பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை

This entry is part 20 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

வம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பிறகு பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் “முதலாளிகள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வங்கிக்கணக்கில் போடுவார்களானால் தொழிலாளர்கள் தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவற்றை பெறுவார்கள்’ என்று கூறினார். அதாவது பணமில்லா பரிமாற்றம் தொழிலாளர்களின் நன்மைக்குத்தானாம். ஆனால், வங்கியில் கணக்குத் தொடங்குவதிலும் அதை உறுதி செய்து உயிர்ப்பிப்பதிலும் உள்ள சிக்கல்கள், வங்கியில் பணம் போடவும் எடுக்கவும் செலவிடப்படும் நாட்களும் அவற்றுக்காக இழக்கும் சம்பளம் ஆகியவற்றைப் பற்றி அவர் சொல்லாமல் விட்டுவிட்டார்.

தினக்கூலி தொழிலாளர்கள்

குருகிராமின் ஒரு தொழிலாளர் சதுக்கத்தில் தினக்கூலி தொழிலாளர்கள். பல வாரங்களாக தினமும் வேலைக்காக காத்திருந்து ஏமாந்திருக்கிறார்கள்.

பணமில்லாத சம்பளப் பட்டுவாடாவை திணிக்கவேண்டிய பொறுப்பை கொடுக்கப்பெற்ற தொழிலாளர்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா 1936-ம் ஆண்டு சம்பளப் பட்டுவாடா சட்டத்தில் ஒரு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்படி காசோலை வழியாகவோ வங்கிக் கணக்கிலோ சம்பளம் கொடுப்பது நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் முடிய ஒரே நாள் இருந்த நிலையில் அந்தத் திருத்தம் நிறைவேற்றப் படவில்லை. ஒரு வாரத்திற்குள், இத்திருத்தத்தை அமலாக்குவதற்காக மத்திய அமைச்சரவை ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்தது.

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, மற்றும் பிற மத்திய சங்கங்கள் இந்த அவசர சட்ட வழியை குறைகூறியிருக்கின்றன. சி.ஐ.டி.யு-வின் பொதுச் செயலாளரான தபன் சென் “குறிப்பாக நாட்டின் முழு வங்கித்துறையும் குழப்பத்தில் இருக்கும் இப்போது இம்முடிவு பொருத்தமற்றது” என்று கூறியிருக்கிறார். அவர் “நாட்டின் 35 சத வாழிடங்கள் வங்கிச் சேவையின் கீழ் கொண்டுவரப்படவில்லை” என்றும் “குறைந்த சம்பளம் பெறும் முறைசாரா தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பெரிய பகுதி, நகர பகுதிகள் உட்பட, வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்” என்றும் குறிப்பிடுகிறார். “கட்டாய வங்கிப் பட்டுவாடா புலம்பெயர் தொழிலாளர்களையும் பாதிக்கும்” என்று கூறிய அவர் “முறையற்ற அவசரத்தைக் கையாளவேண்டாம்” என்று அரசை வலியுறுத்தினார்.

விசைத்தறி தொழிலாளி

மகாராஷ்டிராவின் பிவண்டியில் உள்ள ஒரு விசைத்தறியில் தனியாக வேலை செய்யும் தொழிலாளி. விசைத்தறி உரிமையாளர்கள் தினக்கூலி தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் கூலி கொடுக்க திணறும் நிலையில் பல பட்டறைகள் மூடப்பட்டு விட்டன.

இச்செயலைப்பற்றி முதலாளிகளும் தொழிலாளர்களும் என்ன நினைத்தாலும் பிரதமரின் முடிவை செயல்படுத்தவேண்டிய ஏற்பாடுகள் தொடரும் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாகிவிட்டது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் விரைவிலேயே களத்தில் இறங்கி, தொழிலாளர்களை வங்கியில் கணக்கைத் துவக்க வலியுறுத்தியது. நவம்பர் 26-ம் தேதி முறைசாரா மற்றும் முறைப்படுத்தப்பட்ட தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வங்கிக்கணக்கு துவங்க ஒரு சிறப்புப் பிரச்சாரம் துவங்கியது. நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியில், “இந்தியாவின் கனவான டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பணியில் எல்லோரையும் சேர்ந்து கொள்ளும்படி அது அழைத்தது.

