கார்ப்பரேட் இந்தியா பற்றி பேசுவதற்கோ அல்லது அதன் சார்பில் பேசுவதற்கோ சேகர் குப்தாவை விட பொருத்தமானவர் இல்லை. எல்லா நேரங்களில் கார்ப்பரேட் நலன்களுக்காக ஒளிவு மறைவின்றி கம்பு சுத்தும் அவர் சமீபத்தில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை இந்த வர்க்கத்தின் இக்கட்டான நிலையை அம்பலப்படுத்துகிறது.
‘வரி பயங்கரவாதம்’, ‘கடன் கட்ட நெருக்கடி’, ‘வங்கி மோசடி விசாரணை’ போன்றவற்றின் மூலம் மோடி அரசு தனது எதிர்முகாமில் இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆப்பு வைத்தாலும், சேகர் குப்தாவை பொறுத்தவரை அது ஒட்டு மொத்த வர்க்கத்தையும் கிலி கொள்ளச் செய்கிறது.
கார்ப்பரேட் இந்தியா ஏன் மோடியை பார்த்து பயப்படுகிறது என்ற அவரது கட்டுரையிலிருந்து சில வரிகள்:
- பாரம்பரிய, பழைய பொருளாதார இந்திய தொழில்முனைவு உலகமும், நிதி உலகமும் இன்னும் முழுக்க நண்பர்களாலும், குடும்பங்களும் அவர்களுக்கிடையிலான திருமண இணைப்புகளும் அடங்கிய சாதி (உட்சாதி), இன ரீதியான பிணைப்புகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
- தேசிய அரசியலில் முன் எப்போதையும் விட “மிஷன் மோடி”-யில் (2011-14) கார்ப்பரேட் இந்தியா அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. டெல்லி அதிகார மையத்தில் அமர்த்துவதற்கான தனக்கான ஆளை கண்டு விட்டதாக நினைத்தது. மோடி வெற்றி பெற்றதும் தான் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டாட்டத்தில் கூச்சலிட்டது. விரைவிலேயே கொண்டாட்டம் முடிவுக்கு வந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இது இப்போது சந்தேகமாகவும் பயமாகவும் மாறியுள்ளது. மும்பை டெல்லியைப் பார்த்து ஆழ்ந்த பயத்தில் உள்ளது.
- அவருடைய பிரச்சாரத்திற்கு பெரிதும் நிதி அளித்த ( தேர்தல் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அவருக்கு இன்னும் நிதியை வாரி வழங்கும்) அதே வர்த்தகர்களை பொறுத்தவரை இன்றைய ‘வரி பயங்கரவாதம்’ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது.
- பொதுவாக அரசாங்கத்தைப் பற்றி பாராட்டி துதி பாடுவதை விடுத்து அதை விமர்சிப்பதென்பது கார்ப்பரேட் இந்தியாவின் இயல்புக்கு மாறானது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பற்றி சில விமர்சனங்கள் வந்திருக்கலாம், அவை டெல்லியில் இருந்து ஒரு ‘நட்புரீதியான’ தொலைபேசி அழைப்பு மூலம் முடித்து வைக்கப்பட்டன. இப்போது கார்ப்பரேட் இந்தியா தனது மணிக்கட்டில் அடுத்த அடியாக கடன் அமைப்பின் தேக்க நிலை மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறது
- பெரிய செல்வந்தரின் மிகப்பெரிய பயம் திவால் அல்ல, காவல்துறை விசாரணை, வழக்கு. முக்கியமான கார்ப்பரேட் பெருந் தலைகள் யாரும் இன்னும் சோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை. ஆனால், முதலில் விஜய் மல்லையா, பின்னர் நீரவ் மோடி-மெஹுல் சோக்சி இரட்டையர் விவகாரங்கள் பொருளாதார குற்றங்களை தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றங்களாக்குவதன் விளைவை கார்ப்பரேட் இந்தியாவுக்கு முன்னறிவித்துள்ளன.
மேலும் படிக்க: Hopes dashed, why India Inc fears Modi now