ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை

ன்று பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பேராசான் காரல் மார்க்சின் பிறந்த நாளின் 200-வது ஆண்டு கொண்டாட்ட துவக்க நாள்.

200 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பிறந்து முதலாளித்துவ உற்பத்தி முறையின் சாராம்சத்தையும், விதிமுறைகளையும் ஆணி வேறு அக்கு வேறாக பிரித்து விளக்கி, பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னறிவித்த மகத்தான ஆய்வாளர் மார்க்ஸ்.

எது சரியானதோ அதற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர் அவர். முரணற்ற அறிவியல் ரீதியிலான சிந்தனையையும், நடைமுறையையும் வழுவில்லாமல் கடைப்பிடித்தவர். தான் எழுதிய ஒவ்வொரு படைப்பிலும் இந்த உலகை அதன் இயக்கத்தோடும், அனைத்து சிக்கல்களோடும் புரிந்து கொண்டு விவரிக்கும் பேராற்றலை வெளிப்படுத்தியவர்.

முதலாளித்துவம் முற்றி, கனிந்து, இப்போது கார்ப்பரேட் முதலாளித்துவமாக அழுகி சிதைந்து கொண்டிருக்குத் இந்த காலகட்டத்தில், முதலாளித்துவ கோட்பாடுகள் தமது காலம் கடந்து போன பிறகும் சமூகத்தின் மீதான தமது பிடியை விட்டுக் கொடுக்காமல் நெரித்துக் கொண்டிருக்கும் காலத்தில், கார்ப்பரேட் இலாப வேட்டை பெரும்பான்மை மக்களையும், இந்த பூமியின் இயற்கை வளங்களையும் கடும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் நேரத்தில் மார்க்சின் வாழ்வும் பணியும் முன்னெப்போதையும் விட அதிக பொருத்தமுடையவையாக உள்ளன.

மார்க்சின் வாழ்நாள் பணியை நினைவுகூரும் விதமாகவும், 21-ம் நூற்றாண்டில் நாம் செய்து முடிக்க வேண்டிய கடமையை புரிந்து கொள்ளும் வகையிலும் 1848-ம் ஆண்டு மார்க்ஸ் தனது வாழ்நாள் நண்பரும் சக-உழைப்பாளருமாகிய பிரெடரிக் எங்கல்சுடன் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்து ஒரு பகுதியை இன்றைய ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களுக்கு பொருந்தும் வகையில் தழுவி எழுதி வெளியிடுகிறோம்.

இந்த அறிக்கையில் பேசப்பட்ட விஷயங்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதை காண்பிப்பதற்கு அறிக்கையில் பாட்டாளி வர்க்கம் என்ற இடத்தில் ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள், முதலாளித்துவ வர்க்கம் என்ற இடத்தில் கார்ப்பரேட்டுகள், தொழிற்சாலை என்பதற்கு பதிலாக ஐ.டி நிறுவனம்  என்றும் இன்னும் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வேறு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. இறுதியில் இந்தப் பகுதியின் மூல வடிவமும் தரப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முழுமையாக Marxists Org தளத்தில் படிக்கலாம்.  இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை செய்தவர் தோழர் மு சிவலிங்கம்.

.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கின்றது. பிறந்தவுடனே அது கார்ப்பரேட்டுகளுடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனி ஊழியர்களும், அடுத்து ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த ஊழியர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நடத்துகின்றனர். ஊழியர்கள், கார்ப்பரேட் அமைப்புக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் வெளிநாட்டு உழைப்பை அவர்கள் எதிர்க்கின்றனர். […]

இந்தக் கட்டத்தில் ஊழியர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், கார்ப்பரேட்களின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. கார்ப்பரேட் முதலாளித்துவம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்த ஊழியர்கள் பிரிவை களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் ஊழியர்கள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் கார்ப்பரேட்டுகளுக்கே வெற்றியாக அமைகிறது.

ஆனால் ஐ.டி/ஐ.டி சேவைத் துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள் பிரிவு எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் ஊதிய விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்கு ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களின் அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் ஊழியர்களின் ஊதியங்களை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட ஊழியர்களுக்கும் தனிப்பட்ட கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே ஊழியர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். ஊதிய விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

அவ்வப்போது சில வேளைகளில் ஊழியர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் ஊழியர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். சென்ற நூற்றாண்டில், பின்தங்கிய தொழில்நுட்பங்களின் துணைகொண்டு, […. ]எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகளான ஐ.டி ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.

தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் ஊழியர்களின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது கார்ப்பரேட்டுகளின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் ஊழியர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது.

அறிக்கையின் மூல வடிவம் Marxists Org தளத்தில் – மொழிபெயர்ப்பு தோழர் மு சிவலிங்கம்

மேலே தரப்பட்டுள்ள பகுதியின் மூல வடிவம்

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.

ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.

தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது.

அறிக்கையை Marxists Org தளத்தில் முழுமையாக படிக்கலாம் – மொழிபெயர்ப்பு தோழர் மு சிவலிங்கம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/communist-manifesto-for-itites-employees-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மக்களின் உயிருக்கு விலையாக கார்ப்பரேட் நன்கொடை பெறும் அரசியல்வாதிகள்

அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அரசியல்வாதிகளே, கல்வியில் சிறந்த அதிகாரிகளே, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம், மீனவர்கள் ஒக்கி புயலில் மரணம் பெண்கள் தாக்குதல்களில் மரணம்,...

இன்ஃபோசிஸ் : ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா?

ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா! தமிழக அரசே! 48 மணி நேரம் தொடர்ச்சியாக இளையராஜாவை வேலை வாங்கிய இன்போசிஸ் மீது நடவடிக்கை எடு! ஐ.டி துறை நண்பர்களே!...

Close