முதலாளித்துவ சமூகத்தில் மனிதன் விலங்கு நிலைக்குத் தாழ்கிறான் என்பதற்கான சமீபத்திய உதாரணம் கடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கும்பல் பாலியல் அத்துமீறல்.
பெங்களூர் நகரின் மகாத்மா காந்தி சாலை மற்றும் பிரிகேடு சாலையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு நடைபெற்ற புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது பெண்கள் குடிபோதையில் இருந்த ஆண்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். அன்று சுமார் 60,000 பேர் பெங்களூருவின் முக்கியமான அந்த இரண்டு சாலைகளில் கூடியிருக்கின்றனர். அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருந்த தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
ஏறத்தாழ ஒருவாரம் கழித்து போலீஸ் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தாமதத்திற்கு போலீஸ் சொன்ன காரணம் பாதிக்கப்பட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்பதுதான். இதில் கவனிக்க ஏண்டிய இன்னொரு விஷயம் இது சம்பந்தமாக கர்நாடக மாநில அமைச்சர் உதிர்த்த வார்த்தைகள்- “மேற்கத்திய கலாச்சாரத்தால் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. மேற்கத்திய ஆடை நாகரிகமே இதற்குக் காரணம்”.
இதற்கு அடுத்த நாள் அதே பெங்களூருவில் இரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் பாலியல் வன்முறையை தொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, பணமதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம், தொழிலாளர்கள் பாதிப்பு இருக்கும் பொழுது இவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இழவு வீட்டில் விருந்தாகத்தான் பார்க்க வேண்டும். என்றாலும் இன்றைய இளம் சமுதாயத்தினரைப் பீடித்திருக்கும் இந்த நோயைப் பற்றிய காரணம் என்ன என்று பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
‘உழைப்பு வெறுக்கப்பட வேண்டியது, நுகர்வுதான் கொண்டாடப்பட வேண்டியது’ என்று திட்டமிட்டு பரப்பப்படும் சீரழிவு நுகர்வு கலாச்சாரம் பெண்களை போதைப் பொருட்களாக மட்டுமே பார்க்க இளைஞர்களை பயிற்றுவிக்கிறது. விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் என்ற பல்வேறு திசைகளிலிருந்து பெண் உடலை விற்பனைப் பொருளாகவும், நுகர்வுக்கான இலக்காகவும் முன்வைக்கும் தாக்குதல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் தினமும் நடத்தப்படுகிறது.
பெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்கள் என்றும், பெண்ணின் இடம் வீட்டில் மட்டுமே என்றும் கற்பிக்கும் பிற்போக்கு பார்ப்பனிய கண்ணோட்டமும் நவீன முதலாளித்துவத்தின் கைங்கரியமான நுகர்வு கலாச்சாரமும் இணைந்து ‘பொது வெளிகளில் இயங்கும் பெண்களை தாக்குவது தமது உரிமை’ என்ற கண்ணோட்டத்தை இவற்றுக்கு பலியான இளைஞர்கள் மனதில் ஏற்படுத்துகிறது.
உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் இந்திய நகரங்களில் அரங்கேறுகின்றன. 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறையைத் தொடர்ந்து ஊடகங்களும் அரசும் சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் செய்வதாக போக்கு காட்டின. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை தொடர்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பெங்களூருவில் நடந்த தாக்குதல்.
அன்றாடம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் சமுதாயத்தில் இந்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. இணைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதை ஸ்மார்ட் ஃபோன் மூலம் பெறும் வசதிகளும் இக்குற்றங்களை பலமடங்கு பெருக்கி உள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியே சமூகத்துக்கு எதிராக போவது முதலாளித்துவ கட்டமைப்பு திவாலாகிப் போயிருப்பதைத்தான் காட்டுகிறது.
சமுதாயத்தில் குற்றங்களைத் தடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காவல்துறையின் அருகதை நமக்குத் தெரிந்ததுதான். சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட DYFI பெண்கள் மீது காவல்துறை பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சம்பவம் பெண்களுக்கு இனி இச்சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதோடு, பெண்கள் புரட்சிகர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவதன் அவசியத்தையும் கோருகிறது.
– மணி
இது தொடர்பான கார்டியன் பத்திரிகை செய்தி
Bangalore police detain six men over New Year’s Eve ‘mass molestation’