உழைப்பில் மிளிரும் மனித வாழ்வும், நுகர்வில் உழலும் விலங்கு வாழ்வும்

This entry is part 1 of 1 in the series மார்க்ஸ் பிறந்தார்
  1. உழைப்பில் மிளிரும் மனித வாழ்வும், நுகர்வில் உழலும் விலங்கு வாழ்வும்

காரல் மார்க்ஸ் எழுதிய 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவ ஞானக் கையேடுகள் பற்றி “மார்க்ஸ் பிறந்தார்” என்ற நூலில் ஹென்ரி வோல்கவ் எழுதுவது

… ஆராய்ச்சிகளின் முக்கிய விளைவு ஒரு பெரிய பூர்த்தியடையாத நூலாகும். அது 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவ ஞானக் கையேடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் மார்க்சியம் தோன்றிய “பிரசவ வேதனையின்” சுவடுகள் இன்னும் காணப்படுகின்றன. ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹிடமிருந்து அவர் கடன் வாங்கிய சொற்பிரயோகத்தில் இதைக் குறிப்பாகக் காணமுடியும். ஆனால் பழைய தத்துவஞானக் கருத்தமைப்புகளின் மக்கிப் போன ஓட்டிலிருந்து சமூகத்தைப் பற்றி அடிப்படையான புதிய கருத்தின் முளைகள், உலகம் இதுவரை அறிந்திராத புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு அணுகு முறையின் முளைகள் வெடித்துக் கிளம்பின.

இதில் முதல் தடவையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக-அரசியல் அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மனிதன் மொத்த ஆராய்ச்சியின் மையமாக இருக்கிறான்; இயற்கை, சமூகம் ஆகிய இரண்டுடனும் அவனுடைய சிக்கலான உறவுகளின் மொத்தப் பல்தொகுதியுடன் தோன்றுகிறான். உண்மையான, முரணில்லாத மனிதாபிமானம் என்ற நோக்கில் முதலாளித்துவச் சமூகத்திலுள்ள மனிதத் தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை ஆசிரியர் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இதில் அரசியல் போராட்டக்காரருடைய ஆத்திரமும் வெறியும் மாபெரும் சிந்தனையாளருடைய முதிர்ந்த ஆராய்ச்சியுடன் இணைந்திருக்கின்றன.

இதில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றி மெய்யான அணுகுமுறை சமூக வளர்ச்சியின் தொலைவிலுள்ள காட்சிகளைப் பற்றிய பார்வையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் மிகவும் ஆழமான பிரச்சனைகளை எழுப்புகிறது; அவற்றின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற நூலின் மீது எல்லா நாடுகளையும் சேர்ந்த தத்துவஞானிகள், பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் இப்பொழுது குறையாத அக்கறை காட்டுவது ஏன் என்பதை இது விளக்குகிறது.

கையேடுகளைப் பற்றி அதிக விவரமான வர்ணனை அல்லது மிகவும் புறநிலையான விளக்கம் கூட அவற்றின் சிறப்புமிக்க கருத்து வளத்தை எடுத்துக் காட்டாது. ஒரு தலைபட்சமான கருத்துக்கள், வறட்டுக் கோட்பாட்டுத் திட்டங்களின் குறுகிய தன்மை ஆகிய தடைகளை நொறுக்கித் தள்ளுகின்ற, இயற்கையைப் பற்றிய விளக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் பற்றிய விளக்கத்திலும் கருத்து முதல்வாதத்தின் கடைசி விலங்குகளை அகற்றுகின்ற தத்துவச் சிந்தனையின் துணிவுடைமையை, விரிந்த பரப்பை, கலையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு இப்புத்தகத்தை ஒருவர் படித்தால் (பலமுறைகள்!) மட்டுமே முடியும்.

மனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் தேட வேண்டும் – இம்முடிவுக்கு மார்க்ஸ் ஏற்கனவே வந்து விட்டார் – என்ற கருத்திலிருந்து மார்க்ஸ் இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். அதை அவர் பின்வருமாறு வகுத்தளிக்கிறார்: “… தனிச்சொத்துடைமையின் இயக்கத்தில் இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் பொருளாதாரத்தில் மொத்தப் புரட்சிகர இயக்கமும் தன்னுடைய அனுபவ ரீதியான மற்றும் தத்துவஞான அடிப்படையைக் காண்கிறது.”

மனிதனின் உற்பத்தி வாழ்க்கை, அவனுடைய உழைப்பு – இதுதான் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசை. மனிதனுடைய உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. கடைசியில் “மொத்தமாக மக்கள் தொகையினரிடம் இரண்டு வர்க்கங்கள் – தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கம் – மட்டுமே எஞ்சுகின்றன.”

ஃபாயர்பாஹின் சூக்குமமான மனிதனுடைய இடத்தில் மார்க்ஸ் பாட்டாளியை வைக்கிறார். ஃபாயர்பாஹின் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் கொண்டிருக்கின்ற உறவுகளின் இடத்தில் மார்க்ஸ் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வாழ்கின்ற உழைப்புக்கும், திரட்டப்பட்ட உழைப்புக்கும் (மூலதனம்) உள்ள உறவுகளை வைக்கிறார்.

எல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற, வாங்கப்படுகின்ற உலகத்தில், பணம் தலைமையான தனிமுதலான சக்தியைக் கொண்டிருக்கின்ற உலகத்தில் தொழிலாளி ஒரு பண்டமாகத்தான் இருக்கிறான். அவனிடம் மூலதனமோ அல்லது வாரமோ கிடையாது. அவன் உழைக்கின்ற சக்தியை மட்டுமே வைத்திருக்கிறான்; உழைப்பு சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் உற்பத்தி செய்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தின் இந்த உண்மையையே மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் தொடக்க நிலையாக வைக்கிறார்.

தொழிலாளி பொருளாயத செல்வத்தைப் படைக்கிறான்; ஆனால் அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. மேலும் இச்செல்வம் தொழிலாளியிடமிருந்து அந்நியமாக்கப்படுவது மட்டுமின்றி மூலதனம் என்ற முறையில் தொழிலாளியை ஆட்சி புரிகின்ற அந்நியச் சக்தியாக தொழிலாளிக்கு எதிரிடையாக வைக்கப்படுகிறது. மார்க்ஸ் இந்த உண்மையை உழைப்பு அந்நியமாக்கப்படுதல் என்கிறார்.

தொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்ற பொழுது அவனால் படைக்கப்படுகின்ற செல்வங்களின் உலகமும் அதிகரிக்கிறது; ஆனால் தொழிலாளியின் மீது அந்தச் செல்வத்தின் ஆட்சியும் அதிகரிக்கிறது. முதலாளி முன்னிலும் அதிகமான சக்தியைப் பெறுகிறான். தொழிலாளி முன்னைக் காட்டிலும் ஏழையாகிறான்; அவனுடைய உரிமைகள் முன்னிலும் அதிகமாகப் பறிக்கப்படுகின்றன.

தொழிலாளி தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாகிறான். அவனுடைய உழைப்பின் திரட்டு மூலதனத்தின், பணவியல் செல்வத்தின் வடிவத்தை அடைகிறது. அது தொழிலாளியை வேலைக்கு வைத்துக் கொள்கிறது. அவன் ஜீவிக்கின்ற சாதனத்தைத் தருகிறது. அவனுடைய வாழ்கின்ற உழைப்பையும் அவன் வாழ்க்கையையுமே பயன்படுத்துகிறது.