பத்திரிகைச் செய்தி 3 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டன என்று கூறியது. ஆனால் அதில் எத்தனை கணக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டன என்ற தகவல் இல்லை. டிசம்பர் மாத முதல் வார வாக்கில் டிஜிட்டல் இந்தியா என்பது அதிகபட்சம் ஒரு கனவுதான் என்பது தெளிவாக ஆரம்பித்தது. ஆனால் கட்டளை மேலிடத்திலிருந்து வந்திருப்பதால், எல்லா மாநில அரசுகளுக்கும் தொழிலாளர் இலாகாக்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் “சம்பளப் பட்டுவாடாவை காசோலை வழியாகவோ வங்கி கணக்கிலோ செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு” அமைச்சகம் ஒரு ஆலோசனை அனுப்பியது. டிசம்பர் 6- ல் அது மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, “காலப் போக்கில், தொழில்நுட்பம் கடலளவு மாற்றமடைந்திருக்கிறது. தொழிலாளர்களில் பெரும்பகுதி இப்போது வங்கிக்கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆகையால் காசோலை வழியாகவோ வங்கிக் கணக்கு வழியாகவோ சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவது டிஜிட்டல் மற்றும் பணமற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைய உதவுவதோடு குறைந்தபட்ச கூலி கொடுக்கப்படுவதையும் உறுதி செய்யும்”

பீகாரின் ஈஸ்வர் தேவ்

55 வயதான ஈஸ்வர் தேவ், பீகாரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த தொழிலாளி. இரண்டு மாதங்களாக அவருக்கு வேலை இல்லை. தினமும் அந்தப் பகுதி குருத்வாராவில் இலவச உணவு சாப்பிட போகிறார்.

டிசம்பர் 7-ல் தத்தாத்ரேயா நிதி அமைச்சரான அருண் ஜெட்லியை சந்தித்து நடமாடும் ஏ.டி.எம்களை தொழில் நகரங்களில், குறிப்பாக தொலைதூரபகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் ஏற்பாடு செய்யுமாறும், பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு பயன்படும் விதத்தில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை (ரூ 10, 20, 50 & 100) ஏ.டி.எம்.களில் வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் அதிகமான 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை துரிதப்படுத்துமாறும் அவற்றை தொழிற்சாலைகளுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் விரைவில் கிடைக்கும் படி செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் கனவு எட்டமுடியாதது என்பதை தொழிலாளர்துறை அமைச்சர் அறிந்திருந்தார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

யாரும் எதிர்க்கத் துணியவில்லை.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் கொள்கைகளை ஏற்ற சக அமைப்புகளும் சங்கங்களும், அரசின் முடிவை வெளிப்படையாக குறை சொல்ல முடியவில்லை. இந்த நாசகார அறிவிப்பிற்கு அடுத்தநாள் டிசம்பர் 9-ல் பாரதிய மஜ்தூர் சங்கம் இந்த அறிவிப்பை வரவேற்று ஒரு எச்சரிக்கை கலந்த அறிக்கையை வெளியிட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு அறிவிப்பினாலும் பணமில்லா பட்டுவாடாவை பலவந்தப்படுத்துவதாலும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று எல்லா தொழிற்சங்கவாதிகளுக்கும் தெளிவாக தெரியும்.

சங்க பரிவாரத்தின் உறுப்பினாரான இலகு உத்யோக் பாரதி (Laghu Udyog Bharati – LUB) என்று நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) சங்கம் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி சிறு நிறுவனங்கள் சந்திக்கும் கஷ்டங்களை விளக்கி அமைச்சத்திற்கு ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தது. அதன் கருத்துக் கணிப்பின்படி 70 சதவீதம் நுண், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தியில் இழப்பையும் கடன் வசூலில் பின்னடைவையும் சந்தித்திருக்கின்றன. எல்.யு.பி-யின் அதிருப்தியைப்பற்றிய செய்திகள் ஊடகங்களின் ஒரு பகுதியில் வெளியான உடனே, அந்த சங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்க்க உண்மையிலேயே தலைமறைவானார்கள். அதில் ஒருவர் கோரிக்கை மனு தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளமுடியாது என்று பிரன்ட்லைனுக்கு தெரிவித்தார்.

வெல்ல வியாபாரி

குருகிராமில் கடை போட்டிருக்கும் மேற்கு உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த வெல்ல வியாபாரி ஒருவர். உற்பத்தியாளரிடமிருந்து அவர் வாங்கி வந்த சரக்கில் பாதியைக் கூட அவரால் விற்க முடியவில்லை.

