மேல் சாதிக்கு 10% இட ஒதுக்கீடு – ஆதரித்து ‘கம்யூனிஸ்ட்’ ஓட்டு ஏன்?

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களது நலன்களை உறுதி செய்ய சமரசமின்றி போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள். முதலாளித்துவ சுரண்டலை மட்டுமின்றி சாதி, மதம், இனம், பாலினம் என்று பல்வேறு அடிப்படையிலான சுரண்டல்களை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற செயல்திட்டம் கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள். எனவே, கம்யூனிஸ்டு கட்சிகள் மீதான அவதூறுகள் பல்வேறு திசைகளிலிருந்தும், தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன.

10% இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்த சி.பி.எம் உறுப்பினர் டி.கே ரங்கராஜன்

அத்தகைய ஒரு அவதூறு தொடர்பாக நமது வாட்ஸ்-ஆப் குழுவில் நடந்த விவாதம் ஒன்றின் தொகுப்பு. தொகுத்து அனுப்பியவர் ராஜதுரை.

1. சி.பி.எம் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்ததைத் தொடர்ந்த கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரமும்

சி.பி.எம் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் டி.கே ரெங்கராஜன் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசியதற்காக,”இந்திய ஒன்றியத்திற்கு பெரியாரிமும் அம்பேத்கரியமும் மட்டுமே சரியானதாகும், மார்க்சியமும் கம்யூனிசமும் தேவையற்றது” என்கிறார்கள், சிலர்.

அப்படியென்றால் திராவிட கழக வீரமணி பெரியாரியத்தை கறாராக பின்பற்றுவரா? பலமுறை பெரியாரிய கோட்பாட்டிற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார். உதாரணமாக ஜெயலலிதாவை ஆதரித்து பேசியது, வாஜ்பாயை ஆதரித்தது, ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு சசிகலாவை ஆதரித்தது ஆகியவற்றை கூறலாம். “திராவிட” என்ற அடைமொழியுடன் கட்சி நடத்திய எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பெரியாரின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு கடவுள் நம்பிக்கையையும், பார்ப்பனீயத்தையும் தூக்கிப் பிடித்தனர். இந்தக் காரணத்தால் பெரியாரியம் தவறானது என்று சொல்லி விடலாமா?

அதேபோல் அம்பேத்கரியவாதி மாயாவதியும் இப்போது இந்த 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்துள்ளார், அதனால் அம்பேத்கரியம் தவறானது என்று சொல்லலாமா? பீகாரின் ராம் விலாஸ் பாஸ்வானும், மகாராஷ்டிராவின் ராம்தாஸ் அத்வாலேயும் பா.ஜ.கவுடன் ஐக்கியமாகியிருக்கின்றனர். தென் தமிழகத்தின் கிருஷ்ணசாமியோ சமூக நீதியின் தேவையே காலாவதியாகி விட்டது என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் அம்பேத்கரின் வழியில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்தான். அம்பேத்கரின் வாழ்நாள் பணியை, தியாகத்தை தமது பிழைப்புக்காக பயன்படுத்தி கொச்சைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்தான். இவர்களது துரோகம் அம்பேத்கரின் அரசியலை பொய்யாக்கி விடாது.

தி.க. வில் இருப்பவர்கள் மட்டும்தான் பெரியாரிஸ்ட்களாகவும், வி.சி.க. விலும் பகுஜன் சமாஜ்-லும் இருப்பவர்கள் மட்டுமே அம்பேத்காரிஸ்ட்கள் என்று நினைப்பது எப்படி தவறான பார்வையோ, அதேபோல் சி.பி.ஐ அல்லது சி.பி.எம்- ல் இருப்பவர்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் என்று நினைப்பதும் தவறான பார்வை தான்.

தி.க. வில் இருப்பவர்கள் மட்டும்தான் பெரியாரிஸ்ட்களாகவும், வி.சி.க. விலும் பகுஜன் சமாஜ்-லும் இருப்பவர்கள் மட்டுமே அம்பேத்காரிஸ்ட்கள் என்று நினைப்பது எப்படி தவறான பார்வையோ, அதேபோல் சி.பி.ஐ அல்லது சி.பி.எம்- ல் இருப்பவர்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் என்று நினைப்பதும் தவறான பார்வை தான். அ.தி.மு.க ஒரு திராவிடக் கட்சி என்று நினைப்பது எப்படி முட்டாள்தனமான பார்வையோ அதேபோல சி.பி.ஐ அல்லது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சி என்று நினைப்பதும் முட்டாள்தனமானதுதான்.

