டூ ரிஸ்டர் வேனில் சாதாரண உடையில் வந்த ஒரு கும்பல் தோழர் கோவனை கடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறது. அவர்களை துரத்தி அடித்த பிறகு, சீருடை அணிந்த காவல் படை வந்து இறங்கியிருக்கிறது.
பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் தோழர் கோவனை கைது செய்ய வந்திருக்கிறது. அந்த பகுதி மக்கள் போலீசை முழு மூச்சுடன் எதிர்த்து தடுத்திருக்கின்றனர். இறுதியில், போலீஸ் வீட்டுக் கதவை உடைத்து தோழர் கோவனை பலவந்தமாக தூக்கிச் சென்றிருக்கின்றது.
பா.ஜ.கவும் மோடியும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் போராட்டம், மற்றும் பிற அரசியல் போராட்டங்களில் தமிழக மக்களை எதிர்கொள்ள திராணியற்று போயிருக்கிறார்கள். ஏப்ரல் 12-ம் தேதி மோடியின் தமிழக பயணம், வானத்தில் பறப்பதும், அவசரமாக உருவாக்கப்பட்ட முட்டுச் சந்துகளில் பயணிப்பதும் ஆக முடிந்தது. மோடிக்கும் பா.ஜ.க அரசுக்கும் எதிரான மக்கள் போராட்டத்தின் வீரியம் இப்படி மோடியை ஒளிந்து ஓட வைத்தது.
இப்போது, பா.ஜ.க தனது கொஞ்ச நஞ்ச தன்மானத்தை மீட்பதற்கு இது போன்ற அடாவடியான, சட்ட விரோதமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.
பா.ஜ.கவும், அதன் கைத்தடி தமிழ்நாட்டு எடப்பாடி அரசும், மோடி அரசும் மக்கள் முன் முற்றிலும் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.