மோடிக்கு மாற்று ராகுலா? ஜெட்லி போய் ப.சி. வந்தால் என்ன ஆகி விடும்!

செய்தி:
புதிய பொருளாதார கொள்கைகள் ராஜிவ் காந்தி ஆட்சியிலேயே (1984-88) அறிமுகம் செய்யப்பட்டன. மன்மோகன் சிங் நிதி அமைச்சராக (1991-96) அவற்றை அமுல்படுத்தினார் – ப. சிதம்பரம் பெருமிதம்.

கண்ணோட்டம் :

கார்ப்பரேட்டுகளின் சேவகர் ப. சிதம்பரம்

நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ப.சி. இவ்வாறு கூறியுள்ளார். இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டதே காங்கிரஸ் தான் என்று தம்பட்டம் அடித்துள்ளார்.

ஆம், அமைச்சர் அவர்களே, இதனை நாங்கள் நன்றாக அறிவோம். உங்களின் இந்த பொருளாதார கொள்கையினாலயேதான் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் , நமது நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும், வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவும் ஓடோடி வந்தார்களே, அந்த நன்றிக் கடனை எப்படி மறப்போம். இன்றைக்கு 30,000-க்கு மேல் கொடிகட்டி பறக்கும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணை எப்படி புறக்கணிக்க முடியும்? முகேஷ் அம்பானியின் ரூ 5,000 கோடிக்கும் மேல் செலவிலான ஆண்டிலா மாளிகை அதன் சாதனைகளை பறைசாற்றி நிற்கிறதே!. பெரு நகரங்களில் எல்லாம் முளைத்திருக்கும் மல்டிபிளெக்சுகளும், மேற்கத்திய உணவகங்களும் உங்கள் சாதனைக்கு கட்டியம் சொல்லத்தான் செய்கின்றன.

விவசாயிகளின் வாழ்க்கை அழிவுக்கு என்ன காரணம்?

ஆனால், ப.சி. அவர்களே, கொஞ்சம் கீழேயும் குனிந்து பாருங்கள் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமலும், மறுபுறம் வறட்சியாலும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, நடுவீதிக்கு வந்து விட்டார்களே அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? கடன் சுமையில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை அழிவுக்கு என்ன காரணம்? உங்களின் பொருளாதார கொள்கை வேளாண் துறையில் ’மலடு’ தட்டிப் போனதே அது ஏன் என்று கொஞ்சம் கூற முடியுமா? கோடிக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களை கிராமங்களில் விட்டு விட்டு சொற்ப கூலிக்கு வேலை தேடி நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்களே, ஏன் என்று சொல்ல முடியுமா?

இதோ மிச்ச சொச்சங்களையும் மாண்டு போகச் செய்ய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், மற்றும் நியூட்ரினோ திட்டங்களை உங்கள் பொருளாதாரக் கொள்கை பெற்றெடுத்த குழந்தைகளான கார்ப்பரேட்டுகள் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கிறார்கள்.
ராமர் பாலத்தை இடித்தால் ’பக்தாள்களின்’ நெஞ்சம் புண்பட்டுவிடும் என்று சேதுக் கால்வாய் திட்டத்தை நிறுத்திவிட்டீர்கள், ஆனால் கடல்வளமும், பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரமும் நாசமாகி விடும் என்று தெரிந்தும் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைத்தீர்களே, அதிலிருந்தே அறிந்துக் கொண்டோம் ஐயா யாரின் நலனுக்காக உங்களின் இந்த கொள்கைகளெல்லாம் என்று.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏராளம்! அவைகளிலிருந்து வெளிவந்த பல லட்சம் பட்டதாரிகள், வேலை வாய்ப்பின்றி இன்று ’ரிசர்வ் பட்டாளம்’!

இவ்வளவு ‘வளர்ச்சி’க்கு இடையே பல லட்சம் இளைஞர்களுக்கு மென்பொருள் துறையில் வேலையும், உயர் ஊதியமும், வெளிநாட்டு வேலை அனுபவமும் கிடைத்தது இதற்கெல்லாம் தீனி போட உதவியது என்பதும் உண்மைதான்.

