செலவுகளைக் குறைத்து லாபவீதத்தை அதிகரிக்க 6,000 முதல் 10,000 ஊழியர்களை வேலையிலிருந்து தூக்க முடிவு செய்திருக்கிறது, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சி.டி.எஸ்). இந்நிறுவனம் உலக அளவில் 2.6 லட்சம் ஊழியர்களை வேலை வாங்குகிறது, அவர்களில் 1.8 லட்சம் பேர் (சுமார் 72%) இந்தியாவில் பணிபுரிகின்றனர்.
ஏதோ, சி.டி.எஸ் பெரிய இழப்பை சந்தித்து விட்டதால் இந்த நடவடிக்கை என்று எண்ணி விட வேண்டாம். 2016-ம் ஆண்டுக்கான அதன் விற்றுமுதல் $1350 கோடியாகவும் (சென்ற ஆண்டு வருவாயை விட 8.6% வளர்ச்சி) அதில் ஈட்டிய லாபம் $155 கோடியாகவும் (முந்தைய ஆண்டில் $162 கோடி) இருந்தது. இந்த விற்றுமுதலிலும், லாபத்திலும் சேர்க்கப்படும் ஒவ்வொரு டாலர் வருமானமும் ஊழியர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டவை. ஆனால், சி.டி.எஸ் நிர்வாகமோ ஊழியர்களை பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களாக பார்க்கிறது. முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக அதிகபட்ச உழைப்பை கறப்பது, லாப வீதத்தை தக்க வைத்துக் கொள்ள தன் விருப்பப்படி குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிவது என்று நடந்து கொள்கிறது.
ஊழியர்களின் ஊதியத்தில் பெரும்பகுதியை பிடித்து வைத்துக் கொள்ளும் சி.டி.எஸ், அதை ஆண்டு இறுதியில் ‘ஊக்கத் தொகை’ என்ற பெயரில் வழங்குகிறது. ஊதியத்தின் இந்தப் பகுதியை ‘மாறும் ஊதியம்’ என்று குறிப்பிடுகின்றது. மாறும் ஊதியத்தில் எவ்வளவு சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்பது நிர்வாகத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட லாப இலக்கு எட்டப்பட்டதை வைத்து முடிவு செய்யப்படுகிறது.
உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதம், தனது லாப இலக்கை (தேய்மானம், வரிகள் இவற்றை கழிப்பதற்கு முந்தைய லாபம்) இது வரையிலான 19-20% அளவிலிருந்து 22% ஆக உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது சி.டி.எஸ். அதன்படி, 2017-ம் ஆண்டில் 22% இலக்கை எட்டத் தவறினால், விற்றுமுதல் அதிகரித்து வரிக்குப் பிந்தைய லாப வீதம் 10%-க்கு மேல் இருந்தாலும், ஊழியர்களின் மாறும் ஊதியம் சி.டி.எஸ்-ஆல் விழுங்கப்பட்டு விடும்.
இந்த ஆண்டு மிகச் சிறப்பாக பணியாற்றியதாக நிறுவனத்தால் மதிப்பிடப்பட்ட ஊழியர்களுக்குக் கூட 95% மாறும் ஊதியம்தான் வழங்கப்படுகிறது. அதாவது, சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்குக் கூட அவர்களது ஊதியத்தில் ஒரு பகுதி மறுக்கப்படுகிறது.
அது மட்டுமில்லை.
மேலே சொன்ன முறையில் கணக்கிட்ட விகிதத்தில் மாறும் ஊதியம் எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை. அறிவியலுக்கு விரோதமான அப்ரைசல் முறையை பின்பற்றி காக்னிசன்ட் ஊழியர்களை பல “பக்கெட்டு”களாக பிரிக்கிறது. இந்த அப்ரைசல் முறை மனம் போன போக்கிலான முடிவுகளாலும், அலுவலக உள்குத்துக்களாலும் நிரம்பியது; ஊழியர்களிடையே ஆரோக்கியமற்ற பகைமை உணர்வை தோற்றுவித்து நிர்வாகத்துக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. இந்த அப்ரைசல் முறையை பின்பற்றும் ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை தனித்தனியாக பிரித்து வைத்து, கூட்டாக தமது உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை தடுத்து வருகின்றன.