எப்படியிருப்பினும் நம்பத்தகுந்த தகவல்களின் படி சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் கழகம் (NLI) ஆகியோர் கலந்து கொண்ட அமைச்சகத்தின் டிசம்பர் 16 கூட்டத்தில் “அவர்கள் 300 வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்ட முகாமுக்குச் சென்றதாகவும், அந்தக் கணக்குகளில் எதுவும் உயிர்ப்பிக்கப் படவில்லை” என்றும் LUB உறுப்பினர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர். ஃபரிதாபாத் முதலாளிகள் சங்கமும் இந்தியத் தொழில் கூட்டமைவின் (CII) பிரதிநிதிகளும் பணமதிப்பிழப்பு அறிவிப்பும் பணமில்லா பட்டுவாடா திணிப்பும் நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) மீது செலுத்தும் தாக்கத்தைப் பற்றி கவலை தெரிவித்தனர். தொழில்துறை பிரதிநிதிகள் இணையவழி பட்டுவாடா செய்யப்பட்டாலும் தொழிலாளர்களால் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியவில்லை என்றும், பலர் பணத்தை எடுக்க வரிசையில் காத்திருப்பதற்காக வேலையை இழக்கவேண்டி வருவதாகவும், பணம் எடுப்பதற்கான வாராந்திர கட்டுப்பாட்டு அளவு தொழில்துறையினர் தங்கள் தொழிலாளர்களுக்கு கூலியை வழங்க முடியாத அளவுக்கு குறைவானது என்றும் விளக்கினர். ஒரு தொழில்துறை பிரதிநிதி நுண், சிறு, நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு வேலைசெய்கின்றன என்று தெரிந்த ஒருவர் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும் என்று அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

அரசு சம்பளப் பட்டுவாடா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிசெய்த நாளுக்கு அடுத்த நாள் இந்த கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த உடன் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி “குறைந்த கல்வி, செல்போன் பயன்பாடு பற்றிய குறைந்த அறிவு, மோசமான இணையத்தொடர்பு, திறனற்ற போன்கள் ஆகிய தடைகளை கருத்தில் கொண்டு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பணப்புழக்கத்திற்கு மாற்றாக எதுவும் இருக்க முடியாது என்று புரிந்து கொள்ளப்பட்டது” என்று கூறியது.

சம்பளப் பட்டுவாடா சட்டத்தில் திருத்தம்

மக்களவையில் சமர்ப்பிக்கப் பட்ட சம்பளப் பட்டுவாடா (திருத்தம்) மசோதா 2016 முதலாளிகள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை காசோலை அல்லது மின்னணு பரிமாற்றத்தின் மூலமாக பட்டுவாடா செய்ய வழியேற்படுத்தும் விதத்தில் மூல சட்டத்தின் 6-வது பிரிவை மாற்ற முற்பட்டது. “சம்பந்தபட்ட அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடுவதன் மூலம் முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை காசோலை அல்லது மின்னணு பரிமாற்றத்தின் மூலமாக மட்டுமே பட்டுவாடா செய்யப்பட வேண்டிய ஆலைகளையும் நிறுவனங்களையும் குறிப்பிடலாம்.” என்று அந்த மசோதா கூறுகிறது.

இங்கே குறிப்பாக கவனிக்க வேண்டிய வார்த்தை ‘செய்யப்பட’ [கட்டாயம் என்ற பொருளில்] என்பது தான் என்றாலும் தொழிலாளர் அமைச்சகம் பணமாக சம்பளம் கொடுக்கும் வாய்ப்பு கூட இருப்பதாக ஊடகங்களுக்கு புரியவைப்பதற்கு சிரமப்பட்டது. ஆனால் மசோதாவில் இந்த வாய்ப்பு குறித்து குறிப்பிடப்படாமல் இருந்தது விந்தை தான். மேலிடத்திலிருந்து அனுமதி கிடைத்திருந்தாலும் மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பாலான மத்திய தொழிற்சங்கங்கள் இந்த மசோதாவையும் அவசர சட்ட வழியையும் எதிர்த்திருக்கின்றன.

குருகிராம் காய்கறிச் சந்தை

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஒரு சில வாடிக்கையாளர்களே வந்திருக்கும் குருகிராமில் உள்ள காய்கறிச் சந்தை. வருபவர்கள் கூட முன்பு வாங்கிய அளவுக்கு வாங்குவது இல்லை என்கிறார்கள் வியாபாரிகள்

தொழிற்சங்கங்கள் வங்கியின் வழியாக சம்பளம் செலுத்தப்படுவதற்கு எதிரானவை அல்ல. உன்மையில் அவை இதை நீண்ட காலமாக அதை வலியுறுத்தியிருக்கின்றன. ஆனால் பணம் பற்றாக்குறையாக இருக்கும் இந்தக் காலம் ஏற்புடையதல்ல என்று அவை நினைக்கின்றன. அரசின் நோக்கமும் சந்தேகத்திற்குரியது. “கறுப்புப் பணத்தை கைப்பற்ற அவர்கள் செய்த முயற்சி புழக்கத்திலிருந்து பெரும்பாலான நோட்டுகள் திரும்பி வந்ததால் தோல்வியானவுடன், இந்த புதிய சாக்கை சொல்கிறார்கள்” என்று தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கூறினார். நவம்பர் 7-ம் தேதி அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை பெற்றவர்கள் நவம்பர் 8 ல் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளில்தான் அதைப் பெற்றார்கள். இதன் பொருள் அந்த மாதச் சம்பளமே நிலுவையில் உள்ளதைப் போன்றது தான்.

தற்போதைய சட்டம் 18,000-க்குக் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது. தொழிலாளியின் ஒப்புதலுடன் மட்டுமே காசோலையாக அல்லது இணைய பரிமாற்றத்தின் வழியே பட்டுவாடா செய்வதை அது அனுமதிக்கிறது. அப்படிப்பட்ட ஒப்புதலுக்கான சரத்து 1973-ல் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு தொழிலாளியை காசோலையாக அல்லது இணைய பரிமாற்றத்தின் வழியே சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் படி நிர்ப்பந்திக்கமுடியாது. மத்திய அமைச்சரவையின் இந்தத் திருத்தம் அந்த உரிமையை மறுக்கிறது. “தொழிலாளியின் ஒப்புதலை தேவையில்லாததாக்கி விட்டார்கள்” என்று சி.ஐ.டி.யு தலைவர் ஏ.கே. பத்மநாபன் ஃபிரன்ட்லைன்-க்கு தெரிவித்தார். “தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படுவதற்கு எதிரானவை அல்ல என்றும், உன்மையில் தொழிற்சங்கங்கள் இதை தொழிலாளர்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றன. பொதுத்துறையில் கூட நிறுவனங்கள் தற்காலிக தொழிலாளர்களுக்கு உதவ தயங்கினார்கள்” என்றும் அவர் கூறினார்.

குழப்பம் முற்றிய போது, தொழிலாளர் அமைச்சகம் திருத்தம் தேவையில்லை என்பதாக ஒரு விளக்கத்தை டிசம்பர் 21-ல் வெளியிட்டது. “சம்பந்தப்பட்ட (மத்திய அல்லது மாநில) அரசு முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை காசோலை அல்லது மின்னணு பரிமாற்றத்தின் மூலமாக பட்டுவாடா செய்யப்பட வேண்டிய ஆலை மற்றும் மற்ற நிறுவனங்களை குறிப்பிட்டு ஒரு அறிவிப்பை அரசிதழில் வெளியிடும். ஆகையால் முதலாளிகள் சம்பளத்தை பணமாக கொடுக்கும் வாய்ப்பு தற்போதும் இருப்பது தெளிவு” என்று அந்த விளக்கம் கூறுகிறது.

இந்த சமயத்தில் பேச்சு கறுப்புப் பணம் கைப்பற்றல் என்பதிலிருந்து முழுமையாக பணமில்லா பரிமாற்றம் என்பதாக மாறிவிட்டது. ஆனால் அரசாங்கத்திடம் கூட இதற்கு சில ஆதரவாளர்களே இருக்கின்றனர். ஆகையால் அடுத்த மக்களவை கூட்டத்தொடர் வரை காத்திருக்க முடியாமல் அவசர சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய மாநில அரசுகள் விரைவில் அரசிதழில் நிறுவனங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றன.

பாதிப்பை யார் தாங்குவது?

