உ.பி.யில் பா.ஜ.க-வின் மக்கள் விரோத மதவாத அரசியல்

த்தர பிரதேச அரசு மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடு காரணமாகவும், அரசின் அலட்சியம் காரணமாகவும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 290 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை 1200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இவ்வாறு இறந்துள்ளனர்.

உத்தர பிரதேச அரசு மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடு காரணமாகவும், அரசின் அலட்சியம் காரணமாகவும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர்

குழந்தைகள் இறந்ததற்கு பல்வேறு வகையான காரணங்கள் சொல்லப்படுகிறது.

  • மூளைக்காய்ச்சல், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால்
  • பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை தடைபட்டதால்
  • சமீபத்தில் பெய்த கனமழையும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கொசு உற்பத்தியை தடுப்பது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பணிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
  • நோய்த்தொற்றுக்கு ஆளான குழந்தைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு படுக்கையில் 3 அல்லது 4 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு கொண்டு வரப்படுகின்றன.

இவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்துக்கும் மையமான பிரதானமான முக்கியமான காரணத்தை பார்ப்போம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் இவற்றுடன் இந்திய அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்களுக்கு சேவைகள் வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். முதலாளிகளின் லாபத்தை உறுதி செய்வதற்காக போலிஸை வலுப்படுத்தி மக்களை அடக்கி கட்டுக்குள் வைப்பது மட்டும்தான் அரசின் வேலை.

அதனால்தான் அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில்லை, மருத்துவமனைகளில் போதுமான உபகரணங்கள் வாங்குவதில்லை மருத்துவர்கள் நியமனம் செய்வதில்லை, ரேசன் கடைகளில் சரியானபடி பொருட்கள் வழங்குவதில்லை, பொருட்களை மக்களுக்கு கொடுக்கும்வரையில் சரியான முறையில் பாதுகாப்பதில்லை.

மானியங்கள் வெட்டு என பல்வேறு குறைகளை அரசு நிறுவனங்களில் திட்டமிட்டே ஏற்படுத்துகிறார்கள். அவ்வாறு குறைபாடோடு நடத்துவதால் மக்களுக்கு அரசுத் துறைகளின் மீது நம்பிக்கை இழந்து வேறு வழியில்லாமல் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளை நோக்கி செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு மக்களை தனியாரை நோக்கி செல்லவைக்கிறார்கள்; தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதுபோல விளம்பரப்படுத்தி கவர்ச்சிகரமான திட்டங்கள் வகுத்து ஏமாற்றுகிறார்கள். தனியார் நிறுவனங்களோ கொள்ளை லாபம் பார்க்கின்றன. சாதாரண உழைக்கும் மக்கள் தனியார் நிறுவனங்கள் தீர்மானிக்கும் தொகையை கட்டமுடியாமல் கடன் சுமையில் விழுகின்றனர்.

குழந்தைகளின் மரணத்துக்கு இதுதான் உண்மை காரணம். எனவே அவை இந்த அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளே! இந்தக் கொலைகளை முன்னின்று நடத்திய மத்திய மாநில அரசுகளை எப்படி யார் தண்டிப்பது?

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஆனால், இவ்வாறு பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் உ.பி மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் எதைப் பற்றி பிரச்சாரம் செய்தது தெரியுமா?

“பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமியர்கள் பிராணிகள் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் (முஸ்லிம் தேசிய அமைப்பு) கோரிக்கை விடுத்தது. இப்பண்டிகையில் ஆடு, எருமை, ஒட்டகங்களை பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என உ.பி.யில் முஸ்லிம் தேசிய அமைப்பினர்  பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களை கார்ப்பரேட் தயவில் விட்டு விட்டு இசுலாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் நடத்துவதில் மட்டுமே கவனமாக இருக்கும் மக்கள் விரோதிகள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அவர்களது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சுதந்திர தினத்தில் மதரசாக்களில் வீடியோ பதிவு செய்ய வேண்டும், கோசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்று அவர்களது அரசியல் நோக்கத்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் நூற்றுக் கணக்கான குழந்தைகளின் இறப்பு நடந்து கொண்டிருக்கிறது..

இப்போது பல பகுதிகளில் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல பிரச்சனைகளை மக்கள் அன்றாடம் சந்தித்தது கொண்டிருக்கும் தருணத்தில் வழக்கம்போல உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை மூடிமறைக்க கலவரத்தை தூண்டி விடுவது அதன் பக்கம் மக்களை திசைதிருப்பி உண்மையான பிரச்சனைகளை மறைத்துவிடுவது ஆர்.ஸ்.ஸ்(பி.ஜே.பி)-யின் வாடிக்கையாகிவிட்டது.

கலவரத்தை தூண்டும்படியான செயல்களை செய்வதற்கு தனியாக கூலிப்படைகளையே இயக்குகிறார்கள். அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று தேடவேண்டாம். அதை புரிந்துகொள்ளாத உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினர் அவர்களின் கைகூலியாய் கலவரத்தில் ஈடுபட்டு உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி சண்டை மூட்டிவிடுகின்றனர்.

சிறுபான்மை (இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள்) மக்கள் மீது வெறுப்பை உருவாக்கி அரசியல் லாபத்தை ஈட்டுவது, அதனூடாக இந்தியாவை பெரும்பான்மை உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வருணாசிரம தருமத்துக்குட்பட்ட இந்துத்துவ நாடாக்குவது ஆர்.எஸ்.எஸ்(பா.ஜ.க)வின் கொள்கை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் நம்மை பிளவுபடுத்தும் அமைப்புகளையும் கட்சிகளையும் உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும். இல்லை என்றால் உழைக்கும் மக்களாகிய நமக்கு விடியல் இல்லை.

– சுகேந்திரன்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/bjp-communal-politics-in-up/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக MEPZ ஐ.டி ஊழியர்கள்

"ஐ.டி துறை ஊழியர்களுக்கும் சமூகப் பொறுப்பு நிறையவே இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது. நாம் விவசாயிகளின் துயர் துடைக்க நம்மால் ஆன பணிகள் அனைத்தையும் செய்ய...

காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி

காலனிய அரசுகளின் உறுப்புகளாக விளங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், அடக்குமுறைக் கருவிகள் அவற்றின் கட்டுக்கோப்பு கலையாமல் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நேரடி ஆட்சியிலிருந்து அதன் அடிவருடிகளிடம் மாற்றித் தரப்பட்டது.

Close