«

»

Print this Post

அடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கை

This entry is part 3 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

லைந்து திரிந்த மனிதக்கூட்டம் ஆற்றங்கரை ஓரங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட காலத்திலேயே முளைவிட ஆரம்பித்துவிட்டன கட்டுமானப் பணிகளும். காடுதிருத்தி நாடமைத்து, கூடி வாழ முற்பட்ட மனிதக் கூட்டத்திற்கு வீடமைத்து, வீதியமைத்து, கோட்டை, கொத்தளங்களென பாதுகாப்பு அரண்களமைத்து, மாட மாளிகைகள் முதல் கூட கோபுரங்கள் வரை கட்டித்தந்து, விவசாயம் செழித்தோங்க பாசனக் கால்வாய்கள் அமைத்து அவர்களின் மேம்பட்ட நாகரிக வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள். காவிரியின் கல்லணை முதல் எகிப்தியப் பிரமிடுகள் வரையிலான வரலாற்றின் நினைவுச் சின்னங்களைனைத்தும் இந்தத் தொழிலாளர்களது உழைப்பில் நிலைகொண்டிருக்கும் உன்னதங்களே.

பண்டைக் காலந்தொட்டு இன்று வரையிலான மனிதகுல வரலாறு நெடுகிலும், மனித சமூக வாழ்வின் அடிக் கட்டுமானங்களை வடிவமைத்து, வளர்த்தெடுத்து நாகரிக வளர்ச்சியுடன் கரம் கோர்த்தபடியே நீள்கிறது கட்டுமானத் தொழிலாளர்களாது வாழ்வு. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், தொழிற்துறை வளர்ச்சியும் நம் வாழ்க்கைத் தேவைகளை பெருமளவில் அதிகரித்துள்ளன, அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள், ஆலைகள், ஆற்றைக் கடக்கும் பாலங்கள், வழுக்கிச் செல்லும் சாலைகள், அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள், இரயில்வே பாதைகள், நகர்ப்புற நீர்வடிகால் கட்டமைப்புகள் உள்ளிட்ட நம் வாழ்வின் அடிக்கட்டுமானங்கள் அனைத்திலும் நீக்கமற உறைந்து கிடக்கிறது கட்டுமானத் தொழிலாளர்களுடைய குருதியும் வியர்வையும் கலந்த உயிர்பிழியும் உழைப்பு.

ஆனால், இன்றைய நவீன உலகின் அடித்தளங்களைக் கட்டியெழுப்பி, நம்முடைய நாகரிக வாழ்க்கைக்கு வழிவகுக்கும் தொழிலாளர்களின் வாழ்வோ நரகப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது. அன்று கொத்தனாராக, தச்சராக கிராமங்களைக் கட்டியெழுப்பியவர்களின் சுயசார்பு வாழ்க்கை அழிக்கப்பட்டு இன்றைய மறுகாலனியாக்கச் சமூகத்தில் கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்களின், ஒப்பந்த நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வேர்விட்ட இத்தொழிலாளர்களின் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறைகளும் இன்றைய உலகாளும் நிதிமூலதனச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் கொடூரத்தின் எல்லைகளை தொட்டு நிற்கின்றன.

இந்தியப் பொருளாதாரம் ஏகாதிபத்திய நிதிமூலனச் சூறையாடலுக்குத் திறந்துவிடப்பட்ட 1990-களுக்குப் பிறகு இந்திய நகரங்கள் அசுர வளர்ச்சி கண்டுவருகின்றன. அதேநேரத்தில், விவசாயமும், பிற கைத்தொழில்களும் திட்டமிட்டே அரசால் சீரழிக்கப்பட்டதன் விளைவாக வேலையிழந்து, பட்டினியில் தள்ளப்பட்ட பெருவாரியான கிராமப்புற உழைக்கும் மக்கள் அற்பக் கூலிகளாக நகர்ப்புறச் சந்தைகளில் வீசயெறியப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்குத் தஞ்சமளித்துக் காப்பாற்றி வருகிறது கட்டுமானத் தொழில்.

construction-workers-indiaஇந்தியாவில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமானத் துறையில்தான் பெருமளவு (சுமார் 4 கோடி) அமைப்புசாராத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்; போதிய கல்வியறிவற்றவர்கள். கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள், திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளாக உருவெடுத்திருக்கும் ஒப்பந்தத்தாரர்கள் உள்ளிட்ட முதலாளித்துவ ஓநாய்களால் வேட்டையாடப்படுகிறது இந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வு.

