// தொடர்ச்சியாக பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் – லே-ஆஃப்
நிர்வாகம் நினைத்தவுடன் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது?
நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான உரிமைகள் என்ன??? //
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி காக்னிஸன்ட் நிறுவன மூத்த அதிகாரி(Chief Executive Officer) அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு சம்பந்தமான மின்னஞ்சல் செய்தியை பற்றியதாகத்தான் இருக்கிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது ‘தற்போது 2,89,900 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் அதாவது 2% பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவார்கள், 11,000 ஊழியர்கள் தங்களது தற்போதைய பொறுப்புகளிலிருந்து(Roles) நீக்கப்படவிருக்கின்றனர்’ என்பது தான். இதற்கு அந்நிறுவனம் கூறும் காரணம் நிதி குறைப்பு(Cost Cutting).
இச்செய்தியை பார்த்தமாத்திரத்தில் ஊழியர்கள் தத்தம் தங்களது வேலை பறிபோகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும், அதாவது ஏற்கனவே 10 மணி நேரத்திற்கு வேலை செய்பவர்கள் கூடுதலாக இன்னும் சில மணி நேரங்கள் வேலை செய்வதன் மூலமாக தங்களை ‘தற்காத்து’ கொள்ளலாம் என்று யோசிக்கிறார்களே தவிர கூட்டாக ஒன்றினைந்து இதனை எதிர்ப்பது எப்படி என்று யாரும் யோசிப்பதில்லை. அவ்வாறு யோசிக்க மட்டுமே அவர்கள் பழக்கபடுத்தபட்டு இருக்கிறார்கள் என்பது மிகவும் பரிதாபத்திற்குரியதும் ஆபத்தானதும் ஆகும். ஆனால் நமது சங்கத்தை சேர்ந்த அந்நிறுவன ஊழியர்கள் CTS நடத்தவிருக்கும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக போராட வேண்டும், தொழிற்சங்கமாக இதனை எதிகொண்டு முறியடிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
எனவே, இதுவரை சங்கங்களில் இணையாமல் இருந்தவர்கள் சங்க உறுப்பினராக ஆகுங்கள் என்பது தான் NDLF I. T. Employees Wing/ புதிய ஜன்நாயக தொழிலாளர் முன்னனி ஐ. டி. ஊழியர்கள் பிரிவு-ன் கோரிக்கை ஆகும். மேலும் இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நமது சங்க இணையதளத்தில் பல பதிவுகள் வெளியிட்டு உள்ளோம், அவற்றில் சில முக்கியமான விசயங்களை இங்கு மீள்பதிவு செய்கிறோம், அவை உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஓரளவு தீர்க்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் சந்தேகங்கள் இருந்தால் சங்கத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.
நிர்வாகம் நினைத்தவுடன் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
இதற்கான பதில் ’முடியாது மற்றும் கூடாது’ என்பது தான், அதற்கான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது, இது நமது சங்க உறுப்பினர் சியாம் அவர்களால் எற்கனவே எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து தரப்படுகிறது.
ஏதோ ஒரு காரணத்துக்காக (குறிப்பாக பொருளாதார காரணங்களுக்காக) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையை விட்டு நீக்க விரும்பினால் நிர்வாகம் பின்வரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இது ஆட்குறைப்பு (retrenchment) என்று அழைக்கப்படுகிறது.
- நிறுவனத்தில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்வதாக இருந்தால் இவ்வாறு ஆட்குறைப்பு செய்வதற்கு தொழிலாளர் ஆணையத்திடம் அனுமதி கோர வேண்டும்.
- தொழிலாளர் அலுவலர் ஆட்குறைப்பிற்கான காரணங்களை ஆராய்ந்து அனுமதி அளிக்கவோ அல்லது மறுக்கவோ முடியும்.
- தொழிலாளர் அலுவலர் அனுமதி அளித்தால்தான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
- அவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கை செய்யும் போது நிர்வாகம் அனுபவத்தில் குறைந்த வருடங்கள் பணிபுரியும் ஊழியரைத்தான் முதலில் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும். ஒரு நிறுவனத்தில் பாலா என்பவர் ஒரு வருடம் பணிபுரிவதாகவும் மாலா என்பவர் ஐந்து வருடம் பணிபுரிவதாகவும் வைத்துக் கொண்டால் நிறுவனம் முதலில் பாலாவைத்தான் ஆட்குறைப்பில் வேலையை விட்டு அனுப்ப முடியும்.
