காவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி !

அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே !

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைக் குறைத்து அநீதியான ஒரு தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்தத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கும் மோடி அரசுக்கு, மறுபடியும் கால அவகாசம் கொடுத்திருக்கிறது.

1924 இல் 575 டி.எம்.சி-யாக இருந்து இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி-யாக வீழ்ந்த பின்னரும், இந்த தண்ணீரைத் தருவதற்குக் கூட மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்கிறது கர்நாடக அரசு.

ஆறு வாரகாலம் கமுக்கமாக இருந்துவிட்டு, காலக்கெடு முடிந்த பின்னர், “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுப்போட்டது மோடி அரசு. மீண்டும் “வாய்தா” வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். “இறுதித் தீர்ப்பு வந்து விட்டதால், இந்த தண்ணீராவது இனி முறையாக கிடைக்கும்” என்று சிலர் நம்பினார்கள். ஆனால் இத்தனை ஆண்டு காலமாக என்ன நாடகம் நடந்ததோ அதுதான் இப்போதும் தொடர்கிறது.

தொடரும் கர்நாடகாவின் அடாவடி!

”காவிரி எங்களுக்கு சொந்தமான ஆறு. அதில் நாங்கள் விரும்பியபடி அணை கட்டி நீரைத் தேக்குவோம். எங்களுக்குப் போக மிச்சமிருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு தருவோம்” என்பதுதான் கர்நாடகத்தின் அணுகுமுறை. “காவிரி கர்நாடகத்தின் சொத்து அல்ல, நான்கு மாநிலங்களுக்கும் அதில் உரிமை உண்டு. மழை பெய்தாலும், பொய்த்தாலும் இருக்கின்ற நீரை உரிய விகிதத்தில் நான்கு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்பதுதான் தமிழகத்தின் நிலை.

நியாயமான நீர்ப்பகிர்வு இருக்க வேண்டுமென்றால், அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை அளக்கவும், உரிய நாளில் அதை பகிர்ந்து கொடுக்கவும் அதிகாரம் படைத்த நடுநிலையான ஒரு வாரியம் வேண்டும். அப்படி ஒரு வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், “மழை இல்லை, அணையில் தண்ணீர் இல்லை” என்று இனி ஏமாற்ற முடியாமல் போய் விடும் என்ற காரணத்தினால்தான் “வாரியம் கூடாது” என்கிறது கர்நாடக அரசு. மோடி அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கின்றன.

டெல்லியின் ஓரவஞ்சனை!

இப்படி ஒரு அநீதி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் நடக்கவில்லை. கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை ஆறுகளுக்கு தீர்ப்பாயங்களின் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, எல்லா மாநிலங்களுக்கும் நீர்ப்பங்கீடு நடந்து வருகிறது. ரபி, பியாஸ், சட்லெஜ் ஆறுகளின் படுகையிலேயே இல்லாத ராஜஸ்தானுக்கும் அரியானாவுக்கும் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மேலாண்மை வாரியம், தண்ணீரை கால்வாய் வழியே பகிர்ந்தளிக்கிறது. பிரம்மபுத்திராவை இந்தியாவுக்கு வராமல் சீனா தடுக்கவில்லை. வங்கதேசத்துக்கு செல்லும் கங்கையை இந்தியா தடுக்கவில்லை . பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது கூட சிந்து, ஜீலம், சீனாப் ஆறுகளை இந்தியா தடுத்ததில்லை.

“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத அநீதியை, ஒருமைப்பாட்டின் பெயரால் தமிழகத்துக்கு இழைத்து வருகிறது இந்திய அரசு. 1947 இல் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற இந்த நாடு. அப்புறம் நாடாளுமன்றம், சட்டமன்றம், உச்ச நீதிமன்ற மெல்லாம் உருவாகின. அதற்குமுன் இருந்தவை பிரிட்டிஷ் ஆட்சியும், எண்ணற்ற சமஸ்தானங்களும்தான். இவையெல்லாம் உருவாவதற்கு முன்னதாக, பல ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது காவிரி. காவிரி டெல்டாவை நெற்களஞ்சியமாக மாற்றியிருக்கிறார்கள் தமிழகத்தின் உழவர்கள். அதற்குச் சாட்சியமாய் பல நூற்றாண்டுகளாய் கம்பீரமாக நிற்கிறது கல்லணை.

கார்ப்பரேட் கொள்ளைக்கு தமிழகமே பலி!

இன்று வளைகுடா நாடுகளில் பாலைவனத்தை விளை நிலமாக மாற்றுவதற்கு வளமான மண்ணை இறக்குமதி செய்கின்றன அந்த நாடுகள். இங்கேயோ வளமான காவிரி டெல்டாவை திட்டமிட்டே பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குளத்தை வற்றவைத்து மீன் பிடிப்பது போல, காவிரியைத் தடுத்து, விவசாயிகளை விரட்டிவிட்டு, காவிரி டெல்டாவை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடத் திட்டம் போடுகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ், நிலக்கரி என காவிரி டெல்டாவில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் வளங்கள் அம்பானிக்கும் அதானிக்கும் விலை பேசப்படுகின்றன. இதனை எதிர்த்துப் போராடும் கிராமத்து மக்கள் தேசவிரோதி, தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளப்படுகின்றனர்.

