அ.தி.மு.க போய் தி.மு.க வந்தால் தீர்வு வருமா?

‘சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் எம்ஜியார், அதில் கூடுதலாக முட்டை போட்டார் கலைஞர்’ என்று இன்னும் எத்தனை நாளைக்கு பீற்றிக் கொண்டிருக்க முடியும்

மிழக அரசியல், இந்திய அரசியல், மற்றும் உலக அரசியல் பொருளாதாரம் மக்கள் வாழ்நிலையில் ஏற்படுத்திய மாற்றங்களை எவ்வாறு  பார்க்க வேண்டும்?  குறிப்பாக, அதாவது, ‘எங்க கட்சிக்கு ஓட்டு போட்டா பிரச்சனை சரியாயிடும்னு’ பேசுகின்ற, சீர்திருத்தம்தான் தீர்வு அல்லது சீர்திருத்தம் மட்டுமே சாத்தியம் என்று வாதிக்கும் நபர்களுக்கானது தான் இது.

தமிழக அரசியலை பொருத்தவரை, காங்கிரஸ், திமுக, மற்றும் அ.தி.மு.க இவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும் அக்கட்சி தலைவர்கள் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர வார்டு கவுன்சிலர்கள் வரை அவர்களின் வர்க்கப் பின்னணி என்ன, அவர்கள் எந்த வர்க்கத்தாருடன் ஒட்டுறவுகொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்து இங்கே பரிசீலிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால், சிலர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளில் ஒரு கட்சி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் மக்களுக்கு பொற்காலம் ஏற்பட்டு விடும் என்று ஏங்குவதோடு அல்லாமல், புரட்சிகரகட்சிகளை அமைப்புகளை ஏளனம்செய்கிறார்கள்.

காமராஜரின் மதியஉணவு திட்டத்தையும், எம்.ஜி.ஆர்-ன் வேட்டி/சட்டை திட்டத்தையும், கலைஞரின் கலர் டி.வி திட்டத்தையும் பற்றி பெருமை பேசுவது, ‘ஆளில்லா கடையில் டீ ஆற்றும் மாஸ்டரின் திறமையை’ மெச்சுவது போல்தான் உள்ளது.

சீர்திருத்தங்களினால் மக்களுக்கு ஒரு சில நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம், இல்லை என்று சொல்லவில்லை ஆனால், ‘சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் எம்ஜியார், அதில் கூடுதலாக முட்டை போட்டார் கலைஞர்’ என்று இன்னும் எத்தனை நாளைக்கு பீற்றிக் கொண்டிருக்க முடியும், அரசுப்பள்ளி என்றாலே அருவருப்பாக நினைத்து அதனை புறக்கணிக்க வைக்கும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்த தனியார் ஏக போகங்கள், அரசுப்பள்ளிகளுக்கு மொத்தமாக மூடுவிழா நடத்த துடியாய் துடித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசுப்பள்ளிகளை எப்படி காப்பாற்றுவது, அதனை எவ்வாறு மேம்படுத்துவது, மேலும் அரசுப்பள்ளிகளின் சீரழிவிற்கு காரணமான தனியார்மய கொள்கையை தகர்ப்பது எப்படி என்று யோசிப்பதுசரியா? மாறாக, காமராஜரின் மதியஉணவு திட்டத்தையும், எம்.ஜி.ஆர்-ன் வேட்டி/சட்டை திட்டத்தையும், கலைஞரின் கலர் டி.வி திட்டத்தையும் பற்றி பெருமை பேசுவது, ‘ஆளில்லா கடையில் டீ ஆற்றும் மாஸ்டரின் திறமையை’ மெச்சுவது போல்தான் உள்ளது.

கதவு, ஜன்னல் எரித்து குளிர் காயும் கார்ப்பரேட் ‘வளர்ச்சி’

தஞ்சை தரணியில் மக்களின் நிலை வாழ்வா சாவா என்று ஆகிவிட்டதே!

