மக்களின் உயிருக்கு விலையாக கார்ப்பரேட் நன்கொடை பெறும் அரசியல்வாதிகள்

ரசியல்வாதிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தி இந்து தமிழில் 21-02-2018 அன்று வந்துள்ளது.

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசிய மாணவி எம்மா கோன்ஸலஸ் .

அமெரிக்காவில் கடந்தவாரம் (பிப்ரவரி 3-ம் வாரம்) ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், அதற்கான நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய 18 வயதுடைய பள்ளி மாணவிதான் இப்படி பேசியவர். அத்துடன், “அதிபர் டிரம்ப் ஆறுதல் சொல்ல இங்கு வந்தால் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்பேன். தேசிய துப்பாக்கி கழகத்திடம் எத்தனை கோடி டாலர்கள் நன்கொடை வாங்கினீர்கள்? ஒருவேளை அவர் சொல்லாமல் போகலாம். ஆனால் அதை நான் சொல்கிறேன். $3 கோடி  வாங்கியுள்ளீர்கள்.கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் கொல்லப்பட்டவர்களை கணக்கிட்டால் தலைக்கு $5,800 வருகிறது, அவ்வளவுதானா ஒரு உயிரின் மதிப்பு டிரம்ப் அவர்களே” என்று பேசியுள்ளார்.

இதேபோல் நமது நாட்டில் பேசினால், “நீ தேச விரோதி, பாகிஸ்தானுக்கு போ” என்பார்கள் அல்லது “என்ன ஆதாரம்?” என்று கேட்பார்கள்.

நமது நாட்டில் கார்ப்பரேட்டுகளிடம் நன்கொடை வாங்காத ஓட்டரசியல் கட்சிகள் ஏதாவது இருக்கின்றனவா? அளவில் மாற்றம் இருக்கலாம், ஆனால் வாங்காத கட்சியில்லை.

புத்தம் புதிய கட்சி அலுவலகத்தை டெல்லியில் கட்டி முடித்திருக்கிறது பா.ஜ.க

கற்பனையாக அல்ல, ஆதாரங்களுடந்தான் சொல்கிறோம். ஆகஸ்ட் 2016 (பணமதிப்பு அழிப்பு அறிவிப்புக்கு 3 மாதங்களுக்கு) முன்பு அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளுக்குள் புத்தம் புதிய கட்சி அலுவலகத்தை டெல்லியில் கட்டி முடித்திருக்கிறது பா.ஜ.க.  2016-17ல் மொத்த கார்ப்பரேட் நன்கொடைகளில் 89% பா.ஜ.க வுக்கு வழங்கப்பட்டது என்று கணக்கிடுகிறது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு.

இதை நன்கொடை என்று சொல்கிறார்கள். பலர் லஞ்சம், ஊழல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கலாம். உண்மையில் இதை சம்பளம், ஊதியம், கூலி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், தங்களது எஜமானர்களுக்கு வேலை செய்கிறார்கள், அதற்கான கூலியை நன்கொடை என்ற பெயரில் பெற்றுக்கொள்கிறார்கள்.

பழைய படங்களில் சில காட்சிகள் வரும் அதில் தனது எஜமானர் சொல்லிவிட்டார் என்பதற்காக எஜமானருக்கு கடன் பட்டவரின் வீட்டிலிருக்கும் சாமானையெல்லாம் அள்ளி வெளியே வீசிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வந்துவிடுவார் நேர்மையான, சொன்ன சொல்லைத்தட்டாத வேலையாள். அதுபோல, எத்தனை மக்கள் தெருவுக்கு வந்தால் என்ன?, எத்தனை விவசாயிகள் செத்தால் என்ன? சிறு குறுந்தொழில்கள் என்ன ஆனால் என்ன? என்று நடந்து கொள்கிறார்களே ஓட்டுக்கட்சிகள், அதற்கு அவர்கள் வாங்குவதற்கு பெயர் நன்கொடையா?

ஒருவேளை நன்கொடை என்றால் கூட தூக்கி முகத்தில் எறிந்துவிட்டு வந்துவிடலாம், சம்பளம் என்பது அப்படியில்லை. வேலை செய்கிறோம், சொல்வதை செய்யவேண்டும் மறுத்தால், நம்மைத்தூக்கிவிட்டு வேறு ஆளை நியமித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கும்.