தொழிலாளியின் உழைப்பு அற்புதமான பொருள்களைப் படைக்கிறது; ஆனால் அது தொழிலாளியின் வறுமையையும் உற்பத்தி செய்கிறது. அது அரண்மனைகளைப் படைக்கிறது, ஆனால் தொழிலாளிகளுக்குச் சேரிகளை உற்பத்தி செய்கிறது. அது அழகைப் படைக்கிறது; ஆனால் தொழிலாளியை அவலட்சணமாக்குகிறது. அது மனிதர்களின் உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களைக் கொண்டு வருகிறது; ஆனால் தொழிலாளர்களையே இயந்திரங்களாக மாற்றி விடுகிறது. அவன் செய்கின்ற உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவன் மூளை அழிகிறது.

இந்தத் தலைகீழான உலகத்தில் பொருள்கள் அவற்றைப் படைத்தவனை ஆட்சி செய்கின்றன; அங்கே மக்களுக்கு இடையிலான உறவுகள் பொருள்களுக்கு இடையிலான உறவுகளின் வடிவத்தில் தோன்றுகின்றன. இந்த உலகத்தை மார்க்ஸ் மூலதனத்திலும் அதற்குப் பூர்வாங்கமாக எழுதிய சில நூல்களிலும் பிற்காலத்திலும் விரிவாக ஆராய்ந்தார். பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தோன்றிய பிம்பம் இவற்றில் இன்னும் அதிகத் தத்ரூபமான, கொடுமை மிக்க உருவரைகளைப் பெறுகிறது.

நாம் கையேடுகளுக்குத் திரும்பி மார்க்சினுடைய வாதத்தைப் பின்தொடர்வோம். தொழிலாளியின் உழைப்பின் பலன்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்துவது இந்தப் பிரச்சினையின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது; அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.

இதன் பொருள் என்ன? தொழிலாளி தன்னுடைய சுதந்திரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை. அவனுடைய உழைப்பு சுய நடவடிக்கை அல்ல; அது பலவந்தப்படுகின்ற, கட்டாய உழைப்பு; அந்த நிகழ்வுப் போக்கின் போது தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான்.

இந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியை சுதந்திரமாக வளர்க்கவில்லை; அவன் உடல் ஓடாகத் தேய்கிறது. அவன் தன் உடலைக் கெடுத்து அறிவை அழித்துக் கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஒரு உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனால் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்கு சாதனமாக இருக்கிறது.

மக்கள் உழைப்பை ஒரு சாபக்கேடாகக் கருதுவதிலும் அருவருப்புடன் அதைச் செய்வதிலும் பிளேக் நோயைக் கண்டு ஓடுவதைப் போல அதிலிருந்து தப்பியோடுவதிலும் உழைப்பு அந்நியமாக்கியிருக்கின்ற தன்மையை மிகவும் தெளிவாகக் காணலாம்.

உழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியேதான், அவனுடைய சாதாரணமான, அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்ற பொழுது – உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை, உறக்கம், இதரவை – தொழிலாளி தன்னைச் சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப் பிறவியாக உணர்கிறான். “எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத் தன்மையுடையதோ அது மிருகமாக ஆகிறது.”

இப்படி உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளியின் சுய அந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடமிருந்து அந்நியமாதல், தொழிலாளி மற்றும் முதலாளியின் எதிரிடையான நிலைகள்.

அந்நியமாதல் மற்றும் உழைப்பு சுய அந்நியமாதல் பிரச்சினை குறித்து மார்க்சின் பகுப்பாய்வு பொருளாதார யதார்த்தைப் பற்றிக் கடுமையான விமர்சனம் என்ற எதிர்மறையான அம்சத்தில் மட்டுமே வழக்கமாக பாராட்டப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனத்தில் இருக்கின்ற நிலைமையைப் பற்றி மார்க்சினுடைய மதிப்பீட்டை உண்மையான மனித உழைப்பும், மனித உறவுகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, அதாவது கம்யூனிஸ்ட் சமூகத்தைப் பற்றி அவருடைய கருத்துக்குப் பின்னால் உள்ள ஆக்க முறையான கொள்கைகளை ஒருவர் தெளிவாகக் காண முடியும்.

