BPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை

ன்பார்ந்த பி.பி.ஓ/கால்சென்டர்/கே.பி.ஓ ஊழியர்களே,

BPO, BPS, கால்சென்டர், Medical Coding, ஈ-பப்ளிஷிங் எனப் பல்வேறு துறைகளில் நாம் வேலை செய்தாலும் நமக்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருக்கின்றன. பொதுவாக மக்கள் மத்தியில் நம்மையும் மென்பொருள் உற்பத்தி (சாப்ட்வேர்) துறையில் வேலை செய்யும் ஊழியர்களையும் ஒன்றாகவே கருதுகின்றனர். ஆனால் நாம் வாங்கும் சொற்ப சம்பளமும் அதற்காக நமது நிறுவனம் நம்மைக் கசக்கிப் பிழிவதும் யாருக்கும் தெரியாது.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைக்குமா என்ற உத்தரவாதம் இல்லாமலே நம்மில் பெரும்பாலானவர்கள் வேலைசெய்து வருகிறோம். கல்லூரி வளாகத் தேர்வில் (campus interview) தேர்வாகி பல ஆயிரம் சம்பளத்துடன் வேலைக்குச் சேரும் ஐ.டி. ஊழியர்களைப் போல் இல்லாமல், படித்து முடித்து வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து, குடும்ப சூழ்நிலை காரணமாகக் கிடைத்த வேலையில் உடனே சேர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தத் துறையை தேர்ந்தெடுப்பவர்களே நம்மில் அதிகம்.
புதிதாக இந்தத் துறைக்கு வரும்போது, பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு சேரும் புதியவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு பயிற்சி என்ற பெயரில் சம்பளம் எதுவும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் கொடுக்க வேண்டிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகவே கொடுக்கின்றனர்.

கால் சென்டர்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கோ இது இன்னமும் சிக்கலானது. உள்நாட்டு கால்சென்டர், வெளிநாட்டுக் கால் சென்டர் என நமக்குள்ளேயே ஆங்கிலப் புலமையை வைத்து ஒரு பிரிவினையை உண்டாக்கியுள்ளார்கள். ஆனால் உண்மையில் உள்நாட்டுக் கால் சென்டரில் வேலை செய்பவர் தமிழில் திட்டு வாங்குகிறார், அதுவே வெளிநாட்டுக் கால்சென்டரில் வேலை செய்பவர் ஆங்கிலத்தில் திட்டு வாங்குகிறார் இதுதான் இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம். நிறுவனங்களின் தவறை மறைத்து, வாடிக்கையாளரின் கோபத்தை எதிர்கொள்ளும் முகமாக நம்மை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதன் மூலமே லாபத்தை ஈட்டும் அவர்களது வியாபார தந்திரத்துக்கு நாம்தான் பலியாடாக பயன்படுத்தப்படுகிறோம். யாரோ செய்த தவறுக்காக, முகம் தெறியாத பலரிடம் திட்டு வாங்கும் கால்சென்டர்களில் பணிபுரிந்தால் எந்த அளவிற்கு மனஉளைச்சலும், ஆற்றாமையும் ஏற்படும் என்பதை அங்கே பணிபுரிந்தாலதான் அறிந்துகொள்ள முடியும்.

இதில் நமது நிர்வாகம் வேறு “கால்”களை மிக விரைவாக முடிக்க வேண்டும், வாடிக்கையாளரை உடனடியாக வேறு திசையில் திருப்பிவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அழைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துப் பணம் என்பதால் நாம் எவ்வளவு விரைவாக அழைப்பை முடிக்கிறோமோ அவ்வளவு பணம் அவர்களுக்கு, ஆனால் வாடிக்கையாளருக்கோ தனது மனம் அமைதி அடையும் வரை நம்மைத் திட்ட வேண்டும். எவ்வளவுதான் அவர்கள் நம்மைத் திட்டினாலும் ஒன்றும் நடக்காதது போல பொறுமையாகச் சமாளித்து அழைப்பை முடிக்க வேண்டும். இதிலும் பெண் ஊழியர்கள் என்றால் திட்டுபவர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும்

கால்சென்டர் ஊழியர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வேலைச் சூழலில்தான் BPO ஊழியர்களும் பணிபுரிகிறோம். நமது நாளில் பெரும்பான்மை நேரத்தைக் கணிணியில் தட்டச்சு செய்து செய்து கணிணியின் ஒரு அங்கமாகவே நாம் மாறிப்போகின்றோம். நாம் எவ்வளவுதான் வேலை செய்தாலும், நிர்வாகம் நமது வேலையில் திருப்தியடையாது. இன்னும் வேகம் வேண்டும், இன்னும் தரமாக (Quality), குறைவான தவறுகளுடன் வேலை செய்ய வேண்டும் என்று பந்தயக் குதிரைகளைப் போல் நம்மை விரட்டிக் கொண்டே இருப்பார்கள்.

