«

»

Print this Post

காவிரிப் பிரச்சினை – தீர்வு என்ன?

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் விளையுமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. தமிழக விவசாயிகள் கர்நாடக அரசின் அநீதியான, சட்ட விரோதப் போக்கினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று பா.ஜ.க முதல் ஜனதாதளம் வரை கர்நாடகத்தில் உள்ள எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒரே குரலில் பேசுகின்றன. காவிரியை நம்பிப் பிழைப்பை நடத்துகின்ற இலட்சக்கணக்கான காவிரி டெல்டா விவசாயிகள் என்ன செய்வதெனத் தெரியாமல் மலங்க மலங்க முழிக்கின்றனர்.

cauvery-waterஇந்திய ஒருமைப்பாடு பேசும் கட்சிகள் அனைத்தும், காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடும் தமிழகத்தில் எதிர் நிலைப்பாடும் எடுக்கின்றன.

நீர்ப்பற்றாக்குறைக் காலத்தில் கூட காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளன. எந்த நதியானாலும் அதன் கடைமடைப் பகுதியின் நலன்களுக்குதான் முன்னுரிமை என்பதுதான் நதிநீர்ப் பங்கீட்டுக்கான சர்வதேச வழிகாட்டுதல் ஆகும். ஆனால் தனது மாநில நலனை மட்டுமே காப்பதென அடாவடி செய்கின்றது கர்நாடகம். உடனே உச்சநீதிமன்றம் என்ன செய்திருக்க வேண்டும்? சட்டத்தின் ஆட்சியை நடத்தாத கர்நாடக அரசைத் தண்டித்திருக்க வேண்டும். காவிரி மீதான அணைகள் அனைத்தையும் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும். சேதுக்கால்வாய்த் திட்டத்தை முடக்க நடந்த சதிக்கு எதிரான போராட்டத்தின்போது உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்த முதலமைச்சர் கருணாநிதியை, ‘ஆட்சியைக் கலைக்கவா’ என்று மிரட்டிய உச்ச நீதிமன்றம், காவிரியில் கர்நாடகம் செய்துவரும் துரோகச் செயல்களைக் கண்டிக்காமல் ‘வாழு, வாழ விடு’ என்ற தத்துவப்படி நடந்துகொள்ளச் சொல்லிக் கெஞ்சுகிறது. ஆனால் கர்நாடக மாநில ஓட்டுக் கட்சிகளோ டயர்களைக் கொளுத்தியும் தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்துகளை தடுத்து நிறுத்தியும் வெறியாட்டம் போடுகின்றன. போலீசோ இவற்றுக்குத் துணைநிற்கிறது.

உலகநாடுகளுக்கு இடையிலான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன. கீரியும் பாம்புமாக நடந்து கொள்ளும் இந்திய இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை சுமூகமாகப் பகிர்ந்துகொள்ள முடிந்திருக்கின்றது. ஆனால் தீராத தலைவலியாக மாறிக்கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு, காவிரி உள்ளிட்ட நதிநீர்த் தாவாக்களை தீர்த்துவைக்க மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. இவற்றை மலையாளி-தமிழர், கன்னட-தமிழர் பிரச்சினைகளாக மாற்ற விரும்புகின்றது, ஆளும் வர்க்கம்.

இவ்வாண்டு பருவமழை பொய்த்துப் போனதால், மைசூரு, பெங்களூரு நகர மக்களுக்குக் குடிக்கப் போதுமான அளவுதான் அணைகளில் தண்ணீர் உள்ளதெனக் கூறி தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாமைக்குக் காரணம் காட்டுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் பல முறை மழை பொய்த்துப் போயுள்ளது. மழைப்பொழிவு இன்னும் குறைந்து காவிரி நிரந்தரமாய் வறண்டு போனாலும் போகலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். காவிரி வற்றிப் போகக் காரணம் என்ன?

மத்திய அரசு கொண்டு வந்த தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால், காபித் தோட்டங்களுக்காகவும், சுற்றுலா, வார இறுதி வக்கிரக் கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கூர்க் ரிசார்ட்டுகளுக்காகவும் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகுமலைக் காடுகள் அழிக்கப்பட்டன. பல மில்லியன் சதுர அடிகளில் உருவாக்கப்பட்ட ஐ.டி பார்க்குகளுக்காகவும், மால்களுக்காகவும் மைசூரு, பெங்களூரு நகரங்களில் இயற்கை பூத்துக் குலுங்கிய பசுமைப் பகுதி அழிக்கப்பட்டு காங்கிரீட் வனங்களாக்கப்பட்டன. நிலத்தடி நீர் ஒட்டச் சுரண்டப்பட்டு, விவசாயிகளின் பங்கிலிருந்து காவிரி அணை நீர், பன்னாட்டுத் தேவைகளுக்காக உறிஞ்சப்படுகின்றது.

காவிரியில் தண்ணீர் வந்தாலும், டெல்டாப் பகுதியில் விவசாயம் செய்து பிழைக்க முடியுமா என்றால், அதற்கும் வழியில்லை. கர்நாடகத்தில் நீராதாரம் அழிக்கப்பட்டு, பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, மிச்ச மீதியில் தமிழகத்தில் நுழையும் நீரை ஆலைக்கழிவுகளால் அழித்து வருகின்றனர், முதலாளிகள். கால்வாய்களையும் தடுப்பணைகளையும் தூர்வாராமல் மேடாக்கியுள்ளது, தமிழக அரசு. தப்பிப் பிழைத்து பயிர் விளைந்தாலும் கொள்முதல் செய்ய அரசு மறுத்தும், விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகாத விலைநிர்ணயம் செய்தும் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. இதன் உச்சமாக, காவிரிப் பகுதியையே மக்கள் காலிசெய்து விட்டுப் பஞ்சம் பிழைக்க வெளியேறச் செய்வதற்கு வருகின்றது, மீத்தேன் திட்டம்.

பளிச்செனத் தெரியும், இக்காரணங்களை மக்கள் உணர்ந்து விடாமலிருக்க, இனவெறியை இருபக்கமும் தூண்டிவிட்டுக் குளிர்காய்கின்றது ஆளும் வர்க்கம்.

கூடங்குளம் அணு உலை, எண்ணெய்க் குழாய் பதிக்க விளை நிலங்கள் பறித்தெடுப்பு, நியூட்ரினோ ஆய்வு, மீத்தேன் ஷேல் வாயுத் திட்டம், காவிரி, முல்லைப்பெரியாறு, சிறுவாணி, பாலாறு ஆறுகளில் உரிமை மறுப்பு எனத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க, ஆளும் வர்க்கம் அடுத்தடுத்துத் தாக்குதல்களைத் தொடுக்கின்றது.

தமிழர்கள் மீதான மத்திய அரசின் ஓர வஞ்சனையை எப்படி முறியடிப்பது? உண்ணாவிரதம் இருந்தோ, ஒரு நாள் பந்த் நடத்தியோ, இப்பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியுமா?

இவற்றை விவாதித்து, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி அடியெடுத்து வைப்போம்.

கலந்துரையாட 9003198576 அல்லது 9940384451 ஐ அழையுங்கள்..

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-issue-what-is-the-solution-notice-ta/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
விவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் – நேரலை

இன்று செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு...

செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன...

Close