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். அது வாழ்க்கை நடத்துகின்ற சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக, மனிதன் தன்னுடைய திறமைகளை முழுமையாகவும் அகல்விரிவாகவும் வளர்த்துக் கொள்ளக் கூடிய நிகழ்வுப் போக்காக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளை மிகவும் ஒட்டியிருக்கின்ற பொருளியலாளர்களிடமிருந்து பெறப்பட்ட குறுப்பேடுகளில் அந்நியப்படுத்தப்பட்ட மனிதனின் உலகம் மனிதனுடைய உண்மையான சமூக சாராம்சத்தின், அவனுடைய “உண்மையான இனப் பொது வாழ்க்கையின்” கேலிச் சித்திரம் என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்தில், அதாவது ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இளம் மார்க்ஸ் குறிப்பேடுகளின் பின்வரும் பகுதிகளில் சித்திரிக்கிறார்;

“மக்கள் என்ற முறையில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்; ஒவ்வொருவரும் தன்னுடைய உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தன்னையும் பிறிதொருவரையும் இரட்டிப்பாக உறுதிப்படுத்தியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் நான் 1) … அந்த நடவடிக்கையின் போது தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்பாட்டையும் உற்பத்திப் பொருளைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அடைந்திருக்கிறேன்… 2) என்னுடைய உற்பத்திப் பொருளை நீங்கள் உபயோகிக்கின்ற அல்லது ரசிக்கின்ற பொழுது மற்றொரு மனித உயிருக்கு அவசியமான ஒரு பொருளைப் படைத்திருக்கிறேன் என்ற சாதனையைப் பற்றி நேரடியான மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். 3) உங்களுக்கும் மனித இனத்துக்கும் இடையில் நான் இடையீட்டாளராக இருந்திருக்கிறேன். உங்களுடைய இருத்தலின் தொடர்ச்சியாக, உங்களின் அவசியான பகுதியாக நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள், அப்படியே உணர்வீர்கள்… 4) என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட வெளிப்பாட்டில் உங்களுடைய வாழ்க்கை வெளிப்பாட்டை நான் நேரடியாகப் படைத்திருக்கிறேன், ஆகவே என்னுடைய தனிப்பட்டை நடவடிக்கையில் எனது உண்மையான இருத்தலை, என்னுடைய மனித, என்னுடைய சமூக சாராம்சத்தை நான் நேரடியாக உறுதிப்படுத்தியிருக்கிறேன், கைவரப் பெற்றிருக்கிறேன்.

“என்னுடைய உழைப்பு வாழ்க்கையின் சுதந்திரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். தனிச்சொத்துடைமைக்கு நடுவில் அது வாழ்க்கையை அந்நியப்படுத்தலே, ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கிறேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.”

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பொருளாயத மதிப்புகளின் உலகத்தை மட்டும் செல்வமாகக் கருதுகிறது. அதற்குத் தொழிலாளி செல்வத்தைப் பெருக்குகின்ற சாதனமாகத்தான் இருக்கிறான். தொழிலாளி தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், பணத்தையும் பொருள்களையும் சேமிப்பதற்காக வாழ்க்கை இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று அது வற்புறுத்துகிறது.

எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, நாடகத்துக்கும் நடனத்துக்கும் சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள். உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின்படி பணம் இல்லாத, பொருள் இத்தால மனிதன் ஒன்றுமே இல்லாதவனாவான். பொருள்களும் பணமும் சமூகத்தில் அவனுக்கு அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் தருகின்றன, அவன் மனதில் கூட அவனை முக்கியமானவனாகச் செய்கின்றன.
உங்களால் செய்ய முடியாத எல்லாக் காரியங்களையும் உங்கள் பணம் செய்ய முடியும். பணத்தைக் கொண்டு சாப்பிட முடியும், குடிக்க முடியும், நடனங்களுக்கு, நாடகத்துக்குப் போக முடியும், பிரயாணம் செய்ய முடியும், கலைப் பொருள்களை, புலமையை வரலாற்றுச் சிறப்பு கொண்ட பொருள்களை, அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும்.

