“இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா” – உண்மை என்ன?

சாதியும் இட ஒதுக்கீடும்

“அது தப்பு அத பத்திலாம் எதுக்கு பேசுற, இப்பலாம் யாரு சாதி பாக்குறா”

சாதி அப்டின்னு சொன்ன உடனே பெரும்பாலான ஐ.டி மக்கள், “அது தப்பு அத பத்திலாம் எதுக்கு பேசுற, இப்பலாம் யாரு சாதி பாக்குறா”னு சொல்லி தங்களை சாதிக்கு எதிரானவர்கள் போல காண்பித்து கொள்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் சாதிக்கு எதிராக ஒரு சிறு துரும்பை கூட எடுத்து போட மாட்டார்கள் .

இவர்களின் அறிவு எந்த அளவில் இருக்கும் எனில் ‘சாதி சான்றிதழையும் இட ஒதுக்கீட்டையும் ஒழித்தால் சாதி ஒழிந்து விடும்’ என்றளவில் தான் இருக்கும் . இவை தான் சாதி இருப்பதற்கு காரணம் என்று எண்ணிக் கொள்ளும் படித்த அறிவு ஜீவிகள், இத்தகையவர்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம் ‘அதிக மதிப்பெண் அதிகமாக எடுத்தும் BC பிரிவில் உள்ளவர்களுக்கு நினைக்கும் கல்லூரிகளில் அல்லது அந்த துறை சார்ந்த படிப்புகளில் இடம் கிடைப்பதில்லை’ என்பது. மேலும், ‘அரசு பணிகளில் இதே போன்று நடை பெறுகிறது’ என்ற குற்றச்சாட்டாகத்தான் இருக்கும்.

இதை மேலோட்டமாக பார்த்தால் ஆமாம் அவ்வாறு தான் நடை பெறுகிறது என்று சொல்ல தோன்றும். ஆனால் இதில் உள்ள ஒரு அடிப்படை நியாயம் அல்லது உண்மையை அவர்கள் பார்க்க தவறி விடுகிறார்கள். SC பிரிவில் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது தான் அது அவர்களின் குடும்ப சூழ்நிலை அதையும் தாண்டி படிக்க வருபவர்கள் ஏதோ ஒரு வகையில் இழிவுபடுத்தப்பட்டு பாதியிலேயே நின்று விடுகிறார்கள். அதையும் தாண்டி மேல் படிப்பு படிக்க வருபவர்கள் மிக மிகக் குறைவே.

இரு பிரிவினருக்கும் உள்ள மதிப்பெண் வித்தியாசத்தை வைத்து பார்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்வது சரியே. ஆனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது அவை BC- 30 MBC – 20 SC- 18 ST-1 அந்த இட ஒதுக்கீடு உள்ளாகத்தான் இவர்கள் இடம் பெறுகிறார்கள் என்ற உண்மையை பார்க்க மறுப்பது அவர்களின் பார்வையில் பிழையா அல்லது இவர்கள் எல்லாம் படிக்கிறார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியா?

இவர்கள் குற்றம் மட்டும் சாட்டுவது இல்லை அதோடு கோவமும் ஆத்திரமும் கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய இடத்தை பறித்து கொண்டார்கள் என்று? இந்த கோவம் வெறும் 19% இட ஒதுக்கீடு பெறும் மக்களின் மீது மட்டும் ஏன் வருகிறது? மற்ற இட ஒதுக்கீடு பெறும் மக்களின் மீது ஏன் வருவதில்லை? அப்படி நீங்கள் கொள்ளும் கோவம் ஒரு வேளை நியாமெனில் சுதந்திரம் பெற்று வெறும் 70 ஆண்டுகள் உங்கள் உரிமை பறிக்கப்படுவதற்கு (அவர்கள் கூற்றுப்படி) உங்களுக்கு இவ்வளவு கோவம் ஆத்திரம் வரும் எனில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்களாக அடிமை படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், உடைமைகள் பறிக்கப்பட்டு படிக்கக் கூடாது என்று எழுதப் படாத சட்டம் உள்ள இந்த நாட்டில் அதை பின் மற்றும் உங்கள் மீது என்ன மாதிரியான எதிர் வினைகளை தொடுக்க வேண்டும்?

சாதி சான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு போன்றவற்றை ஒழித்தால் மட்டும் சாதி அழிந்து விடுமா?