சி.பி.எம் என்பது மார்க்சியத்தை கைவிட்டு, போலி ஜனநாயக பாராளுமன்ற தேர்தல் முறையை ஏற்றுக்கொண்ட ஒரு போலி கம்யூனிஸ்ட் கட்சி. மேல் சாதியினரின் வோட்டு கிடைக்காமல் போய் விடும் என்று காரணம் சொல்லிதான் இப்போது 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்திருக்கிறது அக்கட்சி. அத்தகைய கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசியதால் ‘மார்க்சியமும் கம்யூனிசமும் தவறானது, குறிப்பாக இந்தியாவிற்கு தேவையில்லை’ என்று கூப்பாடு போடுவது அயோக்கியத்தனம் அல்லது மார்க்சியத்தை பற்றிய புரிதல் இல்லாததன் வெளிப்பாடு என்று தான் அர்த்தம்.

சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் இந்தியாவில் கம்யூனிசத்தை பிரதிநித்துவப்படுத்துகின்றன என்ற தவறான புரிதலே இதில் முதன்மையாக வெளிப்படுகிறது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளின் திரிபுவாத இருளை கிழித்து தோன்றிய, புரட்சிகர மார்க்சிய-லெனினிய கட்சிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன, அவை இந்த 10% இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கின்றன.

சமூக நீதியையும் மார்க்சியத்தையும் ஒருங்கே முன்னெடுத்து செல்லும் இத்தகைய அரசியலின் ஒளியில் செயல்படும் அமைப்புகளை காணத்தவறுவது யாரின் குறைபாடு? ம.க.இ.க. பு.ஜ.தொ.மு இணைந்து 2002-ல் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, திருவரங்கம் ரங்கநாதன் கோவில் கருவறை நுழைவு போராட்டம், PRPC சிதம்பரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக நடத்திய இயக்கம் ஆகியவற்றை சொல்லலாம்.

2. சாதி எதிர்ப்பும் முதலாளித்துவமும்

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் சமூக நீதி தேவையில்லை என்று வறட்டு வாதம் பேசவில்லை. மாறாக, இயல்பிலேயே இணைந்து செயல்படும் பார்ப்பனிய ஆதிக்கத்தையும் ஏகபோக முதலாளித்துவத்தையும் ஒன்றாக எதிர்க்கின்றனர். பார்ப்பனியத்திற்கு எதிரான சமூக நீதி அரசியலையும் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க அரசியலையும் இணைத்து செயல்பட்டு வருகிறார்கள். உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும், அதற்கான போராட்டத்தின் ஊடாகவும் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அதிகாரத்தை பயன்படுத்தியும் சாதி, மதம், பாலினம், மொழி அடிப்படையிலான அனைத்து விதமான சுரண்டல்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால திட்டம்.

மாறாக, சமூக நீதிக்காக போராடுவதாக சொல்லும் இயக்கங்கள் முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றனர்? முதலாளிகளின் சுரண்டலுக்கு துணை போவதோடு மட்டுமில்லாமல் தாமே முதலாளிகளாகவும் மாறி சுரண்டுகிறார்கள்.

சாதியத்தை ஒழிக்கும் சமூகநீதி மட்டுமே முக்கியமென்றால், தொழிலாளர்களை சுரண்டுவது மட்டுமின்றி இந்தியாவின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் கொள்ளை அடித்துச் செல்லும் முதலாளித்துவத்தை என்ன செய்வது, எந்த அரசியலை கொண்டு அதை எதிர்ப்பது. சமூக நீதிக்கான போராட்டத்தையும், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்து செல்லும் அமைப்புகள் மிகவும் சிறுபான்மையினர் தான். ஆனால் எந்தவித சமரசமும் இல்லாமல் போராடி வருகின்றனர்.

‘இவர்களால் போராடத்தான் முடியும், அதனால் ஒரு பயனும் இல்லை’ என்று சிந்திப்பது சிறுபிள்ளைத்தனம். இது சமூக பிரச்சனைகளை எளிமையாக்கி கொச்சைப்படுத்துவதுதான், சமூக மாற்றத்தை மாலை நேர விருந்து போல நினைப்பது தான்.

மேற்படி அமைப்புகள் அது துவங்கிய காலம் தொட்டு இன்றுவரை, ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியிருக்கின்றன, நம் சமகாலத்திலும் நடத்தி வருகின்றன, அவற்றில் சிலவற்றைத்தான் நான் மேலே குறிப்பிட்டேன்.

உழைக்கும் மக்களில் விவசாயிகளும், தொழிலாளர்களும், சுய தொழில் செய்பவர்களும், சிறு முதலாளிகளும் அடங்குவர், அதனால் தான் தொழிலாளி என்று தனிப்பதம் கொடுக்க வேண்டியுள்ளது. 8 மணி நேர வேலை என்பது வர்க்க போராட்டம், அதாவது முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்க போராட்டம், அது தொழிற்சங்கங்களால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.

3. வர்க்க அரசியல் இல்லாத சமூக நீதி அரசியல் போதுமானதா?