Fixed Term Contract (குறிப்பிட்ட காலத்துக்கான வேலை ஒப்பந்தம்) என்பது ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் உரிமைகளில் மேலும் மண்ணள்ளி போட்டுள்ளது

உதாரணமாக, நமது நாட்டில் இருக்கும் தொழிலாளிகளது நிலைமை நன்றாகத்தெரியும். சங்கமாக திரளமுடியாத, தனது உரிமையைக்கூட கேட்கமுடியாத, சட்டத்தை கடைப்பிடி என்பதைக்கூட வலியுறுத்தமுடியாத, மறு நாள் உழைப்பிற்கு கூட போதுமான சம்பளம் இல்லாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளிகளது வாழ்க்கையை சிறப்பானதாக்கவேண்டிய மத்திய அரசும் மாநில அரசும் என்ன செய்கிறார்கள்.

அரசு நிறுவனங்களுக்கு போதுமான ஊழியர்களை நியமிக்காமல் இழுத்தடிப்பது, அதன் மூலம் அரசு நிறுவனங்கள் சேவைக்குறைபாடானவை, நிர்வாக திறனற்றவை என்ற பிம்பத்தை உருவாக்கி, பின்னர் மக்கள் வெறுக்கும் சமயம் பார்த்து நட்டக்கணக்கு காட்டி தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்க்கிறார்கள். அதே சமயம் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து அவர்களை மேலும் வளர அனுமதிக்கிறார்கள்.

தனியார்தான் வேலை கொடுக்கவேண்டும், தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளன என்ற பிரச்சாரம் மூலமாக தனியார் நிறுவனங்கள்தான் எல்லாமும் என்ற நிலைமையை உருவாக்குகிறார்கள்.
இவை அனைத்தையும் பின்னாலிருந்து இயக்கிய கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்ய மறுப்பது போலவும், உங்களை விட்டால் வேறு யார் எங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்கள் என்ற ரீதியில் தனியார் முதலீடு, அந்நிய முதலீடு ஈர்க்கிறேன் என்ற போர்வையில் மாநாடு நடத்தி சிவப்புக் கம்பளம் விரித்து தனியார் நிறுவனங்களை வரவேற்கிறார்கள். அப்படி வரவேற்கையில் தனியார் முதலாளிகள் பல நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

சமீபத்தில் பாரதப் பிரதமரும், அருண் ஜெட்லியும் 2018 ஜனவரியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ள Fixed Term Contract (குறிப்பிட்ட காலத்துக்கான வேலை ஒப்பந்தம்) என்பது ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் உரிமைகளில் மேலும் மண்ணள்ளி போட்டுள்ளது. ஒப்பந்த உழைப்பை முறைப்படுத்தும் சட்டத்தை மேலும் பலவீனமாக்கி ஒப்பந்த ஊழியர்கள் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்வதற்கு வசதி செய்து தருகிறது.

கார்ப்பரேட் சேவைக்கு உகந்த வகையில் கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட பல திட்டங்களை (ஆதார், ஜி.எஸ்.டி, மானிய ஒழிப்பு முதலியன) அன்றைக்கு எதிர்த்தாலும் இன்றைக்கு பா.ஜ. அரசு அதிரடியாக நிறைவேற்றுகிறது, துணிச்சலான 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமரின் ஆட்சி அல்லவா? எனவே, அதற்கேற்றவாறு கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் கூலியும் அதிகமாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே செல்கிறது, அதுபோல் நகரங்களை நோக்கி வருபவர்களது எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்பது நமக்கே தெரியும். அப்படியிருக்க அதற்கேற்ப பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வேலை வாய்ப்பு, கழிவு நீர் வெளியேற்றம், குடி நீர் வசதி, ஊழியர்கள் நியமனம் என்று திட்டமிட வேண்டிய அரசு முறையாக செய்யவில்லை. உங்களது அருகாமையிலிருக்கும் பகுதியில் நூலகம்,அரசுப்பள்ளி, மருத்துவமனை என்று சுற்றிப்பாருங்கள் உண்மை புரியும்.

பல்வேறு சூழ் நிலைகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதைக்கூட காப்பீட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு இரையாக்கும் திட்டம்

இவற்றை எல்லாம் எப்படி கார்ப்பரேட், நிதி மூலதன நலனுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதுதான் காங்கிரஸ்-பா.ஜ.க ஆட்சியாளர்களின் கவலையாக உள்ளது.