முறைசாரா தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அரியானா மாநிலத்தில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடப்பது வழக்கமாக இருந்த குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் தொழிற்பேட்டைகளில், பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் குறிப்பாக தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டன. ஷிப்ட் அல்லது உற்பத்தி நாட்களை குறைத்துக் கொண்டன. சுமைதூக்குதல், கட்டுமானப் பணியாளர்கள் போன்ற தினக்கூலி வேலையாட்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கூடுதலாக ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலைசெய்பவர்கள் ஊருக்குப் போகும் படியோ இல்லை பணச் சுழற்சி நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும் படியோ சொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்களையும், முதலாளி சங்கம் மற்றும் தொழிலாளி சங்கங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஃபிரன்ட்லைன் பேசியபோது சிறு, குறு தொழில்களிலும் முறைசாரா ஆலை தொழில்களிலும் பிரதமரின் டிசம்பர் 30 என்று கெடுவிற்கு பிறகாவது மீட்சி என்பது சாத்தியமாகும் என்பதை அவர்கள் நம்பவில்லை என்று தெரிகிறது.

குருகிராம் வட்டாரம் 37 ஆயத்த ஆடை மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்ட மிகவும் சுறுசுறுப்பான தொழிற்பேட்டையாக இருந்தது. பல பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்கான உதிரிபாக தயாரிப்பாளர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இவ்விடம் ஜப்பானிய நகரம் என்று அழைக்கப்பட்டதாக முன்னாள் ஆலைத் தொழிலாளியும் தற்போதைய சி.ஐ.டி.யு-ன் மாவட்டச் செயலாளருமான ரஜிந்தர் சரோகா தெரிவித்தார்.

தொழிலாளர்களில் பெரும்பகுதி வேலைக்கான எந்த ஒரு அதிகார பூர்வமான ஆதாரத்தையும் கொண்டிராத, முதலாளிகளின் விருப்பப்படி வேலையில் அமர்த்தவோ அல்லது துரத்தவோ முடிந்த ஒப்பந்த ஊழியர்களாகவோ அல்லது உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில் கூலி பெறும் தொழிலாளர்களாகவோ இருக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவர்களை பல வழிகளில் பாதித்திருக்கின்றது. ஆறு மாதங்களுக்கு வேலை செய்பவர் பலரும் அதற்கும் மேல் வேலை செய்பவர் சிலரும் அப்படியே துரத்தப்பட்டனர். சிலர் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். “முதலாளிகளிடம் சம்பளம் கொடுக்க பணமில்லை அதனால் நிறுத்துகிறார்கள்” என்று தொழிலாளர்கள் கூறினர். வேலைக்கு புதிதாக ஆள் எடுப்பது நின்று போய்விட்டதென்றே கூறலாம்.

மூன்று நாட்கள் மட்டுமே தங்களுக்கு வேலை கிடைத்ததாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஃபிரன்ட்லைன்-டம் கூறினார்கள். “முன்னாடி எங்கள ஞாயித்துக்கிழம கூட கூப்டுவாங்க. இப்ப வேல கொறஞ்சிடிச்சி” என்றார் முகேஷ். அவர் வாகன எந்திர தொழிற்சாலையில் ஒரு பீஸ் ரேட் தொழிலாளி. ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளி “பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்” என்றார். “அவர்களுக்கு சேரவேண்டியதை பெரும்பாலும் காசோலையாக கொடுத்தனுப்பி விட்டார்கள். ஆனால் வங்கிகள் அதிக வேலைப் பளுவை காரணம் காட்டி காசோலையை பணமாக மாற்றி கொடுக்க மறுத்தார்கள். எல்லா பணத்தையும் வங்கியில் போட்டுவிட்டு எங்கள் தினசரி செலவுக்கு என்ன செய்வது? நாங்கள் சேமித்து வைக்கும் அளவுக்கு சம்பாதிக்கவில்லையே” என்று ஒரு தொழிலாளி கேட்டார். அவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் “வீட்டுக்காரர்களால் வாடகை கேட்டு தொந்தரவுக்குள்ளாவதாகவும், சில நேரங்களில் வன்முறைக்கு ஆளாவதாகவும் வாடகை விரைவில் கட்டாவிட்டால் வீட்டை காலி செய்துவிடுவதாக பயமுறுத்தப் படுவதாகவும்” கூறினர்.

பீகாரின் கிழக்கு சம்பரனிலிருந்து வந்த அக்தர் “பல முதலாளிகள் தொழிலாளர்களுக்கு பழைய நோட்டுகளிலேயே சம்பளம் கொடுப்பதாகக் கூறினார். ஏற்க மறுத்துவிட்டால் நான்கு மாதங்கள் கழித்து சம்பளத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கின்றனர். தொழிலாளர்களின் கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொழிலாளர் துறையிலிருந்து எந்த அதிகாரியும் வந்து அவர்களைப் பார்க்கவில்லை. தொழிலாளர் ஆய்வாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. எந்தத் தொழிலாளியாவது உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் தாக்கப்படுவார்கள், வேலையிலிருந்தும் துரத்தப்படுவார்கள்.