புதிய தாராளவாத பொருளாதார கொள்கை, உலகமயம், தனியார்மயம் அமலுக்கு பிறகு, அதன் விளைவாக ஏற்பட்ட மக்களின் வாழ்நிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு சமூகநீதி அரசியலை பரிசீலிக்க வேண்டும்.. அனைத்தும் தனியார் மயம் என்று ஆனபின் சமூக நீதி அரசியலை மட்டும் பேச முடியுமா? தனியார் கல்வி முதலாளிகளை வளப்படுத்த, திட்டமிட்டே அரசுப்பள்ளிகள் கல்லூரிகள், அழிக்கப்படுகின்றன. அதே நிலை தான் அரசு மருத்துவமனைகளுக்கும். இந்நிலையில், சமூக நீதிக்காக இட ஒதுக்கீட்டை பாதுகாக்க போராடுவதோடு குறைந்து கொண்டே செல்லும் அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்புகள் என்ற நிலையை எதிர்த்து போரடாமல் இருக்க முடியுமா?

முதலாளித்துவத்தை வீழ்த்த கூடிய வர்க்க போராட்ட அரசியலுடன் இணைத்து சமூக நீதிக்காக போராடுவது சரியானதா இல்லை சமூக நீதி அரசியல் மட்டுமே போதுமானதா?

முதலாளித்துவம், தனியார்மய ஏகபோகம் ஆகியவை சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்போது முதலாளித்துவத்தை வீழ்த்த கூடிய வர்க்க போராட்ட அரசியலுடன் இணைத்து சமூக நீதிக்காக போராடுவது சரியானதா இல்லை சமூக நீதி அரசியல் மட்டுமே போதுமானதா?

Underwear வெளிய தெரியிற மாதிரி வேட்டி கட்டிக்கிட்டு ஆண்டபரம்பரை என்று ஆட்டம் போட்டவர்களின் கோவணம் கூட மிச்சப்படாத அளவுக்கு சக்கையாய் உறிஞ்சி கொண்டிருக்கிறது முதலாளித்துவ ஏகபோகம். இட ஒதுக்கீடு மூலம் வேலைக்கு அமர்ந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள், அரசு ஆசிரியர் பெருமக்கள் இன்று நடுவீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் இன்று வரை அரசு செவி சாய்க்க வில்லை, காரணம் ‘இனி எவனும் அரசு ஆசிரியர் வேலைக்கு ஆசைப்படக் கூடாது’ என்பது தான். “காசு இருந்தால் தனியார் பள்ளி, இல்லையென்றால் கல்குவாரி” என்ற நிலை ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பெரியாரின் சமூக நீதி அரசியல் முன்னெடுப்பின் போது இருந்த அடக்குமுறையை விட தற்போதைய அடக்குமுறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல, அவற்றையெல்லாம் மீறித்தான் சமரசமற்ற போராட்டங்களை தொழிலாளர்களும், விவசாயிகளும் நடத்தி வருகின்றனர்.

மேலும் சாதிய ஒழிப்பு என்பதை அம்பேத்கரிய, பெரியாரிய பிரசாரத்தால் மட்டுமே நடத்திட முடியுமா? அப்படியென்றால் அம்பேத்கர், பெரியார் காலத்திலேயே சாதி ஒழிந்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் பிரச்சாரம் அளப்பரியது.

சமூகநீதி என்றால் இட ஒதுக்கீடு என்ற எல்லையை தாண்டி யோசிப்பவர்கள் எத்தனை பேர்? உதாரணமாக முதலியார், செட்டியார், வன்னியர், கவுண்டர், கள்ளர் சாதிகள் இட ஒதுக்கீட்டின் போது மட்டும் தாங்களை பிற்படுத்தபட்டவர்கள் என்றும், ஏனைய தளங்களில் ஆதிக்க சாதிகளாகவும் கருதிக் கொள்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், நகரமயமாக்கம் ஆகியவற்றால், சாதியத்தை கட்டிக் காப்பாற்றி வரும் கிராம சமுதாய அமைப்பு முறையில் இருந்து நகரத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறார்கள், இவ்வாறு தூக்கி எறியப்படும் மக்களை எவ்வாறு அரசியல் படுத்துவது, பழைய பிற்போக்கு கலாச்சாரத்தை விட்டொழித்து பொது எதிரியை அடையாளம் காண செய்ய வைப்பது எப்படி என்பதை பற்றி பரிசீலிக்க வேண்டும்.

4. சமூக மாற்றமும் எதிர்காலமும்

பெரியாரிய அம்பேத்கரிய கோட்பாடுகள் முன் வைக்கும் பார்ப்பனிய எதிர்ப்பை தீவிரமாக நம் சமகாலத்தில் முன்னெடுத்து செல்லும் அமைப்புகள் எவை? திராவிட அமைப்புகளா, அம்பேத்கரிய அமைப்புகளா, மார்க்சிய லெனினிய கட்சிகளா?