காவிரி மட்டுமா தமிழகத்தின் பிரச் சினை? இது ஒரு பலமுனைத்தாக்குதல். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், போடியில் நியூட்ரினோ திட்டம், கூடங்குளத்தில் அணு உலை பூங்கா, கிழக்கு கடற்கரையில் சாகர்மாலா, சரக்குப் பெட்டக முனையம், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை பெட்ரோகெமிக்கல் மண்டலம் என விவசாயிகளையும், மீனவர்களையும் அகதிகளாக விரட்டிவிட்டு ரசாயன குப்பைக் கிடங்காகத் தமிழகத்தை மாற்ற முனைந்திருக்கிறது மோடி அரசு.

பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழகத்துக்கு எதிராகவே இருக்கின்றன. நீட் தேர்வை சட்டவிரோதமான முறையில் நீதிமன்றம் திணிக்கிறது. விவசாயிகள் எதிர்ப்பை மீறி விளை நிலத்துக்கு குறுக்கே கெயில் குழாயைப் பதிக்கச் சொல்கிறது. கூடங்குளம் அணு உலையையும் ஸ்டெர்லைட்டையும் அனுமதிக்கிறது.

மோடி அரசோ, மரபுகள் விதிமுறைகள் அனைத்தையும் மீறி தமிழக மக்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. ஆளுநரின் அத்துமீறல்கள் அன்றாட நடவடிக்கைகள் ஆகிவிட்டன. இசைக்கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். சார்பு துணைவேந்தர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.

ஆற்றைப் பிரித்து தேசிய ஒருமைப்பாடு!

இது தமிழகத்தின் மீது டெல்லி தொடுத்திருக்கும் அறிவிக்கப்படாத போர். மன்னராட்சிக் காலத்தில் காவிரியை மீட்பதற்குப் பல போர்கள் நடந்திருக்கின்றன. அவை நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர்கள். இன்றோ நாம் இந்தியா என்ற ஒரு நாட்டிற்குள் வாழ்கிறோம். ஆனால் இந்த நாட்டின் அரசு தமிழகத்தின் பாரம்பரிய உரிமையைப் பறித்துக் கொண்டு, தமிழினத்தை வஞ்சிக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை ஆக்கிரமிக்கிறது. இந்த அநீதிகள் அனைத்தும் ஒருமைப்பாட்டின் பெயரால், நீதி மன்றத் தீர்ப்புகளின் பெயரால் நம் மீது திணிக்கிறது.

இவற்றுக்கு நாம் ஏன் கட்டுப்பட வேண்டும் ? காவிரி தொடர்பான எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் கர்நாடகத்தை ஆண்ட பா.ஜ.க., காங்கிரசு அரசுகளோ, மத்திய அரசுகளோ இன்று வரை மதித்ததில்லை. ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பகை நாடுகள் கூட ஆற்றைப் பிரித்ததில்லை. ஒரே நாடு என்று சொல்லிக்கொண்டு ஆற்றைப் பிரித்துக்கொண்டே, இந்தப் பிரிவினைவாதிகள் நமக்கு ஒருமைப்பாட்டை உபதேசிக்கிறார்கள்.

கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்துக்குரிய காவிரி நீர் மறுக்கப்பட்டதனால் டெல்டா உழவர்கள் இழந்த விளைச்சலின் மதிப்பு பல லட்சம் கோடி. உரிய காலத்தில் தண்ணீர் விடாததால் உழவர்கள் அடைந்த நட்டம் பல ஆயிரம் கோடி. இழந்த உயிர்களுக்கோ கணக்கில்லை. இந்த இரத்தப் பலிகளைப் பற்றி ஒருமைப்பாட்டு பஜனை பாடுவோர் என்றும் கவலைப்பட்டதில்லை. சமத்துவமும், சமநீதியும் மறுப்பதுதான் இந்திய ஒருமைப்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கோ, மைய அரசின் முடிவுக்கோ கட்டுப்படுமாறு கூறும் அருகதை இனிமேலும் இந்திய அரசுக்கு கிடையாது. போராடும் மக்களின் அதிகாரம், டில்லியின் அதிகாரத்தையும் அதன் எடுபிடியான எடப்பாடி அரசின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஐ.பி.எல். சூதாட் டத்தை விரட்ட முடிந்த தமிழகத்தால், சல்லிக்கட்டு தீர்ப்பை மாற்ற முடிந்த தமிழகத்தால், காவிரி உரிமையையும் வெல்ல முடியும்.

காவிரியில் புதுப்புனல் பொங்கி வரவேண்டுமென்றால், அத்தகையதொரு மக்கள் எழுச்சியை நாம் தோற்றுவிக்க வேண்டும்! தோற்றுவிப்போம்!!

தகவல் :
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-right-peoples-power-public-meeting-april-28th/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா? எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான...

இதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை!

விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள்?

Close