2000 ஆயிரம் வருசமா தோண்டப்பட்ட குழிய மூட வழி கேட்டா அந்த பள்ளத்தில இருந்து மேல வர கொண்டு வரப்பட்ட 70 வருட இட ஒதுக்கீடு எனும் ஏணிய எடுத்திட்டா சரியாயிடும் அப்டின்னு சொல்வது எப்படி சரியான பார்வையாக இருக்க முடியும்?
சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கா அப்டின்னு கேட்டா இல்ல இந்தியர்கள் எங்கெல்லாம் குடி பெயர்கிறார்களோ அங்கெல்லாம் சாதியும் சேர்ந்தே பயணிக்கிறது. இங்கிலாந்தில் சாதிய இந்துக்களால் தாக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை நாடி வழக்கு பதிய சொல்லியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவெனில் இங்கிலாந்து காவல் துறையினருக்கு சாதி என்றால் என்ன எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்று தெரியாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். சாதி சானறிதழ் மற்றும் இட ஒதுக்கீடு இல்லாத இங்கிலாந்தில் எப்படி சாதிய ஒழிக்க வழி சொல்ல போகிறீர்கள்??
சாதியை ஒழிக்க

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் உங்கள் வீட்டு பெண்ணை ஒடுக்கப் பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா என்ற எதிர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

திருமணத்திற்கும் சாதி ஒழிப்பிற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி வரலாம். இப்படி கேட்பது சரியா? சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா என்று கேட்டால் ஆம் என்பது தான் விடை. சாதி எவ்வாறு இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் சுய சாதி திருமணத்தினை ஆதரித்தது தான்.

சுய சாதி திருமணம் தவிர்க்கப் பட்டிருக்குமேயானால் சாதி என்றோ ஒழிந்திருக்கும். பிறருடன் கலப்பு செய்யாமல் உங்களால் எவ்வாறு சாதியை ஒழிக்க முடியும்?

மற்ற இன மக்களுடன் சேர்ந்தால் தான் மற்றவர்கள் மீது கொள்ளும் பகைமை குறையும். எல்லோரும் நம்மவர் என்ற எண்ணம் தோன்றும். இதை பல வருடங்களுக்கு முன்பே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

எங்கெங்கும் சாதி

சாதி கல்லூரிகளில் சேர மற்றும் வேலைக்கு சேர மட்டும் தான் பயன்படுகிடுறதா என்று கேட்டால் இல்லை இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். நாம் இந்த பூமியை வந்து சேருவதற்கு முன்பிலிருந்தே தொடங்கி நாம் சுடுகாடு போகும் வரை நம்மை பின் தொடர்கிறது, நமக்கு விருப்பம் இல்லை என்றாலும்.

ஆம் பிறந்த உடனே நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் தொடங்கி நாம் இறந்து முடித்து 16-ம் நாள் காரியம் செய்யும் வரை சாதி நம்மை விடாது கருப்பாக துரத்துகிறது. பிறக்கும் பொழுது எல்லோரும் ஏதும் அறியா குழந்தையாக பிறந்து தான் வளர்கிறோம். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த சாதி நம் மண்டைக்குள் திணிக்கப் படுகிறது. இவர்களுடன் தான் பேசணும் இவர்களுடன் தான் விளையாட வேண்டும் என்பதில் தொடங்கி இவர்களுடன் தான் நட்பு வைக்கணும்னு இவர்களுடன் தான் திருமண பந்தம் வைக்கணும்னு நம் மீது திணிக்கப்படுகிறது. சிறிது காலத்தில் நமக்கு பழகி விட்ட ஒன்றாக மாறி நாம் அப்டியே அதை உள்வாங்கி ஏற்றுக் கொண்டு அதை பெருமை பீற்றிக்கொள்கிறோம்.

பணியிடத்தில் சாதி, பேஸ்புக்கிலும் சாதி

அத்தோடு நில்லாமல் பணி செய்யும் இடங்களிலும் இது தன் வேலையை காட்டுகிறது. நன்கு படித்து அரசு வேலைக்கு சென்றாலும் அங்கும் சாதி தலை விரித்தாடும்.

என் பெண் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்தி .

அவர் வேலைக்கு சேர்ந்து சில வருடங்கள் கழித்து பதவி உயர்வு வந்துள்ளது அதை பொறுக்க முடியாத ஆதிக்க சாதி இந்துக்கள் அவரை உளவியல் ரீதியாக தாக்கி சில அயோக்கியத்தனங்களை செய்து இருக்கிறார்கள் அத்தோடு நில்லாமல் அவருக்கு இடமாற்றம் கொடுத்து அங்கு தான் பணி செய்ய வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளர்கள். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் வேலையை விட்டு விலக முடிவெடுத்து கடிதம் கொடுத்த பொழுது அதையும் ஏற்காமல் அவரை அலைக்கழித்துள்ளனர். வேறு வழியில்லாமல் நீதி மன்றத்தின் கதவை தட்டியிருக்கிறார் அவர்.

அரசு அலுவலகங்கள் அப்டின்னு நினைச்சா தனியார் நிறுவனங்களிலும் சாதி கோர தாண்டவம் ஆடும். ‘இந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் கெத்து’ என்று சில பெண்கள் பேசியதை நான் பார்த்ததும் உண்டு. “உன்னை பிடித்திருக்கிறது” என்ற சொன்னதற்கு, “நீ என்ன சாதி” என்று கேட்டு பதில் வந்ததும் உண்டு.

