அரசும் புரட்சியும்
இன்றைக்கு ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் உள்நாட்டு பார்ப்பன பனியா புரோக்கர் கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். வாழ்க்கை நடத்த போராடிக் கொண்டிருக்கும் ஆகப் பெரும்பான்மை மக்களின் சேமிப்புகளை பண மதிப்பிழப்பு மூலம் வங்கிகளுக்கு வரவழைத்து, முதலாளிகளுக்கு இன்னும் அதிகமாக பந்தி விரித்தார் மோடி. அதற்காக அரசின் அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்தினார். அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது, உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்யும் என்ற மூட நம்பிக்கையை உடைத்து எறிந்தார்.
இது நமது சமகால அனுபவம்.
நவீன அரசு எப்படி தோன்றியது என்பதையும், அது எப்படி ஆளும் வர்க்கத்தின் (முதலாளிகளின்) சுரண்டல் எந்திரமாகவும், ஒடுக்கு முறை கருவியாகவும் செயல்படுகிறது என்பதையும் நிரூபிக்கும் நூல்தான் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்”. பாட்டாளி வர்க்கம் உண்மையான விடுதலையை பெற பாட்டாளி வர்க்கத்துக்கான அரசை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அதில் உணர்த்துகிறார்.
நாட்டுப்புற ஏழை மக்களுக்கு
ஒருநாட்டில் பெரும்பான்மை விவசாயிகளும், தொழிலாளர்களும், சிறு முதலாளிகளும் மேலும் மேலும் சுரண்டப்பட்டு, உடமை பறிக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்க, உழைக்கும் மக்களின் ரத்தம் குடிக்கும் கூட்டம் அதிகாரத்தில் அமர்ந்திருப்பதை ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கு சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள் யார் யார், அதில் உழைக்கும் மக்களுக்கு நட்பு சக்திகள் யார், எதிரிகள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூலில் உணர்த்துகிறார் லெனின்.
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்
ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார், இதனால் ஏகபோகங்கள் உருவாகின்றன. தொழில்துறை ஏகபோகங்களும், வங்கித் துறை ஏகபோகங்களும் இணைந்து உலகம் முழுவதும் தமது வலையை விரித்து சூறையாடுவதை அதன் பொருளாதார அடிப்படையிலிருந்து விளக்கும் நூல் இது. இன்றைய அமெரிக்கா, ரசியா, சீனா போன்ற நாடுகளுக்கிடையேயான நாடுபிடி சண்டையை புரிந்து கொள்ள இந்த நூல் ஒரு அடிப்படையை வழங்குகிறது.
இவ்வாறு உலக முதலாளித்துவத்தை உழைக்கும் மக்கள் முன்னால் அம்பலப்படுத்தியும், அதை எதிர்த்து வீழ்த்தி அமைக்கப்பட வேண்டிய உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியும், அதை நோக்கிய போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டம் வகுத்து கொடுத்தும் உலகெங்கிலும் உள்ள முதலாளிகளை குலைநடுங்க வைத்தவர் லெனின்.
மேலும், ரசியாவில் புரட்சியை தலைமை தாங்கி நடத்துவதற்கான கட்சிக்கான வழிமுறைகளை வகுத்து தரும் “என்ன செய்ய வேண்டும்” என்ற நூல், “ஓரடி முன்னே, ஈரடி பின்னே” என்ற நூல் உட்பட நூற்றுக்கணக்கான அரசியல், தத்துவ, பொருளாதார நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி ரசிய தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாதை சமைத்து கொடுத்தார் லெனின். இவ்வாறாக, ரசிய பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமின்றி உலக பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கான லெனினியம் என்று அழைக்கப்படும் என்ற சித்தாந்தத்தை வழங்கினார், லெனின்.
இவரது சிலையைத்தான் பா.ஜ.க-வினர் உடைத்துள்ளார்கள். லெனின் சிலையை அகற்றிவிட்டால் தாம் சேவைபுரியும், தமக்கு படியளக்கும் கார்ப்பரேட்டுகள் அச்சமின்றி தமது கொள்ளையை நடத்தலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம்.
உழைக்கும் மக்களின் தலைவரான லெனின் சிலை தகர்க்கப்படுவதற்கு உழைக்கும் வர்க்கத்திலிருந்தே ஒரு சிலரை இந்த உழைப்பே அறியாத கூட்டம் பயன்படுத்திக் கொள்கிறது என்பது இதில் அடங்கியிருக்கும் சோகம். ஆனால், உழைத்து வாழும் வர்க்கம் தனது நிலைக்கான காரணத்தை தேடி மேலும் மேலும் லெனின் காட்டிய வழியை வந்தடைந்து கொண்டிருக்கிறது. அவரது சித்தாந்தம் உழைக்கும் மக்களது மனங்களில் வீற்றிருக்கிறது.
லெனின் சிலை உடைப்பு, பெரியார் சிலை அவமதிப்பு இவற்றின் மூலம், மத்தியில் பா.ஜ.க அரசும், மாநிலத்தில் பா.ஜ.க.வின் பினாமியாக ஆளும் அ.தி.மு.க அரசும் எந்த யாருக்கு சேவை செய்பவர்கள் என்பதை அப்பட்டமாக தெரிவித்து விட்டார்கள். இவ்வாறு அரசுகள் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இயற்கை வளங்களோடு, மனித வளங்களையும் சிதைத்து வருவதை எதிர்த்து முறியடிப்பதற்கு தொழிலாளி வர்க்கம் அணிதிரண்டு போராட வேண்டும்.
– பிரவீன்