மக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் எம்.எல்.ஏ-க்கள்

மார்ச் 19, ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தப்பட்ட காபி வித் எம்.எல்.(Indian Express நாளிதழில் வெளியான செய்தி) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்.

நேற்றைய நிகழ்ச்சியில் இரவு 8.45 மணியளவில் 50-100 பேர் மட்டுமே இருந்தனர். பின்னர் கூட்டம் வரத் தொடங்கியது. மொத்தம் 1000 பேர் பங்கேற்றிருப்பார்கள். மிகவும் நேர்த்தியாகவும், சிறந்த திட்டமிடலுடனும் நிகழ்ச்சி நடந்தது. D4U ( Direction for Volunteers) என்ற என்.ஜி.ஓ நடத்திய நிகழ்ச்சி இது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரது விபரங்களும் பதியப்பட்டன. அனைவருக்கும் ஒரு அஞ்சல் அட்டை கொடுக்கப்பட்டது. அதில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்கிற கேள்வியோடு நம்பிக்கை இல்லாததின் காரணமும் கேட்கப்பட்டிருந்தது. அனுப்புநர் பகுதியில் அவரவர் முகவரியும் பெறுநர் பகுதியில் ஜனாதிபதி முகவரியும் இருந்தது.

9 மணிக்கு பறை இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் பேசினர். அதில் 3 பேர் பேசியதை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

ஜெயலலிதா – சசிகலா மாஃபியா ராஜ்யம்

அதில் 2 பேர் சசிகலாவால் பாதிக்கப்பட்டவர்கள்.

முதலாமவர் சிறுதாவூர் பங்களாவுக்காக 2 ஏக்கர் இடத்தை மிரட்டலுக்குப் பணிந்து பறிகொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. அவருக்குத் தெரியாமலேயே பத்திரம் மாற்றிப் பதியப் பட்டுள்ளது. 76 வயதாகும் அவர் வாழ்நாளின் கடைசி நாட்களை அங்கே கழிக்க விரும்புவதாக கூறினார். மிகவும் பரிதாபமான கண்ணீர்க் கதை அது.

அடுத்தது, தஞ்சாவூரில் தனது 10 ஏக்கர் நிலத்தை சசிகலாவின் அண்ணணிடம் இழந்தவரது கதை மிகவும் துயரமானது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே 2 ஆண்டுகள் போராடியுள்ளனர். மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் யாரைச் சந்தித்தும் பலன் இல்லாது போகவே உயரநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்து ஆணை வாங்கிய பின்னரே முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டது. வழக்கு இன்னும் இழுவையில் உள்ளது.

மேற்சொன்ன இரு மோசடிகள் பற்றியும் நக்கீரன், ஜூ.வி, செய்தித்தாள்கள் எல்லாவற்றிலும் செய்திகள் வெளியாகியும் எந்தத் தீர்வும் இன்று வரை எட்டப்படவில்லை.

கார்ப்பரேட் சூறையாடல்

வில்லிவாக்கம் ஏரி குறித்த தகவல் பகிரப்பட்டது. மெக்டவல் (McDowell) நிறுவனத்திக்காக 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 5 ஏக்கரில் மண்ணைக் கொட்டித் தூர்த்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த பிறகு இப்போது ஏரி தூர் வாரப்படுகிறது. மண் கொட்டியது, மக்கள் வழக்கை நீதிமன்றத்தில் பேசியது, கொட்டிய மண்ணை மீண்டும் அள்ளுவது என்று அனைத்தையுமே அரசாங்கம்தான் செய்கிறது. முற்றிலும் தொலைநோக்கற்ற அரசாங்கம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

ஆன்மீக மோசடி

அடுத்தது, ஈஷா யோகா மையம் குறித்த சர்ச்சை பற்றியது. வெள்ளையங்கிரி மலையில் வாழும் 50 பழங்குடி மக்கள் வந்திருந்தனர். அவர்களது நிலங்களை ஈஷா மையம் பிடுங்கிக் கொண்ட வழக்கு தொடர்பாக மாதமொருமுறை சென்னை வந்து போகிறார்கள். இது வரை 27 முறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடி வருகின்றனர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எதுவுமே தங்களது பிரச்சனைகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதைப் பதிவு செய்தனர்.