தொழில்துறையின் கவலைகள்

குருகிராம் தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஜெ. என். மங்களா, “பிரதமரின் நவம்பர் 8 அறிவிப்பிற்கு பிறகு இரண்டு வாரத்தில் தொழில்துறை மீண்டுவிடும்” என்று நம்பியதாகக் கூறினார். “எல்லோருக்குமே நடப்புக் கணக்கிலிருந்து ரூ 50,000 கிடைப்பதில்லை. ஏராளமான பேருக்கு நாங்கள் பணமாகத்தான் கொடுக்க வேண்டியிருக்கிறது. சிறிய ரக தொழில்கள் பெரும்பாலும் கிராமப் புறத்தை சார்ந்தவை. அங்கே பல தொழிலாளர்களுக்கு வங்கிக்கணக்கு இல்லை. அவர்கள் சம்பளத்தை பணமாகத்தான் கேட்கிறார்கள். பணமில்லா பரிவர்த்தனை என்பது கருத்தளவில் சரிதான். ஆனால் 100 சதம் பணமில்லாமலேயா?” என்கிறார் அவர்.

அவருடைய கணிப்பின்படி மாநிலத்தின் 15,000 ஆலைகளில் 2,000 ஐ தன்னகத்தே கொண்டுள்ள குருகிராமில் 15-20 சத உற்பத்தி குறைந்திருக்கிறது. “நாங்க ஒத்துழைக்கிறோம். ஆனா எல்லா வரம்பும் தாண்டியாச்சி. ஏராளமான தொழிலாளருங்க ஊருக்கு போய்ட்டாங்க. இணைய வழி பணப் பட்டுவாடா நல்லதுதான். ஆனா இந்தத் தொழில் பணமில்லாம நடக்கமுடியாது. தினக்கூலிகளுக்கு தினம் தினம் கூலி கொடுக்கனும். டிசம்பர் 31-க்கு பிறகு நிலைமை மீண்டு வருமான்னு எங்களுக்கு கவலையாத்தான் இருக்கு” என்றார்.

வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குறிப்பாக முதல் அடுக்கு, 2-வது அடுக்கு பெரிய வாகன நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் தொழிற்சாலைகள் மோசமாக பாதித்திருக்கின்றன என்று ஃபரிதாபாத் தொழில் கூட்டமைப்பின் இயக்குனர் எஸ் கபூர் சொன்னார். பெரிய தொழில் மையமான ஃபரிதாபாதில் வேலை செய்யும் 12 லட்சம் பேரில் 7-8 லட்சம் தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில் தான் வேலை செய்கிறார்கள். அவர் “வேலை நிறுத்தமே இல்லைன்னு சொன்னா அது சரியில்ல. வேண்டல் குறஞ்சிட்டதால வேலையும் கொறஞ்சிடுச்சி” என்றார். “தொழிலாளர்கள் பலர் பெரிய அளவில் படித்தவர்கள் இல்லை. அவர்கள் வங்கிக் கணக்கை வைத்திருப்பதும் இணையத்தில் பரிமாற்றம் செய்து கொள்வதும் கதைக்குதவாது. ஏ.டி.எம்க்கு போற தொழிலாளி மத்தவங்க உதவியோடதான் நம்பர அமுக்குவாரு. ஜனவரி 7-ம் தேதியிலாச்சும் அவங்களால சரியா பணம் எடுக்க முடியட்டும்.” என்றும் சொன்னார்.

“தனியார் வங்கிகள் தங்களுடைய ஏ.டி.எம்.களை பெரிய நிறுவனங்களில் அமைப்பதாகவும் சிறு தொழில்களுக்கும் அவர்களின் தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்குவதே சிக்கலானது” என்றும் அவர் தெரிவித்தார். “புலம்பெயர் தொழிலாளர்களிடம் வருமான வரி அட்டையோ, அடையாள அட்டையோ இல்லை. வெளியில் ஆகா ஓகோ என்று சொல்லிக்கொள்வதற்கு மாறாக ஜீரோ பேலன்ஸ் கணக்கு துவக்கப்படுவதில்லை. இந்த வங்கிகள் கிட்ட காசோலை புக்கே தீந்துடிச்சி. தொழிலாளருங்க கிட்ட ஏ.டி.எம்.லருந்து பணம் எடுக்கலாம்கற நம்பிக்கை வரனும். அந்த நம்பிக்க அவங்ககிட்ட இல்ல” என்றும், “இந்த எல்லாப் பிரச்சனைகளைப் பற்றியும் தொழிலாளர் மநதிரியிடம் தெரிவிக்கப்பட்டதாகவும்” சொன்னார்.