அது மட்டுமா ….

தனியார் தாராளமயம் –
தமிழகத்தில் பொறியியல்
கல்லூரிகள் ஏராளம்!
அவைகளிலிருந்து வெளிவந்த
பல லட்சம் பட்டதாரிகள்,
வேலை வாய்ப்பின்றி
இன்று ’ரிசர்வ் பட்டாளம்’!

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள், இந்த சூழல் தானே கார்ப்பரேட்டுகளுக்கு உகந்தது, ’கூரை மேல் சோறை எறிந்தால், ஆயிரம் காக்காய் வந்து மொய்க்க வேண்டும்’, ஆம் சரி தான், மொய்த்து கொண்டுதான் இருக்கிறது… அந்த பயத்தினால் தான் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு, கொடுக்கும் சம்பளத்தை விட பல மடங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் பல லட்சம் இளம் ஐ.டி தொழிலாளர்கள்.

ப.சி அவர்களே உங்களின் பொருளாதார கொள்கை விளைவுகளின் ’அருமை பெருமைகளை’ அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்கென 500 பக்கம் கொண்ட புத்தகம் போட்டால் மட்டுமே முதல் அத்தியாயம் நிறைவுறும்.

சரி, உங்களின் இந்த பெருமை பீற்றலை யாரிடம் கூறுகிறீர்கள்? உழைத்து பிழைக்கும் பெரும்பான்மை மக்களிடமா?, இருக்காது, ஏனென்றால் 99% மக்கள் இக்கொள்கையால் பாதிப்படைந்ததே மிச்சம். அவர்கள் மத்தியில் சென்று உங்கள் இந்தக் கொள்கைகளை விளக்கிச் சொன்னால் கல்லெறியும் செருப்படியும்தான் கிடைக்கும்.

99% மக்கள் இக்கொள்கையால் பாதிப்படைந்ததே மிச்சம். அவர்கள் மத்தியில் சென்று உங்கள் இந்தக் கொள்கைகளை விளக்கிச் சொன்னால் கல்லெறியும் செருப்படியும்தான் கிடைக்கும்.

ஓ!!! 1%- ஆக இருக்கும் உங்களின் உள்நாட்டு, வெளிநாட்டு ஆண்டைமார்களிடம்தான் இதைச் சொல்கிறீர்கள். ‘மோடி அல்ல, நாங்கள் தான் முன்னோடி, பா.ஜ.க-வை விட காங்கிரஸ்தான் விசுவாசமான அடியாளாக உங்களுக்கு சிறந்த சேவை செய்வோம்’ என்று. ஆண்டைகள் மனம் குளிர்ந்தால் சரி தான்!! அதன் மூலம் மோடி தலையிலிருந்து மகுடத்தை அவர்கள் ராகுல் காந்தி தலைக்கு மாற்றினால், மோடியின் திருவிளையாடலை உங்கள் கூட்டம் தொடரப் போகிறீர்கள்.

நண்பர்களே,

காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே கார்ப்ரேட்களின் முதன்மை கைக்கூலி கட்சிகளாகவே அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்களுக்கு மாற்று என்று சொல்லிக் கொள்ளும் மாநில கட்சிகளும் ஆண்டைகளுக்கு (கார்ப்பரேட்களுக்கு) சேவகம் செய்வதை பிரதானமாக வைத்திருப்பவர்களே. அவர்களிடம் பிச்சை எடுத்துதான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள், கட்சி நடத்துகிறார்கள். மக்களின் நலன் மீது அக்கறை என்பதெல்லாம், தேர்தலில் மக்களிடம் ஓட்டு பொறுக்குவதற்காக பிச்சை பாத்திரத்தில் சில சில்லறைகள் போட்டு விட்டு அதே பிச்சை பாத்திரத்தில் இருந்து நோட்டுகளை அள்ளிக் கொள்வதுதான்.

