணவியரை உயர் பதவியில் உள்ளவர்களுக்கு பாலியல் சேவை வழங்குமாறு அழைக்கும் உரையாடல்களுடன் தொடர்புடையது. அந்த உரையாடல்களில் கவர்னரின் பெயர் பல முறை குறிப்பிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளரிடம் புரோகித் நடந்து கொண்ட விதம், அந்த பத்திரிகையாளரின் கோபமான எதிர்ப்பையும், பரந்து பட்ட கண்டனங்களையும் எழுப்பியிருக்கிறது.

இது தொடர்பாக வழக்கறிஞர் அ.அருள்மொழி எழுதிய பதிவை (வாட்ஸ்-ஆப்-ல் வந்தது) வெளியிடுகிறோம்.

இந்துத்துவா சித்தாந்தம் சர்வாதிகார மனப்போக்கையும், பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது மேட்டிமைத்தனத்தையும் ஊட்டி வளர்க்கிறது. நாக்பூரைச் சேர்ந்த புரோகிதர் இந்த சித்தாந்தத்தின் திருத்தமான உதாரணமாக திகழ்கிறார்.

தற்குப் பெயர்தான் கொடூரமான ஆணாதிக்க வில்லத்தனம்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகிதரை கேள்வி கேட்கிறார் தி வீக் இதழின் ஆசிரியர் லட்சுமி சுப்பிரமணியன். புரோகிதர் வீட்டு வரவேற்பறையில் அல்ல. பொதுஇடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்.

அந்தப் பெண் பத்திரிகையாளரின் கண்ணத்தில் தட்டுகிறார் பன்வாரிலால் புரோகிதர். பத்திரிகையாளர் அதிர்ச்சி அடைகிறார். ஆளுநர் புறப்பட்டு விட்டார். ஆனால் தனது அதிர்ச்சியை எதிர்ப்பை பதிவு செய்து விட்டார் லட்சுமி சுப்பிரமணியன்.

இந்தப் புரோகிதரின் நடவடிக்கை என்ன மாதிரியானது ??

‘நான் வயதானவன் இளம் பெண்களுக்குத் தாத்தா மாதிரி’ என்று சொல்லிக்கொள்வதன் மூலம் அந்த நிர்மலா பெண்களை அழைத்தது எப்படி எனக்காக இருக்க முடியும் என்று கேட்கிறாராம்.

ஒரு பத்திரிகையாளராக கேள்வி கேட்கும் பெண்ணிடம் அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலும் மேலும் கேள்வி கேட்பதைத் தவிர்க்கவும் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் செய்யும் வன்முறை அந்தப் பெண்ணைத் தொட்டுப் பேசுவதுதான்.

இதை எதிர் கொள்ளும் பெண், கோபம் பதட்டம் அவமானம் எல்லாம் ஒன்றாகத் தாக்க நிலை குலைந்து விடுவாள். இந்த வகையான தாக்குதலின் ஆபாசம் எதுவென்றால் அந்தப் பெண்ணுக்குத் தெரியும்.. அந்தத் தொடுதல் அருவறுக்கத்தக்கதென்று. ஆனால் “என்னம்மா இது அவர் வயசென்ன..உன் வயசென்ன ..அவர் உனக்கு அப்பா மாதிரி தாத்தா மாதிரி ..இதப்போய் தப்பாப் பேசறியே..” என்பார்கள் பக்கத்தில் இருக்கும் நல்லவர்கள்.

இத்தகைய இழிசெயலின் அதிர்ச்சி உடனடியாக எதிர் வினை ஆற்ற முடியாதபடி தடுமாற்றத்தை உண்டாக்கும். அந்த இடத்தை விட்டு வந்த பிறகு, “அய்யோ நான் அந்த ஆளை அடிக்காமல் வந்துவிட்டேனே..வேறு மாதிரியாவது கோபத்தை வெளிப்படுத்தாமல் வந்துவிட்டேனே…” என்று தனக்குள் அவமானத்தால் குமைந்து போவாள். அது காலத்தாலும் ஆறாது..மாறாது.

ஒரு பெண்ணை அவமானப் படுத்தும் ஆணாதிக்க அதிகார உளவியலின் மோசமான வெளிப்பாடே பன்வாரிலால் புரோகிதரின் இந்த நடத்தை.

ஆர்.எஸ்.எஸ்.புண்ணியவான்களின் ஆளுநர்கள் எப்படி இருப்பார்கள் என்று மேகாலயா காட்டியது..அடுத்து தமிழ்நாடா.
மரியாதையாகச் சொல்கிறோம்

#GetoutGovernerBanvarilalPurohit

– வழக்கறிஞர். அ.அருள்மொழி

Permanent link to this article: http://new-democrats.com/ta/banwarilal-purohit-bjps-hindutva-and-insult-to-woman-journalist-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் – 2019- செப்டம்பர் 22 முதல் 29 வரை

கிரீஸ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து அந்நாட்டின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: கிரீஸின் கன்சர்வேட்டிவ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையானது, தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிற்சங்கத்தின் அடிப்படை உரிமைகளையும்...

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் - பட விளக்கம்

Close