பத்திரிகை செய்தி
ஜூலை 16, 2018

கார்ப்பரேட் ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தும் போது இரண்டு மாத சம்பளத்தைக் கொடுத்து விரட்டுவது போன்று, ஏக்கருக்கு இத்தனை லட்சம் ருபாய் நட்ட ஈடு என்று விவசாயிகளின் முகத்தில் வீசியெறிந்து அவர்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து இந்த அரசு விரட்டுகிறது.
8 வழிச்சாலை என்ற பெயரில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளை அவர்களது வாழ்விடத்திலிருந்து இந்த அரசு பிய்த்து எறிகிறது.
கார்ப்பரேட் ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தும் போது இரண்டு மாத சம்பளத்தைக் கொடுத்து விரட்டுவது போன்று, ஏக்கருக்கு இத்தனை லட்சம் ருபாய் நட்ட ஈடு என்று விவசாயிகளின் முகத்தில் வீசியெறிந்து அவர்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து இந்த அரசு விரட்டுகிறது.
வெரிசான் ஐ.டி. நிறுவனம் வேலைவிட்டுச் செல்ல மறுத்த ஊழியர்களை பவுன்ஸர்கள் எனும் குண்டர்களைக் கொண்டு தாக்கியதைப் போல, தங்களது நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை போலீஸ் படையை வைத்து இந்த அரசு தாக்குகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிற் தகராறு உள்ளிட்ட சட்டங்கள் எதையும் எப்போதும் மதித்ததில்லை. நாட்டின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான இந்த அரசும் நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட சட்டங்களை மதிக்காமல் நடந்து கொள்கிறது.
தமிழகத்தில் விவசாயம் என்பது பெயரளவேனும் நடந்து கொண்டிருக்கும் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக 8 வழிச்சாலை அமைப்பதன் மூலம் சிறிதளவேனும் நடந்த விவசாயத்தை முற்றிலும் அழிக்கப் பார்க்கிறார்கள். சாலைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியும், ஆனால், விவசாயிகளும் உணவும் இல்லாமல் வாழ முடியுமா? எனவே, சாலைகளும், புதிய தொழில் நுட்பங்களும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நலன் பயக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், ஏற்கனவே இருக்கும் வாழ்வாதாரங்களை வாய்ப்புகளையும் அழித்து அல்ல.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக அப்பாவி பொது மக்களின் வாழ்க்கையை பலி கொடுக்கும், சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவு, எதிர்க்கிறது. தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறது. போராடும் விவசாயிகள் மீது போலீசைக் கொண்டு அடக்கு முறையை ஏவி விடும் அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு