நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக் கேட்டுள்ளோம்.
நம்முடைய காலத்தில் இது போன்ற கொள்ளை நோய்களை நாம் பார்த்திராவிட்டாலும் சுனாமி பேரலை, வருதா புயல், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு என இயற்கைப் பேரிடரில் பலர் தங்களுடைய உடமைகளையும் உயிர்களையும் இழந்த துயரத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதை உலகப் பேரிடராக அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 150 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.
இந்திய அரசு தற்போது தான் விழித்து தேசிய பேரிடராக இதனை அறிவித்துள்ளது. எனினும் இந்த தேசிய பேரிடரை எதிர்கொள்ளும் முழு பொறுப்பையும் அந்தந்த மாநில அரசின் கைகளில் ஒப்படைத்துவிட்டது. இந்தப் பிரச்சனையில் முன்கை எடுத்துச் செயல்படும் கேரள அரசு சென்ற மாதமே இதனை பேரிடராக அறிவித்து அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது.
சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க பத்து நாட்களில் ஒரு புதிய மருத்துவமனையை அமைத்து சிறப்பு சிகிச்சைகளையும் வழங்கியது, இந்த நோய் பரவாமல் இருக்க வீடுகளில் மக்களை இருக்கச் செய்தனர், அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் 24 மணிநேரமும் முடக்கப்பட்ட மேலாண்மை முறையை செயல்படுத்தியது, மக்களுக்கு அத்தியாவசியமான மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இப்படிப்பட்ட நடைமுறைகளால் தான் சீன அரசாங்கம் அங்கேயே ஏற்பட்ட தாக்கத்தை குறைத்துள்ளது. தற்போது இந்த வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நமது நாட்டை எட்டுவதற்குச் சிறிது நாட்களுக்கு முன்பு வரை தில்லி நகரம் சிறுபாண்மையினருக்கு எதிரான தாக்குதல்களால் பற்றி எரிந்தது. 40க்கும் அதிகமானவர்களைப் பலிகொண்ட மதவெறி எனும் கொடிய வைரஸ் நம் நாட்டைப் பீடித்து, மனிதநேயம் குன்றியுள்ள சமயத்தில்தான் கொரோனா வந்துள்ளது. சுப்ரமணியபுரம் படத்தில் வரும் வசனத்தைப் போல இது நம் அனைவருக்கும் மரண பயத்தை காட்டிவிட்டது.
ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கான பழியை ஏற்க சரியான நேரத்தில் இங்கே கொரோனா வந்து சேர்ந்துள்ளது. இதுவும் தன் பங்கிற்கு பல்வேறு தொழிற்துறைகளை முடக்கிப் போட்டுள்ளது, குறிப்பாக சுற்றுலாத்துறை, விமானம் கப்பல் துறைகள், ஆடை, உணவு, ஆகிய துறைகளில், ஏற்றுமதி-இறக்குமதி அனைத்தும் இங்கே பாதிப்புக்குள்ளாகிறது.
இந்த வைரஸ் பற்றிய பல்வேறு தடுப்பு நடைமுறைகள், வருமுன் காப்போம் நடைமுறைகள் அரசு விளம்பரங்களில், வலைத்தளங்களில் நீங்கள் படித்து தெரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை அறிவோம்.
இந்தக் கட்டுரையானது ஒரு விழிப்புணர்ச்சி கட்டுரையே, இன்று நடக்கும் பல இன்னல்களில் இருந்து தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில வழிமுறைகளையும் இங்கே பகிரப்படுகிறது, அவை மற்ற துறைதொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் என்பது தொழிலாளர் நல சட்டங்களை பொறுத்த அளவு இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் தொழிலாளர்களுக்கு ஓய்வு அல்லது விடுப்பு அளிக்கும் பட்சத்தில் , அவர்களை பணியிலிருந்து நீக்க முடியாது. சூழ் நிலை சரியான பிறகு அந்தத் தொழிலாளர்களை தான் முதலில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற படிப்பினையை தொழிலாளர் நல சட்டங்களில் உள்ளது.
இக்கட்டான இந்த சூழ்நிலையை பல பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியே அனுப்புவதற்கு முயற்சிக்கக் கூடாது என்பது கோரிக்கையாக உள்ளது.