நிரந்தர வேலையின்மை, பணிப் பாதுகாப்பின்மை, அதிக வேலைநேரம், அற்பக் கூலி, பி.எஃப், இ.எஸ்.ஐ, ஓய்வுதியம் உள்ளிட்ட பணிப்பலன்கள் வழங்கப்படாமை, போதிய பாதுகாப்புக் கவசங்களின்றி ஆபத்தான பணியில் ஈடுபடுத்தப்படும் நிர்ப்பந்தம், உரிய மருத்துவ வசதியின்மை, விபத்துகளில் காயமுற்றோர், உயிரிழப்பவர்களுக்கு உரிய நிவாரணம், இழப்பீடு வழங்கப்படாமை, பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் என ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின்மீதும் ஏவப்படுகின்ற முதலாளித்துவக் கொடூரங்களுக்கு கட்டுமானத் தொழிலாளர்களும் இரையாக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் பல இலட்சம் வடமாநிலத்தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 மணி நேரம் கடுமையாக வேலை செய்தாலும் தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைக் காட்டிலும் குறைவான கூலியே இவர்களுக்கு தரப்படுகிறது. கொட்டும் மழையிலும், கொளுத்தும வெயிலிலும் நாள் முழுதும் வதைக்கப்படும் இவர்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் செய்து தரப்படுவதில்லை. கழிப்பறைகளற்ற சுகாதாரக் கேடுகள் நிறைந்த குறுகிய தகரக்கொட்டகைகளில் ஆடுமாடுகளைப்போல அடைக்கப்பட்டு, வதைக்கப்படுகின்றனர். வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடிவந்த இடத்தில், மொழியறியாத நிலையில, உரிமைக்குரல் எழுப்ப வழியற்ற ஊமைகளாகக் கையறுநிலையில் இருத்தப்பட்டு ஒப்பந்ததாரர்களின் கீழ் கொத்தடிமைகளாக உழல்கின்றனர்.

GEDSC DIGITAL CAMERAதரமற்ற கட்டுமானப் பொருட்களால் சரிந்துவிழும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படாததால் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளாலும் தொழிலாளர்கள் கொத்தாக மடியும் அவலங்களும் தொடர்ச்சியாக அரங்கேறுகின்றன. தமிழகத்தில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு பத்து முதல் பதினைந்து கட்டிடத் தொழிலாளர்கள் இவ்வாறு பலியிடப்படுவதை இலாபவெறி பிடித்த முதலாளித்துவக் கும்பலும், ஆளும்வர்க்க அடிமைச்சேவக ஊடகங்களும் திட்டமிட்டே மூடிமறைக்கின்றன.

இத்தகைய மரணங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க இறந்தவர்களை அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லும் பொருட்செலவைத் தவிர்க்கும் பொருட்டு கேட்பாரற்ற அநாதைப் பிணங்களாக அந்நிய மண்ணில் புதைத்துவிடுகின்றன முதலாளித்துவக் கொலைகாரக் கும்பலும், கேடுகெட்ட இந்த அரசும். சென்னை முகலிவாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவத்தில் அரசும், முதலாளிகளும் காட்டிய அலட்சியமே இதற்கு முகத்திலறையும் சாட்சியமாக உள்ளது.

நாள் முழுவதும், சூரிய ஒளியிலும் இரசாயனங்களின் நெடியிலும், அதிக சத்தத்திலும், சிமெண்ட் கலவை புழுதியிலும், ஈரத்திலும் பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள் ஆஸ்துமா, காசநோய், அல்சர் போன்ற நாட்பட்ட நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். இவை தவிர, சிமெண்ட் மூட்டைகள்,கம்பிகள், பாளங்கள், கருவிகள் கற்கள், ஓடுகள், கம்பிகள், பாளங்கள், கருவிகள் கற்கள் ஓடுகள் என கனமான பொருட்களைத் தொடர்ச்சியாகத் தூக்கிச் சுமப்பதால் எம்.எஸ்.டி (Musculoskeletal disorder) என்கிற தசை மற்றும் எலும்புகளைத் தாக்கும் ஒருவகை கொடிய நோய்க்கும் இரையாகின்றனர். அதிகமான எடையைத் தூக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியுள்ள நிர்ப்பந்தம் காரணமாக ஆரம்பத்தில் தண்டுவடம் பாதிப்பிற்கு உள்ளாகும். சுமார் ஒரு வருட காலத்திற்குள் இதன் விளைவுகள் மோசமாகத் தலை காட்டத் தொடங்கும். இறுதியில் ஆளையே முடக்கிவிடும் தன்மை கொண்டது இந்நோய்.

