ஐ.டி துறையில் பவுன்சர்கள்

.டி துறை வேலைன்னா வெளிநாட்டு பயணம், 6 இலக்க சம்பளம், மேட்டுக்குடி வாழ்க்கைன்னுதான் கேள்விப்பட்டிருக்கிறார், ஆனந்த். முதல் முறையாக ஐ.டி கம்பெனி வேலைன்னா “பவுன்சர்களும்” உண்டுன்னு அவருக்கு தெரிய வந்தது.
ஹைதராபாதில் உள்ள வெரிசான் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஆனந்த், டிசம்பர் மாதம் 12-ம் தேதி வழக்கம் போலத்தான் வேலைக்குப் போனார். நிறுவனத்துக்குள் நுழைந்ததும், அவரது பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு எச்.ஆர் அதிகாரி சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே காக்னிசன்ட், விப்ரோ, டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் என்று பல ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து ஆட்குறைப்பு நடந்து வருவது பற்றிய செய்திகளை படித்திருந்த ஆனந்த், நமக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்று ஊகித்துக் கொண்டார். “என்ன ஆனாலும் ராஜினாமா செய்யக் கூடாது,” என்று நினைத்துக் கொண்டு, இருந்தாலும் “எச்.ஆர் என்னதான் சொல்றான்னு பார்க்கலாம்” என எச்.ஆர் அறைக்குள் சென்றிருக்கிறார்.

அங்கு போன பிறகுதான் தெரிந்தது, ‘ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மறுப்பதற்கெல்லாம் இடம் இல்லை’ என்று. எச்.ஆர் அதிகாரியுடன் ஒரு “பவுன்சரும்”, மனோதத்துவ ஆலோசகரும் உட்கார்ந்திருந்தார்கள்.

ராஜினாமா செய்யப் போவதாக எழுதப்பட்ட தாளில் கையெழுத்திட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார்கள். தாளில் என்ன எழுதியிருக்கிறது என்று முழுதாக படித்துப் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. “கொஞ்சம் நேரம் வேணும். யோசிச்சுதான் முடிவு எடுக்கணும்” என்று கையெழுத்திட மறுத்து விட்டு எழுந்திருக்க முயற்சித்திருக்கிறார் ஆனந்த். “பவுன்சர்” அவரை எழுந்திருக்க விடாமல் வலுக்கட்டாயமாக நாற்காலியில் உட்காரச் செய்து தோளை பிடித்து அழுத்தியிருக்கிறார்.

“வீணா டென்ஷன் ஆனா உன்னோட உடலுக்குத்தான் நல்லது இல்ல” என்று கடன் வசூலிக்கும் மாஃபியா தலைவரை போல ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் மனோதத்துவ ஆலோசகர். அதாவது, டென்சன் ஆகாம கையெழுத்து போட்டாதான் உருப்படியா வெளிய போகலாம் என்பது அதில் அடங்கியிருக்கும் மிரட்டல்.

வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்ட பிறகு ஆனந்தை கையோடு அழைத்துக் கொண்டு போய் கட்டிடத்துக்கு வெளியில் கார் பார்க்கிங்-கில் விட்டு இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஹைதராபாதிலும், சென்னையிலும், பெங்களூருவிலும் 993 ஊழியர்கள் இப்படி வேலையை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 500 பேர் சென்னையிலும், 200 பேர் ஹைதராபாதிலும் பணி புரிபவர்கள். சென்னை வளாகத்தில் எச்.ஆர், பவுன்சர், மனோதத்துவ ஆலோசகர் அடங்கிய 50 குழுக்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

“பவுன்சர்கள்” என்பவர்கள் நைட் கிளப் அல்லது மதுபான விடுதியில் அல்லது விபச்சார விடுதிகளில் நிர்வாகத்தின் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் அல்லது நிர்வாகத்துக்கு ஒப்புதல் இல்லாத வாடிக்கையாளர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியில் எறிவதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள். முதலாளிகளை பொறுத்தவரை மதுபான விடுதியாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, ஐ.டி நிறுவனமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றுமே மூலதனம் போட்டு லாபம் சம்பாதிப்பதற்கான இடங்கள். அதற்கு இடையுறாக வரும் எதையும் குண்டு கட்டாக தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.

தமது மிரட்டலுக்கும், ஏமாற்று வார்த்தைகளுக்கும் மயங்கி எந்த எதிர்ப்பும் காட்டாமல் சுரண்டலுக்கு தொழிலாளர்கள் அடிபணிவது வரை முதலாளிகளின் உண்மை முகம் தெரிவதில்லை. தமது லாப இலக்கை எட்டுவதற்காக தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், வேலையை விட்டு தூக்கி எதிர்வதற்கும் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தவுடன் முதலாளிகள் தமது உண்மை முகத்தை காட்டி விடுகின்றனர்.

குறிப்பாக தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் துணியும் போது அவர்களது குரல்வளையை நெரிக்கத் துவங்குகின்றனர்.

தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012-ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்துக்கு மாற்றாக தொழிலாளர்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாருதி நிர்வாகம் தனது பணபலத்தையும், நிர்வாக அமைப்பையும், செக்யூரிட்டி என்ற பெயரில் கூலிப்படைகளையும், கூடவே போலீசையும் களத்தில் இறக்கியது.

பெயரளவுக்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அதில் வன்முறையை ஏவி விட்டது, நிர்வாகம். இந்த வன்முறையின் போது எச்.ஆர் பொது மேலாளர் அவனிஷ்குமார் தேவ் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். 148 தொழிலாளர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 117 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும், 18 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை வேரோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் மாருதி நிர்வாகத் தெளிவாக இருந்தது. அரியானா மாநில அரசும், நீதிமன்றமும் மாருதி நிர்வாகத்தின் கூட்டாளியாகவே செயல்பட்டன.

இதே போல, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிர்வாகம் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி அடக்குமுறைக்கு எதிராக போராடிய 42 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்தை ஒடுக்குவதற்கு நிர்வாகம் கூலிப்படையை ஏவியதில் எச்.ஆர் அதிகாரி ராய் ஜார்ஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து போனார்.

இந்த வழக்கிலும் 27 தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தொழிற்சங்க முன்னோடிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நிர்வாகத்மான் கொலை வழக்கை சோடித்தது என்பது அம்பலமான போதிலும், விடுவிக்கப்பட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறது, நிர்வாகம்.

தொழிற்சங்கம் என்று வந்தாலே முதலாளிகளுக்கும் அவர்களது நீதிமன்றங்களுக்கும் கொலை வெறி ஏற்படுகிறது. இந்த கொலைவெறி முதலாளித்துவத்தின் இரத்தத்திலேயே இருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் பல ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், குண்டர் படையை பயன்படுத்தியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை தடுத்து வந்தது. 1937 டிசம்பர் மாதம் ஃபோர்ட் வாக்னர் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டு நிர்வாகம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் தலையிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார பெருமந்தத்தின் உச்சத்தில் டெட்ராய்ட் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்தனர். அதே நேரம் ஹென்ரி ஃபோர்ட் உலகின் முதல் பணக்காரராக இருந்தார். 1932-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி டெட்ராய்ட் வேலை இல்லாதோர் சங்கம் 5,000 தொழிலாளர்களையும், இளைஞர்களையும் பேரணியாக நடத்திச் சென்று ஃபோர்ட் தொழிற்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பேரணியை போலீசும், ஃபோர்டின் தனியார் கூலிப் படைகளும் தாக்கியதில். 5 தொழிலாளர்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

தொழிற்சங்கத்தை அனுமதிக்காமல் இருக்க வன்முறையை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என்பதில் ஹென்ரி ஃபோர்ட் தெளிவாக இருந்தார். 1937 மே மாதம் 26-ம் தேதி யுனைட்டட் ஆட்டோ வொர்க்கர் தலைவர் வால்டர் ராவ்தரும் பிற தொழிற்சங்க நிர்வாகிகளும் கூலிப்படைகளால் தாக்கப்பட்டனர்.

இத்தகைய பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் மாருதிகளும், பிரிக்கால்களும், வெரிசான்களும். ஐ.டி சேவை அயலகப் பணிக்கு அமெரிக்க/ஐரோப்பிய சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் இந்திய ஊழியர்களை அமர்த்தி லாபம் சம்பாதித்தன இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள். இப்போது அந்த சாதகம் குறையத் தொடங்கி தமது லாபம் பாதிக்கப்படும் போது ஊழியர்களை தூக்கி எறிய முயற்சிக்கின்றன. அதை எதிர்த்து தமது சட்டப்படியான உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராட ஆரம்பிக்கும் போது முதலாளிகள் “பவுன்சர்களை” களம் இறக்குகின்றனர்.

நேற்று ஃபோர்ட், மாருதி, பிரிக்கால்; இன்று வெரிசான் என்று அடுத்தடுத்து தொடரும் முதலாளிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க ஐ.டி ஊழியர்கள் தொழிலாளி வர்க்கமாக இணைந்து முதலாளித்துவ சதியை முறியடிக்க அணிதிரள வேண்டும்.

– குமார்

புதிய தொழிலாளி, பிப்ரவரி 2018

Permanent link to this article: http://new-democrats.com/ta/bouncers-in-it-companies/

1 comment

    • Pandi on February 21, 2018 at 8:52 pm
    • Reply

    Situation become worst in IT sector by seeing verizon layoff with bouncers

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்!

சமாஜ்வாதி கட்சி குடும்பச் சண்டையில் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர் சிங் என்று யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது உத்தர பிரதேச மக்கள்தான் என்பது...

உண்மையான மனிதர் திரு பகத்சிங் : பெரியார்

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை...

Close