“ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினால் ஆய்வாளரிடம் புகார் கொடுக்கவும்” : தொழிலாளர் துணை ஆணையர்

விப்ரோவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கட்டாய பதவி விலகல் கடிதம் கொடுக்க வைக்கப்பட்டது தொடர்பாக இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 2A-ன் கீழ் கொடுத்த மனுவின் மீதான முதல் முத்தரப்பு சமரச பேச்சு வார்த்தைக்கு ஜூன் 20, 2017 காலை 11.30க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விப்ரோ ஊழியர்களுக்கான பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் வாட்ஸ்ஆப் குழு மூலம் இது ஒருங்கிணைக்கப்பட்டு புகார் கொடுத்த ஊழியருக்கு ஆதரவாகவும், தாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து முறையிடவும் விப்ரோவைச் சேர்ந்த 8 பேர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். மேலும், பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவை தொடர்பு கொண்ட கட்டாய பதவி விலகல் கடிதம் கொடுக்க வைக்கப்பட்ட எம்ஃபசிஸ் நிறுவன ஊழியர் ஒருவரும், காக்னிசன்ட் நிறுவன ஊழியர் ஒருவரும் அதே நாளில் பிரிவு 2A-ன் கீழ் மனு கொடுக்க வரும்படி திட்டமிடப்பட்டது.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாக கலந்து கொண்ட பிறரையும் சேர்த்து மொத்தம் 13 பேர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

காலை 11.30 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்த கூட்டத்துக்கு 3 மணி நேரம் காத்திருந்த பிறகு மதியம் 2.30 மணி அளவில் தொழிலாளர் துணை ஆணையரை ந்திப்பதற்கு அழைத்தனர். விப்ரோ நிர்வாகத் தரப்பிலிருந்து யாரும் வந்திருக்கவில்லை.

“இது போல 3 முறை வரா விட்டால் சமரசப் பேச்சு வார்த்தை முறிவு என்று அறிக்கை கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படலாம்” என்று விளக்கினார் திரு விமலநாதன்.  அந்த மனு மீதான அடுத்த சமரச பேச்சுவார்த்தைக்கு ஜூலை 3-ம் தேதி என நாள் குறித்தார்.

எம்ஃபசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் தன்னை 3 மாதங்கள் புராஜக்ட் இல்லாமல் உட்கார வைத்திருந்தது, பலமுறை கோரியும் புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி தர மறுத்தது, அதன் பிறகு 6 மாதங்கள் சம்பளம் கொடுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தது, இறுதியில் 2 நாட்களுக்குள் ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியது இவற்றை விளக்கினார். இது தொடர்பாக பிரிவு 2A-ன் கீழ் புகார் அளிக்குமாறு கூறினார் தொழிலாளர் துணை ஆணையர்.

“பதவி விலகல் கடிதம் கொடுத்து விட்டால் வழக்கு ஒப்பீட்டளவில் பலவீனமாகி விடும். எந்த காரணத்தாலும் வற்புறுத்துலுக்கோ, மிரட்டலுக்கோ பயந்து யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம். நிறுவனம் யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியாது.

பெருமளவு ஆட்குறைப்பு செய்வதற்குக் கூட தொழிலாளர் துறையிடம் முறையாக மனு போட்டு, அனுமதி வாங்கிதான் செய்ய முடியும். ஒரு தனிப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அளிப்பது, விளக்கம் திருப்தி அளிக்கா விட்டால், விசாரணைக் குழு அமைத்து விசாரிப்பது, குழுவின் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுப்பது என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும். இத்தகைய வழிமுறையை பின்பற்றாமல் பணிநீக்கம் செய்தால் அதை எதிர்த்து தொழிலாளர் துறையில் மனு கொடுக்கலாம், வழக்கு நடத்தலாம்.

அத்தகைய வழிமுறையை பின்பற்றி வேலை நீக்கம் செய்தால் கூட, குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு பணீநீக்கம் பொருத்தமான நடவடிக்கை இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

பெரும் அளவில் முறைகேடு செய்த வழக்குகளை தவிர வேலை நீக்க வழக்குகளில் ஊழியர் தரப்புதான் சட்ட ரீதியாக வலுவானது. ஆனால், தொழிலாளர் துறையிலும் நீதித்துறையிலும் வழக்கு நடத்துவதில் ஏற்படும் காலதாமதத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். பொறுத்துக் கொண்டால் ஓடிப் போன காலத்துக்கும் நிர்வாகம் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே எந்த காரணத்தை ஒட்டியும் ராஜினாமா கடிதம் கொடுத்து விடாதீர்கள். அது உங்கள் தரப்பை பலவீனமாக்கி விடும்” என்று சட்ட உரிமைகள் பற்றி விளக்கினார் துணை ஆணையர்.

விப்ரோவைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியர் எச்.ஆர் அவரை மூன்று முறை அழைத்து மிரட்டியது, இப்போதே ராஜினாமா சமர்ப்பிக்கவில்லை என்றால் இந்த அறையை விட்டு வெளியில் விட மாட்டோம் என்று சொன்னது ஆகியவற்றை விளக்கியதும், “யார் அப்படி மிரட்டினார்கள்” என்று எச்.ஆர்-ன் பெயரை கேட்டு தெரிந்து கொண்டார், தொழிலாளர் உதவி ஆணையர்.
“இது போன்ற மிரட்டல்கள் குறித்து தொழிலாளர் ஆய்வாளருக்கு புகார் தெரிவிக்கலாம்” என்று காஞ்சிபுரத்தில் இருக்கும் தொழிலாளர் ஆய்வாளர் எண்ணையும், தாம்பரத்தில் இருக்கும் துணை தொழிலாளர் ஆய்வாளர் எண்ணையும் கொடுத்தார்.

எம்ஃபசிஸ் நிறுவன ஊழியரும், காக்னிசன்ட் ஊழியரும் பிரிவு 2A-ன் கீழ் மனு கொடுத்தனர்.

இந்த கார்ப்பரேட் அடக்குமுறையை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து ஊழியர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவதே சரியான அணுகுமுறை என்ற உணர்வை இந்தக் கூட்டம் ஏற்படுத்தியது.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/complain-to-inspector-of-labour-against-hr-harassment/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மார்க்சைப் பார்த்து அலறும் முதலாளி வர்க்கம்

"ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுத்து அந்த நிலை அவர் மனிதகுலத்திற்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்கு இடமளிக்குமானால் அவர், தான் என்றும் தற்பெருமையுடன்...

நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக MEPZ ஐ.டி ஊழியர்கள்

"ஐ.டி துறை ஊழியர்களுக்கும் சமூகப் பொறுப்பு நிறையவே இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது. நாம் விவசாயிகளின் துயர் துடைக்க நம்மால் ஆன பணிகள் அனைத்தையும் செய்ய...

Close