சென்ட்ரல் விஸ்டா என்பது டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட்டில் ஆரம்பித்து பாராளுமன்றம், ராஷ்ட்ரபதிபவன், தலைமைச் செயலகம், பிரதம மந்திரி அலுவலகம் ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியாகும். இதுதான் இந்தியாவின் மிகவும் முக்கிய அதிகாரத்துவ அரசு அலுவலகங்கள் பகுதி(power center என்றழைக்கப்படும்) ஆகும். அந்தப் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான கட்டிடங்கள் எல்லாம் முகலாயர் காலத்திலும் பிரிட்டிஷ் காலத்திலும் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடங்களை எல்லாம் ஏற்கனவே நவீனமயமாக்கிவிட்டார்கள். அந்தக் கட்டிடங்களில் எல்லாம் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை என்றாலும் தற்போது 20000 கோடி செலவில் சீரமைக்க போகிறோம் என்று மத்திய அரசு மே 1ஆம் தேதி அறிவித்தது.
மத்தியில் ஆளும் பிஜேபி, தலைநகரான டெல்லிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் இதற்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சிலகாலம் தலைநகராக கொல்கத்தா விளங்கியது. பிறகு கிங் ஜார்ஜ் மன்னர் என்பவர் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு இடம் மாற்றினார். ஏனென்றால் முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது முகலாயர்களின் தலைநகரமாக டெல்லியே இருந்தது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தலைநகரை கைப்பற்றுவது என்பது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சமமாக இருந்து வந்துள்ளது. இதற்கு முன்னர் பிரிட்டிஷார் கைப்பற்றிய மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ரோம் நகரம் ஆகட்டும், இஸ்தான்புல் போன்ற நாடுகளை கைப்பற்றிய போதும் அந்நாடுகளின் தலைநகரை கைப்பற்றுவதுதான் அவர்களின் அதிகாரத்தை கைப்பற்றி தனது சாம்ராஜ்யத்தை நிலை நாட்டுவதாக இருந்தது.
ஹிட்லர் காலத்திலும் முசோலினி காலகட்டத்திலும் அவ்வாறே நடந்து வந்திருக்கிறது. ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அவனுடைய ஆரிய சாம்ராஜ்ய கனவிற்கு ஏற்றபடி ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தான். அங்கிருந்த கட்டிடங்கள், கட்டிடங்களின் அமைப்பு, கட்டிடங்களின் பெயர்கள்,தெருக்களின் பெயர்கள்,மற்றும் அனைத்தையும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்றவாறு அமைத்தான்.
இப்பொழுது மத்திய அரசான பிஜேபி கும்பல் முகலாயர்களின் இஸ்லாமிய ஆங்கிலேய காலனிய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தக் கூடிய வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவிலான மிகப்பெரிய கட்டுமானத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். இதை 2022 முதல் 2024க்குள் கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2024-ல் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் முடிவடையப் போகிறது. ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்து சாம்ராஜ்ய கனவை நிறைவு செய்யும் வகையில் அதை அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லிக் கொள்வது 2022 இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் அதை ஒட்டித்தான் இந்த ஏற்பாடு என்று கூறுகிறார்கள்.
மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்துங்கள் என்று வீட்டுவசதி அமைச்சகத்தின் 60 முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். மறுசீரமைப்பு பணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இந்த வேலை பொறுப்பற்றதாகவும், தேவையற்றதாகவும் இருக்கிறது என்று கையொப்பமிட்டவர்கள் கூறியுள்ளனர். அதே போல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் மறுவடிவமைப்பு பணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் “இந்த வளாகம் நெரிசலான தலைநகரான டெல்லியின் மையத்தில் உள்ளது, மேலும் இது நகரின் நுரையீரலாக செயல்படுகிறது.. இந்த திறந்த பகுதியில் ஏராளமான பல மாடி அலுவலக கட்டிடங்களை, அடித்தளங்களுடன், நிர்மாணிப்பது நெரிசலை உருவாக்கும் மற்றும் மீளமுடியாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை சேதப்படுத்தும்.” என்றும் கடிதத்தில் கூறி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கட்டிடக்கலை கவுன்சில், இந்திய கட்டிடக்கலை நிறுவனம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை, நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் நிறுவனம், மற்றும் இந்திய இயற்கை கட்டிடக் கலைஞர்கள் சங்கம் போன்ற முக்கிய தொழில்முறை அமைப்புகள் அமைச்சகத்திற்கு ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளன. “ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான நிறுவனங்கள் இவ்வளவு தன்னிச்சையாக புறக்கணிக்கப்படுமானால், இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்று கூற முடியுமா?”
“இறுதியாக, கோவிட்-19 க்குப் பிந்தைய சூழ்நிலையில், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் ஏராளமான நிதி தேவைப்படும்போது, முழு மத்திய விஸ்டாவையும் குறைந்தபட்ச செலவில் மறுவடிவமைப்பு செய்வதற்கான திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ரூ.20,000 கோடி, இது கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது. இது ரோம் எரியும் போது நீரோ ஃபிடில் வாசிப்பது போல் தெரிகிறது. எனவே இந்த திட்டத்தின் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இன்று இந்தியா முழுவதும் கொரானா தொடர் பாதிப்பால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டிடருக்கின்றனர். தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுதொழில் முனைவோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் வேலையில் இருக்கும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராமல் சேவையாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதற்கு நிதி ஒதுக்காமல் 60 ஆயிரம் கோடியை முதலாளிகளுக்கு வாராக் கடனாக தள்ளுபடி செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும் புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .இந்த சூழ்நிலையில்இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இதை கண்டிப்பாக செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று இருக்கிறார்கள்.
பிஜேபியை பொருத்தவரை புலம்பெயரும் தொழிலாளர்கள் இந்துக்கள் அல்ல. அவர்களுடைய தேவைக்கு நிதி ஒதுக்க தேவையில்லை. விளைச்சல் நன்றாக இருந்தும் அதை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் இந்துக்கள் அல்ல. பசியில் சாகின்ற தினக்கூலி தொழிலாளிகள் இந்துக்கள் அல்ல.சிறுதொழில் முனைவோர் இந்துக்கள் அல்ல. இவர்கள் அனைவரும் தான் கொரானாவின் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இந்துக்களுக்கு நிதி ஒதுக்க தேவையில்லை.
பிஜேபி சொல்லக்கூடிய இந்துக்களின் நலன் என்பது ராமர் கோயில் கட்டுவது, சென்ட்ரல் விஸ்டாவை மாற்றுவது என்பது போன்ற ஆரிய சாம்ராஜ்ய கனவை நிறைவேற்றுவது என்பதுதான். பிஜேபி சொல்லக்கூடிய நாட்டு நலன், நாட்டுப்பற்று, தேசப்பற்று என்பது எல்லாம் அவர்களுடைய அகண்ட பாரத கனவான இந்து ராஷ்டிரடத்தை நிலைநிறுத்துவது என்பதுதான். அவர்களைப் பொறுத்தவரை இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகள் தேசவிரோதிகள்.
- ராமசாமி