ONGC – யின் உதவியால் பூமிக்கடியில் இருக்கும் கனிமங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பும், கரை புரண்டோடிய காவிரியில் தண்ணீர் வரத்து கானல் நீர் ஆகிப் போனதும் நடந்து கொண்டிருக்கும் போது,  தஞ்சை தரணியில் மக்களின் நிலை வாழ்வா சாவா என்று ஆகிவிட்டதே! இந்நிலை வருமென்று இத்திட்டங்களை அனுமதித்த, இலவச மின்சாரம் தந்த கலைஞருக்கோ, இல்லை அவரின் அரசியல் வாரிசான ஸ்டாலினுக்கோ தெரியாதா என்ன!

ஆற்று மணலை ஆறுமுகசாமியும், தி.மு.கவின் ஐ. பெரியசாமியும், அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் சேகர் ரெட்டி கும்பலும் அள்ளிக்கொண்டு செல்கையில், உங்கள் சீர்திருத்த சிறப்பை பேசி என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகிறது. கனிம மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் பற்றித்தான் தி.மு.கவினர் எதாவது வாய்திறந்தீர்களா? சமூகநீதி/சீர்திருத்தஅரசியல் என்றால் ஊழல் பற்றியும் கனிமவளக் கொள்ளை பற்றியும் பேசக் கூடாதா என்ன?

1991 – ல் உலக மய, தாராள மய, மற்றும் தனியார் மய கொள்கைகளை அமுல்படுத்தும்போது, அதை எதிர்த்து ஏதேனும் விமர்சனக் கட்டுரை முரசொலியில் தங்கள் தலைவர்எழுதியுள்ளாரா என்று உடன்பிறப்புக்கள் பார்த்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.

ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல; கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல, ரெண்டுமே அறுத்து கூறு போட்டு விற்று திங்கத்தான்.

தனியார்-தாராள-உலக மய கொள்கைகளுக்கு பின்தான் நம் நாட்டில் தொழில் வளர்ச்சி முக்கியத்துவம் அடைந்தது என்றும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்தது என்று நண்பர் ஒருவர் கூறினார். ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல; கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல, ரெண்டுமே அறுத்து கூறு போட்டு விற்று திங்கத்தான். அதன் படி, கார்ப்பரேட் தனியார்மய, தாராள மய, உலக மய கொள்கைகளில் ஆதாயம் அடைந்த பிரிவினரின் வாழ்க்கை கூட இப்போது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. அதன் ஆதாயங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட 90% மக்களின் நிலைமையோ மேலும் மேலும் பரிதாபமாகி வருகிறது.

தனியார் மய கொள்கைகள் அமலுக்குமுன் தமிழகம் மிகவும் பின் தங்கி இருந்தது என்பது உண்மைதான். ஆனால், அப்போது எம் நாட்டின் இயற்கை வளங்களோ, மனித வளங்களோ இங்கிருந்து களவாடி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவில்லையே. பின்தங்கிய நிலைக்கு தீர்வு விவசாய நிலவுடைமையில் புரட்சிகரமான மாற்றங்களும், தொழில் துறையில் சுயசார்பு அடிப்படையிலான முன்னேற்றமும்தான். அதற்கு பதிலாக புகுத்தப்பட்ட கார்ப்பரேட் நல கொள்கைகள் பெரும்பான்மை மக்களுக்கு என்ன தந்திருக்கின்றன?

பள்ளிக்கரணையில், பல ஏக்கர் சதுப்பு நிலங்களை அழித்து ஐ. டி. பங்களாக்கள் கட்டிவிட்டு, இப்பொழு GO GREEN, ஏரிகளை காப்போம் என்று பிரச்சாரம் செய்வது என்ன ஒரு மொள்ளமாரித்தனம்.