சிறு, குறு தொழில்களின் நிலை எல்லா இடங்களிலும் இதே போன்று தான் இருக்கிறது. ஒரு சி.ஐ.டி.யு தலைவர் வட சென்னையில் பல சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டதாக கூறினார். இந்த சங்கம் ஜனவரி 3-ல் பணமதிப்பிழப்புக்கு எதிராகவும் தொழிலாளர்களின் மீதான அதன் நாசகார விளைவை எதிர்த்தும் நாடுதழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள்?

பழைய குருகிராமின் பூத்தேஷ்வர் கோயிலுக்கு அருகே உள்ள தொழிலாளர் சதுக்கம் தான் தொழிலாளர்கள் வேலை தேடி கூடுமிடமாகும். 12 மணி வாக்கில், கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஏதேனும் வேலை கிடைத்து அந்த இடம் காலியாக இருக்கும். ஆனால் பணமதிப்பிழப்புக்குப் பிறகு அவர்களில் பெரும்பாலானவர் காலை 4 மணியிலிருந்து இன்னும் வீணாக காத்துக்கொண்டு இருந்தார்கள்.

கடந்த ஒன்றரை மாதமாக, உத்ரபிரதேசத்தின் பரஜேஷ் குமார், ராஜஸ்தானின் ஆல்வாரிலிருந்து வரும் பன்வர் லால், மத்யபிரதேசத்தின் ராம் குமார், பிகாரின் சீதாராம், ஆகிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. “முன்னாடி ஏழு நாளும் வேல செய்வோம். இப்ப ஒண்ணுமில்ல. நாங்க பட்டினியா இருக்கோம். எங்கிட்ட இந்த 5 ரூபா காசு தான் பாக்கெட்ல இருக்கு. அவ்ளதான்.” என்றார் பன்வர் லால்

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த தர்மேந்திரா 15 நாட்களுக்கு பிறகு எந்த பணமுமில்லாமல் அனுப்பப்பட்டார். “இந்த முறை நரேந்திர மோடியால் தான் எங்களுக்கு எங்கள் பணம் கிடைக்கவில்லை” என்றார் அவர்.

அருண் என்ற பட்டதாரி சுமைதூக்குதல் முதற்கொண்டு எந்த வேலையானாலும் பரவாயில்லை என்று தேடிவந்தார். அசம்கரிலிருந்து வந்த ஆதித்ய பான்டே தன்னை போன்ற தினக்கூலிகள் எல்லோரும் நிலமில்லாதவர்கள் என்றார். நவம்பர் 8-லிருந்து வீட்டிற்கு ஒரு ரூபாய் கூட அனுப்பமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே “எங்களுக்கு ஏதேனும் நிலமிருந்திருந்தா இது போல கஷ்டப்படறதுக்கு இங்க வந்துருக்க மாட்டோம்” என்றார் அவர்.

கூலி வீதம் கூட குறைந்திருக்கிறது. கூலியாட்கள் குறைந்த கூலிக்கு கூட வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் வேலை கிடைத்தால் கூட பணம் கிடைக்குமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றும் இருந்தாலும் வேலைசெய்ய தயாராக இருக்கிறோம் என்றும் கூறினர்.

காய்கறி பழம் வியாபாரிகள் கூட இரண்டு மாதங்களாக விற்பனை குறைந்து விட்டதைப் பற்றி கவலை தெரிவித்தனர். “வாடிக்கையாளரோட எண்ணிக்க மட்டும் குறையல. அவங்க வாங்குற அளவும் குறைஞ்சிடிச்சி. அதனால நாங்க முன்ன விட பாதிதான் சம்பாதிக்கிறோம். மண்டிக்காரங்க கடன்ல மூழ்கிட்டாங்க. இன்னிக்கி இந்த பழங்கள்ல கொஞ்சத்தயாச்சும் விக்காட்ட நாளக்கி பாதி விலைக்கி விக்க வேண்டிவரும்.” என்று குருகிராமில் பப்பாளி வியாபாரியான சகீல் தெரிவித்தார்.