இதற்கு முன் பல்வேறு காலகட்டங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட சரிவுகளின் போது அதை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளர்கள் மேல் சுமத்தியுள்ள அனுபவங்கள் நமக்கு தெரிந்ததுதான். (2000 முதல் 2020 வரை உள்ள பல நிகழ்வுகள் இதற்குச் சான்று)
இன்று உலகம் முழுவதும் இந்த வகை வைரஸ் பாதிப்புகளினால் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்க அதிபர் அவசர நிலை பிரகடனம் செய்துள்ள போதும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஆன விடுமுறையில் தான் கொடுத்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் ஏற்படும் பொருளாதார ரீதியிலான நிகழ்வுகளின்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வேலை நேரங்களை ஒதுக்கலாம் அல்லது விடுமுறை அல்லது குறிப்பிட்ட காலம் வரை ஓய்வு கொடுக்கலாம் என்பது சட்டங்களில் உள்ள வாய்ப்புகள் என்பதை தகவல் தொழில்நுட்ப துறை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சூழ்நிலையானது ஒரு குறிப்பிட்ட காலம் பிறகு சரியாகும் பட்சத்தில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த உறுப்பினர்களுக்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதும் இந்திய சட்டத்தில் தொழிலாளர் சட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள்.
தற்போது வரை வைரஸ் சார்ந்த நிகழ்வானது வீட்டில் பணிபுரியலாம் என்ற கோணத்தில் சென்று கொண்டுள்ளது. அதில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் போதும் அல்லது நீடிக்கும் பட்சத்திலும் இது தொழிலாளர்களின் மேல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை இழப்பைத் திணித்து அவர்களை இன்னல்களுக்கு ஆளாக்க கூடாது.
உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஒருங்கிணைந்து பகிர்ந்துகொள்வோம் என்பதுதான் அனைத்து தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் மற்றும் புதிய ஜனநாயக தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.
பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் நிறுவனங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று பல தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் உழைத்து வருகின்றனர், இப்படிப்பட்ட ஊழியர்களை இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர்கள் மேல் சுமையை ஏற்றக்கூடாது.
இந்தியாவில் தொழில் புரிய வந்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது, அவை அனைத்தும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு, வேலைவாய்ப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது அதை தொழிலாளர் துறைக்கு அறிவிக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளது. இந்த வழிமுறைகளை கடைபிடிக்காமல் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்குவது போன்ற நடைமுறைகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. இது போன்றவையே சட்டத்துக்கு புறம்பானது என்பதை பல நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிலாளர்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசாங்கத்தின் தொழிலாளர் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் போன்றவை இன்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மற்ற நாட்களில் நிகழவிருக்கும் சூழ்நிலைகளிலும் தகவல் தொழில்நுட்பத்துறை தொழிலாளர்களையும் இன்னல்கள் இல்லாமல் காக்க வேண்டும்.
Nasscom அமைப்பும் இன்றைக்கு இருந்துவரும் சூழ்நிலையை உணர்ந்து அனைத்து தகவல் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்களுக்கும் நல்லதொரு ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்து நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பேணி காக்க வேண்டும்.
மனித நேயம் என்பது வைரஸிலிருந்து இருந்து நம்மை காத்துக்கொள்வது மட்டுமில்லாமல். ஒவ்வொரு தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் பணி புரியும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆண்டின் இறுதியான இந்த சூழ்நிலையில் தொழிலாளர்களை காக்கும் மனிதநேயத்தையும் போற்றிப் பேண வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்கள் ஏதேனும் உங்கள் நிறுவனங்களில் இன்னல்கள் ஏற்பட்டால் எங்களுடைய சங்கத்தின் மின்னஞ்சல் முகவரி மூலமாக நேரடியாக தொடர்பு கொள்ளலாம், எங்களுடைய சங்கத்தின் தொலைபேசி வாயாலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது சங்கத்தில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்காகவும் மனிதநேயத்தை போற்ற நாங்கள் செயல்பட்டுக் இருக்கின்றோம்.
மனிதநேயம் காப்போம்.
தமிழ் அன்பர்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தகவல் தொழில்நுட்பப் பிரிவு