21 ஆம் நூற்றாண்டில் இருக்கோம் அங்கேயும் சாதி இருக்கு. டிஜிட்டல் உலகத்தில் இருக்கோம் அங்கேயும் சாதி இருக்கு. முக புத்தகத்தில் தன் பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக் கொள்வது தங்கள் சாதிக்கென்று பக்கங்களை ஆரம்பித்து கொள்வது என்று சாதி அதி தீவிரமாக பரவி இந்த சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கிறது.

சாதியின் அடிப்படை இந்துமதம்

சாதி என்பது என்ன அது எப்படி இருக்கும் கருப்பா? சிவப்பா? குள்ளமா ? உயரமா? என்று யாரிடமாவது கேட்பீர்கள் எனில் அவர்கள் பதில் கலாசாரம், பண்பாடு என்பதாக தான் இருக்கும். இந்த கலாச்சாரம், பண்பாடு என்பது யாதெனில் மூட நம்பிக்கை, மூட நம்பிக்கை யாதெனில் இந்து மதம்.

ஆம் இந்து மதத்தின் அடிப்படையே இந்த சாதியும் சதுர்வர்ணம் தான். இது இல்லை எனில் இந்து மதம் இல்லை. அதனால் தான் சாதியை இந்து மதம் ஆண்டாண்டு காலமாக காப்பாற்றி வருகிறது. இதை சாதி இந்துக்கள் ஒரு போதும் எதிர்க்க மாட்டார்கள் காரணம் அவர்கள் தனக்கு கீழ் ஒருவர் இருக்கிறார் என்று சொல்லி பெருமை பேசி பழகி விட்டார்கள். இந்து மதத்தில் சமத்துவம், சகோதரத்துவம் என்பதற்கு பேச்சே இல்லை. இந்த பாகுபாடு ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லாதார் மத்தியில் மட்டும் தான் இருக்கிறதா என்றால் இல்லை ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லக் கூடிய இனக் குழுக்கள் உள்ளேயும் இதர இனக் குழுக்கள் உள்ளேயும் உள்ளது .

நீங்கள் எந்த ஒரு இனக்குழு அல்லது சாதியை எடுத்து பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சமம் என்று இருக்காது. அந்த சாதிக்குள்ளே 2,3 உள் சாதி இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் தாம் தான் மேலானவர் என்று சொல்லி அடித்துக் கொள்வார்கள். ஆக ஒரு சாதிக்குள்ளேயே சமத்துவம் சகோதரத்துவம் இல்லாத போது எவ்வாறு இவர்கள் மற்றவர்களோடு சமத்துவம் சகோதரத்துவம் கொள்வார்கள் ?

இவற்றை எல்லாம் அன்றே அறிந்ததன் விளைவாக தான் இந்து மதத்தில் இருந்து கொண்டு ஒருவன் சமத்துவம் பேசுவான் எனில் அவன் அயோக்கியன் என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதன் விளைவாக தான் தன்னுடன் 10 லட்சம் மக்களை சேர்த்து கொண்டு இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்தம் தழுவினார். இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளையும் சதுர்வர்ணத்தையும் கேள்விக்குள்ளாக்கி அதன் ஆணி வேரை ஆட்டி பார்த்ததன் விளைவாகத்தான் தான் பிறந்த இந்திய மண்ணில் புத்த மதம் இருந்ததன் தடயம் கூட இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டது.

இன்று வரை சாதிக்கென்று எந்த வரையறையும் கிடையாது. சாதி என்ற ஒன்றை சந்ததி சந்ததியாக செவி வழியாக மட்டுமே கேட்டு அதை போற்றி பின்பற்றி வருகிறார்கள். உண்மையில் சாதி என்பது யாதெனில் அது ஒரு ஆதிக்க/அடிமை மனநிலை. அனைவரின் மனநிலையிலும் அனைவரும் சமம் என்ற எண்ணம் தோன்றுகிறதோ அன்றே சாதி ஒழியும் நாளாக இருக்கும், அத்தகைய மாற்றத்தை உருவாக்க போராடுவோம்.

சாதி, மதம் மறப்போம்
மனிதம் போற்றுவோம்

– மருது

Permanent link to this article: http://new-democrats.com/ta/caste-reality-maruthu/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் – ஒரு விளக்கம்

மோசமான பேருந்து என்று ஓட்டுநரையும், நடத்துனரையும் கேள்வி கேட்கும் முன் அதை வழங்கிய அரசை எதிர்க்க பழகுங்கள். ஆணிவேரை மறந்து விழுதை குறை சொல்லி பயனில்லை.

டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் "பன்னாட்டு" நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் "ரைஸ் புல்லிங்", “மண்ணுள்ளிப் பாம்பு" என்று மக்கள்...

Close