போராடும் மக்கள்

கூடங்குளம், நெடுவாசல் போராட்டக் களத்திலிருந்தும் மக்கள் வந்திருந்தனர். தங்களது போராட்ட அனுபவங்களைப் பற்றிப் பேசினர்.

மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள்

நிகழ்ச்சியின் இடையில் எம்.எல்.ஏ சிலருடன் பேசுவதற்கு முயற்சி செய்தோம். பலரும் அழைப்பை எடுக்கவில்லை. சிலரது அலைபேசிகள் அணைத்து வைக்கப் பட்டிருந்தன. சிவசண்முகம், கருணாஸ் போன்றோருடன் பேச முயற்சி செய்தோம். 3 எம்.எல்.ஏ.க்களின் காரியதரிசிகள் அழைப்பை எடுத்து காபி வித் எம்.எல்.ஏ நிகழ்ச்சி என்றதும் தொடர்பைத் துண்டித்தனர்.

ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய அலசல் நடந்தது. டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்ற கோசா வழக்கு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஆகியன பற்றிப் பேசப்பட்டது. மருது கணேஷ்(திமுக), கங்கை அமரன் (பாஜக) ஆகியோர் பற்றியும் பேசப்பட்டது. இவர்களில் யாருமே சரியானவர்கள் இல்லை. அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அப்பகுதியில் தங்கி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடக்கூடாது என்று பிரச்சாரம் மற்றும் வீதி நாடகங்கள் நடத்த முடிவெடுகப்பட்டது. அந்த இயக்கத்திற்கு “Fill up RK Nagar ” என்று பெயரிடப்பட்டது.

போராட்டங்களை வலுப்படுத்த

தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. விவசாயம், சுற்றுச்சூழல், சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீர்நிலைகளைப் பராமரிப்பது ஆகியன தொடர்பாகப் பேசப்பட்டது.

சந்தியா இராஜேந்தர் என்னும் நிருபர் எழுதிய தாது மணற்கொள்ளை தொடர்பான கட்டுரைக்கு வைகுண்டராஜனிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அவர் ஆதரவு கோரினார்.

ஊழலை ஒழிப்போம், சுற்றுச் சூழலை பாதுகாப்போம், அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவோம், சட்ட விழிப்புணர்வு, இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்று பல்வேறு முனைகளில் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான சிலவற்றை இந்த நிகழ்வு விவாதித்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் D4U அல்லது வேறு தன்னார்வக் குழுக்கள் ஈடுபடுகின்றன.

ஐ.டி நிறுவனங்களிலும், மேலாண்மை வகுப்புகளிலும் கற்றுக் கொடுப்பது போல, பிரச்சனைகளின் root cause – ஆணிவேரைக் கண்டுபிடித்து அதில் வெந்நீர் ஊற்றுவதுதான் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் விஞ்ஞான ரீதியில் தீர்க்கவும், புதிதாக இன்னும் மோசமான சிக்கல்கள் முளைப்பதை தடுக்கவும் ஆன வழி. குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான செயல்பாடுகள், நடவடிக்கைகள், போராட்டங்கள் இவற்றை முன்னெடுப்பது அவசியமானதும், முக்கியமானதும், ஆனால் கூடவே root cause-ஐ கண்டுபிடிப்பதற்கும் அதை சரி செய்வதற்கும் செய்யும் முயற்சிகள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/coffee-with-mla-an-it-employees-report/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உலகைக் குலுக்கிய 10 நாட்கள் – மகத்தான ரசியப் புரட்சி

உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்களுக்கு கூட்டு உடைமையாக இருந்தன. முடிவுகள் சமூகத்தின் நலனை மனதில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தினால் சுரண்டப்பட்டு அதன்...

பொள்ளாச்சி பாலியல் குற்றக் கும்பலைத் தண்டிக்க முடியாதா?

சமூகம் இப்படித்தான் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மையே நாம் சமாதானம் செய்து கொள்கிறோம். இது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போன நமது உணர்வுகளைத்...

Close