ஐ.டி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு

காவிரி பிரச்சனையில் கன்னட இனவெறியை தூண்டி விட்டு அரசியல் செய்யும் பா.ஜ.க-வினரையும், பிரதமர் மோடியையும் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் உட்பட 3 பேர் நேற்று (20-09-2016) காலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தமிழ்நாடு திறந்தவெளி அவதூறு தடுப்பு சட்டம் பிரிவு 4a ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

cauvery-issue-modi-bjp-poster-2

சங்க பரிவாரத்துக்கு ஆத்திரம் ஏற்படுத்திய போஸ்டர்

உண்மையில் சென்னை திறந்தவெளி அழகை பராமரிப்பதுதான் போலீசின் நோக்கமாயிருந்தால் மோடியின் பிறந்தநாளுக்கு போற்றி செய்தி ஒட்டியவர்கள், ஜெயலலிதாவுக்கு ஃபிளெக்ஸ் வைத்து சுவர்களில் படம் வரைந்து துதி பாடுபவர்கள்,விநாயகர் சிலை வைத்து தெருக்களை ஆக்கிரமித்தவர்கள்,ஜக்கி வாசுதேவ் ஆன்மீக வியாபார விளம்பரம் செய்தவர்கள், ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி விளம்பரம் ஒட்டியவர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் சினிமா போஸ்டர்கள், டைம் பாஸ் முதலான பத்திரிகை விளம்பரங்கள் தினமும்,வாரந்தோறும் ஒட்டப்பட்டு வருகின்றன. அவற்றையும் போலீஸ் கண்டு கொள்வதில்லை. ஆனால்,உண்மையில் மோடி-பா.ஜ.க-வின் கன்னட வெறி அரசியலை அம்பலப்படுத்தியதுதான் இந்த போலீஸ் நடவடிக்கையின் பின்னணி என்பது “மோடியையே விமர்சித்து போஸ்டர் ஒட்டுனா விடுவோமா” என்று தோழர்களை காவல் நிலையத்தில் போலீசார் விமர்சித்தது வெளிப்படுத்தியது.

நமது நாடு ஜனநாயக நாடு என்பது பெயரளவில்தான், அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிப்பவர்கள் மீது போலீஸ் வழக்கு பாயும் என்பதுதான் நடைமுறை என்பது இந்த வழக்கின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயா அரசின் சாராய விற்பனையை விமர்சித்து பாட்டு பாடிய தோழர் கோவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது,நாடாளுமன்றத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டது,மமதா பானர்ஜியை கிண்டல் செய்த கார்ட்டூனை பகிர்ந்து கொண்டதற்காக அம்பிகேஷ் மகாபத்ரா மீது வழக்கு போடப்பட்டது என அணிவகுக்கும் நூற்றுக் கணக்கான வழக்குகளின் வரிசையில் இதுவும் இணைந்துள்ளது.ஜெயலலிதா, மமதா பானர்ஜியை போன்ற தனிப்பட்ட சர்வாதிகாரியாக மட்டுமில்லாமல், ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச, மதவெறி அமைப்பின் பிள்ளையான மோடியின் ஆட்சியில் இந்த நடைமுறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19-ம் தேதி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தமது அதிகாரத்தை பயன்படுத்தி போலீசை ஏவி விட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். தம் மீதான விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ள திராணியும், அடிப்படையும் அற்ற பிற்போக்கு, மதவாத, இனவாத,சாதி வெறி கும்பலான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்த அதிகாரத் திமிருக்கு பகுத்தறிவு கோலோச்சும் தமிழகத்தின் உழைக்கும் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். ஏற்கனவே,சுவாதி கொலை, ராம்குமார் சிறையில் மரணம் என பா.ஜ.க கிரிமினல் கும்பல்களின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாசிச நடைமுறைகளிலும்,பார்ப்பனிய திமிரிலும் மோடியை விஞ்சும் ஜெயாவின் காவல் துறை இந்துத்துவ சக்திகளின் ஏவலுக்கு கைகட்டி சேவை செய்கின்றது. ஜெயா அரசின் காவல்துறையின் இந்த நடவடிக்கையை பு.ஜ.தொ.மு வன்மையாகக் கண்டிக்கிறது.மத்தியில் பா.ஜ.க, மாநிலத்தில் அ.தி.மு.க என்பது உண்மையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பரிவாரங்களின் ஆட்சி நடக்கிறது என்பதுதான் என உணர்ந்து ஜனநாயக மறுப்பு இந்துத்துவ சக்திகளை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என்று உழைக்கும் மக்களை அறைகூவி அழைக்கிறது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/case-filed-against-it-union-oranizer-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஐ.டி யில் வேலைநீக்கம்! பங்குச்சந்தையில் கொண்டாட்டம்! மிக்சர் தின்னும் அரசுகள்!

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். முதலாளிகள் பங்குச்சந்தையை கவனித்துக் கொள்கிறார்கள். அரசுகள் முதலாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்களாகிய நாம் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்....

டிஜிட்டல் இந்தியா : வாழ்க்கைக்கே Hack – இரும்புத்திரை காட்சி

ஆதார் கார்ட் என்பது நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐ.டி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனுசனுடைய கைரேகையிலிருந்து கண் ரெட்டினா வரைக்கும் எல்லா அடையாளத்தையும் சேர்த்து...

Close