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த “மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதன்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார் :

இந்த மஞ்சள் அடிமை
மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும்,
கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும்,
குட்ட நோயைப் போற்றச் செய்யும்,
திருடர்களுக்குப் பட்டம் வழங்கி
அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும்
பெருமையும் அருளும்…

ஷேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச் சிறப்பான முறையில் சித்திரிக்கிறார்”, குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்று மார்க்ஸ் கருதுகிறார்.

பணம் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள் – எல்லா மனித மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர்நிலைகளாக மாற்றியமைத்தல், பொருள்களைச் சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.

பணம் ஒரு பொதுவான விபச்சாரி, மக்களையும் தேசங்களையும் கவர்ந்திழுப்பது. பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட மனிதகுலத்தின் திறமை.

ஷேக்ஸ்பியர் மற்றும் கேதேயின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்ட இக்கருத்துக்களை மார்க்ஸ் பிற்காலத்தில் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, மூலதனம் ஆகிய நூல்களில் வளர்த்துக் கூறினார்.

இளம் மார்க்ஸ் எடுத்துக் காட்டியதை் போல தலைகீழான உலகத்தில், அந்நியப்படுத்தலின் உலகத்தில் பொருளீட்டலே வாழ்க்கையின் நோக்கமாகி விடுகிறது; உண்மையான மனிதத் தேவைகளை வளர்ப்பதற்கு மாறாக பொருள்களைப் பற்றிய காரியவாதமான, நுகழ்வு அணுகுமுறை ஏற்பட்டு விடுகிறது. பொருள் மனிதனுக்கு அளவுகோலாகி விடுகிறது, அதன் மறுதலை அல்ல. பொருளாயதச் செல்வம் மனிதத் திறமைகளுடைய செல்வத்தின் இடத்தைப் பிடித்து விடுகிறது.

அந்நியப்படுத்தலின் உலகத்தில் செப்பமடையாத, பூர்விகமான தேவைகள் உடைமையாக வகைப்படுத்தப்படுகின்றன. “தனிச்சொத்துடைமை நம்மை அதிகமான அளவுக்கு முட்டாளாகவும் ஒருதலைச் சார்பாகவும் மாற்றியிருக்கின்றபடியால் ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் அல்லது அதை நேரடியாக வைத்திருத்தல், சாப்பிடுதல், குடித்தல், அணிதல், வசித்தல், மற்றும் இதர சந்தர்ப்பங்களின் போது மட்டுமே அது நம்முடையதாக இருக்கிறது.” எல்லாப் புலன் மற்றும் ஆன்மிக உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை என்னும் புலன் வந்து விட்டது.
இதன் விளைவாகப் பொருள்கள் உழைப்பின் நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருள்களின் மீது கவனத்தைக் குவிக்கின்ற மனிதன் அவன் பொருள்களின் ஊழியனாக மாறுவதை, அவை தன்னுடைய உழைப்பின் தன்மையையும் வேகத்தையும் மட்டுமல்லாமல் அவன் ஓய்வு நேரத்தைச் செலவிடுகின்ற தன்மையையும் முறையையும் மற்ற மனிதர்களுடன் அவனுடைய தனிப்பட்ட உறவுகளின் தன்மையையும் பாணியையும் ஆட்டுவிப்பதைக் கவனிப்பதில்லை.

மனிதத் தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்திலிருந்து அந்நியமாதலை அகற்றி விடுவது மனிதர்ளுக்கு இடையே உள்ள உறவுகளின் தன்மையில் மாற்றத்தை மட்டுமல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையின் மொத்த உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும்.