உதாரணமாக:

 1. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட்கள் ஒதுக்குவது.
  இதில் இலவசம் ஏதுமில்லை. அந்த இடங்களுக்கான தொகையை அரசே செலுத்திவிடும். அரசுப்பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை அரசே பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்கும் புரோக்கர் வேலை பார்க்கிறது.
 2. அப்ரன்டிஸ் சர்டிபிகேட் முறை:
  தனியார் நிறுவனங்கள் போதுமான ஆட்களை வேலைக்கு அமர்த்தாமல், உரிய கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பதை பார்த்திருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதைப்பற்றி எதுவுமே பேசாமல் ஏற்கனவே இருக்கும் கூலியைவிட இன்னும் மலிவாக கூலியே இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் பிடித்து கொடுக்கும் வேலையை செய்கிறது.
 3. மருத்துவ காப்பீட்டு திட்டம்:
  அரசு மருத்துவமனைக்கு போதிய நிதி, மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்காத அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல பிம்பத்தை உருவாக்க கொண்டுவந்ததுதான் இந்ததிட்டம். இதனால் பயனடையப் போவது காப்பீட்டு நிறுவனங்கள் தான்.
 4. பயிர் காப்பீட்டு திட்டம்: பல்வேறு சூழ் நிலைகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதைக்கூட காப்பீட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு இரையாக்கும் திட்டம். 22.02.2018 அன்று சென்னையில் விவசாயிகள் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தரவேண்டிய நிவாரணத்தொகையை 6 மாதமாகத் தராமல் இழுத்தடித்துள்ளது இந்த நிறுவனம்.
  இப்படி பல உதாரணங்களைக் கூற முடியும். ஒவ்வொன்றும் பல்வேறு பெரு நிறுவனங்களால் முடிவெடுக்கப்பட்டு, முறையாக திட்டமிடப்பட்டு, மத்திய அரசு மாநில அரசுகள் வழியாக மக்களை வந்தடைகின்றன. ஒவ்வொன்றின் பின்னாலும் கோடிகளில் பணம் சுற்றுகிறது.

அரசியல்வாதிகள் ஆட்சி மாறும்போது மாறிவிடுவார்கள். ஆனால் அதனை தொடர்ச்சியாக எடுத்து நடைமுறைப்படுத்துவது அதிகாரிகள் தான். இதற்காக உலக வங்கியில் பயிற்சி, உலக புகழ்பெற்ற முதலாளிகளது பயிற்சி பட்டறைகள், பல்வேறு உலக நிறுவனங்கள் உள்ளன. TRAI, RBI, போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற பயிற்சி பெற்றவர்கள்தான். அங்கு வகுக்கப்படும் திட்டங்கள்தான் நாடுமுழுக்க நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அரசியல்வாதிகளே, கல்வியில் சிறந்த அதிகாரிகளே,

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம், மீனவர்கள் ஒக்கி புயலில் மரணம் பெண்கள் தாக்குதல்களில் மரணம், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம். இதற்கெல்லாம் விலையாக கார்ப்பரேட்டுகளிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?

என்று நாம் கேட்க வேண்டிய நேரம் இது

நமக்கிருப்பது ஓட்டுப்போடும் உரிமை மட்டும்தான், நமது மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாக இல்லை என்பதை நாம் பார்த்துவிட்டோம். புதிது புதிதாக வருபவர்களும் அதே வழியில்தான் போகிறார்கள். அவர்களை ரமணா படத்தில் வருவதைப்போல மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள். ஆகவே, வெறுமனே ஓட்டுப்போடும் உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களை குறை சொல்வதற்கு பதிலாக, தவறு நடந்தால் தட்டி கேட்கும் உரிமையும் நம்மிடம் இருக்கவேண்டும்.

“ஆட்சியாளர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஊழலை ஒழிப்பேன் என்கிறீர்களே, தவறினால் பதவியை விட்டு தூக்கும் அதிகாரத்தை கொடுங்கள்” என்று கேட்போம்.

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வேலையை மேற்பார்வையிடும் செக்கிங் இன்ஸ்பெக்டர்களாக மக்கள் செயல்படும் ஜனநாயகத்தை உருவாக்குவோம்!

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-funds-for-taking-people-lives/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஊழியர்களின் ஊதியத்தைத் திருடும், ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யும் சி.டி.எஸ்

இந்த ஊழியர்கள் தமது கடின உழைப்பால் ஈட்டிய மாறும் ஊதியத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல், நிர்வாகத்தின் செலவுக் குறைப்பு/லாப அதிகரிப்பு திட்டத்திற்காக வேலையிலிருந்து நீக்கப்படவும் குறி வைக்கப்படுகின்றனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், கருப்புப் பணம் என்பதற்கு வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு வகையில் பொருள் கொள்கிறார்கள்.

Close