அரசு மருத்துவமனையில் உயர்தர அறுவை சிகிச்சை

ந்த மாதம் 11-01-2017 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இதயத்துக்கு சுத்த ரத்தத்ததை கொண்டு செல்லும் மகாதமனி அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுக்கு காலில் இருந்த தீராத வலிக்கு முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது இதயத்தின் மகாதமனியில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் ஏதுமின்றி அடைப்பு உள்ள பகுதியின் மேலும் கீழும் (clip) 2 கிளிப் போட்டு 20 நிமிடங்கள் ரத்த ஓட்டத்தை நிறுத்தி அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சையை மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் மாரியப்பன் தலைமையிலான குழு செய்து முடித்துள்ளது. பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன். விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

“சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பு நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதில் 97 சதவீதம் வெற்றி அடைந்துள்ளோம். ஆண்டுக்கு சுமார் 150 நோயாளிகளுக்கு நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.” என்கிறார் மருத்துவர் மாரியப்பன்.

பழைய முறைப்படி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யும்போது இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படும். நுரையீரலின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்படும். அறுவை சிகிச்சை செய்ய 4 மணி நேரம் ஆகும். சிகிச்சை நடைபெறும் 4 மணி நேரமும் இதயம், நுரையீரலின் வேலைகளை அருகில் இருக்கும் ரூ 1 கோடி மதிப்பிலான இயந்திரம் செய்துகொண்டிருக்கும். ஆனால், இந்த நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையின்போது இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படாது. நுரையீரலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ரூ 1 கோடி மதிப்புள்ள இயந்திரமும் தேவையில்லை. இரண்டரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை செய்து முடித்துவிடலாம்.

மேலே சொன்ன நோயாளி செல்வியின் பைபாஸ் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ 5 லட்சம் செலவாகியிருக்கும். அரசு மருத்துவர் மாரியப்பன் விலை உயர்ந்த எந்திரத்தின் உதவி இல்லாமலேயே குறைந்த நேரத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சையை கற்றுக் கொண்டு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அதைச் செய்து வருகின்றார். இந்த சிகிச்சையை அந்த மருத்துவர் தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்திருந்தால் அவருக்கு கட்டணமாக பெரும் தொகை கிடைத்திருக்கும்.

மருத்துவர் மாரியப்பன்

நோயாளிகள் மீது அக்கறையுடன் மருத்துவம் வழங்குவது பெரும்பாலும் அரசு மருத்துவர்கள்தான் என்பதை நாம் பார்க்கலாம். இன்று 40 வயதைக் கடந்த பெரும்பாலான மருத்துவர்களிடம் பேசினால் பெரும்பான்மையாக அரசுப் பள்ளியில் படித்து, சாதாரண கிராமப் புற அல்லது சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஏன் 40 வயது என்று சொல்கிறேன் என்றால் 1991-ல் இந்தியாவால் புகுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைக்கு முன்பு படித்தவர்கள்தான் அவர்கள். அதற்கு பின்பு என்னவாயிற்று? கல்வி, மருத்துவம், குடிநீர் என்று சேவையாக இருந்த அனைத்தும் விற்பனையாக மாறியது. சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு கோடிகளை கொட்டி படிக்கும் மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பணியில் சேர்கிறார்கள். அவர்களிடம் அரசு மருத்துவர்களிடம் கிடைப்பது போன்ற தன்னலமற்ற சிறப்பான சிகிச்சையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

ஏ.சி.எஸ், முத்துக்குமரன் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் வெளி நோயாளிகளாக, குழந்தை நோயாளிகளாக ஒரு சில 10 பேர் மட்டுமே வருகிறார்கள். மாறாக, எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 5,000 வெளி குழந்தை நோயாளிகள் வருகிறார்கள். திருப்பதியில் வரிசையில் நிற்பது போல நின்று மருத்துவ உதவி பெறுகிறார்கள். அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் அவர்களால் முடிந்த அளவு பார்ப்பார்கள். 5000 நோயாளிகளை பார்க்கும் ஒரு மருத்துவர் சிறப்பாக சிகிச்சை அளிப்பாரா? அல்லது, 10,15 வெளிநோயாளிகளை பார்க்கும் மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளிப்பார்களா?

நிச்சயமாக அரசு மருத்துவர்கள்தான். ஏனென்றால் நாம் ஒரு வேலையை திரும்பத் திரும்பச் செய்யும் போதுதான் அதில் நாம் சிறந்து விளங்க முடியும்.

ஆனால், அரசு திட்டமிட்டே போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பதால் இருக்கும் மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஒரு மருத்துவர் அதிகபட்ம் 300 நோயாளிகளை அவசர அவசரமாகத்தான் பார்ப்பார். ஒரு கட்டத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது, மருத்துவர் வரும் நோயாளியிடம் கோபத்தை வெளிப்படுத்தக் கூடும். இதில் தவறு மருத்துவரின் மேலா அல்லது அரசின் மேலா என்பதை நாம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசு திட்டமிட்டே அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காமல் மக்களை தனியார் மருத்துவமனையை நோக்கித் தள்ளுகிறது. உயர்ந்த தொழில்நுட்பத்திலான மருத்துவ சாதனங்களை வாங்குவதில்லை, அப்படியே (கமிஷன் காரணங்களுக்காக) வாங்கி விட்டாலும் அவற்றின் பராமரிப்பை புறக்கணிக்கிறது.  ஒரு மருத்துவமனையில் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மருத்துவசாதனங்கள் வாங்குவதை விட அதை பராமரிக்கும் செலவு அதிகம் என்று ஒரு அரசு மருத்துவர் கூறினார்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மருத்துவ சேவையில் சிறந்து விளங்குகிறது. ஆனால், தமிழ்நாட்டிலேயே புதுப்புது மருத்துவ சாதனங்கள், சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலைதான் உள்ளது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தர பிரதேசம் கோரக்பூரில் ஆக்சிஜன் சப்ளை இல்லாத காரணத்தால் 73 குழந்தைகள் இறந்தன. ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்குவதாக உ.பி அரசு அறிவித்தது.  ஆனால், ஆக்சிஜன் சப்ளை காண்டிராக்டருக்கு அந்த மாநில அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை பல  மாதங்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறது.  குழந்தைகள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவிய கோபமும், போராட்டங்களுமே கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும் அரசை அசைத்து பார்த்தது. இது போன்ற போராட்டங்கள் மூலமாகவே ஒரு முழுமையான தீர்வை மக்கள் பெற முடியும்.

– வெங்காயம்

செய்தி ஆதாரம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/chennai-gh-doctors-perform-modern-heart-surgery/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !

பல நேரங்களில் வங்கிகளும் சம்பளம் வாங்கும் வர்க்கத்திடமும், சிறு வணிகர்களிடமும் கந்துவட்டி போன்று  வசூலிக்கின்றன. இந்த அதிக வட்டி வசூலிப்பது சட்டத்திற்கு உட்பட்டே நடைபெறுகிறது.

மகாராஷ்டிரா: நெசவுத்துறையின் முதுகெலும்பை உடைத்த மோடியின் பணமதிப்பு நீக்கம்

விவசாயிகள், ஆடை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என்று வழங்கல் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Close