- அவ்வாறு ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியருக்கு அவர் பணிபுரிந்த ஆண்டுகளுக்கு இணையாக ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாள் சம்பளத்தை நிறுவனம் அளிக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் 10 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணி புரிந்திருந்தால் அவருக்கு 5 மாதங்கள் சம்பளமாக தர வேண்டும். இத்துடன் 2 மாத நோட்டீஸ் சம்பளத்தையும் சேர்த்துத் தர வேண்டும்.
- நிறுவனம் சிறிது காலத்துக்குப் பின் தனது தேவைக்காக புதிதாக ஊழியர்களை நியமிக்கும் போது அவ்வாறு ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறது.
ஒரு ஊழியர் தானாக ராஜினாமா செய்தால் அவர் தனது சொந்த காரணத்திற்காக ராஜினாமா செய்வதாகக் காட்டப்பட்டு காரியம் முடிக்கப்படும். நிறுவனமும் எந்த சட்டச் சிக்கலுக்கும் பயப்படத் தேவையில்லை. அவருடைய அனுபவத்திற்கு தரக்கூடிய severance package (15 நாள் சம்பளம்) தர வேண்டியதில்லை. அதனால்தான் நிறுவனங்கள் ஊழியர்களை தாமே முன்வந்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். இதில் ஊழியர்களுக்கு 2 மாதச் சம்பளம் பெற்றுத் தர வேண்டும் என்ற நல்லெண்ணம் துளியும் இல்லை என்பதை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தனிப்பட்ட ஊழியரை termination எனப்படும் பணி நீக்கம் செய்வதற்கான சட்ட வழிமுறையும் எளிமையானது இல்லை.
ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டுமானால் அவர் ஒழுங்குமீறி நடந்து கொண்டிருக்கிறார் என்று நிறுவனம் நிரூபிக்க வேண்டும். அத்தகைய ஒழுங்கு மீறல் பற்றிய நிறுவனத்தின் நிலை ஆணை, அது தொடர்பாக விளக்கம் கேட்கும் கடிதம், அதன் மீது நடத்திய உள் விசாரணை விபரங்கள் என்று ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும்.
பணித்திறன் சரியில்லை என்ற காரணத்துக்காக ஒரு ஊழியரை பணிநீக்கம் செயவதற்கு, ‘குறைவான பணித்திறன்’ அல்லது ‘பணித்திறனை மேம்படுத்தத் தவறியது’ ஆகியவை ஒழுங்கு மீறல் என்று நிறுவனத்தின் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அது அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, நிறுவனம் ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்வது சுலபம் இல்லை என்பதை உணர்ந்து இந்த வெற்று மிரட்டலுக்கு பயப்படாமல், ஊழியர்கள் ராஜினாமா செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அதுவே பணிநீக்க நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பிரதான காரியமாகும்.
மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது?
நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது நமது நிலை இப்பொழுது பாலும் தேனும் ஓடக் கூடியதாக இல்லை. அதிகாரியின் மிரட்டலுக்கு உணர்ச்சிவசப்பட்டு பழைய நினைவில் இன்னும் இரண்டு மாதங்களில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும் என்று நம்பி ராஜினாமா செய்வது அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைக்கு சமமாகும். புதிய வேலை கிடைக்கும் வரை எந்த காரணம் கொண்டும் உங்கள் பணியை ராஜினாமா செய்யாதீர்கள்.
தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல். அதனால், உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள சட்டவிரோதமாக வேலையை விட்டு அனுப்ப முயற்சிக்கும் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து தொடர்ந்து போராடுங்கள். நான் சென்ற பகுதியில் கூறியது போல ஒரு நிர்வாகத்தால் தனது ஊழியரை நினைத்த நேரத்தில் பணி நீக்கம் செய்ய முடியாது. அதனால் உங்கள் முடிவில் தெளிவாக இருந்து, எந்த சூழ்நிலை வந்தாலும் வேலையை ராஜினாமா செய்யாமல் சட்ட உதவியுடன் நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக போராடுங்கள்.தொழிற்சங்கத்தில் உங்களை இணைத்துக் கொண்டு எதிர்ப்பை தெரிவியுங்கள்.
தொடர்ச்சியாக பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இத்தகைய சூழலில், ஒருவர் தனது பிரச்சனைகளை தனி ஒருவராக கூறுவதை விட ஒரு குழுவாக முறையிடும் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதனால் தானாக முன்வந்து ராஜினாமா செய்யாமல், தொடர்ந்து நிறுவனத்துக்குள் மேல் முறையீடு செய்து சட்ட உதவியுடன் வேலையை தக்க வைத்துக் கொள்ள போராடுங்கள்.
நன்றி.
புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு.