வளாக வேலைவாய்ப்பு : கார்ப்பரேட் – கல்லூரிகள் கூட்டுக்கொள்ளை

வளாக வேலைவாய்ப்பு (Campus Interview) : கார்ப்பரேட் நிறுவனங்கள் – தனியார் கல்லூரிகள் நடத்தும் கூட்டுக்கொள்ளை

.டி துறை, இன்றைய சூழலில் பணம் கொழிக்கும் துறையாகவும், குறைந்த காலத்தில் செட்டில் ஆவதற்கான வாய்ப்பு கொண்டதாக பலராலும் நம்பப்படுகிறது. இதனடிப்படையில் பெற்றோர்களும் பிள்ளைகளை இந்தத் துறையில் சேர்ப்பதற்கு பல பிரயத்தனங்களை செய்கின்றனர். பன்னிரண்டாவது முடித்த்தும் குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கூட்டமும் அலை மோதுகின்றது. கல்லூரிகளும் தங்களது கல்லூரிகளில் 100% campus வேலைவாய்ப்பு என்றே விளம்பரப்படுத்துகின்றன.வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகவும், இந்தக் கல்லூரியில் படித்த அனைவருக்கும் வேலை கிடைத்திருப்பதாவும் தோற்றத்தைத் தரும். ஆனால் நமது பிள்ளைகள் இந்த கல்லூரிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை.

முதலில் 100% வேலைவாய்ப்பு என்பதே போலியான விளம்பரம். எந்தக் கல்லூரியிலும் அப்படி நடப்பதில்லை. Campus interview களுக்கு கல்லூரிகளால் நடத்தப்படும் மாதிரி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் சலித்து எடுக்கப்பட்ட மாணவர்களே அனுப்பப்படுகின்றனர் ஒரு லட்சத்திற்கும் மேலான படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்தக் கல்லூரிகளின் யோக்கியதையை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த 100% வேலை வாய்ப்பு என்பது மாணவர்களிடம் இன்னும் அதிக பணம் கறக்கும் சாதனமாகவே கல்லூரிகளாலும் கம்பெனிகளாலும் பார்க்கப்படுகிறது. இவர்கள் campus எனும் வார்த்தைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பல கோடி ரூபாய் கூட்டுக்கொள்ளையை நடத்துகின்றனர். உதாரணமாக HCL நிறுவனம் CDC (Career Development Centre) என்ற பெயரில் campus வேலை வாய்ப்பு திறன் வளர்த்தல் பயிற்சி என்னும் பெயரில் கல்லூரிகளில் வகுப்புகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனம் ஒவ்வொரு கல்லூரி மாணவரிடத்திலும் ரூபாய் 5,000 முதல் 10,000 வரை பணம் வசூலிக்கிறது. மாணவர்களும் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் பயிற்சியில் இணைந்தால் அந்த நிறுவனத்திலேயே, பணி கிடைக்கும் என்று நம்பிச் சேருகின்றனர். அங்கு பயிற்சி கொடுக்கும் நிறுவன ஊழியர்களிடம் விசாரிக்கும் போது, ‘பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நாங்கள் வேலை வழங்குவதில்லை, சான்றிதழ் மட்டுமே கொடுப்போம், அவர்கள் வேறு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்கு செல்லும்பொழுது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்கின்றனர். ஆனால் பயிற்சியின் விளம்பரங்களில் ‘கட்டாயமாக வேலை கொடுக்கப்படும்’ என்று சொல்லியே சேர்க்கின்றனர்.

இதில் கல்லூரிகளுக்கும் வருமானம், மேலும் மாணவர்கள் சேர்க்கை காலங்களில் இதனை விளம்பரமாகப் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை புறத்தள்ளி, அவர்களை ஏமாற்றி, அவர்களின் எதிர்காலத்தை படுபாதளத்திற்குத் தள்ளும் இந்த வேலையை கார்ப்பரேட் கம்பனிகளோடு சேர்ந்தே செய்கின்றன.

இந்த நிலையில் இன்னொரு போக்கும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. ஆட்கள் தேவை இல்லாத பட்சத்தில் நிறுவனங்கள் கல்லூரிகளில் campus மூலம் மாணவர்களை தேர்வு செய்து காத்திருப்பு நிலையில் வைத்து, பிறகு அவர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிடுவது. இதன் மூலம் கல்லூரிகளின் 100% வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. நிறுவனங்களுக்கும் அந்நிறுவனத்தில் வேலை செய்பவர்களை, வெளியில் நின்று தொண்டிருக்கும் இக்கூட்டத்தைக் காட்டி அவர்களை மேலும் சுரண்டும் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள ஐ.ஐ.எம் கல்லூரிகளில் மாணவர்களை Campus முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு பணி ஆணை தராமல் காலம் தாழ்த்தி வந்தது. மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு பணியாணை வழங்க சம்மதித்தது. இந்நிலையில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 1500 மாணவர்களை தேர்வு செய்து காத்திருப்பில் வைத்திருந்துவிட்டு, தற்பொழுது இரண்டு வருடம் கடந்துள்ள நிலையில் அவர்களுக்கு வேலையில்லை என்று தெரிவித்துள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘நாங்கள் இரண்டு வருடம் கழித்து வைத்த மறு மதிப்பீட்டுத் தேர்வில் இவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு வருடத்தில் அவர்கள் எல்லோரும் திறமையற்றவர்களாக மாறியுள்ளனர்’ என்று சொல்வதன் மூலம் தங்களது திருட்டுத்தனத்தை மாணவர்களின் திறமையின்மை என்பதற்குள் எல்&டி மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்கள் மறைக்க முயற்சி செய்கின்றன. அப்படியே இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் திறமையற்ற மாணவர்களை இரண்டு வருடம் முன்பு எப்படி இந்நிறுவனம் தேர்வு செய்தது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை வேறு நிறுவனத் தேர்வுகளுக்குச் செல்லக்கூடாது என்று சொல்லி அவர்களின் மற்ற வாய்ப்புகளையும் கேள்விக்குள்ளாகியது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தானே? இந்த இரண்டு வருடத்தில் அவர்களை நிறுவனமும், இதனைக் கண்டுகொள்ளாது இருந்த கல்லூரிகளும் தான் இதற்குக் கூட்டுப் பொறுப்பாளிகள்.