வெல்ல வியாபாரி அல்தாப் கவலையாக இருந்தார். அவர் தினமும் 200 கிலோ வெல்லம் விற்பார். பணமதிப்பிழப்புக்கு பின்னர் அது வெறும் கால்வாசியாக குறைந்து விட்டது. “இந்தத் தள்ளுவண்டிக்கு, வெல்லத்துக்கு, பாலித்தீன் பைக்கு பணம் கொடுக்கணும். வாடகைக்கு வாங்கியிருக்கிற வண்டியிழுக்கிற எருமைக்கு தீனி போடணும். என்னோட லாபம் கிலோவுக்கு 10 ரூபா. அந்தளவுக்கு கூட எனக்கு வருமானம் வராட்டி நான் எப்படி சாப்டறது?” என்று கேட்டார்.

யோகேஷ் பாவ்பாஜி விற்பனை செய்கிறார். பெரும்பாலும் தினக்கூலிங்கள் தான் அவருடைய வாடிக்கையாளர்கள். அவர், “புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் அவர்களின் ஊர்களுக்கு சென்று விட்டார்கள்” என்றார். “என்னோட செலவுக்கு கூட விக்கல. எங்கிட்ட ஃபிரிட்ஜ் இல்ல. பாஜி விக்காட்டி அத தூக்கிதான் எறியணும்” என்றார். அவருக்கு பெரிய தலைவலியாக இருப்பது புதிய 2000 தாள்தான். “10 பேர் வந்து 2000 ரூபா நோட்ட கொடுத்துட்டு 30 ரூபாய்க்கு பாவ்பாஜி வாங்குனா என்னால என்ன பண்ண முடியும்?” என்று கேட்டார்.

குருகிராமின் சுமார் 250 கடைகள் இருக்கும் காய்கறி மண்டியில் ஒரு காய்கறி வியாபாரி பே.டிஎம் என்பதை கேட்டு முகம் சுளித்தார். “எனக்கு ஏ.டி.எம் தெரியும். பேடிஎம்னா என்னா?” என்றார்.

55 வயதாகும் ஈஷ்வர் தியோவுக்கு காய்கறி மண்டிக்கு அருகில் இருக்கும் சீக்கியர்களின் கோயிலான குருத்துவாரா தான் வாழ்வைக்கொடுக்கும் இடம். தினக்கூலியான அவர் இலவச சாப்பாட்டிற்காக குருத்துவாராவிற்கு தினமும் வருகிறார். “எந்த வேலையும் இல்லை. என் பாக்கெட் காலி. ஏதாச்சும் வேல கிடைக்குமான்னு பாக்கிறேன். எந்த வேல கிடைச்சாலும் பரவால்ல. நடைபாதைல தான் தூங்கறேன். எங்கிட்ட பயணத்துக்கு போதுமான பணமிருந்தா பீகார்ல இருக்கிற ஊருக்கு போயிருப்பேன்.” என்றார் அவர்.

“மாற்றத்தை தழுவிக் கொண்டீர்களா?” என்று ஒரு கடன் அட்டையின் புன்முறுவலான விளம்பரம் கேட்கிறது. அச்சு ஊடகங்களிலும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் தினமும் வரும் இது போன்ற விளம்பரங்கள் உங்களை அசர வைக்கின்றன. தொழிலாளர் சந்தைகளில் அன்றாடம் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அவர்களை வலுக்கட்டாயமாக கட்டிநெரிக்கும் மாற்றம் வருமானமில்லாமல் போவதுதான் .

– டீ.கே. ராஜலஷ்மி

ஆங்கில மூலம், படங்கள் : நன்றி FrontlineCashless and clueless

மொழிபெயர்ப்பு – நேசன்

Series Navigation<< “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/cashless-and-clueless-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்

மாறாக, அது முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றப்படுகிறது. சோவியத் யூனியன் விசயத்தைப் போல; அது இறந்துபோகவில்லை, அது வாழ்ந்து,...

ஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி?

ஐ.டி நிறுவனங்களுக்காக உழைத்து பல லட்சம் கோடி மதிப்பிலான துறையாக மாற்றிய ஊழியர்களின் நலனையும், கருத்துக்களையும் துச்சமாக மதித்து ஒவ்வொரு காலாண்டு நிதி அறிக்கையிலும், ஆண்டு நிதி...

Close