வறுமையிலும், அறியாமையிலும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுள்ள இந்த ஏழை மக்கள் இத்தகையதொரு கொடிய நோய் தம்மைத் தாக்கியுள்ளது என்பதைக்கூட அறிந்துகொள்ளமுடியாத அவலத்தில்தான் உள்ளனர். வேலைப்பளுவால் ஏற்படும் உடல்வலி எனக் கருதிக்கொண்டு அதையொட்டிக் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர்.

India Economyபெரிய கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் போது திட்டமதிப்பில் 1%-ஐ வசூலிக்வேண்டுமென்ற சட்டத்தைப் புறந்தள்ளி 0.3%-ஐ மட்டுமே வசூலித்து முதலாளிகளுக்கு சேவை செய்கிறது தமிழக அரசு. இவ்வாறு வசூலித்த சுமார் ரூ. 1,000 கோடி பணத்தையும் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க மறுத்து வருகிறது. கட்டிடத் தொழிலாளர் நலவாரியத்தைப் பெயரளவில் ஏற்படுத்தியுள்ள அரசு, சொத்தைக் காரணங்களைக் கூறி பெரும்பான்மைத் தொழிலாளர்களை அதில் பதிவுசெய்யவிடாமல் தடுத்து, அதன் கீழான பலன்களை மறுத்து அவர்களின் வயிற்றிலடித்து வருகிறது. பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கும் கூட வாரியத்திட்ட உதவிகளோ, விபத்துகளுக்கு உரிய இழப்பீடுகளோ, நிவாரணமோ முறையாக வழங்கப்படுவதில்லை. அரசின் அடியாட்படையான காவல்துறையின் மோப்ப நாய்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமான ரூ 1,623/ ஐ விடக் குறைவாக ரூ 1,000 மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வீசியெறியப்படுகிறது. இதனையும் பலநேரங்களில் பெரும்பான்மைத் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க மறுத்து வருகிறது.

தொழிலாளர்கள் உயிரும், உடலும், உணர்வும் கொண்ட மனிதர்களல்ல; மூலதனத்தின் இலாபவெறிக்காகச் சக்கையாக மென்று துப்பப்படவேண்டிய தக்கைகள் மட்டுமே எனக் கருதி தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி வருகிறது பார்ப்பன, பாசிச மோடி அரசு. மேலும், கட்டுமானத் தொழிலில் நிலவும் தேக்கத்தை உடைப்பதாகக் கூறிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்து சூறையாடுவதற்கு கதவை அகலத் திறந்துவைத்துள்ளது. மறுபுறம், பன்னாட்டு மூலதனத்திற்குப் பட்டுப்பாவாடை விரிக்கும் தமிழக அரசோ அரைவயிற்றுக் கஞ்சிக்கே அல்ல்ல்படும் கூலித் தொழிலாளர்களுக்கு ‘தாயுள்ளத்தோடு’ டாஸ்மாக் பாலூட்டி அரவணைத்துக் கொன்று வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசுக் கட்டமைப்பு இது. இற்றுப்போய், சரிந்நு விழுந்து தொழிலாளர்களைப் பலிகொண்டுவரும் இந்து அரசுக் கட்டமைவைத் தகர்தெறிந்து, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமான புதியதொரு அரசுக் கட்டமைப்பை கட்டியமைக்கும் பணியில் கட்டுமானத் தொழிலாளர்கள் களமிறங்கவேண்டிய தருணமிது.

– மருதமுத்து

புதிய தொழிலாளி, செப்டம்பர் 2016 இதழிலிருந்து

படங்கள் : இணையத்திலிருந்து

Series Navigation<< சமையல் தொழிலாளர்கள்ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/construction-workers-putho/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் "பன்னாட்டு" நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் "ரைஸ் புல்லிங்", “மண்ணுள்ளிப் பாம்பு" என்று மக்கள்...

ஆட்குறைப்பும் ஊழியர் உரிமைகளும் – மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் – வீடியோ

யூனியனில் சேருவதால் வேலை இழக்க நேருமா என்ற கேள்வியைப் பொறுத்த வரை, உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. கருத்துரிமையும், சங்கம் அமைக்கும் உரிமையும் ஒரு அரசியல் சட்ட...

Close