“மனிதன் மனிதனாக இருப்பதாக, உலகத்துடன் அவனுடைய உறவு மனிதத் தன்மை கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் அன்புக்கு அன்பை மட்டுமே, நம்பிக்கைக்கு நம்பிக்கையை மட்டுமே, இதரவை பரிவர்த்தனை செய்ய முடியும். நீங்கள் கலையை ரசிக்க விரும்பினால் நீங்கள் கலைப்பயிற்சியுள்ள நபராக இருக்க வேண்டும்; நீங்கள் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்த விரும்பினால், அவர்களிடன் சிந்தனையைத் தூண்டுகின்ற உற்சாகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபராக நீங்கள் இருக்க வேண்டும். மனிதனுடனும் இயற்கையுடனும் உங்களுடைய உறவுகளில் ஒவ்வொன்றும் உங்களுடைய இலட்சியத்துக்குப் பொருத்தமான, உங்களுடைய உண்மையான தனிப்பட்ட வாழ்க்கையின் பிரத்யோகமான வெளிப்பாடாக இருக்க வேண்டும். நீங்கள் அன்பைத் திரும்பப் பெறாமல் அன்பு செலுத்துவீர்களானால், அதாவது நேசித்தல் என்ற முறையில் உங்களுடைய அன்பு பரஸ்பரமான அன்பை ஏற்படுத்தா விட்டால், அன்புள்ளம் கொண்ட நபர் என்ற உங்களுடைய ஜீவனுள்ள வெளியீட்டின் மூலமாக உங்களை அன்பிற்குரியவராகச் செய்துகொள்ள முடியாவிட்டால் உங்களுடைய அன்பு மலட்டுத்தனமானது, அது ஒரு துர்ப்பாக்கியமே” என்று மார்க்ஸ் எழுதுகிறார்.

மதிப்புச் செல்வம் என்ற சுயபூர்த்தியுள்ள கோட்பாட்டைக் கொண்ட முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மனித மறுப்பை முரணில்லாமல் போதிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

கம்யூனிஸ்ட் சமூகத்தில் பொருள்களின் செல்வம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும், அதாவது மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாமல் முழுமையான மனித நடவடிக்கைக்கு ஒரு சாதனமாக இருக்கும். “அரசியல் பொருளாதாரத்தின் செல்வத்துக்கும் வறுமைக்கும் பதிலாகச் செல்வமுடைய மனித ஜீவனும் வளமான மனித தேவையும் ஏற்படும்.”

மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்திலும் அதன் பூர்வாங்கமான நூல்களிலும் இக்கருத்துக்கு திரும்பத் திரும்ப வருகிறார். அவர் சமூகத்தின் மிக உயர்ந்த செல்வமாக, மிக உயர்ந்த மூலதனமாக – மனிதனுடைய உற்பத்திப் பொருளையல்ல – மனிதனை, “தனிநபர்களின் தேவைகள், திறமைகள், நுகர்வுச் சாதனங்கள், உற்பத்திச் சக்திகள், இதரவற்றின் முழுதளாவிய தன்மையைப்” பிரகடனம் செய்கிறார். கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லாச் சமூக உற்பத்திக்கும் மனிதனே குறிக்கோள்; பொருளாயத மதிப்புகள் இக்குறிக்கோள் நிறைவேறுவதற்குச் சாதனமாக, நிபந்தனையாக, அடிப்படையாக மட்டுமே இருக்கின்றன.

– ஹென்ரி வோல்கவ் எழுதிய “மார்க்ஸ் பிறந்தார்” என்ற நூலின் 8-வது அத்தியாயத்திலிருந்து (“முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம்”) ஒரு பகுதி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/birth-of-a-genius-8-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்

கே: எனக்கு ஏற்கனவே போதுமான அளவு சம்பளமும் பென்சனும் (GPF) உள்ளது. நான் ஏன் வர வேண்டும்? ப : நீங்கள் இன்று வாங்கும் சம்பளமும் பென்சனும்...

2019-ல் நாம் எதிர்கொள்வது என்ன – உரை வீடியோ

https://www.youtube.com/watch?v=MZOnZtR9gQ8 உரை : காசிராஜன் காணொளி ஆக்கம் : சரவணன்

Close