தாங்கள் தான் மாற்று என்று சொல்லிக்கொண்டு புதிது புதிதாக, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக, தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும், காரப்பரேட் கொள்கைகளில் தங்களின் நிலைப்பாடுகளை எக்காலத்திலும் திறந்த மனதுடன் சொல்வதில்லை, அதனாலயே மின்கட்டன உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை (ரிலையன்ஸ் பவர்) கேள்வி கேட்காமல், ஃப்யூஸ் கேரியரைக் பிடுங்கிக் கொண்டிருந்தார் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால்.

பெரும்பான்மை மக்களை தினம் தினம் தண்டிக்கும், ஒவ்வொரு மணித்துளியும் ஒடுக்கிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் ஆதிக்கம் பற்றியும், கல்வி, மருத்துவம், ஏன் குடிநீர் வரை தனியார்மயம் பற்றியும் பேசுவதில்லை.

தமிழ் நாட்டிலும் கூட புதிதாக முளைத்திருக்கும், மே 17 போன்று சில அமைப்புகளும், நாம் தமிழர் போன்ற தேர்தல் பாதை கட்சிகளும் பெரும்பான்மை மக்களை தினம் தினம் தண்டிக்கும், ஒவ்வொரு மணித்துளியும் ஒடுக்கிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் ஆதிக்கம் பற்றியும், கல்வி, மருத்துவம், ஏன் குடிநீர் வரை தனியார்மயம் பற்றியும் பேசுவதில்லை. சில பிரச்சனைகள் அடிப்படையில் எதிர்த்து பேசினாலும், கார்ப்பரேட் ஆதிக்கத்தையும், தனியார் மயத்தையும் ஒழித்துக் கட்டி மக்களுக்கான ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு அவர்களது திட்டம் என்ன என்று சொல்வதில்லை. அப்படி அவர்களிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை, அதாவது “அவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்பதே இதன் அர்த்தம்.

இன்று உலகம் முழுவதும் கால் பரப்பி, கடைநிலை ஏழை விவசாய தொழிலாளி வரையில் சுரண்டி வரும் முதலாளித்துவத்தை எதிர்க்காமல், அதன் பூசாரிகளான கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை. இன்று உற்பத்தியாகும் பொருட்களும், சந்தைக்கு வரும் சேவைகளும் மனித குலம் அனைத்துக்கும் சொந்தமான இயற்கை வளங்களை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் கூட்டு உழைப்பால் உருவாகின்றன.

ஆனால், 1% மட்டுமே இருக்கும் சூப்பர் பணக்கார வர்க்கம் அவற்றின் பலனை தமக்கு என்று ஒதுக்கிக் கொண்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் தனது ஆட்சியை நடத்தி வருகிறது. தமது லாப வெறிக்காக இயற்கை வளங்களை வரைமுறையின்றி கொள்ளை அடித்தும், சுற்றுச் சூழலை அழித்தும் உலகை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.

இந்த கார்ப்பரேட் காட்டாட்சியை எதிர்த்து முறியடிப்பதற்கு ஏற்ற அறிவியல் அடிப்படையிலான சித்தாந்த தெளிவுடன், உறுதியான போராட்டம் நடத்தும், எதிர்கால திட்டம் வகுத்து செயல்படும் புரட்சிகர, மக்கள் திரள் அமைப்புதான் உழைக்கும் மக்கள் கூலியடிமைத்தனத்திலிருந்து தங்களை  விடுவித்துக் கொள்வதற்கான வழியை காட்ட முடியும்.

R. ராஜதுரை
பொருளாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/bjp-or-congress-no-relief-to-working-class/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அக்டோபர் 1 சீனப் புரட்சியை நினைவு கூர்வோம்!

"மேக் இன் சீனா" என்பதோடு நில்லாமல், தாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு மாற்று பொருட்களை உருவாக்கும் வல்லமையும் சீனாவிற்கு உண்டு என்று நம்...

பத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து

இரவு பகல் பாராது அயராது உழைத்த ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களது அர்பணிப்பே இதனைச் சாத்தியமாக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்று நிலைமைகள் சற்று சீரடைந்தவுடன், பல...

Close