மிக மிகச் சொற்பமாக 4000 ரூபாய் ஆரம்பச் சம்பளமாகத் தருவது BPOவில் மட்டுமே. நாம் எவ்வளவுதான் வேகமாக, தரமாக வேலை செய்தாலும், எத்தனை ஆண்டுகள் வேலைசெய்து அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் நமது சம்பளம், அதிகபட்சமாக 30,000 ரூபாயைத் தாண்டாது. அதுவும் கூட மாதத்தில் முதல் நாள் கிடைக்காது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுக்கும் தேதி நிர்வாகத்தின் வசதிக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும். இதில் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறையும் விடுமுறை கணக்கில் சேர்த்து சம்பளத்தைக் குறைத்து விடுவார்கள்.

இவ்வளவு சுரண்டலையும், கடுமையான பணிச்சூழலையும், சந்தித்து குறைவான சம்பளத்துடன் வேலை செய்யும் நமக்கு பணிப்பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லை. நிர்வாகம் நினைத்தால் நம்மை எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்கியெறியலாம். ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு மாறும் போது முன்னர் வாங்கிய சம்பளம் கூடக் கிடைக்குமா என்பதற்கு இங்கே உத்தரவாதம் இல்லை. பணித்திறன் மேம்பாடு (PIP) என்ற பெயரில் உளவியல் சித்தரவதை செய்யப்பட்டு, நமக்குத் திறமையில்லை என்று நாமே நம்பும்படி செய்வதில் நிர்வாகம் கைதேர்ந்தது. இந்தச் சித்ரவதையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வழியின்றி நமக்கு PIP போட்டுவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் நம்மில் பெரும்பாலானவர்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

இதில் ஆட்டோமேஷன் எனும் பூதம் வேறு புதிதாகக் கிளம்பியிருக்கிறது. ஆட்டோமேஷன் என்பது எங்கோ பல ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கையில் நமது வேலையை அது ஏற்கனவே விழுங்க ஆரம்பித்துவிட்டது. இனி நாம் கணிணியுடன் போட்டி போட்டுக் கொண்டு நமது திறமையை, வேகத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற அழுத்தம். ஆனால் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாம் தேவையற்ற காகிதமாய் தூக்கி எறியப்படுவோம்.
நம்மால் இதிலிருந்து தப்ப முடியாதா? பணிப்பாதுகாப்பும், பணி நிரந்தரமும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காதா? சென்னை போன்ற நகரத்தில் குடும்பம் நடத்த தேவையான குறைந்தபட்ச சம்பளமும், மாதத்தின் முதல் தேதியே நமக்குக் கிடைக்காதா? PIP கொடுமைக்கு முடிவு கட்ட முடியாதா? ஆலைத் தொழிலாளர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காதா?

நாம் தனித்தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தால் எதுவும் முடியாது, நடக்காது என்றுதான் தோன்றும் அதுவே நாம் ஒன்றாக இணைந்து சங்கமாக அணிதிரண்டால் இவை அனைத்தையும் சாதிக்க முடியும். சங்கமாக அணிதிரள்வதன் மூலம் இதைவிடக் கொடுமைகளையும், சுரண்டல்களையும், அநீதிகளையும் உடைத்து எறிந்து தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே சங்கமாக சேர்வோம், நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bpo-callcenter-kpo-unionization-need-of-the-hour/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை!

இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில்...

Work From Home – எனப்படும் எகிப்திய கொடுஞ்சிறை!

அன்பார்ந்த ஐ.டி. ஊழியர்களே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் Work From Home என்ற பெயரில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம். எந்த தொழிற்துறையில் வேலை செய்பவருக்கும்...

Close