தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து!
அவுங்கரபாத்தில் நடந்த இரயில் விபத்தில் 16 தொழிலாளர்கள் பலியானதற்கு பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் ஒரு முறை முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று திருவாளர் மோடிக்கும் அவரது பாரதிய ஜனதா கட்சிக்கும் புரியவில்லையா? கொளுத்தும் வெயிலில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து, இரவில் இரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்கும் நிலைக்கு இந்த நாட்டின் உழைக்கும் மக்களைத் தள்ளியது எது? கொரோனாவைக் காட்டி அவர்கள் அறிவித்த அலங்கோலமான ஊரடங்கு பல கோடி மக்களை ஏதுமற்ற பஞ்சப்பராரிகளாக மாற்றிவிட்டது என்பதை மோடியின் அரசோ அவரின் கட்சியோ ஏற்றுக் கொள்ளாது. அதேசமயம் ஆதரவற்று, கையறு நிலையில் தெருவில் நிற்கும் தொழிலாளர்களை மேலும் நசுக்கிப் பிழிய, அவர்களின் மனிதமாண்பை முற்றிலும் பறித்தெடுக்க பாஜக ஆளும் மாநில அரசுகள் தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக தூக்கிவீச முடிவு செய்திருக்கின்றன.
பா.ஜ.கவிற்கும் அதன் அரசாங்களுக்கும், தொழிலாளர்கள் என்பது உற்பத்தியின் ஒரு பகுதி ,மட்டுமே, அவர்கள் உணர்வுகள், உணர்ச்சிகள், தேவைகள் கொண்ட மனிதர்கள் அல்லர், அதுவும் உரிமைகளுக்கு நிச்சயமாகத் தகுதியற்றவர்கள். இந்த ஊரடங்கு உத்தரவு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதால், பாஜகவிற்கும் அதன் அரசாங்களுக்கும், உழைக்கும் மக்கள், ஏற்கனவே வெட்டிச் சுருக்கப்பட்ட உரிமைகளோடு, குறைந்த ஊதியத்தில், பணியிடத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி, நீண்ட நேரம் உழைக்க வேண்டும். தொழிற்சங்க உரிமைகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு மூலதனத்திற்குச் சேவை செய்யுமிடத்தில் அவர்களை வைக்க வேண்டும்.
மாநிலங்களுக்கிடையே போட்டி: அதிகமாக சுரண்டுபவர் யார்?
இதைத்தான் குஜராத், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜக மாநில அரசுகள் செய்துவருகின்றன. குஜராத் பாஜக அரசு புதிய முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளச் சட்டம் மற்றும் இழப்பீடுச் சட்டம் தவிர மற்ற எல்லா தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து 1200 நாட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தின் பா.ஜ.க அரசு, கூடுதல் நேர சம்பளத்திற்கு எந்தவித ஏற்பாடும் இல்லாமல், தொழிலாளர்களிடம் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 72 மணி நேரம் வேலைவாங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதம் கூட ஆகாத மத்திய பிரதேசத்தின் பாஜக அரசாங்கம், குடிநீர் வழங்குவது, கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருவது தொடங்கி அடிப்படை சுகாதாரத்தைப் பேணுவது, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது வரையிலான தொழிற்சாலைச் சட்டத்தின் (Factories Act) அனைத்து சரத்துகளிலிருந்தும் முதலாளிகளுக்கு அடுத்த 1200 நாட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. தொழிற்தகராறு சட்டத்தின் கீழ், 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது புகார் அளிப்பது, தொழிற்தாவா எழுப்புவது உள்ளிட்ட ஏனைய அனைத்து உரிமைகளையும் ரத்து செய்துள்ளதோடு இந்த திருத்தங்கள் அனைத்தையும் அரசிதழில் வெளியிட்டும்விட்டது.
இதில் உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசுதான் முதலாளிகளுக்கு மிக அதிக வாக்குறுதிகளை அளித்துள்ளது. எவ்வித கால வரையறையும் இன்றி அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் முற்றிலுமாக நிறுத்தி வைப்பதாக அது அறிவித்துள்ளது. கண்துடைப்பிற்காக, தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம், கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், ஊதியச் சட்டத்தின் 5-ஆவது விதி (ஊதியக் கொடுப்பனவு காலம்), மகப்பேறு நலச் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் சட்டம் ஆகியவை இந்த அறிவிப்பின் கீழ் வராது என்று கூறியுள்ளது.