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை பொதுவெளிக்கு KPF (Knowledge peoples Forum) என்ற அமைப்பு கொண்டு வந்தது. பு.ஜ.தொ.மு. வின் ஐ.டி ஊழியர்கள் பிரிவு போஸ்டர் ஒட்டித் தனது ஆதரவை தெரிவித்தது. மே 30 அன்று மாணவர்கள் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தது. இதனை கண்ட சி.ஐ.டி.யு. சென்னைமாவட்டப் பொறுப்பாளர் அங்கு வந்த நமது தோழர்களிடம், “இது அநாகரீகமாக உள்ளது! நாங்கள் நடத்தும் போராட்டத்தில் துண்டுப் பிரசுரம் கொடுப்பது உங்களுக்கு கேவலமாக இல்லையா?” என்று கூறியுள்ளனர். முத்தாய்ப்பாக அங்கு இருந்த காவலர்களிடம், “இங்க பாருங்க சார், நக்சலைட் எல்லாம் வந்து துண்டு பிரசுரம் கொடுக்கிறான்” என்று போலிகளின் வழக்கமான காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்தனர். மேலும் நமது தோழர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக ஒட்டிய போஸ்டர்களையும் கிழித்து எறிந்துள்ளனர். அதில் அரிவாள்சுத்தியல் சின்னத்தை தோழர்களின் கண் முன்னே வேண்டுமென்றே கிழித்தெறிந்துள்ளனர்.

போலிகளுக்கு அரிவாள் சுத்தியால் சின்னத்தின் மேல் உள்ள மதிப்பு அவ்வளவுதான் போலிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் மாணவர்களின் கோரிக்கைக்கான போராட்டமாக இல்லாது எல்&டி நிறுவனத்திடம் அவர்களை சமரத்திற்கு வரச் சொல்லி கெஞ்சுவதாக சுருங்கிப்போனது. அதில் பேசிய டி.கே.ரங்கராஜன் எம்.பி., “நமது போராட்டம் எல் அன் டி நிறுவனத்தை சமரசத்திற்கு வரவழைப்பது மட்டுமே, அவர்களை எதிர்ப்பது நமது நோக்கமில்லை” என்றது தான் முத்தாய்ப்பு. அவர் காரில் அமர்ந்து கொண்டே, “யாரு எல் & டி சேர்மன்? நான் அவர்ட்ட பேசுறேன்” என்று ஜமீன்தார் பாணியில் நடந்துகொண்டார்.

ஆக நடந்து முடிந்த போராட்டம் வெறுமே மாணவர்களை கூட்டி வழக்கமாக சி.பி.எம் செய்யும் அடையாளப் போராட்டமாகவே நடந்து முடிந்தது. இதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து அவர்களை காயடித்து விடும் வேலையை வழக்கம் போலவே செய்துள்ளனர். இந்தப் போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது? பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு எதிரானதாகவும், இவற்றை அனுமதித்து வருகின்ற அரசுக்கு எதிரானதாகவும் இருக்கு வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பதற்காகவே சிபிஎம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

இந்த ஒரு பிரச்சனை மட்டுமே இன்று பொதுவெளிக்கு வந்திருக்கிறது, கார்ப்பரேட் நிறுவன எச்.ஆர்.களிடம் பேசும்பொழுது, இதனை ஒரு சாதாரண நிகழ்வு எனவும், இது வழக்கமான நிறுவனங்களில் நடக்கும் மிகவும் சாதாரண விசயமாக அவர்கள் தெரிவித்தது நமக்கு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. ஆக பல வருடங்களாக மாணவர்களின் பணத்தை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலத்தையே கொள்ளை அடித்து வந்திருக்கிறது, இந்த தனியார் கல்லூரி மற்றும் கார்பரேட் நிறுவன கூட்டு. இதனை எதிர்கொள்வதற்கு உண்ணாவிரத போராட்டங்களால் மட்டுமே தீர்வை கொண்டு வந்து விட முடியாது. கார்ப்பரேட் கம்பெனிகள் தனியார் கல்லூரிகள், தவறான கொள்கைகளை வைத்திருக்கும் அரசு ஆகிய அனைத்தையும் எதிர்த்து போராடுவதன் மூலமே இதற்கான தீர்வை பெற முடியும்.

– ராஜா

புதிய தொழிலாளி, ஜூன் 2016 இதழிலிருந்து

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/campus-interview-loot-by-corporate-college-nexus/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“லாபம் வேண்டுமா? ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க...

ஐ.டி துறை : வேலையே மாயம்!

1990-களில் இந்தியாவை உலகின் மென்பொருள் வல்லரசாக ஆக்குவதாக அறிவித்த தகவல் தொழில்நுட்பத் துறை என்ற கப்பல், 37 லட்சம் ஊழியர்களை சுமந்து கொண்டு பனிப்பாறையின் மீது மோதி...

Close