என்னதான் தொழிலாளிகளின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்தாலும், முதலாளிகள் எப்போதும் தாங்கள் தொழிலாளர் நலனுக்காக வாழ்வதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம்கோ நிறுவன முதலாளிகளோ இன்னும் ஒருபடி மேலே போய் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே தாங்கள் பிறப்பெடுத்திருப்பதாகக் கூறிவருகின்றனர். இதையே தங்களது நிறுவனர் தின விளம்பரமாகப் பல்வேறு நாளிதழ்களிலும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
பி.ஏ.சி. ராமசாமி ராஜா என்பவரால் மிகச் சிறியதாகத் தொடங்கப்பட்ட ராம்கோ குழுமத்தை இன்றைக்கு சிமெண்ட், நூற்பாலை, மருத்துவ துணிகள் ஆலை, கூரைத் தகடுகள் என அதன் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கச் செய்துள்ளனர். இந்தக் குழுமம் ஆண்டுக்கு 700 கோடி ருபாய்க்கும் குறையாமல் நிகர லாபம் ஈட்டுவதற்கு 5000த்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் உழைப்பே காரணமாக இருக்கிறது.
ஆனால் தங்களது முதலாளிகளுக்கு லாபத்தை அள்ளித்தரும் தொழிலாளர்களுக்கு ராம்கோ நிறுவனம் வழங்கியதெல்லாம், அடக்குமுறையும், உரிமை மறுப்பும், அடிப்படை வசதிகளின்மையும் தான். ராம்கோ தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏழு எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தும் பணி நிரந்தரம் கிடைக்காமல் கான்டிராக்ட் தொழிலாளர்களாக அற்ப சம்பளத்திற்கு வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். ஆண்டுக்காண்டு விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு ஏறி வரும் இன்றைய சூழலில், ராம்கோ தொழிலாளர்களுக்கு சம்பள் உயர்வு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான், அதுவும் சொற்ப தொகையை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதனைச் சம்பள உயர்வு என அறிவித்து விடுவார்கள்.
தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் வேலை வாங்கும் இவர்களது ஆலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அதை விபத்தாக பதிவு செய்ய விடமாட்டார்கள், அதை வெளியில் சொல்லக் கூட அனுமதிக்க மாட்டார்கள். அடிபட்ட தொழிலாளிக்கு மருத்துவ விடுப்புக் கூடக் கொடுக்காமல் கேசுவல் லீவில் போகும்படி நிர்பந்திப்பார்கள். அதே சமயம் ஆலையில் ஏற்படும் எல்லா விபத்துக்களுக்கும் தொழிலாளர்களின் கவனக் குறைவே காரணம் என வாரம்தோரும் உறுதி மொழியெடுக்க வைப்பார்கள்.
மறுபுறம் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரத்தின் வேகத்தினை அதிகப்படுத்தித் தொழிலாளர்களின் கடைசிச் சொட்டு இரத்தம் வரை பிழிந்து எடுத்துவிடுவார்கள். ராம்கோ பஞ்சாலை நிறுவனம் தங்களது தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறைக்குக் கூட தண்ணீர் வசதி செய்து தரவில்லை.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைத் தராத, அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தித் தராத ராம்கோ முதலாளி, சென்னை வெள்ளத்திற்கு 2 கோடி நன்கொடை தந்திருக்கிறார். இதுமட்டுமன்றி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, இதற்கென பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கியது, தொழிலாளர்கள் வீடு கட்ட குறைந்த விலையில் நிலம் கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது என இந்தக் குழுமத்தின் இணையதளத்தைத் திறந்தால் தனது வள்ளல் தன்மையைப் பட்டியல் போடுகிறார்கள்.
ஆனால் உண்மையோ இதற்கு நேர் மாறாக இருக்கிறது. இவர்கள் நிறுவனர் நாள் எனக் கொண்டாடும், பி.ஏ.சி ராமசாமி ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்கின்றனர்.
இவர்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் மாணவர்களிடம் காசைக் கறக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள். இவர்களது கல்லூரியில் இடம் வேண்டும் என்றால், தொழிலாளியின் குழந்தைகள் என்றால் கூட லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களையும், குளங்களையும் ஆக்கிரமித்து அவற்றை செண்டுக்கு 4,000 ருபாய்க்கு தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்ததை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிலம் கொடுத்ததாகக் கதையளக்கின்றனர். தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டு, அதையே மாபெரும் சேவையாகக் கூறிவருகின்றனர்.
இதுதான் பிறருக்குச் சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த ராம்கோ முதலாளிகளின் லட்சணம். இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் முதலாளிகளின் வள்ளல் தன்மையைப் பற்றிப் புரிந்து கொள்ள ராம்கோ குழுமம் ஒரு சோற்றுப் பதம்.
– ராஜ்
புதிய தொழிலாளி, மே 2018 இதழில் வெளியானது
படங்கள் – இணையதிலிருந்து
1 ping