இந்த திருத்தங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை உள்ளடக்கியிருப்பதால், இவை தற்போது அரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் கூட்டத் தொடரில் இல்லாத நேரத்தில், உழைக்கும் மக்களையும் அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றும், அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தும் முக்கியமான சட்டங்களை மாற்றி அமைக்க முயல்வதென்பது இந்த பாஜக அரசு யாருக்கானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த திருத்தங்கள், நாட்டின் அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் அதே சமயத்தில், தொழிலாளர் நலனைக் காக்கும் முக்கிய உரிமைகளான, கட்டாய உழைப்புக்கு எதிரான உரிமை, சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை போன்றவற்றையும் மீறுகின்றன. இந்த நேரத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றன அவை இவற்றை எதிர்த்து நிற்குமா என்பதும் நாம் கருத வேண்டிய விஷயமாக உள்ளது.
பா.ஜ.க. மாநில அரசுகளின் இத்தகைய செயல்களை நாம் அவற்றின் தனிப்பட்ட செயல்களாக மட்டும் பார்க்க முடியாது. தொழிலாளர் நலச் சட்டங்களை ‘சீர்திருத்த’ வேண்டும் என்ற மூலதனத்தின் உத்தரவின் ஒளியில் இதனை நாம் பார்க்க வேண்டும். இவை ஏற்கெனவே 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்களாக, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் ஊதிய சட்ட தொகுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள பாஜக அரசு, பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு, ‘தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்களை முக்கியத்துவம் கொடுத்து’ நிறைவேற்றவில்லை என்று கண்டித்து தொடர்ந்து கடிதங்கள் எழுதுவதுடன், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கும், குறிப்பிட்ட கால வேலை ஒப்பந்த முறையை அமுல்படுத்துவதற்கும் தாங்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் குறித்து வாரத்திற்கு ஒரு முறை, மத்திய அரசிற்கு அந்த மாநில அரசுகள் எழுதி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தொற்று நோய்: உரிமைகளை நசுக்க மூலதனத்திற்கு ஒரு வாய்ப்பு
தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளைக் கூட பிடுங்கவும் கிடைத்த அருமையான வாய்ப்பு. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை மூலதனத்தின் வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் வளர்ச்சி. ஆகையால், உற்பத்தியின் ஒவ்வொரு காரணியும் எவ்வித தடையும் இன்றி மூலதனத்திற்கு சேவை செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையும், உழைப்பும் மட்டுமே பொருளாதாரத்தை உயர்த்திவிடாது. பொருளாதாரம் உயர வேண்டும் என்றால் நுகர்வை அதிகரிக்க வேண்டும், அதற்கு தொழிலாளர்களுக்கு அதிக சம்பளமும், சிறந்த உரிமைகளும் கொடுக்க வேண்டியது அவசியம் என்பது காமலைக் கண் கொண்ட பாஜகவிற்குத் தெரியவில்லை.
அரசுத் தலைவர் இந்த திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் என்று நாம் கோரும் அதே சமயம் இவற்றிற்கு எதிராக நாம் நடத்தும் போராட்டம் ஆளும்வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்மை மேலும் பலப்படுத்தும்.
விஜய குமார்,
தலைவர் AIFTU (New)
|
சுதிப்தா பால்
ஆலோசகர் ECLTSAU
|
பி. பிரதிப்
பொதுச்செயலாளர் IFTU |
எஸ்.வெங்கடேஸ்வரராவ்
தலைவர் IFTU
|
கன்ஹை பரன்வால்
பொதுச்செயலாளர் IFTU (Sarvahara)
|
கைலாஷ்
தலைவர் IMK
|
சோம்நாத்
செயலாளர் JSM-அரியானா
|
முகுல்
ஒருங்கிணைப்பாளர் MSK
|
தங்கராசு
பொதுச்செயலாளர் NDLF |
கவுதம் மோடி
பொதுச்செயலாளர் NTUI |
குஷால் டேப்நாத்
ஒருங்கிணைப்பாளர் SWCC (WB) |
சஞ்சய் சிங்வி
பொதுச்செயலாளர் TUCI |
1 ping