இந்த ஆண்டு “பக்கெட்” 4-ல் சேர்க்கப்பட ஊழியர்களுக்கு மாறும் ஊதியம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. சி.டி.எஸ்-ன் சொந்தத் தர்க்கத்தின்படியே இவ்வாறு மதிப்பிடப்பட்ட ஊழியர்கள் சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள். எனவே, அவர்களது ஊதியத்தில் கணிசமான பகுதியை மறுப்பது நியாயமற்றது, சட்ட விரோதமானது. மாறும் ஊதியம் என்ற நடைமுறையே ஊழியர்களை ஒடுக்கி, அவர்களை எப்போதும் பதற்றத்தில் வைத்திருக்க நிறுவனம் பின்பற்றும் தந்திரமே.

இந்த ஊழியர்கள் தமது கடின உழைப்பால் ஈட்டிய மாறும் ஊதியத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல், நிர்வாகத்தின் செலவுக் குறைப்பு/லாப அதிகரிப்பு திட்டத்திற்காக வேலையிலிருந்து நீக்கப்படவும் குறி வைக்கப்படுகின்றனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை 4-வது பக்கெட்டில் சேர்க்குமாறு சி.டி.எஸ் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. உடனடி மேலாளரால் ரேட்டிங் 2 கொடுக்கப்பட்ட பல ஊழியர்கள் எச்.ஆர் பிரிவால் எந்த காரண காரியமுமின்றி 4-வது பக்கெட்டில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் தமது கடின உழைப்பால் ஈட்டிய மாறும் ஊதியத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல், நிர்வாகத்தின் செலவுக் குறைப்பு/லாப அதிகரிப்பு திட்டத்திற்காக வேலையிலிருந்து நீக்கப்படவும் குறி வைக்கப்படுகின்றனர்.
இப்படியெல்லாம் மிச்சப்படுத்தி குவிக்கப்படும் பணத்தை சி.டி.எஸ் என்ன செய்கிறது?
வரும் இரண்டு ஆண்டுகளில் $340 கோடி பணத்தை செலவழித்து பங்குகளை வாங்கப் போவதாக சி.டி.எஸ் சென்ற மாதம் அறிவித்திருக்கிறது. மார்ச் 14 அன்று பார்க்ளேஸ் வங்கி, சிட்டி பேங்க், யூ.பி.எஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து $150 கோடி மதிப்பிலான பங்குகளை சடுதியில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது சி.டி.எஸ்; இந்தப் பங்குகளை வாங்குவதற்கு ஏற்கனவே கைவசம் இருக்கும் நிதியையும், கடன் வசதியையும் பயன்படுத்தவிருக்கிறது.
சி.டி.எஸ் சில நூறு கோடி டாலர் பணத்தை வாரிச் சொரிவது யார் மேல் என்று பாருங்கள் – பார்க்ளேஸ், சிட்டி பேங்க், யூ.பி.எஸ் – ஒவ்வொன்றும் பல நூறு கோடி டாலர் சொத்து மதிப்புடைய நிறுவனங்கள். ஊதிய மறுப்புக்கும் வேலை நீக்கத்துக்கும் குறி வைக்கப்பட்டுள்ள ஊழியர்களுடன் இந்தப் பட்டியலை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஒருபக்கம், சி.டி.எஸ்-ன் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் பணத்தை குவிக்கவிருக்கு உலகப் பணக்காரர்கள். மறுபக்கம், ஆண்டு முழுவதும் உழைத்து சி.டி.எஸ்-க்கு நூற்றுக் கணக்கான கோடிகள் வருவாயை குவிக்கும் ஊழியர்கள். யாருடைய நலனை சி.டி.எஸ் நிர்வாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது இதிலிருந்து தெளிவாக புரிகிறது.
அனைத்து ஐ.டி ஊழியர்களும், குறிப்பாக சி.டி.எஸ் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து இப்போது நிலவும் சவாலான சூழலை எதிர்கொள்ள வேண்டும். பங்குதாரர்களின் லாபத்துக்காக ஊழியர்களை தூக்கி எறியத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஐ.டி நிறுவனங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
செய்திகள்
- IT Major Cognizant Likely To Lay Off 6,000 Employees
- IT consulting firm Cognizant launches $1.5 billion accelerated share buyback
- Cognizant cuts variable pay sharply amid likely layoffs