சோசலிசம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில் நிலவும் அராஜகத்தால் சமுதாயத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்டுவதற்காக உருவாகும் தவிர்க்க இயலாத விளைவு. கம்யூனிசம் என்பது அதன் அடுத்தகட்டம்.

மார்க்சியம் என்பது ஆய்வு முறை, வரலாற்றின் நிகழ்வுகளை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு அணுகி ஆராய்வது. மார்க்சிய ஆய்வு முறையில் சமூக இயக்கத்தை புரிந்து கொண்டு சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் உருவாக்க போராடுவது கம்யூனிஸ்டுகளின் அரசியல்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே காலனிய ஆட்சி காலத்திலேயே கம்யூனிச தொழிற்சங்களின் வீரமிக்க போராட்டத்தினால் பெறப்பட்டது தான் தொழிலாளர் நலச்சட்டங்கள், அவை இன்று வரை அமலில் உள்ளன. அதனால் தான் நாம் தொழிற்சங்கம் அமைக்க முடிகிறது. அவற்றை ஒழித்துக் கட்டுவதற்கு தான் மோடி மிகவும் பாடுபடுகிறார் என்பது வேறு கதை.

தேர்தலில் பங்கெடுக்காத மார்க்சிய லெனினிய கட்சியின் தலைமையில் நடந்த நக்சல்பாரி உழவர் எழுச்சியின் மூலம் மேற்கு வங்கத்தில் உழவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்து அளிக்க முடிந்தது. அப்போது ஆட்சியில் இருந்த போலி கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம் தான் அந்த எழுச்சியை ஒடுக்கியது என்பது வரலாறு.

போலி கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் கேரளாவில் நிலமில்லாத பல லட்சம் ஏழை விவசாய கூலிகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டதும் வரலாறு தான்.

சாதியம் நம் நாட்டில் புரையோடி இருப்பது உண்மை, அது ஒழிக்கப்பட வேண்டும் என்பது சரியானது. ஆனால். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொளுத்துவேன் என்று அம்பேத்கர் சொன்ன அந்த அமைப்பை வீழ்த்தாமல், தேர்தலில் போட்டி போடும் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

பார்ப்பனிய அமைப்போடு முதலாளித்துவம் இறுக பிணைந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்க. பார்ப்பனியத்தை எதிர்ப்பேன், சாதியை எதிர்ப்பேன், முதலாளித்துவத்தோடு உறவாடுவேன் என்பவர்களால் சாதியையும் ஒழிக்க முடியாது, ஏழ்மையையும் ஒழிக்க முடியாது.

முதலாளித்துவம் தகர்ப்பட வேண்டுமே ஒழிய, அதற்குள் சீர்திருத்தத்தை மட்டும் கோருவது, அதற்குள் சாதி ஒழிப்பை நடத்த முயற்சிப்பது பாழடைந்த பங்களாவிற்கு வெள்ளை அடிப்பது போல தான்.

பார்ப்பனிய-முதலாளித்துவ கூட்டணியை தகர்ப்பதற்கு புரட்சி ஒன்று தான் தீர்வு.

மார்க்சியம் தூக்கி எறியப்பட வேண்டும் என்று சிலர் நினைப்பதால் அது ஓடி ஒழிந்து விடப்போவதில்லை. மாறாக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைகள் மட்டுமே இந்தியாவில் சமூக மாற்றத்தை முன் எடுத்துச் செல்வதற்கான வழியை காட்டுகின்றன. நடைமுறைக்கு ஒளி வீசுகின்றன.

மார்க்சியத்தை கண்டு அஞ்சுவது முதலாளித்துவம் தான், அதனாலயே மா.லெ. அமைப்புகள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றன, ஆனால் சமூகநீதி பேசும் சில தனி மனிதர்களும் மார்க்சியத்தை கண்டு குலை நடுங்குவது தான் ஏன் என்று தெரியவில்லை.

– ராஜதுரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/communist-party-and-reservation-a-debate/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
Verizon பணிநீக்கம், மீனவர் போராட்டம், சங்க நடவடிக்கைகள்

நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை டிசம்பர் 14,  2017 அன்று நடைபெறும். இடம்: பெரும்பாக்கம் தேதி: 16-12-2017; நேரம்: 04: 00 PM to 06:00 PM...

ஐ.டி யூனியன் – நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள் : பத்திரிகை செய்தி

வேலை பறிப்பு, அதிக நேரம் வேலை செய்யச் சொல்வது, பெண்களை குறி வைத்து வேலையை விட்டு நீக்குவது என்று எண்ணற்ற நீண்ட கால பிரச்சினைகளுடன், பல புதிய...

Close