நம் இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்த்திற்கு குறைவான மக்கள் மட்டுமே நிரந்தர மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழியர்களாக இருக்கிறார்கள், பெரும்பான்மை மக்கள் ஒப்பந்தம் ஊழியர்களாகவும் உதிரிப்பாட்டாளிகளாகவுமே உள்ளனர்.  இந்த உலகமயத்திற்கு பின், தொழில் தொடங்க வந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு என்ற பேரில் அதிகப்படியான உழைப்பு சுரண்டலும் இயற்கை வள சுரண்டல் மட்டுமில்லாமல் நம் நாட்டின் சுற்றுப்புற சூழலை ‘நாறடித்து’ அடுத்த தலைமுறை உயிர்வாழ்வதே பெரும் விவாதப்பொருள் ஆக்கப்பட்டு அல்லவா வருகிறது. உதாரணமாக பள்ளிக்கரணையில், பல ஏக்கர் சதுப்பு நிலங்களை அழித்து ஐ. டி. பங்களாக்கள் கட்டிவிட்டு, இப்பொழு GO GREEN, ஏரிகளை காப்போம் என்று பிரச்சாரம் செய்வது என்ன ஒரு மொள்ளமாரித்தனம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு மின் நிலையம், திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலைகள், ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஏற்படுத்திய சுற்றுப்புற சீரழிவுகள், இவ்வாறு எண்ணற்ற பிரச்சினைகள் தொழிற்துறை வளர்ச்சி என்ற பெயரில் நம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு உலகமயம், தனியார் மாயம், ஏகாதிபத்திய நெருக்கடி முற்றி நம் மக்களை தினம் தினம் கொன்று கொண்டிருக்கையில், பிரச்சினையை திசை திருப்பும் விதமாகவும், மக்களின் எழுச்சி மிகு வர்க்க போராட்டங்களை மழுங்கடிக்கும் விதமாகவும், இங்குள்ள சில நண்பர்கள் தி.மு.க-வின் பழைய சீர்திருத்த திட்டங்களை முன்னிறுத்தி, எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி வரும் பட்சத்தில், பழைய சுகாதார அமைச்சர் KKSSR. ராமச்சந்திரனுக்கும், இப்போதுள்ள விஜயபாஸ்கருக்கும் என்ன வித்தியாசம் என்ன வென்று கூறுங்கள், பழைய கல்வி அமைச்சர் பொன்முடிக்கும், இப்போதுள்ள செங்கோட்டையனுக்கும் என்ன வித்தியாசம் என்றும் கூறுங்கள்.

அப்படி பார்க்க போனால், இருவருக்கும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை, முக்கால் வாசி முன்னாள் அமைச்சர்கள் தனியார் கல்லூரிகளின் கல்வி தந்தைகளாகவும், பல பெரும் நிறுவனங்களில் கூட்டாளிகளாகவுமே இருக்கிறார்கள். இதில் திருவாளர் டி. ஆர். பாலு அவர்களுக்கு பொறியியல் கல்லூரியோடு, கூடுதலாக சாராயம் காய்ச்சும் கம்பெனியும் இருப்பது, தி.மு.கவும் கார்ப்பரேட் கட்சி தான் என்பதற்கு சிறிய சான்று.

இவ்வாறு சமூக நீதியில் ஆரம்பித்து, முதலாளித்துவ முட்டுச் சந்தில் நிற்கிறது திமுக. இதை போலவும் இதை விட மோசமாகவும் அனைத்து தேர்தல் கட்சிகளும் கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகளாக இருக்கும்போது, நமக்கு தேவையானது என்ன? இருக்கின்ற இந்த கார்ப்பரேட் கட்டமைப்புக்குள் நமது உரிமைகளுக்காக பிச்சை எடுத்து கொண்டிருப்பதா, அல்லது புரட்சி செய்து மக்களுக்கான அரசை அமைத்து முன்னோக்கி செல்வதா?

சோஷலிச சமூகத்திலா, இப்போதுள்ள முதலாளித்துவ சமூகத்திலா, சீர்திருத்தம் எந்த சமுதாயத்தில் நல்ல விளைவுகளையும் மேற்படி வளர்ச்சியும் அடையும் என்பதை பரிசீலித்து பார்க்க வேண்டும். அனைத்தும் தனியார் வேலைகளாக இருக்கையில் சாதி வாரி இட ஒதுக்கீடு (சீர்திருத்தம்) என்பது ஆண்மையற்று அல்லவா நிற்கிறது. இதில் சமூக நீதி காவலன் பட்டம் எதற்கு? காற்றில் பறக்க விடவா!!

– ராஜதுரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/changing-admk-with-dmk-will-it-help/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் "பன்னாட்டு" நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் "ரைஸ் புல்லிங்", “மண்ணுள்ளிப் பாம்பு" என்று மக்கள்...

மாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு

‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான் அரசு எந்திரம் கூறும் நடுநிலையின் இலட்சணம்.

Close